சத்குருவும் பாம்புகளும்

பாம்புகள் எப்போதுமே சத்குருவுடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளன. குறிப்பாக நாகங்களுக்கு சத்குரு மீது ஒரு தனிப்பிரியம் உண்டு!

சத்குரு: பாம்புகள் உண்மையில் எந்த மனிதருடனும் சௌகரியமாகத்தான் உணர்கின்றன. இந்தியாவில் பாம்புகள் வழிபாட்டிற்கு உரியதாக இருக்கக் காரணம், அவை குண்டலினியின் குறியீடாக இருக்கின்றன. இந்தியாவில் ஒரு பாம்பு இறந்தால் அதற்கு முறையான ஈமச் சடங்குகளைச் செய்வார்கள், ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில், உடலைப் பொறுத்தவரை குரங்கு மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது, ஆன்மாவைப் பொறுத்தவரை பாம்பும் பசுவும் மனித ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமானவை. இதனால்தான் சக்தியளவில் பார்த்தால், நீங்கள் அதிர்ச்சியடையாமல் பதற்றமடையாமல் இருந்தால், மனிதனின் கைகளில் பாம்பு மிகவும் சௌகரியமாக உணரும். மற்ற வன விலங்குகளை எடுத்துக் கொண்டால், எந்த விலங்காக இருந்தாலும், ஒரு பூச்சி கூட நீங்கள் பிடித்தால் அசௌகரியமாக உணரும். அது உடனே உங்களுக்கு எதிர்செயல் செய்யும். ஆனால் பாம்பானது, மென்மையாக நீங்கள் கையிலெடுத்து பதற்றமில்லாமல் இருந்தால், உங்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருக்கக்கூடிய ஒரே விலங்கு.

நான் காடுகளில் சுலபமாக ஒரு பாம்பின் தடத்தைப் பின்தொடர்ந்து அதை கண்டுபிடித்துவிடுவேன். அதன் வாசத்தை வைத்தே பிடித்துவிடுவேன். அந்தக் கணத்தில் சரியாக எந்தப் பாறைக்கடியில் அது இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கும்.

நான் அப்படி ஒரு கூர்மையான உணர்வை வளர்த்துக்கொண்டேன், இந்நாட்களில் தொடர்ந்து பயன்படுத்தாததால் அந்த கூர்திறன் என்னுடைய உடலமைப்பில் இல்லாமல் போய்விட்டது. காட்டில் சுலபமாக ஒரு பாம்பை என்னால் கண்டுபிடித்துவிட முடியும். அதன் வாசனையைத் தொடர்ந்து சென்று அதைப் பிடிப்பேன். சாமுண்டி மலையில் ஏதொவொரு இடத்திற்குச் சென்றால், சரியாக எந்தப் பாறைக்கடியில் பாம்பு இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பேன். இன்று மக்களும் நகரங்களின் சுவடுகளும் அதிகளவில் என்னைச் சுற்றி இருப்பதால் அந்தக் கூர்திறனைத் தொலைத்துவிட்டேன்.

நான் பள்ளியில் இருந்தபோது, பள்ளி வளாகம் மிகப்பெரியதாக இருந்ததால் பாம்புகள் எப்போதும் அதன் பகுதியாக இருந்தது. பலர் பாம்பை கண்டாலே நடுங்குவார்கள், ஆனால் நான் சாதாரணமாக அவற்றைப் பிடிப்பேன். அது எனக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்ததில்லை. மெதுவாக என்னுடைய பெயர் பிரபலமாகி, ஊருக்குள் பாம்பு எங்கு தென்பட்டாலும் அதைப் பிடிக்க என்னை அழைக்கும் நிலை ஏற்பட்டது. ஒருமுறை மதிய வேளையில் ஒரு டியூப்லைட் தொழிற்சாலையிலிருந்து வந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றேன். ஒரு பெரிய நாகத்தைப் பார்த்ததால், 25 - 30 பேர் வேலை செய்த அந்த தொழிற்சாலைகளின் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது அனைவரும் மிகுந்த பரபரப்புடன் இருந்தார்கள், 12 அடி இருந்த அந்த நாகத்தைப் பிடித்து ஒரு பெரிய கண்ணாடிக் குடுவையில் போட்டு எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு எடுத்துசென்று யாருக்கும் தெரியாமல் என்னுடைய செல்லப்பிராணியாக அதை என் கட்டிலுக்கு அடியில் வைத்துக்கொண்டேன்.

ஒருநாள் என் அப்பா என் அறைக்குச் சென்றபோது ஏதோ சத்தம் கேட்டிருக்கிறது. குனிந்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. என் கட்டிலிற்கு அடியில் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். நான் வீட்டிற்குத் திரும்பியபோது அவர் செய்வதறியாமல் குதித்துக்கொண்டு இருந்தார். அவர் சொல்லமுடியாத பயத்துடன் இருந்தார், பாம்பு கண்ணாடிக் குடுவையில் இருந்தபோதும் எல்லோரும் சேர்கள் மீதும் சோஃபாக்களின் மீதும் ஏறி நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் என்னிடம் அதை வெளியே விடும்படி சொன்னார்கள், ஆனால் நான் அதை மொட்டை மாடியில் வைத்துக்கொண்டேன். அந்தப் பாம்பு என்னுடன் கிட்டத்தட்ட 3 வருடங்கள் இருந்தது. பிறகு அதை என்னுடைய பண்ணையில் விட்டுவிட்டேன்.

எனக்கு அப்போது 17 வயதாக இருந்திருக்கும், மாலையில் சில பாறைகளுக்கு அருகில் தனியாக இருந்தபோது ஒரு நாகத்தைக் கண்டேன். நான் அதைக் கையில் எடுத்தேன், ஆனால் அதில் இரண்டு பாம்புகள் சேர்ந்து இருந்திருக்கிறது. அது இனச்சேர்க்கைக்கான பருவமாக இல்லாதபோதிலும், ஏதோ காரணத்திற்காக இரண்டும் சேர்ந்து இருந்துள்ளன. நான் ஒன்றைக் கையிலெடுத்ததும் இன்னொன்று என் காலில் விழுந்து நான்கு முறை கொத்தியது. நான் என் சைக்கிளில் ஏறி மிதித்து அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்று அங்கிருந்த பெண்மணியிடம், "என்னை ஒரு நாகம் கொத்திவிட்டது. எனக்கு ஒரு ஜாடி நிறைய கருப்பு டீ போட்டுக் கொடுக்க முடியுமா?" என்று கேட்டேன். நான் நான்கைந்து கோப்பைகளைக் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றேன், தூக்கம் வருவது போல் இருந்தது, "அவ்வளவு தான்! இதைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது?" என்று நினைத்து என் அம்மாவிடம், "நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் தூங்கப் போகிறேன்." என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றேன். அடுத்த நாள் காலையில் நான் எழமாட்டேன் என்றே நினைத்தேன். நான் அடுத்த நாள் காலையில் எழுந்தபோது என் கண்ணிமைகள் சற்று கனமாக இருந்தன, என் மூட்டுக்கள் சற்று இறுக்கமாக இருந்தன, ஆனால் எழுந்தேன், இன்று உங்களோடு இருக்கிறேன்!

பலமுறை இரவில் என் போர்வையின் கதகத்தப்பைத் தேடி ஒன்று உள்ளே ஊர்ந்துவிடும்.

என் படுக்கையறையில் இருபது உயிருள்ள நஞ்சு நீக்கப்படாத நாகங்களை நான் வைத்திருந்த காலத்தில், அவை எல்லாப் பக்கமும் இருக்கும். அவற்றுடன் வாழ்வதற்கு ஒருவிதமான விழிப்பும் விழிப்புணர்வும் தேவை. அவை மிகவும் அற்புதமானவை, ஆனால் ஒரே ஒரு தவறான அசைவின் விளைவு என்னவென்று உங்களுக்குத் தெரியும். பலமுறை இரவில் என் போர்வையின் வெப்பம் தேடி ஒன்று உள்ளே ஊர்ந்துவிடும். இப்படி வாழும்போது நீங்கள் மெதுவாக நகர்வதற்குக் கற்றுக்கொள்வீர்கள். திடீரென்று எந்த அசைவும் செய்யாமல், உங்கள் உடலின் ஒவ்வொரு தசையையும் கவனமாக அசைக்கக் கற்றுக்கொள்வீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் செத்துவிடுவீர்கள். இது உங்களுக்குப் பல விஷயங்களைச் செய்யும்.

இன்று கூட என் வீட்டில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். என் தோட்டத்தில் 20 அடிக்கும் மேற்பட்ட நீளம் கொண்ட ஒன்று உள்ளது. வீட்டைச் சுற்றி சுவர் கட்ட தீர்மாணித்தபோது, மேற்கு சுவரில் ஒரு ஓட்டை வைத்தால் அவர் விருப்பப்படி வெளியே சென்று உள்ளே வருவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் கௌரவம் எத்தகையதென்றால், அந்த ஓட்டை வழியே ஊர்ந்து வருவதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் எப்போதும் வாசல் வழியாகத்தான் வந்து செல்கிறார்!