இன்றைய தரிசன நேரத்தில் நம் வாழ்க்கை என்பது காலம் மற்றும் சக்தியின் கலவை என்பதையும், அதைக் கையிலெடுப்பதும் கடப்பதும் எப்படி என்பதையும் சத்குரு விளக்கினார். அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக…

6:23

நேற்றைய தைப்பூசத்திருவிழா முடிந்த கையோடு இன்று மீண்டும் சத்குரு தரிசனம். ஆவலுடன் அமர்ந்திருந்த அனைவரின் கண்குளிர சத்குரு தரிசனம் தந்தார்.

6:32

“யோக யோக யோகீஷ்வராய” மந்திரத்தை அனைவரையும் உச்சரிக்கச்சொல்லி, அனைவரையும் தியானத்திற்கு வழிநடத்தினார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:39

“ஆசனங்களின் நோக்கமென்ன? புத்தியில்லா இந்த பக்தியின் நோக்கமென்ன? இந்த காரண அறிவிற்குள் அடங்கா ஆன்மீகத்தின் நோக்கமென்ன? தியானம் தரும் போதையின் நோக்கமென்ன?” என்று சத்குரு துவங்கி, “காலமும் சக்தியும் சேர்ந்ததே நம் வாழ்க்கை. காலம் என்பது சுழற்சியான தன்மை கொண்டது. இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், காலம் மற்றும் வெளி, இரண்டும் வளையும் தன்மை கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். நேர்கோடு என்பது நேரானதல்ல, அதை போதுமான அளவு நீட்டினால் அது வளைந்திருப்பதை உணர்வீர்கள். இந்த பயிற்சிகளின் மூலம் உங்களுக்குள் போதை ஏற்படுத்தி நேராய் இருக்கும் உங்கள் தர்க்கத்தை வளைப்பதுதான் நோக்கம்.

யோகமுறையில் காலம் என்பது, நேரம் மற்றும் வெளி அல்லது இருள், இரண்டையும் குறிக்கும். வெளி என்றால் பொருள் அல்லாதது. வாழ்க்கை என்பது காலம் மற்றும் சக்தியின் கலவை. இவற்றை சரியாக நடத்துவதே சீரான வாழ்க்கை. நம் சக்தியை நாம் கையாள முடியும். காலம் என்பதை நாம் கையிலெடுக்க முடியாது. இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் யோகப்பயிற்சிகள் சக்திகளை உச்சநிலையில் வைப்பது நோக்கியது. தினசரி சாதனா செய்வதன் நோக்கம் சக்தியை உச்சநிலையில் வைப்பதுதான். எப்போதும் தீவிரமாக கோபப்படவோ, ஆனந்தமாய் இருக்கவோ அபாரமான சக்தி தேவை.

உடல் என்பது இருக்கும்வரை மட்டுமே காலத்திற்கு உங்கள்மீது ஒரு பிடியிருக்கும். பொருள்தன்மையுடன் ஆழமாக சிக்கியியிருந்தால் காலம் உங்களுக்கு மிக நீண்டதாகத் தோன்றும். பொருள்தன்மையைக் கடந்த ஒன்றை ருசித்திருந்தால் 100 வருடங்கள் என்பது சில வினாடிகள் போல ஓடிவிடும்.

வெளி அல்லது காலம் இருளைக் குறிக்கிறது. மதங்கள் இருளை எதிர்மறையாகக் காட்டிவிட்டன. ஒளி என்பது கால எல்லை கொண்டது, துவக்கமும் முடிவும் கொண்டது. இருள் மட்டுமே நிரந்தரமானது.

உலகில், பொருள்தன்மையில் சிறப்பாக செயல்பட சற்று சக்தியிருந்தால் போதும். இதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்க விரும்பினால், ஆன்மீகம் உணர விரும்பினால், உங்களுக்கு எதுவும் கிடைக்க வேண்டாம் என்று நீங்கள் தொலைந்துபோகத் தயாராக இருக்கவேண்டும். துறவு பற்றி உலகில் தவறான புரிதல் இருக்கிறது. இதன் நோக்கம் பொருள்தன்மையோடு சற்று இடைவெளி வைத்துக்கொள்வது மட்டும்தான். பொருள்தன்மை இல்லாமல் எவராலும் இருக்கமுடியாது, அதனால் சற்று இடைவெளி வைத்திருக்க விரும்புகிறோம். துறவு என்பது எதையோ விட்டுக்கொடுப்பதாகக் கருதப்படுகிறது, இது அப்படியல்ல. சற்று இடைவெளி வைத்துக்கொள்வதே இதன் நோக்கம்.” என்று விளக்கினார்.

7:15

தியானலிங்கத்தின் மணி சப்தம் பற்றி ஒருவர் கேட்க, “சரியான மணிகள் உருவாக்கும் கலை இப்போது தொலைந்துவிட்டது. பேச்சிற்கு சிரிப்பொலி எப்படியோ, இசைக்கும் மணி சப்தம் அப்படியே. ஆசிரமத்தில் சந்திரகுண்டம், சூர்யகுண்டம் இருப்பது, பச்சைத்தண்ணீரில் குளித்து யோகப்பயிற்சிகள் செய்வது, தொலைக்காட்சி, டீ, காப்பி, இல்லாதது, இவையனைத்தும் உங்கள் நரம்புமண்டலத்தை நுண்ணுணர்ச்சி கொண்டதாக வைத்துக்கொள்ளவே. அப்போது இவற்றின் முக்கியத்துவத்தை நீங்களே உணர்வீர்கள்.” என்றார் சத்குரு.

7:27

அழகான வடமொழிப்படலொன்றை ஈஷா இசைக்குழு இசைக்க, சத்குரு வணங்கி விடைபெற்றார்.