ஈஷாவின் சமூகநலத்திட்டங்கள் பற்றி சத்குரு
ஈஷாவின் பல சமூகநலத் திட்டங்கள் குறித்தும், அவற்றை உருவாக்கியிருப்பதன் நோக்கம் குறித்தும் சத்குரு கூறியிருப்பதைத் தொகுத்துள்ளோம், படித்து அறிந்துகொள்ளுங்கள்.
கிராமிய வாழ்க்கையைக் கொண்டாடும் விதமாக வருடாவருடம் நிகழும் கிராமோத்சவம் நிகழ்ச்சி, 2016ல் செப்டம்பர் 4ஆம் தேதி கோவையில் நடந்தது. இப்பதிவில், ஈஷாவின் பல சமூகநலத் திட்டங்கள் குறித்தும், அவற்றை உருவாக்கியிருப்பதன் நோக்கம் குறித்தும் சத்குரு கூறியிருப்பதைத் தொகுத்துள்ளோம், படித்து அறிந்துகொள்ளுங்கள்.
வருடாவருடம் செப்டம்பர் மாதத்தில் நிகழும் ஈஷா கிராமோத்சவம் எனும் மாபெரும் கிராமியத் திருவிழா, இவ்வருடம் செப்டம்பர் 4ஆம் தேதி கோவையில் நிகழ்ந்தது. கிராமியத் தமிழ்நாட்டின் உற்சாகத்தை வெளிப்படுத்த ஒரு மேடை அமைத்துத்தந்து, கிராமியக் கலைகள், நாடகங்கள், இசை, நடனம், மற்றும் உணவுகளை நாம் கண்டு, கேட்டு, உண்டு மகிழ வழிவகுக்கிறது. கிராமிய வாழ்க்கையில் விளையாட்டுகள் முக்கியப் பங்குவகிப்பதை எடுத்துக்காட்ட, கிராமங்களுக்கு இடையேயான இறுதிச்சுற்று விளையாட்டுக்களும் இந்நிகழ்ச்சியின் அங்கமாக அரங்கேறின.
இப்பதிவில், ஈஷா அறக்கட்டளையின் சமூகநலத்திட்டங்கள் குறித்தும், அவை உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கம் குறித்தும் சத்குரு சொல்கிறார்.
கிராமப் பகுதிகளில் ஈஷா யோகா
சத்குரு:
ஈஷா யோகா நிகழ்ச்சியை பல்வேறு நிலைகளில் நடத்தி வருகிறோம். இந்தியாவின் கிராமப்பகுதிகளில்தான் எங்கள் பணியில் 70% நிகழ்கிறது, இந்த 70% யோகா நிகழ்ச்சிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாமலே நடத்தப்படுகின்றன. அதே சமயம், பொருளாதார, அரசியல் மற்றும் மதத் தலைவர்களையும் நாம் வல்லமை படைத்தவர்களாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். உலகில் மிகவும் பொறுப்பான, சக்திவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதில் நாங்கள் அதீத கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் நம்மிடம் எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உலகம் எந்த திசை நோக்கிச் செல்லும் என்பதையும், எப்படி இயங்கும் என்பதையும் நிர்ணயிக்கிறது.
கிராமப்புத்துணர்வு இயக்கம்
புள்ளிவிவரங்கள்
- 70 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்
- 4200 கிராமங்களை அடைந்துள்ளது
- 20 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள்
- 150க்கு மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள்
சத்குரு:
என்னை என் போக்கில் விட்டுவிட்டால், நான் மக்களின் ஆன்மீகத்திற்கு மட்டுமே மூலமாக இருக்க விரும்புவேன், ஏனென்றால் நான் சிறப்பாக அறிந்தது அந்த ஒன்றுதான், ஆனால் சமூகத்தின் நிதர்சனங்களை நம்மால் புறந்தள்ள இயலாது. நீங்கள் ஆன்மீகம் பேச விரும்பினால், மக்கள் ஓரளவிற்கு சாப்பிடுவதற்கு நீங்கள் ஏதாவது வழிசெய்து தந்து, அவர்களுடைய அடிப்படை வாழ்க்கை முறையை சற்று சீர்ப்படுத்த வேண்டும். இந்த அடிப்படை வேலையை சமுதாயம் செய்துவிட்டால், ஆன்மீகப் பணியை மட்டும் செய்யும் சௌகரியம் ஒரு குருவிற்கு இருக்கும். ஆனால் அடிப்படை வேலையே செய்யப்படாமல் இருக்கும்போது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அந்த வேலையையும் சேர்த்து செய்யத் தேவையாக இருக்கிறது. நான் ஏதோவொரு சமூகநல ஆர்வலர் கிடையாது, ஆனால் இப்படி ஒரு அவசரமான தேவை உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு இருக்கும்போது, அதனை கவனிக்காமல் இருக்கமுடியாது.
கிராமப்புத்துணர்வு திட்டம் என்பது, தவறாகிப் போன சமூக சூழ்நிலைகளை மாற்றிக் கட்டமைப்பதன் மூலம், மனிதர்கள் மலர்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியாகும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமும் இலக்கும், மக்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை அர்த்தமுள்ளதாக மாற்றி, அவர்கள் செய்வது எதுவாயினும் அவர்கள் தங்களின் முழு ஆற்றலை உணர்வதற்கு வழிவகுப்பதாகும். இதில் மக்களின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்துவது நாம் கையாளவேண்டிய ஒரு பெரிய அம்சமாக இருந்தாலும், அதுவே இத்திட்டத்தின் நோக்கமல்ல. இது, மனிதர்களுக்கு உற்சாகமூட்டி, துடிப்பானவர்களாக மாற்றுவதன் மூலம், அவர்களை தன்னிறைவு அடையச் செய்வதற்கான வழி.
பசுமைக்கரங்கள் திட்டம்
Subscribe
புள்ளிவிவரங்கள்
- 280 கோடி மரக்கன்றுகள்
- 40 நாற்றுப்பண்ணைகள்
- இந்திரா காந்தி பார்யவரன் புரஸ்கார் விருது
சத்குரு:
பசுமைக்கரங்கள் திட்டம் தோன்றியதற்குக் காரணம், 1998ல், சில நிபுணர்கள் ஆய்வு செய்து, 2025ம் ஆண்டிற்குள், தமிழகத்தின் 60% நிலம் பாலைவனமாகிவிடும் என்று கணித்தார்கள். இந்த செய்தி எனக்குப் பிடிக்கவில்லை. இது ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை ஊட்டிவளர்த்த பூமி. அதனால் 1998 முதல் 2004 வரை, முதல் 6 ஆண்டுகளுக்கு, மக்கள் மனங்களில் மரங்கள் நட்டேன், மரங்கள் நடுவதற்கு அதுதான் மிகவும் கடினமான இடம்.
பிறகு 2004 முதல் இம்மரக்கன்றுகளை மக்கள் மனங்களிலிருந்து மண்ணிற்கு இடம்பெயர்த்து வந்துள்ளோம். இது ஒரு ஆனந்தமான செயல்முறையாக இருந்துள்ளது. பல லட்சம் மக்கள் இத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், தமிழகத்தில் பசுமைக்கரங்கள் திட்டம் ஒரு மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது. ஊடகங்கள், அரசு நிர்வாகம் உட்பட அனைவரும் இதில் கலந்துகொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்கள் இதற்காக உறுதியாக நின்று செய்துள்ள செயல்கள் வியக்கத்தக்கது.
ஈஷா வித்யா
புள்ளிவிவரங்கள்
- 9 கிராமங்களில் பள்ளிகள்
- 7158 குழந்தைகள்
- 4019 குழந்தைகளுக்கு மேல் முழு உதவித்தொகையில் பயில்கின்றனர்
- கணினி பயிற்சி மற்றும் ஆங்கில வழிக்கல்வி
சத்குரு:
ஈஷா வித்யா பள்ளிகள் அனைத்தும் கிராமங்களில் இயங்கும் பள்ளிகள். கிராமிய இந்தியாவில், 90% கல்வி இன்னும் மாநில அரசின் மூலம் மாநில மொழியிலேயே கற்றுத்தரப்படுகிறது. இன்று, உலகளவில் பொருளாதார செயல்பாட்டில் பங்குபெறுவதற்கு ஆங்கிலமொழி அடிப்படையான மொழியாகிவிட்டது. உலக அளவிலான செயல்பாடுகளில் பங்குவகிப்பதற்கான உங்கள் ஆற்றல், உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா தெரியாதா என்பதைப் பொறுத்தே இருக்கிறது. கிண்டர்கார்ட்டன் வகுப்பிலிருந்தே, ஆங்கில வழி, கணினி கற்கும் வசதி கொண்ட பள்ளிகளைத் துவங்குவதே எங்கள் நோக்கம். இப்பள்ளிகள், பெற்றோர்கள் இன்னும் தினக்கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கும் குழந்தைகளுக்கானது. எங்கள் மனதிலுள்ள ஒரே குறிக்கோள், இக்குழந்தைகள் திறமையற்ற வேலையாட்களாக இல்லாமல், உயர்மட்ட பொருளாதார செயல்பாட்டில் பங்குவகிப்பதற்கு திறன் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதே.
இந்தியாவை ஒரு தேசமாக நீங்கள் பார்த்தால், 125 கோடி மக்களுக்குத் தேவையான நிலம், மலைகள், காடுகள், ஆறுகள், ஏன்? அவ்வளவு மக்களுக்குத் தேவையான ஆகாயவெளி கூட நம்மிடம் இல்லை. நம்மிடம் இருப்பதெல்லம் மக்கள்தொகை மட்டுமே. இவ்வளவு மக்கள்தொகையை, கல்வியற்ற, குறிக்கோளற்ற, ஊக்கமற்ற, பயிற்சியற்ற மக்களாகவே விட்டுவிட்டால், நமக்கு பேரழிவு வெகுதூரத்தில் இல்லை. ஆனால் இதே 125 கோடி மக்கள் கல்விபெற்று, ஒரே நோக்கத்துடன், சமநிலையாக, உற்சாகத்துடன் இருந்தால், நாம் ஒரு அதிசயமான தேசமாக மாறிவிடுவோம்.
ஈஷா வித்யா பள்ளிகள், மாதிரிப்பள்ளிகளாகவும் விளங்கவேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது இப்பள்ளிகள் ஆசிரியர்களை உருவாக்கி, அரசுப்பள்ளிகளின் தரத்தையும் மேம்படுத்த உதவும். இதுவரை, நாம் அரசுப்பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 56 அரசுப்பள்ளிகளிலுள்ள 34,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைந்துள்ளோம். ஆனால் தமிழகத்தில் மட்டுமே தோராயமாக 1 கோடி குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களை ஊக்குவித்து, தரமான கல்வி வழங்கி, திறமையானவர்களாக மாற்றுவதற்கு, சிறிய அளவிலான உதவியே தேவைப்படுகிறது. இது நோக்கி சிறிது ஈடுபாடு காட்டினாலே, நிறைய செய்திட முடியும்.
இவ்வளவு பெரிய முயற்சிகள் எடுத்து இத்திட்டங்களை நாம் செயல்படுத்தி வருவதன் நோக்கமே, இன்னும் பலர் இதேபோல் செயல்பட ஊக்குவிக்கப்படுவார்கள் என்பதுதான். இத்திட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளையும் எங்கள் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். இது தேசம் முழுவதுமாக நிகழவேண்டும். பல நிறுவனங்களும், குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களும் இதைக் கையிலெடுத்து செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
ஈஷா ஹோம் ஸ்கூல்
ஈஷா ஹோம் ஸ்கூல், கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் அமைந்துள்ள இல்லப்பள்ளி. சத்குரு அவர்களால் 2005ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, குழந்தைகளுக்குள் இயற்கையாக இருக்கும் ஆர்வத்தைத் தூண்டி, கற்றலை ஊக்குவிக்கும் விதமான பாடதிட்டத்தைக் கொண்டது. இப்பள்ளி, பத்தாம் வகுப்பிற்கு ICSE போர்டு, மற்றும் பதினொன்று பன்னிரண்டு வகுப்புகளுக்கு ISC போர்டு பாடத்திட்டத்தையும் கொண்டது.
சத்குரு:
எந்தவொரு மனிதனுக்கும், கல்வி என்பது அடிப்படையில் உங்கள் வரையறைகளை விரிவுபடுத்துவது பற்றியது, உங்கள் வாழ்க்கையின் அளவை நீங்கள் பெரிதாக்க முயல்கிறீர்கள். உங்களை ஒவ்வொருமுறை பெரிதாக்கும் போதும், அது ஒரு ஆனந்தமான அனுபவமாக இருக்கிறது, ஏதோவொன்றை புதிதாக அறிந்துகொள்வது எப்போதுமே ஆனந்தமான அனுபவம்தான். ஆனால் தேர்வுகளால் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் எதற்காக பல குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? கல்வி பரிமாறப்படும் விதத்தாலேயே இப்படி நிகழ்கிறது. இன்று கல்வி பெரும் அடக்குமுறையாகிவிட்டது. இப்போது இருக்கும் கல்விமுறை முழுவதுமே, பலவிதங்களில் ஒரு மனிதரை முற்றிலும் அழிக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படியென்றால் கல்வியே இல்லாமல் செய்துவிடவேண்டும் என்று கிடையாது. அது சற்று மனிதாபிமானம் கொண்ட முகத்துடன் பரிமாறப்படவேண்டும். ஏதோவொரு விதத்தில் சற்று ஊக்கம் தேவைப்படுகிறது, வெறும் தகவல்களல்ல. உயிரற்ற எதையும் குழந்தைகள் கற்பதில்லை - எல்லாம் உயிர்தான். ஆனால் இன்று கல்வி கற்பிக்கப்படும் முறையோ, உயிருடன் சம்பந்தமற்றதாக இருக்கிறது. எவ்வளவு குழந்தைகள் வேதியியலை உயிருடன் தொடர்புடைய பாடமாக உணர்கிறார்கள் என்பது கேள்விக்குறியது. வேதியியல் நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்தாலும், குழந்தைகள் அப்படி உணர்வதில்லை. நாம் கல்வியை உயிருள்ளதாக, வாழ்க்கையுடன் தொடர்புடையதாக மாற்றவேண்டும். இது ஆராய்ந்தறியும் செயல்முறையாக இருக்கவேண்டும், குழந்தை தான் புதுப்புது விஷயங்களைக் கண்டறிவது போல உணரவேண்டும். யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை அவர் கையில் கொடுத்துக்கொண்டே இருந்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு அவர் தேர்வுகள் எழுதவேண்டியிருப்பது போல அவர் உணரக்கூடாது.
அதனால் நாம் ஈஷா ஹோம் ஸ்கூல் துவங்கினோம். இதை ஹோம் ஸ்கூல் என்று அழைப்பதற்குக் காரணம், இது ஒரு குடும்பத்தைப் போல நடத்தப்படுகிறது. பல வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள், படிக்கிறார்கள், குடும்பத்தைப்போல ஒன்றாக வளர்கிறார்கள். இங்குள்ள ஆசிரியர்கள், மிகவும் அர்ப்பணிப்பும், தேர்ந்த கல்வித்தகுதிகளும் கொண்டுள்ள அதே சமயம், துடிக்கும் இதயத்தையும் கொண்டுள்ளதால், குழந்தைகள் வளரும்போது நலமாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளும் விதமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.
குழந்தைகளைப் படிக்கவைப்பது பெரிய விஷயமல்ல. அதிகம் அடக்கியாளாமல் அவர்கள் புத்திசாலித்தனத்தை சற்று தூசுதட்டி, தெரிந்துகொள்வதற்கான தாகத்தை உருவாக்கினால், அவர்கள் முயற்சியின்றி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதைக் காண்பீர்கள்.
எதிர்காலத் திட்டங்கள்
சத்குரு:
ஏதோவொரு எளிமையான ஆன்மீகப் பயிற்சி கூட இல்லாத ஒரு மனிதன் கூட அடுத்த சில வருடங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடாது, இதற்காக நாம் ஒரு இயக்கத்தைக் கட்டமைத்துக்கொண்டு இருக்கிறோம். எனக்கு இந்த ஆர்வம் எப்போதும் இருந்துள்ளது, ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த விருப்பம் என்னுள் மிகவும் வலுவாகிவிட்டது, ஏனென்றால் கடந்த சில வருடங்களில் ஒவ்வொருவராக என்னுடைய சில அத்தைகளும் மாமன்களும் இறப்பதைக் கண்டேன். அவர்கள் சராசரி மக்களோடு ஒப்பிடும்போது நலமாகவே வாழ்ந்தார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள், எல்லாம் அவர்கள் விருப்பப்படியே நடந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தார்கள், அக்குழந்தைகள் கல்விகற்று எப்படிப்பட்ட வேலைகளில் அமரவேண்டுமோ அப்படிப்பட்ட வேலைகளில் அமர்ந்தார்கள். அவர்கள் திருமணம் செய்தார்கள், குழந்தைகள் பெற்றார்கள், எல்லாம் நடந்தது. அவர்கள் 70 - 80 வயதினராக இருந்தார்கள், அவர்கள் வாழ்க்கையில் விரும்பியதெல்லாம் அவர்களுக்கு நடந்தது, ஆனால் ஒவ்வொருவராக மிகவும் பரிதாபமாக இறந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் விரும்பிய அனைத்தும் நிகழ்ந்தபோதும், மிகவும் வெறுமையாக இருந்ததால், இறக்கும் அந்தத்தருவாய் வந்தபோது, மிக மோசமாக இறந்தார்கள்.
நீங்கள் மோசமாக இறந்தால், உள்ளே எங்கோ உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் வெறுமையாகவே இருந்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உங்களை வைத்து என்ன செய்வது என்று அறியாமல் வேதனைப்பட்டிருக்கிறீர்கள். பிறகு இறக்கும் தருணம் வரும்போது, குடும்பம், தொழில், சமுதாயத்தில் உள்ள அந்தஸ்து, என்று எல்லாம் உடைந்துபோய் பரிதாபமாக இறக்கிறார்கள். பரிதாபமான ஒரு மரணம் திடீரென நிகழும் நிகழ்வன்று, உங்கள் வாழ்க்கை முழுவதும் அதை நீங்கள் சம்பாதித்தீர்கள், நீங்கள் துயரமான வாழ்க்கை வாழ்ந்தீர்கள். உலகம் வேண்டுமானால் நீங்கள் அற்புதமாக வாழ்ந்தீர்கள் என்று நினைக்கலாம், ஆனால் நீங்கள் துயரமான வாழ்க்கையே வாழ்ந்துள்ளீர்கள், அதுபற்றிய சந்தேகத்திற்கே இடமில்லை.
இதை நான் கவனித்தபோது, அவர்களிடம் இல்லாதது என்னவென்பதை நான் பார்த்தேன், அவர்கள் வாழ்க்கையில் ஒரு எளிமையான ஆன்மீக செயல்முறை கூட இல்லை. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரேவொரு ஆன்மீக செயல்முறையாவது வைத்திருக்க வேண்டும். அது அவனிடம் இருந்தால், அவன் நலமாக வாழ்வான், ஒருநாள் நல்லபடியாக இறப்பான். தினசரி அளவில் இதை அவனுக்குள் எப்படி சாதாரணமாக வெளிக்கொணர்வது என்பதை அவன் அறிந்திருந்தால், அவன் தனக்குள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வாழ்வான். அவன் வேலை, குடும்பம் போன்றவற்றில் என்ன நிகழ்ந்துகொண்டிருந்தாலும் சரி, அவை அனைத்தும் தனிமனிதரின் திறமைக்கும் அனுசாரமாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால் ஒருவர் தனக்குள் எப்படி வாழ்கிறார், அவருடைய வாழ்க்கை அனுபவம் என்ன என்பதை நாம் முற்றிலும் வேறொரு நிலைக்கு உயர்த்த முடியும். அதனால் இது மிகவும் எளிமையாக இருக்கும் விதமான ஒரு ஆன்மீக இயக்கத்தை நாம் துவங்க விரும்புகிறோம். அதில் எவர் வந்தாலும் சரி, இரவானாலும் பகலானாலும் அவர் அரை மணி நேரத்தில் தீட்சை பெற்றுவிட முடியும். அதன்மூலம் அவர் வாழ்க்கையில் அவர் பிடித்துக்கொள்வதற்கு எளிமையான ஏதோவொன்று அவரிடம் இருக்கும், அப்போது அவர் நலமாக வாழ்ந்து நல்லவிதத்தில் இறப்பார்.