Question: தியானலிங்கத்தில், ஒவ்வொரு மாத சிவராத்திரியன்றும் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையில் கலந்துகொள்ளும்போது அது நமக்குள் இருக்கும் பஞ்சபூதங்களை சமநிலைப்படுத்துகிறது என்கிறார்கள். உண்மையில் அதில் பங்கேற்பவர்கள் பலன் பெறுவது எப்படி?

சத்குரு:

28 நாட்கள் கொண்ட சந்திர சுழற்சியில், மிக இருளான நாள் சிவராத்திரி. பூமியில் பல பரிமாணங்களில் நடைபெறும் விஷயங்களில் இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது இருளைப் பற்றியது மட்டுமல்ல. பொதுவாக பூமித்தாய், சிவராத்திரி அன்று இரவில் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதாக நம் பாரம்பரியத்தில் கூறப்பட்டு வருகிறது. அந்த இரவில் அவள் தூங்குவதில்லை எனவும் சொல்லப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால், இந்த கிரகத்தில் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் அன்று சற்று தீவிரமாக இருக்கும்.

பஞ்சபூதங்கள் நமக்குள் நடந்து கொள்ளும் விதம்தான் நமக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் முடிவு செய்கிறது.

பஞ்சபூதங்களைத் தொடர்ந்து இணைப்பாட்டில் வைக்க வேண்டும். வாழ்க்கையை இயக்கும் சக்தி, அதாவது கிரகத்தின் சுழற்சி தொடர்பான இயக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் இதர சக்திகள், பஞ்சபூதங்கள் ஒரே படைப்பாக இணைந்து செயல்படுவதைத் சிதைக்க முயன்று கொண்டே இருக்கின்றன. எனவே, அந்த இரவில் பிற இரவுகளை விட, மிகுந்த வீரியத்துடன் பஞ்சபூதங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறாள் பூமித்தாய்.

அமாவாசை இரவு பொதுவாக, 30 முதல் 32 மணி நேரம் வரை நீடிக்கும். இந்நேரத்தில், பஞ்சபூதங்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதனால், ஒரு விதையின் முளைக்கும் வேகம்கூட சற்று தாமதப்படும். பஞ்சபூதங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டிருப்பதாலே இந்தத் தாமதம். செடி வளர்வதற்கான தம் பங்கை அன்றைய தினத்தில் பஞ்சபூதங்கள் செய்வதில்லை. அதற்குக் காரணம், இந்நாளில், இந்தப் பூமியைப் போலவே, மண்ணும் தன்னை ஒன்றிணைப்பதற்கு முயல்கிறது. நம் பூமியில் இயற்கையிலேயே, இடைவிடாமல் நடக்கும் அற்புதம் இது. எனவே, ஒரு மனிதர் தன்னுடைய உடல் அமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இணைக்க விரும்புவதற்கு இவ்விரவு ஒர் அற்புதமான வாய்ப்பாக இருக்கிறது.

பஞ்சபூதங்கள் நமக்குள் நடந்து கொள்ளும் விதம்தான் நமக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் முடிவு செய்கிறது. பூதம் என்றால் அடிப்படைக் கூறுகள். பூத சித்தி என்றால் இந்த அடிப்படைக் கூறுகளில் இருந்து எப்படி விடுதலை பெறுவது என்பதைப் பார்ப்பது. அதாவது இந்த உடலிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்க்கும் அறிவியல் இது. இந்த உடல் தன்மையைக் கடப்பதற்கு யோகா வழங்கும் ஒரு தீவிரப் பயிற்சி பூதசுத்தி. இதன் மூலம் உடல் நமக்கு அமைத்துள்ள கட்டுப்பாடுகளைத் தாண்டி, உடல் என்பதைக் கடந்து வேறொரு பரிமாணத்திற்கு நம்மை எடுத்துச் செல்ல முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவனுக்கு பூதேஷ்வரா என்றொரு பெயர் உண்டு. அவர் பூத சித்தி அடைந்தவர். அதாவது பஞ்சபூதங்களின் மீது முழு ஆளுமையை அடைந்தவர் என்று பொருள். பூத சித்தி அடைந்தவர்கள், தன்னுடைய உடலைப் பருப்பொருள் நிலையிலிருந்து மாற்றிக் கொள்ள முடியும். சில யோகிகள் இருக்கிறார்கள்; அவர்கள் ஒரு அறைக்குள் போய், வெளியிலிருந்து பூட்டியபிறகு, அந்த அறையை திறந்து பார்த்தால் அவர்கள் அறைக்குள் தென்படாத சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன. அந்த மனிதர் அங்கிருந்த சுவடே இருக்காது. அதாவது அவருடைய உடல் இருக்காது, அவருடைய சுடலைச் சாம்பல் கூட உங்களுக்குக் கிடைக்காது. அங்கு ஒன்றுமே கிடைக்காது. அவர் தன்னுடைய உடலை பருப்பொருள் நிலையிலிருந்து, ஒன்றுமே இல்லாத நிலைக்கு மாற்றிவிடுவார். பூத சித்தி அல்லது பஞ்சபூதங்களின் மீது ஆளுமை அடைந்துவிட்டால் அவர் தனது கட்டமைப்பை (உடல், மனம், சக்தி நிலை) ஒன்றிணைக்க முடியும், அதே நேரத்தில் தன் கட்டமைப்பை முழுமையாக தகர்த்தெறியவும் முடியும்.

இது அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு. ஒருவர் தன் வீட்டில் லிங்கபைரவி யந்திரம் வைத்திருந்தார். அந்த யந்திரத்தின் மேலேயும் அதைச் சுற்றியும் நீர் தேங்கியிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் சேர்வதற்கு வாய்ப்பே கிடையாது. ஆனால், அந்தக் குடும்பத்தைச் சேராத ஒரு உயிர், அந்த யந்திரத்தின் சக்தியைப் பயன்படுத்தி, தன்னை முழுவதும் கரைத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து மறைந்திருக்கிறது. கடைசியில் மீதம் இருந்தது சிறிது தண்ணீர் மட்டுமே.

அந்த மீதமிருந்த தண்ணீரைக்கூட முழுதும் உருமாற்றி ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாதவாறு ஒருவரால் கரைந்து போக முடியும். ஆனால், குறிப்பிட்ட இந்த நபரோ தன் உடலுடன் தன் உடல் சார்ந்த அனைத்தையும் கரைக்கச் செய்து, சிறிது தண்ணீரை மட்டுமே மீதமாக விட்டுச் சென்றிருந்தார். நீங்கள் 100 கிலோ எடை இருந்தால் (அனைவரும் சிரிக்கின்றனர்) அதில் 70 முதல் 72 கிலோ வரையில் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. அந்த யந்திரத்தைப் பயன்படுத்தி கரைந்துபோன மனிதர், 70 கிலோ அல்லது லிட்டர் தண்ணீரை அங்கே விட்டுச் செல்லவில்லை. அவருடைய தண்ணீரின் ஒரு பகுதி வேறொரு பொருளாக மாற்றப்பட்டு, மீதமிருந்த நீர் மட்டும் அவ்விடத்தில் தேங்கிப் போயிருக்கலாம்.

அந்த குடும்பத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்று ஒரே ஆச்சரியம். என்னிடம் தொடர்ந்து, "சத்குரு, இங்கோர் அற்புதம் நடந்திருக்கிறது," என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான், “வாயை மூடிக்கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த நபர் செய்த முயற்சியை பற்றிச் சொன்னேன் (சிரிக்கிறார்).

“அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களை கவனியுங்கள். அதை கவனிக்காமல் போனால், அந்த அற்புதம் என்னவென்றுகூட உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.”

இந்த உடலில் அன்றாடம் நடக்கும் அற்புதத்தை எவரும் கண்டுகொள்வதில்லை. நீங்கள் குடிக்கும் தண்ணீர் உடலாக மாறுகிறது. சுவாசிக்கும் காற்று உடலாகிறது. இந்த அற்புதத்தை எவரும் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு லிங்கபைரவி யந்திரத்தைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர் ஒர் அற்புதமாகத் தெரிகிறது. நான் சொன்னேன், “அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதங்களை கவனியுங்கள். அதை கவனிக்காமல் போனால், அந்த அற்புதம் என்னவென்றுகூட உங்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடும்.”

எனவே, அமாவாசை காலத்தில் குறிப்பாக தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை நடக்கும்போது, ஒரு சக்தி வாய்ந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அந்த சக்திநிலை, அன்றைய தேதியோடு மட்டும் நின்றுபோய்விடாமல், முழு மாதமும் செயல்படுமாறு உருவாக்கப்படுகிறது. எனவே, அந்நாளில், அந்தச் சூழ்நிலையில் இருப்பவர், தம் உடலின் இயக்கத்தை ஒருங்கிணைத்து அதன்மூலம் உடலில் உள்ள பஞ்சபூதங்களையும் இணைந்து செயல்படச் செய்ய முடியும்.

அப்படியானால், இப்போது அந்தப் பஞ்சபூதங்கள் அப்படிச் செயல்படுவதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒரு உடலிலும், மற்றொரு உடலிலும் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் விதம் வெவ்வேறு விதமாக உள்ளது, ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரு மனிதன் பற்றிய பல விஷயங்களை அவனுக்குள் இயங்கும் பஞ்சபூதங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வைத்துச் சொல்லலாம். ஏன் அனைத்தையுமே சொல்லிவிடலாம் என்று கூட என்னால் சொல்ல முடியும்.

இந்த உடல் என்பது ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு செல்ல தடையாக இருக்காமல், உயர்ந்த சாத்தியத்திற்கு ஓர் அடித்தளமாக அமைய வேண்டுமானால், இந்தக் கட்டமைப்பு ஒருங்கிணைந்திருப்பது மிக அவசியம். பூதசுத்தி எனப்படும் அடிப்படை யோகப் பயிற்சியை முறையாகச் செய்தால், அதன்மூலம் அடிப்படைக் கூறுகள் போதுமான அளவுக்கு சுத்தம் செய்யப்படுமானால், உடலில் ஒருங்கிணைப்பு செயல் நன்றாக இருக்கும்.

தியானலிங்கத்தில் நீங்கள் இருந்தாலே, உங்கள் உடல் இயக்கத்தை வியக்கத்தக்க அளவுக்கு ஒருங்கிணைத்து விடலாம். இந்த ஒருங்கிணைப்பு மேலெழுந்தவாரியாக அல்லாமல் ஆழமாக நடைபெறும். “ஓ, என்னுடைய இதயத்துடிப்பு சரியாக இருக்கிறது, என்னுடைய ரத்த அழுத்தம் நிதானத்துடன் இருக்கிறது, என்னுடைய உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது,” என்று பேசிக் கொள்வது மட்டும் உடல்நலம் அல்ல. இவை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்திற்கான குறியீடுகள் மட்டுமே. ஆனால், நம் உடலில் பஞ்சபூதங்கள் ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்படுவதுதான் உண்மையான ஆரோக்கியம். அவ்வாறு பஞ்சபூதங்கள் நன்றாக இணைந்து செயல்படும்போது, மருத்துவமனைகள் சொல்லும் நோய் பரிசோதனை முடிவுகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், அடிப்படைக் கூறுகள் அனைத்தும் சரிவரச் செயல்பட்டால், பலமாக இணைந்திருந்தால், ஆரோக்கியம் என்பது தானாகவே நிகழும்.

கோவை, ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் மாதந்தோறும் சிவராத்திரியன்று, மாலை 5.40 மணியிலிருந்து 6.10 மணி வரை, பஞ்சபூத ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் உடல் மற்றும் மனநிலை ஒருவருக்கு உறுதிப்படுகிறது. நோயால் அவதிப்படுபவர்கள், உடல் பலவீனமாக உணர்பவர்கள், மனஉறுதி அற்றவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், நீடித்த பயவுணர்வால் அவதிப்படுபவர்கள் யாவரும் இதனால் பயன்பெற முடியும்.

மேலும், ஒருவரின் குறிக்கோள் நிறைவேறவும் இந்தப் பஞ்சபூத ஆராதனை உறுதுணையாக இருக்கிறது. சந்தேகம், பயம் போன்றவற்றை போக்குவதற்காக பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட "அபய சூத்ரம்" பஞ்சபூத ஆராதனையில் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு தன்மைகளை மனத்திலிருந்து விலக்க முடிந்தால், ஒருவர் வாழ்க்கையை அவருடைய முழு திறனோடு வாழமுடியும்.

2015ல் அடுத்து வரும் பஞ்சபூத ஆராதனைக்கான தேதிகள்:

ஆகஸ்ட் 12
செப்டம்பர் 11
அக்டோபர் 11

மேலும் தொடர்புக்கு: 9487895878

பஞ்சபூத ஆராதனைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய