பழமொழிகள் ஏன் சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்தால், அர்த்தங்கள் தெளிவாக விளங்கும். மேலே சொல்லப்பட்டுள்ள பழமொழிக்கு சத்குரு தரும் விளக்கம் என்ன? தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

இயற்கையிலேயே பெண்கள் தங்கள் உடைமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மிருக இனத்தில் கூட இதைக் காணலாம். இதற்குக் காரணம் இருக்கிறது.

தனக்குக் கிடைப்பது மிகச் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எல்லா ஏமாற்றங்களுக்கும் அடிப்படை.

வனங்களில், தன் மூலம் பிறந்த உயிர்மீது தாய் பற்று கொண்டு பாதுகாக்கத் தவறினால், அந்த உயிர் மற்ற விலங்கினங்களால் தாக்கப்படக்கூடும். பிறந்த உயிர் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் நிலை வரும் வரை, தாய் விலங்குதான் அதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. இந்த பற்றை ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் விட்டுவிடுகின்றன. மனிதரால் விட முடிவதில்லை. பற்று தொடர்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு தாய்க்கு எத்தனை வயதானாலும் தன் குழந்தைகள் மீது பற்று விடுவதில்லை. அப்படிப்பட்ட தாய், தன் மகனை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால், உடனடியாக எழும் மன உளைச்சல் இது.

மனைவி என்பவளும் அடிப்படையில் பெண் என்பதால், அவளும் தன் கணவனை அவனுடைய தாயுடன் பகிர்ந்து கொள்ள எதிர்ப்பு காட்டுகிறாள். இதனால்தான் இந்த உறவு உலகெங்கும் பெரும்பாலும் கசந்தே காணப்படுகிறது.

மனிதர்களிடம் காணப்படும் அடிப்படை பிரச்சனையே இதுதான். தனக்குக் கிடைப்பது மிகச் சிறப்பானதாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் எல்லா ஏமாற்றங்களுக்கும் அடிப்படை.

இந்த பூமியில் அப்படிப்பட்ட சிறப்பானவர் யாருமே இல்லை. தெய்வத்தையே உங்களுக்கு மருமகளாகக் கொண்டு வந்து நிறுத்தினாலும் குறையிருக்கும்.

இதனால்தான் உழவு மாடு வாங்கும்போது கூட முழு திருப்தி கிடைப்பதில்லை.

பல நூற்றாண்டுகளாக இந்த முட்டாள்தனம் தொடர்ந்தே வருகிறது. இதை நீங்கள் மனம் வைத்தால் மாற்ற முடியும்.

மருமகள் என்றாலும் சரி, மாமியார் என்றாலும் சரி, வேறு உறவானாலும் சரி...

பக்கத்தில் இருப்பவருடன் எந்தப் பாரபட்சமுமின்றி, முழுமையான ஈடுபாட்டுடன் இதயப்பூர்வமாகப் பழகிப்பாருங்கள். அந்த உறவு மிகச் சிறப்பானதாகவே அமையும்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!