தியானலிங்க மேற்கூரை
700 டன் எடைகொண்ட 2,50,000 செங்கற்களால் கட்டப்பட்ட தியானலிங்க மேற்கூரை! 33 அடி உயரமும் 76 அடி விட்டமும் கொண்ட அந்த மேற்கூரை எந்தவொரு தூணுமில்லாமல் நிற்கிறது!
தியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த அதிசயமிக்க நிர்மாணம் மிக எளிமையான தொழில் நுட்பத்தில் கட்டியது. அதாவது எல்லா கற்களுமே ஒன்றை ஒன்று தள்ளிக் கொண்டு கீழே விழப்பார்க்கும் ஆனால் அவ்வளவு நெறுக்கமாக, ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், விழவே முடியாது. ஒவ்வொரு கல்லும் தனது அண்டையிலிருக்கும் கல்லால் இறுக்கமாக கட்டுப்பட்டிருக்கும். இந்த இயற்கைத்தன்மை வாய்ந்த கட்டுமானம் 5000 வருடங்கள் கூட அப்படியே இருக்க வாய்ப்புண்டு.
சத்குரு: இது எப்படி என்றால் உதாரணத்திற்கு, நீங்கள் எல்லோரும் முட்டிக் கொண்டு ஒரே கதவு மூலம் வெளிய செல்ல முயற்சி செய்தால், ஒருவர் கூட வெளியே செல்ல முடியாது. எல்லொருமே வாசலில் மாட்டிக் கொள்வீர்கள். ஒரே ஒருவர் சிறிது மரியாதையுடன் நகர்ந்து கொண்டால், அங்கே இடைவெளி வந்து, எல்லோருமே போக வழி ஏற்படும். ஆனால், கற்களுக்கு மரியாதை தெரியாது.
இது மிக அற்புதமான ஒரு வடிவமைப்பு - மிக மென்மையானது அதே சமயத்தில் மிகுந்த உறுதியானதும். இதை நீங்கள் உணரவேண்டுமென்பது என் ஆசை.
இது ஒரு துணிந்து செய்த அமைப்பு. சைக்கிள் ஓட்டத் தெரியாத ஒருவர் அதன் சக்கரங்களைப் பார்த்து மிகவும் குறுகியது, இது பாதுகாப்பானது அல்ல, இப்படி ஆகலாம், அப்படி ஆகலாம் என்பார். ஆனால் உலகில் எல்லாம் அப்படி வேலை செய்வதில்லை. படைத்தவன் மிக துணிச்சலானவன். அடாவடியானவன். படைப்பை சிறிது உற்று நோக்கினால் அவன் துணிச்சல் புரியும். அடுத்த மூச்சு உள்ளே செல்லவில்லை என்றால் – அவ்வளவுதான். ஆனாலும் உடல் எவ்வளவு உறுதியாக இருக்கிறது பாருங்கள். இந்த உடலால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது! ஏனென்றால் இது ஒரு துணிச்சலான அமைப்பு. இது மிக அற்புதமான ஒரு வடிவமைப்பு - மிக மென்மையானது அதே சமயத்தில் மிகுந்த உறுதியானதும். இதை நீங்கள் உணர வேண்டும்.
எந்த ஒரு கதிர்வீச்சும் – ஒளியோ அல்லது வெப்பமோ – அதன் வீச்சம் வட்ட வடிவமாகத்தான் இருக்கும். சதுரமான கட்டிடமாக இருந்தால் நீங்கள் உணர்வுப்பூர்வமானவராக இருப்பீரானால் – அங்கு அமைதியின்மையை உணர முடியும். அதனால் தியானலிங்கத்திற்கு கோள வடிவம்தான் தகுந்தது.
தியானலிங்கத்தின் வடிவமைப்பில் நான் எனக்குள் செய்து கொண்ட சமரசம் இன்றும் என்னை தலை குணிய வைக்கும். ஒவ்வொரு முறையும் அதைத் தாண்டி செல்கையில். எங்களுடைய சிக்கனமான செலவுத் திட்டத்தால் - என்னவாக இருக்க வேண்டியது, இப்பொழுது எப்படி உள்ளது என்பதை எண்ணிப் பார்ப்பேன். முதலில் இதை வடிவமைக்கும்போது, நிலப்பரப்புக்கு 60 அடி ஆழத்தில், நீர்பரப்புக்கு நடுவில் தியானலிங்கம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். தியானலிங்கத்தை அமைப்பதற்கு மிகச் சிறந்த கட்டமைப்பாக அது இருந்திருக்கும். ஆனால் அதைக் கட்டும் காலக் கட்டத்தில், என் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளால், பிரதிஷ்டை செய்வதை துரிதப் படுத்த வேண்டிய ஒரு நிர்பந்தம். நேரம், பணம் என்று எல்லா விதத்திலும் நெருக்கடி இருந்ததால், அதை துரிதப் படுத்தி இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற முன் வந்தோம். ஆனால் அதுவும் செலவு அதிகமாக தோன்றியதால் மூன்றாவது திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயம். இப்பொழுது மூன்றாவது திட்டத்தை இன்னும் மெருகூட்ட எல்லா வித ப்ரயத்தனமும் நடந்து கொண்டிருக்கிறது.
கட்டிடவியலைப் பொறுத்த வரை தியானலிங்கத்தின் கூரை தனித் தன்மை வாய்ந்தது. தாஜ் மஹால், கோல் கும்பாஸ் போன்றவற்றில் உள்ள கோள வடிவம் சரியான அரைவட்ட கோளமாக இருக்கும். ஆனால் இங்கு நாம் நீள்கோள வடிவத்தில் கட்ட முடிவு செய்தோம். நீள்கோளத்தின் ஒருபாகம் போன்ற கூரையை, ஸ்டீல், கான்கிரிட், சிமென்டு போன்றவை இல்லாமல் வடிவமைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனாலேயே இந்த கூரை தனித் தன்மை வாய்ந்தது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு அரைகோளம் போல் தெரிந்தாலும், உண்மையில் இது நீள்கோளத்தின் ஒரு பகுதி. உள்ளே இருக்கும் லிங்கமும் நீள்கோள வடிவில் இருப்பதால் கூரையையும் அதே வடிவத்தில் அமைத்தோம். நீள்கோள லிங்கத்தின் அதிர்வலைகளுக்கு நீள்கோள வடிவ கட்டிடம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். மிகுந்த துணிவுடன், இந்த கோள வடிவில் 9 அடி துளையை ஏற்படுத்தி உள்ளோம். வெப்பக் காற்றை வெளியேற்றுவதற்காக இது அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு கோளத்தில் ஒரு துளையை அனுமதித்தால், அந்த கோளம் நிலைப்பது கடினம் என்று பலரும் கருதினார்கள். அதை முழுதாக மூடாவிட்டால் அது விழுந்துவிடும் என்று சொன்னார்கள். அதற்கு, “கவலைப்படாதீர்கள், இது பூமியின் விசையுடன் இயைந்து உள்ளது,” என்றேன்.
ஈஷா யோகா மையம், நிலநடுக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது. அதனால் இந்த கோளத்தை மணல் மீது அமைத்துள்ளோம். இருபது அடி பள்ளம் தோண்டி, அதில் மணல் நிரப்பியுள்ளோம். இது ஒரு குஷன் போல் செயல்படும். அது எந்த விதமான அதிர்வுகளையும் தாங்கிக் கொள்ளும்.
இந்தக் கோளத்தில் உள்ள 2,50,000 செங்கற்களும் தியான அன்பர்களே அளவெடுத்து கட்டியது. “இதை இப்படித்தான் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை உங்கள் கைகளில் தருகிறேன். யாராவது ஒருவர் கவனக் குறைவாக இருந்து 2 மி.மீ அளவு குறைந்தால்கூட, கோளம் முழுவதும் விழுந்து விடும்,” என்று நான் தியான அன்பர்களிடம் விளக்கினேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் இரவும் பகலுமாக அளவெடுத்து செய்தார்கள். இது முழுக்க முழுக்க மக்களுடைய அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்.