சத்குரு: தன்னை அவமானப்படுத்திய துருபதனை பழிவாங்க சபதம் செய்த துரோணர், பரசுராமரிடம் அஸ்திரங்களை பெற்றுக்கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பல்வேறு போர்க்கலைகளில் பயிற்சி அளிக்கத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட அளவு தேர்ச்சியடைந்து அவர்கள் தங்களின் குருவுக்கு ஏதாவது அர்ப்பணிக்க விரும்பியபோது, முதல் காரியமாக துரோணர் துருபதனை சிறைப்பிடித்து வரக் கேட்டார். வேறு எந்த காரணமும் இல்லாமல் பாஞ்சால தேசத்தின் தலைநகரான காம்பில்யா மீது தாக்குதல் தொடுத்தார்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவ அரச குமாரர்கள்.

உற்சாகமாக தாக்குதலை துவங்கினார்கள் கௌரவ சகோதரர்கள், பாண்டவர்கள் பின்தங்கியிருந்து கவனித்தார்கள். தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை துருபதனின் படை. எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென இவர்கள் ஏன் கிளம்பி வந்து தங்கள் நகரை தாக்குகிறார்கள் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை. தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்த பொதுமக்கள், கையில் கிடைத்த வீட்டு உபயோக கத்தி, கம்பு என்று எதையாவது எடுத்துக்கொண்டு வந்து கௌரவர்களை எதிர்த்து சண்டையிட்டு அவர்களை துரத்தியடித்தார்கள். சாதாரண பொதுமக்களிடம் தோல்வியடைந்த கௌரவர்கள் அவமானத்துடன் திரும்பினார்கள். பிறகு அர்ஜுனன் பக்கம் திரும்பிய துரோணர், "உங்கள் குருவுக்கு நீதான் குருதட்சிணை வழங்க வேண்டும். நீ துருபதனை கொண்டுவர வேண்டும்" என்றார்.

துருபதனுக்கு நேர்ந்த அவமானம்

பீமனும் அர்ஜூனனும் காம்பில்யா நகருக்குள் புகுந்து, துருபதனை சிறைப்பிடித்து, கட்டி, தங்களுடன் தூக்கிக்கொண்டு வந்து துரோணரின் காலடியில் வைத்தார்கள். துரோணரைப் பார்த்த கணமே துருபதனுக்கு எல்லாமும் புரியத் துவங்கியது. மாவீரனான தன்னை இப்படி இளைஞர்களை அனுப்பி சிறைபிடித்து காலடியில் கைதியாக வைத்திருக்கும் நோக்கமும் தெரிந்தது. துரோணர் பேசத் துவங்கினார், "இப்போது நாம் பகிர்ந்துகொள்வதைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் நாம் சமமானவர்கள் இல்லை. என் முன்னே நீ கைதியாக கிடக்கிறாய். என் சீடர்களிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு நீ. எனக்கு என்ன விருப்பமோ, அதை என்னால் செய்ய முடியும். ஆனால் நான் உனக்கு நண்பனாக இருந்தவன் - எனவே உன் உயிரை பிழைத்திருக்க விடுகிறேன்."

துருபதனுக்கு துரோணர் மீது மட்டும் பழிதீர்த்துக்கொள்வது போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்த குரு வம்சத்தையும் பழிவாங்க நினைத்தான்.

ஒரு ஷத்ரியனுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான செயல், அவனை தோற்கடித்து உயிருடன் விடுவதுதான். துரோணர் அதைத்தான் விரும்பினார். உனக்கு உயிர் பிச்சை அளிக்கிறேன் என்று ‌துருபதனிடம் சொல்வதுதான் அவனுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய தண்டனை என்பது துரோணருக்கு நன்றாகவே தெரியும். அதிலும், ஒரு பிராமணன் தன்னை இப்படிச் செய்துவிட்டான் என்பது அவனுக்கு இன்னும் வேதனை தரும். தொடர்ந்த துரோணர், "உனது இராஜ்ஜியத்தில் பாதி என்னுடையது. ஒரு நண்பனாக, மறுபாதியை உனக்கே தருகிறேன். அந்த மறுபாதியை நீ சென்று ஆட்சி செய்துகொள், ஒரு பாதி இப்போது எனது" என்றார். அவமானம், கோபம், வெறுப்பு எல்லாமும் சேர்ந்து கொதிக்க தனது மறுபாதி இராஜ்ஜியத்தை அடைந்த துருபதனின் நிலையை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குமுறிக் கொண்டிருந்தான் துருபதன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

துருபதன் சிவனை நோக்கி, "இந்த பழியை தீர்க்க எனக்கு ஒரு குழந்தையை தரவேண்டும்" என வேண்டினான். ஏனென்றால், ஒருமுறை தோற்றதுமே, மீண்டும் அவரை நேருக்கு நேர் மோத அழைக்கும் தகுதியை ஒருவன் இழந்துவிடுகிறான். குழந்தையும் பிறந்தது. ஆனால் அது பெண் குழந்தையாக இருந்தது. துருபதனால் நம்ப முடியவில்லை. "பழிவாங்கத்தானே நான் ஒரு குழந்தையை கேட்டேன். இந்த பெண் எப்படி பழி தீர்ப்பாள்?" என சிவனை கேட்டான் துருபதன். பிறந்த முதல் நாளில் இருந்தே அந்த குழந்தையை ஒரு ஆண் பிள்ளைக்கான உடைகளை அணிவித்து ஆணாகவே வளர்க்கத் துவங்கினான். மக்களுக்கு இது பெண் குழந்தை என்பது தெரியக்கூடாது என்று நினைத்தான். இந்த பெண் குழந்தைதான் அம்பையின் மறு பிறப்பு. இப்போது சிகண்டி என்ற பெயருடன் வளர துவங்கியது.

துருபதனுக்கு துரோணர் மீது மட்டும் பழிதீர்த்துக்கொள்வது போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்த குரு வம்சத்தையும் பழிவாங்க நினைத்தான். குரு வம்ச வாரிசுகள்தானே தன்னை சிறைபிடித்தனர் என்பதால், அவர்கள் அனைவரையும் கொல்ல நினைத்தான். அவர்களுக்கு தூணாக நிற்கும் பீஷ்மரை வீழ்த்தினால் மொத்த குரு வம்சமும் வீழ்ந்துவிடும் என்பதை அறிந்திருந்தான் துருபதன். தனது பதினான்காவது வயதில் சிகண்டி காணாமல் போனாள்‌. அவர்கள் கலக்கமடைந்தார்கள். எல்லா பக்கமும் தேடி அலைந்தும், சிகண்டியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிகண்டி கானகத்திற்குள் சென்று போர்ப் பயிற்சியை தனிமையில் துவங்கியிருந்தாள். ஏனென்றால், தான் பருவமடைந்திருப்பதை மறைக்க விரும்பினாள் சிகண்டி. தான் ஒரு பெண் என்பதை யாரும் தெரிந்துகொள்வதை சிகண்டி விரும்பவில்லை. அவளது இக்கட்டான நிலையை கண்ட ஸ்துணகர்ணன் என்ற யட்சன் உதவ வந்தான். "நான் உனக்கு ஆண் தன்மையை வழங்குகிறேன்" என்றபடி தனது மந்திர சக்தியை பயன்படுத்தி சிகண்டியை ஆணாக உருவம் மாற்றி‌, "சமுதாய சூழ்நிலைகளை சமாளிக்க இது உனக்கு உதவியாக இருக்கும். ஆனால் நிஜத்தில் நீ பெண்ணாகவே இருப்பாய்" என்றான்.

நெருப்பிலிருந்து தோன்றியவள்

துருபதனின் வாழ்க்கையின் ஒரே நோக்கம் எப்படியாவது துரோணரை அவமானப்படுத்தி, குரு வம்சத்தை அழிப்பதாக மாறியது. துரோணரை வீழ்த்தி, குரு வம்சத்தை அழிக்கும் வல்லமையுடைய பிள்ளைகள் தனக்கு பிறக்கும்படியான யாகத்தை யாராவது செய்து தருவார்களா என்று தேடத்துவங்கினான். தனக்காக புத்திரகர்ம யாகம் செய்விக்க, அப்போது பெயர் பெற்றிருந்த ஜய, உபஜய எனும் இரு தாந்திரீகர்களை அணுகினான். யாகத்தில், "துரோணரை வெல்லும் வல்லமையுடைய ஒரு மகனும், குரு வம்சத்தை பிளவுபடுத்தும் ஒரு மகளும் எனக்கு வேண்டும்" என வேண்டிக்கொண்டான் துருபதன். விரிவாக நடைபெற்ற யாகத்தின் முடிவில், ஒரு இளைஞனையும், ஒரு இளைஞியையும் யாக குண்டத்தின் நெருப்பிலிருந்து வெளியே எடுத்தார்கள்.

உலகிலேயே மிகச்சிறந்த வில்லாளியும், வீரமும் நிறைந்த ஒருவனை தன்னுடைய மகள் மணம் முடித்தால் தங்களால் பழிவாங்க முடியும் என நினைத்தான் துருபதன்‌.

திருஷ்டதியும்னா, திரௌபதி இவர்கள் இருவரும் ஆணும் பெண்ணும் இணைந்ததால் உருவானவர்கள் இல்லை - அவர்கள் நெருப்பிலிருந்து தோன்றியவர்கள். இருவரும், பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பிறந்த உயிர்கள். துவக்கத்திலிருந்தே அவர்கள் வாழ்க்கையின் ஒரே நோக்கம், துரோணரையும், குரு வம்சத்தையும் பழிவாங்குவதுதான் என்பதை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருந்தான் துருபதன். அங்கே குரு வம்சத்தினர் தங்களுக்குள்ளே மோதிக்கொள்ள துவங்கிய அதேநேரத்தில், அவர்களுக்கு அருகிலேயே ஒரு வலிமையான எதிர்ப்பு வளர துவங்கியிருந்தது.

உலகிலேயே மிகச்சிறந்த வில்லாளியும், வீரமும் நிறைந்த ஒருவனை தன்னுடைய மகள் மணம் முடித்தால் தங்களால் பழிவாங்க முடியும் என நினைத்தான் துருபதன்‌‌. தகுதியான வீரனை தேடிய துருபதனால், துரோணரை வெல்லக்கூடிய ஒருவனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் கிருஷ்ணர் அதுவரை வெற்றியடைந்திருந்த போர்களைப் பற்றிய‌ தகவல் அறிந்தான் துருபதன்‌. மதுரா நகரை ஜராசந்தனின் படை பதினேழு முறை தாக்கியிருந்தது. யாதவ படைபலம் ஜராசந்தனின் படையில் பத்தில் ஒரு பங்கே இருந்தபோதும், கிருஷ்ணரும் பலராமரும் இணைந்து, வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு, தங்கள் படையினருக்கு உற்சாகமூட்டி, ஒவ்வொரு முறையும் ஜராசந்தனையும் அவனது படையையும் துரத்தியடித்திருந்தனர்.

பதினெட்டாம் முறை மீண்டும் தாக்குவதற்காக, இன்றைய ஆப்கானிஸ்தான் என அறியப்படும் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த மேலும் சில அரசர்களை‌ துணைக்கு சேர்த்தான்‌ ஜராசந்தன்‌. அவரவர் படையுடன் வந்து எல்லா திசையிலும் மதுரா நகரை அனைவரும் சேர்ந்து சூழ்ந்து கொண்டார்கள். பெரும் எண்ணிக்கையிலான ஒரு மாபெரும் படை தங்களை சூழ்ந்திருப்பதை பார்த்த கிருஷ்ணர், அங்கேயே இருந்து எதிர் தாக்குதல் நடத்த முயன்றால் யாதவ இனமே அழிந்துவிடும் அபாயத்தை பார்த்தார்‌. எனவே யாதவ மக்கள் அனைவரும் கால்நடையாக அங்கிருந்து கிளம்பி ஆயிரத்தி முன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் குஜராத்தில் இருந்த துவாரகை நோக்கி பயணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைவரையும் சமாதானம் செய்தார். தங்களின் குடியிருப்பை விட்டு அகதிகளாக வெளியேறி, ராஜஸ்தானின்‌ பாலைவனப் பகுதியை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வழியிலேயே இறக்கவும் நேர்ந்தது.

துவாரகை பயணம்

யாதவர்கள் புதிதாக ஒரு நகரை நிர்மாணிக்கும் திட்டத்துடன்தான் கிளம்பினார்கள். ஆனால்‌ அங்கே சென்றதும் ஒரு சிறு தீவில் தங்களுக்கு ஏற்றதாக இருந்த ஒரு இடத்தில் ஏற்கனவே நன்றாக நிர்மாணிக்கப்பட்ட நகரை கண்டனர். தங்களுக்கு ஏற்ற இடம் இதுவே என முடிவெடுத்த கிருஷ்ணர், பலராமனுக்கு அந்நகரை ஆண்டு வந்த ரேவதன் எனும் அரசனின் மகளான ரேவதியை திருமணம் செய்து யாதவ குலத்தினருக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தினார். யாதவர்கள் நகரில் குடியேறியதும், சுற்றிலும் இருந்த சிற்றரசுகளை எளிதாக கைப்பற்றினார் கிருஷ்ணர்‌. எங்கே போர் தேவைப்பட்டதோ, அங்கே போரிட்டு வென்றார். எங்கெல்லாம் திருமணம் மூலம் அந்த ராஜ்ஜியங்களை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்ததோ, அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டின் இளவரசியை திருமணம் செய்துகொண்டார்.

உலகிலேயே மிக அழகானவள் என்று புராணங்களில் வர்ணிக்கப்படுகிறாள் திரௌபதி. கருமையான மின்னும் மேனியுடையவளாக குறிப்பிடுவதுடன், ஒரு பெண் இவ்வளவு பேரழகுடன் இருந்தால் அவள் நிச்சயமாக பிரச்சனைகளை கொண்டு வருவாள்

அப்போதைய காலகட்டத்தில், குடும்ப உறவுகள் மிக முக்கியமானதாக இருந்ததுடன், எதிர் தரப்பினருடன்‌ அமைதி ஏற்படுத்திக்கொள்ள திருமணங்கள்தான் ஒரே வாய்ப்பாகவும் இருந்தது. உங்கள் மகளை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால், அதற்கு பிறகு உங்கள் மாப்பிள்ளை மீதே நீங்கள் போர் தொடுக்க முடியாதுதானே. மாபெரும் வீரனான ருக்மியை வென்று அவனது சகோதரி ருக்மணியை கடத்தி வந்தார்‌ கிருஷ்ணர். சேடி நாட்டின் காளை என அறியப்பட்ட சிசுபாலனை வென்றார். ஒருமுறை ஜராசந்தனுடன் நேருக்கு நேர் மோத நேர்ந்தபோது, அவனை அவமானப்படுத்தி துரத்தியும் இருந்தார். இப்படியாக, கிருஷ்ணரின் வீரமும் தீரமும் பாராட்டப்பட்டு பரவலாக பேசப்பட்டு வந்தது.

அபாயமான அழகு

தனது மகளுக்கு ஏற்ற மணாளன் கிருஷ்ணன்தான் என நினைத்தான் துருபதன். தனது மகளை மணமுடித்துக்கொள்ள தூது அனுப்பி வைத்தான். அழைப்பை தவிர்க்க முயன்றார் கிருஷ்ணர். இதில் பிரச்சனை என்னவென்றால்‌, நேரடியாக மறுத்தால், தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்து போருக்கு அழைப்பான் துருபதன். திரௌபதியை மணமுடிக்க விரும்பாத கிருஷ்ணர், அந்த சூழ்நிலையில் இருந்து லாவகமாக தன்னை விடுவித்துக் கொண்டார். "நான் வெறும் மாட்டுக்காரன்தானே... அரசியான திரௌபதியை நான் எப்படி மணமுடிப்பது?" என்று நழுவினார்.

கிருஷ்ணர் பல இளவரசிகளை மணமுடித்து இருந்தாலும் திரௌபதி அவர்களில் தனித்து நின்றாள். உலகிலேயே மிக அழகானவள் என்று புராணங்களில் வர்ணிக்கப்படுகிறாள் திரௌபதி. கருமையான மின்னும் மேனியுடையவளாக குறிப்பிடுவதுடன், ஒரு பெண் இவ்வளவு பேரழகுடன் இருந்தால் அவள் நிச்சயமாக பிரச்சனைகளை கொண்டு வருவாள்; அவளுக்காக மற்றவர்கள் மோதிக்கொள்வார்கள்; நாடுகள் பிளவுபடும்; சகோதரர்களே மோதிக்கொள்வார்கள்; மோசமான சம்பவங்கள் நிகழும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுயம்வரம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு துருபதனை வலியுறுத்தினார் கிருஷ்ணர்‌. தகுதியான வீரர்கள் யாரும் இல்லை என்று முதலில் மறுத்த துருபதனை, "திரௌபதியைப் போன்ற ஒரு தீவிரமான ஒரு பெண் தன் விருப்பப்படி தனக்கான மணமகனை தேர்வு செய்ய‌ வேண்டும். அவளுக்காக நீ தேர்ந்தெடுக்கக்கூடாது" என்று வாதிட்டு சம்மதிக்கச் செய்தார். ஒரு போட்டியை முன்னிறுத்தி சுயம்வரம் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்‌ யாரை வேண்டுமானாலும் திரௌபதி தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார் கிருஷ்ணர். சுயம்வரத்திற்கான போட்டியை கிருஷ்ணரின் குருவான சண்டிபானி முன்னின்று வடிவமைத்தார். மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சுழலும் சக்கரத்தின் மையத்தில் ஒரு மீன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மத்ஸ யந்திரம் என அழைக்கப்பட்ட‌ அதன் பிம்பத்தை, கீழே வைக்கப்பட்டுள்ள எண்ணை பாத்திரத்தில் பார்த்தபடி, மேலே சுழலும் சக்கரத்தில் உள்ள மீன் உருவத்தின் கண்ணை துளைக்க வேண்டும். யாரொருவர் இலக்கை துளைக்கிறாரோ அவரை திரௌபதி தேர்வு செய்தால், அவருக்கு மணமுடிக்க வாய்ப்பு கிடைக்கும்‌. நீண்ட நேரம் விவாதம் செய்தபிறகு கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்று, திரௌபதியை மணம் முடிப்பதற்கான சுயம்வரத்தை அறிவித்தான் துருபதன்.

தொடரும்...