இலுமினாட்டி என்ற ரகசிய சமூகம் இருப்பது உண்மையா? (Illuminati Meaning in Tamil)
சமீபமாக, இலுமினாட்டி என்ற ரகசிய சமூகம் இருப்பதாகவும், செல்வாக்குமிக்க பல்வேறு ஆளுமைகளையும் விஷயங்களையும் அந்தக் குழுதான் கட்டுப்படுத்துவதாகவும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இலுமினாட்டிகள் குறித்தும், ரகசிய குறியீடுகள் குறித்தும் சத்குருவின் பார்வையைப் படித்தறியுங்கள்.
கேள்வியாளர்: சத்குரு, இந்தக் கேள்வி அனிக்கத் திவாகரிடம் இருந்து. குருஜி சமீப காலத்தில் நிறைய விஷயங்கள் இலுமினாட்டி பற்றி நான் கேள்விப்படுகிறேன். Finance, Pharma, அரசியல் மூலமாக சீக்ரெட் சொசைட்டியாக அவர்கள் இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நிறைய தலைவர்கள், குருமார்கள், துறவிகள் கூட அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சத்குரு: இல்லை, நான் இல்லை, நான் அதில் இல்லை.
கேள்வியாளர்: சத்குரு, இருந்தாலும் நீங்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
சத்குரு: சொல்கிறேன், ஆனால் நான் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்ல வருகிறேன்.
கேள்வியாளர்: சரிங்க சத்குரு
சத்குரு: நீங்கள் Dan Brown புத்தகங்களை நிறைய படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வியாளர்: அனிக்கத்தை தானே சொல்கிறீர்கள்?
Subscribe
சத்குரு: ஆமாம், அனிக்கத் தான். இது ஐரோப்பிய கலாச்சாரத்துடைய ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. இப்போதெல்லாம் நாமும் இதை கொஞ்சம் உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால் ஐரோப்பாவில் Secret Schools என்பது ஒரு காதல் விவகாரம் போல பார்க்கப்படுகிறது. இன்றைக்கு மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் கூட சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் இவர்கள் எல்லாம் கூட சீக்ரெட் ஸ்கூலுடைய அங்கமாக இருந்திருக்கிறார்கள்.
சீக்ரெட் ஸ்கூல் உருவானது ஏன்?
எதற்காக இப்படி சீக்ரெட் ஸ்கூல் உருவாக்க வேண்டும்? ஏனென்றால், சமூகம் எப்படி இருக்கிறது என்றால், தன்னோடு உடன்படாத விஷயங்களை அழித்துவிட வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறது. அழித்துவிட வேண்டும். எங்கே அழித்தல் இருக்கிறதோ அங்கேதான் ஒரு ஸ்கூல் சீக்ரெட் ஸ்கூலாக ஆகும், இல்லையா. சீக்ரெட் ஸ்கூல் பாரம்பரியம் ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், பழமைவாத மத நம்பிக்கைகள் எல்லாவற்றையுமே முடக்கி வைத்தது தான்.
எங்கே எல்லாம் 10 பேர் கூடினார்களோ அதை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நினைத்தார்கள், அந்த மக்களை கொல்ல நினைத்தார்கள், இதனால் தான் சீக்ரெட் ஸ்கூல் நடத்தினார்கள்.
இலுமினாட்டிகள் உருவானது எப்படி? (Illuminati Meaning in Tamil)
இதில் நீங்கள் இலுமினாட்டி என்று சொல்கிற விஷயம் பின்நாட்களில் ஃப்ரீ மேஷனாக மாறியது. இதற்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள். என்னால் ஊர்ஜிதமாக இதை சொல்ல முடியவில்லை.
ஒரு சில புத்தகங்களில் Freemasons இந்திய கொத்தனார்களால் தொடங்கப்பட்டு, பின் நாட்களில் எகிப்திற்கு போனது என்று எழுதியிருக்கிறார்கள். வேறு இடத்தில் பிழைத்து வாழ வேண்டும் என்பதால், உயிர் வாழ்வதற்கு பல்வேறு யுக்திகளை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.
அவர்களுக்குள்ளேயே பரிபாஷைகளை உருவாக்கிக்கொண்டு அதன் மூலமாக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ரகசிய பாஷையில்தான் பேசிக்கொண்டார்கள். அதன் மூலமாக விரோதப்போக்கில் செயல்பட்ட அந்தக் கலாச்சாரத்தில் உயிர் பிழைத்து வாழ்ந்தார்கள். அங்கே இருந்து தான் இது பரவியது. இப்படித்தான் சில புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதை ஊர்ஜிதப்படுத்துவது போல வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆனால் இது நடக்க சாத்தியம் இருக்கிறது.
இங்கே இருந்து கொத்தனார்கள் போனார்கள். இந்தியாவில் இருந்து போனவர்கள் கல் வேலைகள் செய்தார்கள் என்றும், பிரமிடுகள் மற்றும் பால்பெக் கோவில் கட்டினார்கள் என்றும் நமக்கு தெரியும். இதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கிறது. பால்பெக் கோவில் லெபனானில் இருக்கிறது. கிட்டத்தட்ட 4200 - 4300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு ஃபினிஷியன் கோவில் இந்திய கொத்தனார்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்திய யானைகள் வேலையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. லெபனானில் உள்ள குழந்தைகள் ஸ்கூலில் இதை படிக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு இந்திய குழந்தையும் இதைப்பற்றி படிக்கவில்லை. இந்திய வரலாற்று புத்தகங்களிலும் துரதிருஷ்டவசமாக இது எங்கேயுமே எழுதப்படவில்லை.
எப்படியோ பின் நாட்களில் இது ஃப்ரீ மேஷன்ட்ரி ஆனது. ஃப்ரீ மேஷன்ட்ரி மிக வலிமையான வடிவம் எடுத்தது. அந்த இயக்கம் அமெரிக்காவிற்கு போனபோது மிக மிக வலிமையானது. ஏனென்றால், அங்கே நிலவி வந்த கிறிஸ்துவ ஒடுக்கு முறைகளால் இதனுடைய பலம் அதிகரித்தது. சுதந்திரமாக யோசிப்பவர்கள் தங்களை ஃப்ரீ மேஷன் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பேரில்தான் மேஷன், கொத்தனார் என்று சொல்லிக்கொண்டார்களே ஒழிய, அவர்கள் அந்த தொழில் செய்யவில்லை.
வடிவியலும் யோகாவும்
ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க முடியும். எங்கே எல்லாம் ஃப்ரீ மேஷன் இருந்தார்களோ அங்கே எல்லாம் கட்டிட டிசைன் மிக அற்புதமாக இருக்கும். நான் நிறைய ஃப்ரீ மேஷன்கள் கட்டிய கோவில்களுக்கு போயிருக்கிறேன். சும்மா அவர்கள் கட்டிடங்களுடைய டிசைன் எனக்கு பிடித்ததால் போனேன். அற்புதமான டிசைன்களில் கட்டியிருக்கிறார்கள். அந்த கலாச்சாரத்துடைய ஒரு அங்கமாகவே வடிவியல் முறைகள் இருந்திருக்கிறது. இந்த காரணத்தினால் தான் அவர்களைப் பற்றி புத்தகங்கள் எழுதுபவர்கள், இவர்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து வந்ததை குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவுடைய யோகக் கலாச்சாரம் வடிவியல் ஒருங்கமைப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
யோகா என்றால் ஒருவிதத்தில் உங்கள் உடலமைப்புடைய வடிவியலை இந்த பிரபஞ்சத்துடைய வடிவியலோடு ஒத்திசைவாக வைத்துக்கொள்வது என்று சொல்லலாம். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கை அனுபவம் மேம்பட்டு, எது நீங்களாக இருக்கிறீர்கள், எது இந்த பிரபஞ்சமாக இருக்கிறது, இது இரண்டும் ஏதோ விதத்தில் நீங்கள் அந்த அண்டத்துடைய பிரதிபலிப்பாகவும், இல்லை என்றால் அந்த அண்டம் உங்களுடைய பிரதிபலிப்பாகவும் ஆகிவிடும். இதை நீங்கள் எப்படி பார்க்க விரும்பினாலும் சரி. எங்கெல்லாம் வடிவியலுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அங்கே எல்லாம் நிச்சயமாக யோகிகள் போயிருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். ஏனென்றால் அந்த காலத்தில் உள்நிலையில் நீங்கள் வேலை செய்யாவிட்டால் இந்த அளவிற்கு நீங்கள் வடிவியலோடு ஒன்றியவராக இருக்கமாட்டீர்கள்.
இலுமினாட்டிகள் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்களா?
இப்போதெல்லாம் மக்கள் வடிவியல் படிக்கிறார்கள். நிச்சயமாக வெளிநிலையில் தான் படிக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் மிகவும் சிக்கலான வடிவியலை புரிந்துகொள்ள ஒரே வழி, உங்களுடைய சுய உருவம் மற்றும் உங்களுடைய உடம்பு எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்வது, கிரகங்கள் மற்றும் வானியல் நிகழ்வுகளைக் கவனிப்பது ஆகியவைதான். அதனால் ஒரு காலத்தில் அவர்கள் ஒரு சில விஷயங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலோடு இருந்தார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லா சீக்ரெட் ஸ்கூல் பற்றியும் மிகைப்படுத்தி தான் இப்போதெல்லாம் பேசுகிறார்கள். அனிக்கத் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இப்போதெல்லாம் அவர்கள் எதையுமே பெரிதாக ஒன்றும் கட்டுப்படுத்துவதில்லை. டொனால்டு டிரம்ப் தான் நிறைய விஷயங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.