இதுவரை: பாண்டவர்களை துரத்த திட்டம் கொண்டு வருகிறான் சகுனி. திருதராஷ்டிரனின் வேண்டுகோளை ஏற்று காசிக்கு யாத்திரை செல்கிறார்கள் பாண்டவர்களும் குந்தியும். அங்கு கௌரவர்கள் உருவாக்கியிருந்த அரக்கு மாளிகையில் தங்க வைக்கப்படுகிறார்கள். சதி திட்டம் பற்றிய தகவலுடன், பாண்டவர்கள் அரண்மனையில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து தப்பிக்க உதவிக்கு ஒருவரை ரகசியமாக அனுப்புகிறார் விதுரர்.

சத்குரு: நிஷாடா எனும் மலைவாழ் பழங்குடியினரில் இருந்து, ஐந்து மகன்களுக்கு தாயான ஒரு பெண்ணுடன் குந்தி நட்பு ஏற்படுத்திக்கொண்டாள். அவ்வப்போது அவர்களை அரண்மனைக்கு அழைத்து, உணவளித்து நன்றாக கவனித்துக் கொண்டாள். அந்த பௌர்ணமி நாளும் வந்தது. அந்த நிஷாடா பெண்ணுக்கும், கௌரவர்களின் ஒற்றனான காவலாளிக்கும் விருந்தளித்து அளவுக்கதிகமாக பானங்களை வழங்கச்செய்தாள் குந்தி. அவர்கள் உறங்கியதும் சுரங்கப்பாதை வழியாக தப்பிய குந்தியும் பாண்டவர்களும் அரண்மனைக்கு நெருப்பு மூட்டினர். உளவாளி, பழங்குடியின பெண் மற்றும் அவரது ஐந்து மகன்களும் நெருப்பில் எரிந்து இறந்தனர்.

அங்கே அரண்மனை‌ முற்றிலும் எரிந்து சாம்பலாகவே, பாண்டவர்கள் ரகசியமாக தப்பியது தெரியாததால் அவர்களுக்காக மொத்த நகரமும் வந்து துக்கத்தில் பங்கேற்றது.

பாண்டவர்கள் தப்ப உதவியாக ஆட்களை அனுப்பி இருந்தார் விதுரர். இதைப்பற்றிய ஆச்சரியமூட்டும் விளக்கம் மஹாபாரதத்தில் இப்படி வருகிறது, "அவர்கள் ஏறிய படகில் முகமூடியணிந்தபடி அந்த உருவம் காத்திருந்தது. படகு செலுத்துவதில் உதவ துடுப்புகளை தேடினான் பீமன், ஆனால் ஒன்றுகூட படகில் இல்லை. சில லிவர்களை (Lever) இயக்கியதும் மிகமெல்லிய ரீங்கார ஒலியுடன் நதி நீரை கிழித்துக் கொண்டு படகு நகரத் துவங்கியது." பாண்டவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். இது உண்மையிலேயே நடக்கிறதா அல்லது தாங்கள் ஏதும் இறந்து விட்டோமா என்று தெரியாமல் குழம்பினார்கள்.

இது அவர்களின் கற்பனையா, உண்மையில் இப்படி ஒரு வாகனம் அவர்களிடம் இருந்ததா, வேறு எங்கிருந்தோ அவர்கள் இறக்குமதி செய்தார்களா, அல்லது எதிர்காலத்தில், ஐந்தாயிரம் வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு இயந்திரப்படகை மனிதன் உருவாக்க முடியும் என்ற தொலைநோக்கு பார்வை இருந்ததா என்பது எதுவுமே நமக்கு தெரியவில்லை. எது எப்படியோ - அவர்களை சுமந்து கொண்டு சென்ற படகு அடர்ந்த கானகத்தை அடைந்தது. அங்கே அரண்மனை‌ முற்றிலும் எரிந்து சாம்பலாகவே, பாண்டவர்கள் ரகசியமாக தப்பியது தெரியாததால் அவர்களுக்காக மொத்த நகரமும் வந்து துக்கத்தில் பங்கேற்றது. ஹஸ்தினாபூரில் துக்கம் அனுஷ்டித்தான் திருதராஷ்டிரன். மூன்று நாட்கள் விரதமிருப்பதாக பொதுவில் காட்டிக்கொண்ட துரியோதனன், தனியாக ஏற்பாடு செய்த உணவை வழக்கம்போல உண்டான்.

எல்லோரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். பெரும் பிரார்த்தனை கூட்டங்கள் நிகழ்ந்தது. குந்தியும் பாண்டவர்களும், அரண்மனை எரிந்தது எதிர்பாராத விபத்தால்தான் என்பதைப் போல எல்லா வகையிலும் கச்சிதமாக திட்டமிட்டிருந்தனர். கௌரவர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் தங்களின் எதிரிகள் இன்னும் உயிரோடு இருப்பதை அறியவில்லை. நிஷாட பெண் மற்றும் அவரது பிள்ளைகளின் எரிந்த உடல்கள், அது குந்தி மற்றும் பாண்டவர்கள் என்று அனைவரையும் நினைக்க வைத்தது. பாண்டவர்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து உதவிய கனகன் அந்த சடலங்களை பார்த்ததும், குத்தியும் அவளது புதல்வர்களும் இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியுமா என்று நினைத்தான். குந்தியின் உறைய வைக்கும் கணக்கு என்னவென்றால், ஆறு சடலங்களை பார்க்காவிட்டால், பாண்டவர்கள் தப்பியிருப்பார்கள் என்று தெரிந்துகொண்டு கௌரவர்கள் எப்படியும் தங்களை வேட்டையாட தேடி வருவார்கள் என்பதுதான்‌. அதனால் ஆறு சடலங்களை அரக்கு மாளிகையில் விட வேண்டி நேர்ந்தது. இதை செய்வதற்கு குந்தியின் மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.

கடோத்கஜனின் பிறப்பு

தாங்கள் வந்த சுவடு தெரியாதபடி வழியை அழித்தபடியே கானகத்திற்குள் புகுந்தனர் பாண்டவர்கள். அங்கே பல சம்பவங்கள் நிகழ்ந்தது. அதில் முக்கியமான ஒன்று, மனிதர்களை உணவாக உட்கொள்ளும் ஒரு ராட்சசனின் கண்களில் பாண்டவர்கள் பட்டனர். பாண்டவர்களையும் குந்தியையும் விழுங்க நினைத்தான் ராட்சசன். ஆனால் அங்கே நடந்த கடும் சண்டையில் பீமன் ராட்சசனை கொன்றான், அவனது சகோதரி இடும்பி பீமன் மீது காதலில் விழுந்தாள். காட்டிலேயே வாழ்ந்திருந்தவள் இடும்பி. சற்று நாகரீகமான தோற்றம் தர முயன்ற பீமன் இடும்பியின் தலைமுடியை சீராக்கி, காதலில் விழுந்து திருமணம் செய்து கொள்ள விரும்பினான். இடும்பி மீது ஆசைப்பட்டாலும், தனது மூத்த சகோதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று பீமனுக்குள்‌ சிறிது சஞ்சலம் இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பீமனுடன் வாழ துவங்கிய இடும்பி அடுத்த வருடம் ஒரு குழந்தையை பெற்றாள். குழந்தையின் தலை, பிறப்பிலேயே சுத்தமாக முடியில்லாமல் ஒரு பானையைப் போல இருந்தது.

பீமனை சமாதானம் செய்த யுதிஷ்டிரன், "மூத்த சகோதரன் முதலில் மணமுடிப்பது வழக்கம்தான், ஆனால் இந்த இதயம் எந்த வழக்கத்தையும் பின்பற்றாது, நாமும் அதற்கு வளைகிறோம். நீ இடும்பியை திருமணம் செய்து கொள்" என்றார். வேறு யாரும் இடும்பியிடம் எந்த விதத்திலும் சம்பந்தப்பட நினைக்கவே இல்லை. பீமனுடன் வாழ துவங்கிய இடும்பி அடுத்த வருடம் ஒரு குழந்தையை பெற்றாள். குழந்தையின் தலை, பிறப்பிலேயே சுத்தமாக முடியில்லாமல் ஒரு பானையைப் போல இருந்தது. அவர்கள் அந்த குழந்தையை கடோத்கஜன் என்று அழைத்தார்கள், அதாவது கடம் போன்ற தலைமுடி இல்லாத தலை உடையவன். பெரும் உருவத்துடன் இருந்த குழந்தை கடோத்கஜன், வலிமையான வீரனாக வளர்ந்து பின்னர் நடந்த போரில் பாண்டவர்களுக்கு பெரும் பக்கபலமாக இருந்தான்.

பீமன் வீட்டையே சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்தாள் குந்தி. தொடர்ந்து மனைவியுடன் வாழ்ந்தால் ஏதோ ஒரு இடத்தில் பீமன் தன் சகோதரர்களை பிரிந்து விடுவான் என்பது குந்திக்கு தெரிந்தது. சகோதரர்கள் பிரிந்தால், அவர்களுக்கு ராஜ்ஜியம் என்றுமே கிடைக்கப்போவதில்லை. எனவே ஒரு கண்டிப்பை கொண்டு வந்தாள் : "இந்த ராட்சச பெண்ணுடன் நீ வாழக்கூடாது - இவள் ஆரிய வம்சமில்லை" என்றாள். பீமனையும் மற்ற சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிலிருந்து கிளம்பி ஏகசக்ரா என்ற சிறிய ஊரை அடைந்தனர்.

ராட்சசர்களும் கந்தர்வர்களும்

பாண்டவர்களும் குந்தியும் தங்கியிருந்த ஏகசக்ரா என்ற ஊருக்கு அருகில் பகாசூரன் எனும் அரக்கன் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். நகருக்குள் புகுந்து நாசம் செய்வது அவனுக்கு வழக்கம். அவன் வழியில் மனிதர்கள், மிருகங்கள் என யார் வந்தாலும் அவர்கள் அனைவரையும் விழுங்கி விடுவான்.

எனவே நகர மன்றத்தினர் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒரு வண்டி நிறைய உணவும், அந்த உணவை கொண்டு வரும் வண்டி மாடுகளையும், வண்டி ஓட்டியையும் உணவாக தருவதாகவும், அதற்கு பதிலாக நகர மக்கள் யாரையும் அவன் தொல்லை செய்யக்கூடாது என்பதே அது. எனவே ஒரு வாரத்திற்கு தேவையான உணவும், ஊறுகாயாக ஒரு மனிதனும் தடையின்றி பகாசூரனுக்கு கிடைத்து வந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டினர் உணவு சமைத்து, மாடுகளையும், குடும்பத்தில் இருந்து ஒருவரையும் அரக்கனுக்கு உணவாக வழங்க வேண்டும் என நகர மக்கள் தங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பகாசூரனின் பசி ஆற்ற முடியாததாக இருந்தது. பீமன் தன்னார்வத்துடன் பகாசூரனிடம் செல்ல முன்வந்தான்‌. கடும் சண்டையின் முடிவில் பகாசூரனை தோற்கடித்த பீமன் அவனை கொன்றான்.

அரக்கு மாளிகை தீயில் எரிந்து சாம்பலானதிருந்து கிட்டத்தட்ட இப்போது ஒரு வருடம் கடந்திருந்தது, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து தாங்கள் வெளிவரும் நேரம் வந்துவிட்டதை பாண்டவர்கள் உணர்ந்தார்கள்.

அரக்கு மாளிகை தீயில் எரிந்து சாம்பலானதிருந்து கிட்டத்தட்ட இப்போது ஒரு வருடம் கடந்திருந்தது, தலைமறைவு வாழ்க்கையிலிருந்து தாங்கள் வெளிவரும் நேரம் வந்துவிட்டதை பாண்டவர்கள் உணர்ந்தார்கள். ஏற்கனவே இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பதால், தங்களை இப்போது கொன்றாலும் யாருக்குமே சந்தேகம் வராத வாய்ப்பு இருந்ததால், தங்களின் மறுபிரவேசத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டியிருந்தது.

பாண்டவர்கள் காட்டுக்குள் வாழ்ந்து வந்தபோது, ஒருமுறை தண்ணீர் குடிக்க ஒரு குளத்தை அடைந்தனர். ஆனால் அந்த குளத்தின் உரிமையாளன் என்று தன்னை அழைத்துக் கொண்டு, அங்கரபர்ணன் என்ற கந்தர்வன் அங்கே இருந்தான். அர்ஜுனன் ஒரு சிறந்த வில்லாளி என்பதை தெரிந்து கொண்டு, "என்னுடன் மோதிய பிறகுதான் என் குளத்திலிருந்து தண்ணீர் குடிக்க அனுமதிப்பேன்" என்று மற்போருக்கு அழைத்தான். அர்ஜுனனுடன் கடுமையாக சண்டையிட்ட கந்தர்வன் மயங்கி விழுந்தான். ஒரு மனிதனை தோல்வியடைந்த நிலையில் விடுவது அவனை அவமானப்படுத்துவதாக ஷத்ரிய தர்மத்தில் கருதப்பட்டதால், மயங்கி விழுந்த கந்தர்வனுக்கு இறப்பை வழங்க அர்ஜுனன் தயாரானான். தோல்வியுடன் உயிர் வாழ்வதற்கு பதில் - இறப்பதே மேல் என் விரும்புவான் ஷத்ரியன்.

கந்தர்வனின் தலையை துண்டிக்கத் தயாரானான் அர்ஜுனன். அப்போது அங்கரபர்ணனின் மனைவி வந்து கெஞ்ச துவங்கினாள், "தோல்வியடைந்த பின்னும் உயிர் வாழ்வதில் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஏனென்றால் இவர் ஷத்ரியன் இல்லை. நான் உங்களை கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து இவரை உயிருடன் விடுங்கள். இவரது தர்மம் உங்களுக்கு பொருந்தாது, உங்களது தர்மம் இவருக்கு பொருந்தாது. எனவே இவரை கொல்ல வேண்டியதில்லை. கந்தர்வனை உயிர் வாழ அனுமதித்தான் அர்ஜுனன். அங்கரபர்ணனுக்கு மீண்டும் நினைவு திரும்பியதும் ஷத்ரியர்கள் மதிக்கும் பலதையும் நன்றியுணர்வுடன் அர்ஜுனனுக்கு பரிசாக வழங்கினான். நூறு குதிரைகளையும் பரிசளித்த அங்கரபர்ணன், நூறு விவேக கதைகளையும் பாண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டான். பாண்டவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் குறிப்பிடத்தக்க சம்பந்தமுள்ள ஒரு கதையை இப்போது நாம் பார்ப்போம்.

அங்கரபர்ணனின் கதை

வசிஷ்ட மாமுனிவரின் மகனான சக்தியின் கதையை‌ சொல்ல துவங்கினான் அங்கரபர்ணன். வசிஷ்டர் இராமாயணத்தில் முக்கியமானவர். சக்தி ஒரு நாள் கானகத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஓரிடத்தில் சிறு ஓடையை கடக்க வேண்டியிருந்தது. ஓடையின் மீதிருந்த குறுகலான பாலத்தில் நுழைய முற்படும் போது, கல்மசபாதா என்ற அரசன் ஏற்கனவே பாலத்தின் எதிர் முனையிலிருந்து நடந்து வரத் துவங்கியிருந்தான். இருவரில் ஒருவர் வழி கொடுத்தேயாக வேண்டும் என்ற நிலை. சக்தியை பார்த்து, "இங்கே முதலில் வந்தது நான். எனக்கு வழிவிடு!" என்றான் அரசன். தனது தந்தை யார் என்பதில் மிகுந்த பெருமிதம் கொண்டிருந்த சக்தி, "நீ வழி விடு! நான் ஒரு அந்தணன் - உன்னை விட உயர்ந்தவன்." என்றவன், அரசன் கல்மசபாதா ஒரு ராட்சசனாக மாற சாபமிட்டான். மனிதர்களை விழுங்கும் ராட்சசனாக மாறிய அரசன் கல்மசபாதா அப்போதே அந்த இடத்திலேயே இருந்த சக்தியை விழுங்கினான்.

தனது மகனை இழந்த வசிஷ்டர் மிகவும் மனம் சோர்ந்தார். அதிலும், வரமும் சாபமும் அளிக்கக்கூடிய வல்லமையை தனது மகனுக்கு வழங்கியதே வசிஷ்டர் தான். தவறான சாபத்தை தவறான மனிதனுக்கு வழங்கியதால், அதில் தானே அகப்பட்டு விழுங்கப்படும் நிலைக்கு ஆளானான் சக்தி.

சக்தியின் மகனான பராஷரா தனது தாத்தா வசிஷ்டரின் பராமரிப்பில் வளர்ந்தான். தனது தந்தைக்கு நேர்ந்ததை கேள்விப்பட்டதும் இளம் வயதினனான பராஷராவுக்கு பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டது. மனிதர்களை உண்ணும் இனங்கள் அனைத்தையும் இந்த மண்ணிலிருந்து அழித்துவிட ஒரு யாகம் வளர்க்க திட்டமிட்டான். வசிஷ்டர் அந்த திட்டத்தை கைவிட வற்புறுத்தினார்: "உனது தந்தை யாருக்கோ சாபமிட, அந்த சாபமே அவனை விழுங்கியது. இப்போது நீ பழிவாங்க வேண்டும் என்று முயற்ச்சித்தால், அது பழிக்குப்பழி என முடிவில்லாமல் தொடர வழி வகுக்கும். ராட்சசனை பின்தொடராதே - உனக்கு எது மதிப்பானதோ அதை பின்தொடர்ந்து பின்பற்று." இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு மாமுனிவராக உயர்ந்த பராசரர், மஹாபாரத கதையில் முக்கிய பங்கு வகிக்கும் வியாச முனிவரின் தந்தையும் ஆனார். பாண்டவர்களின் இதயத்தில் இருந்த கோபத்தையும் வெறுப்பையும் கவனித்ததால், அங்கரபர்ணன் இந்த கதையை அவர்களுக்கு சொன்னான்.

பல முறை பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டிருந்தார்கள் பாண்டவர்கள். அனைத்தையும்விட, அவர்களின் உயிருக்கே பல அபாயங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. அதிலும் மிகச் சமீபத்தில் பட்டவர்த்தனமாக தங்கள் தாயார் உட்பட அனைவருக்கும் சேர்த்து வைத்திருந்த குறி அவர்களை கொதிப்படையச் செய்திருந்தது. பழிவாங்க துடித்துக் கொண்டிருந்தார்கள் பாண்டவர்கள். கதையை முடித்த அங்கரபர்ணன், இந்த அறிவுரையை வழங்கினான்: "உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் பழிவாங்குவதில் வீணடிக்கத் தேவையில்லை. உங்களால் அரசர்களாக முடியும். எனவே முதலில் உங்களுக்கு ஒரு வேத விற்பன்னரையும், பிறகு ஒரூ மனைவியையும், உங்களுக்கான நிலத்தையும் ஏற்படுத்துங்கள். அங்கே உங்கள் நகரத்தை நீங்களே உருவாக்கி அதற்கு அரசனாக இருங்கள். பழிக்குப்பழியை தொடர வேண்டாம்."என்று முடித்தான்.

இந்த கதையை கேட்ட பிறகு, பழிவாங்குவது பற்றி பாண்டவர்கள் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை அடைந்தாலும், அவர்களது இதயத்திலிருந்து அந்த உணர்வு முற்றிலுமாக நீங்கவில்லை. முதலில் தங்களுக்காக ஒரு வேத விற்பன்னரை தேடினார்கள். அருகில் இருந்த தேவாள முனிவரின் ஆசிரமம் சென்றவர்கள், அவரது இளைய சகோதரர் தௌம்யரை தங்களின் குடும்பத்திற்கு வேதம் ஓதுபவராக கேட்டுக் கொண்டனர். துவாபார யுகத்தில், தங்கள் குடும்பத்திற்கென ஒரு வேத விற்பன்னர் இருப்பது மிக முக்கியமாக கருதப்பட்டது. ஏனெனில், ஒவ்வொரு நிகழ்விலும் சக்திவாய்ந்த யாகங்களை நிகழ்த்த தேவையிருந்தது. தங்களுக்கென பாண்டவர்கள் தேர்வு செய்த தௌம்யமர் செயல் தேர்ச்சி உள்ளவராகவும், ஆற்றலுடனும் அந்த ஷணம் முதல் எப்போதுமே அவர்கள் பக்கம் இருந்தார்.

துருபதனும் துரோணரும்

இளவரசி தனது மணாளனை தன் விருப்பப்படி தேர்வு செய்யும் சுயம்வரம் ஒன்றிற்கு பாஞ்சால தேச அரசன் துருபதன் அழைப்பு விடுத்திருப்பது பாண்டவர்களுக்கு தெரியவந்தது. துரோணரின் தந்தையான பரத்வாஜ முனிவரின் பொறுப்பில் சிறுவர்களான துரோணரும், துருபதனும் இணைந்து கல்வி கற்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். துரோணரும் துருபதனும் தங்களது பதின்மூன்றாம் வயதில் ஒருவருக்கொருவர் இப்படி சத்தியம் செய்து கொண்டனர்: "வாழ்வில் என்ன செல்வம் சேர்த்தாலும் சரி, வாழ்க்கையில் எதை அடைந்தாலும் சரி - நாமிருவரும் அதை பகிர்ந்து கொள்வோம்."

மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த துரோணரின் குடும்பத்திற்கு நிலபுலன்களோ, பசுக்களோ இல்லாததால், இந்த இளம் பாலகன் பால் என்பதையே அதுவரை பார்க்காமல் இருந்தான்.

அவர்களது பயிற்சி காலம் முடிந்ததும், பாஞ்சாலம் திரும்பிய துருபதன் அரசனானான். தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட துரோணர், கிருபாச்சாரியாரின் சகோதரி கிருபியை திருமணம் செய்தார். அவர்களின் புதல்வன் அஸ்வத்தாமன். குழந்தை பிறந்தவுடன் குதிரை கனைப்பதைப் போல சிரித்ததால், அஸ்வத்தாமன் என்று பெயரிட்டார்கள். அஸ்வ என்பது குதிரையை குறிக்கும் - குதிரையைப் போல சிரித்தவன், அல்லது, தன்னை வெளிப்படுத்திக் கொண்டவன் என்று அஸ்வத்தாமனை அழைத்தார்கள்.

கால்நடைகள் பிரதானமாக இருந்த அன்றைய சமுதாயத்தில், பால் என்பது சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு உணவுப்பொருள். ஆனால் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த துரோணரின் குடும்பத்திற்கு நிலபுலன்களோ, பசுக்களோ இல்லாததால், இந்த இளம் பாலகன் பால் என்பதையே அதுவரை பார்க்காமல் இருந்தான். ஒருமுறை ஊருக்குள் சென்றபோது, மற்ற சிறுவர்கள் பால் குடிப்பதை பார்த்து அது என்ன என்று கேட்டான். அஸ்வத்தாமன் பால் என்பதையே இதுவரை பார்க்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அரிசி மாவில் தண்ணீரை கலந்து கொடுத்தார்கள். அதை பால் என்று நினைத்த அஸ்வத்தாமன் மகிழ்ச்சியாக குடித்தான்.

பால் என்பதே இவனுக்கு தெரியவில்லை என்று மற்ற சிறுவர்கள் அஸ்வத்தாமனை கேலியும் கிண்டலும் செய்தார்கள். இதை அறிந்த துரோணர் ஆற்றாமையால் மிகுந்த வேதனையும் கோபமும் அடைந்தார்‌. தனது பால்ய கால நண்பன் துருபதன் இப்போது அரசனாக இருப்பதும், தாங்கள் இருவரும் மாணவர்களாக இருந்த போது அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம் என்று சத்தியம் செய்து கொண்டதும் நினைவுக்கு வந்தது. துருபதனின் அரசவைக்கு சென்றவர், "நாமிருவரும் செய்து கொண்ட சத்தியம் நினைவிருக்கிறதா. உனது சாம்ராஜ்ஜியத்தில் பாதியை எனக்கு தரவேண்டும்" என்றார்.

அவர்களுக்கிடையே சத்தியம் செய்து பல ஆண்டுகள் கழிந்திருந்தது. துருபதன் துரோணரை பார்த்து, "நீ ஒரு ஏழை பிராமணன். உன் மகனுக்கு ஏற்பட்ட அவமானத்தால் நீ புகைந்து கொண்டு இருக்கிறாய். உனக்கு ஒரு பசு மாடு தருகிறேன், எடுத்துக்கொள். இன்னும் வேண்டும் என்றால், இரண்டாக தருகிறேன். ஆனால் ஒரு பிராமணனாக இருந்து கொண்டு நீ எப்படி எனது ராஜ்ஜியத்தில் சரி பாதியை கேட்க முடியும்?" என்றான். துரோணர், "நான் கேட்பது உனது ராஜ்ஜியத்தில் சரிபாதியை, ஒரு பசு மாட்டை அல்ல. எனக்கு உனது தானம் தேவையில்லை. நாம் நண்பர்கள் என்பதால்தான் உன்னைத் தேடி வந்தேன்." இதற்கு மறுமொழியாக துருபதன், "சமமான இருவருக்கும் இடையே நட்பு ஏற்படும். ஒரு அரசனும் ஆண்டியும் நண்பர்களாக முடியாது. நீ தானம் மட்டுமே பெற முடியும். உனக்கு தேவைப்பட்டால் பசு மாட்டை எடுத்துக் கொள் - தேவையில்லை என்றால் நீ கிளம்பலாம்" என்றான். ஆத்திரம் பொங்க கிளம்பிய துரோணர் துருபதனை பழிவாங்க சபதம் செய்தார்.

தொடரும்…