அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 9

ஆரோக்கியம் பேண கவனிக்க வேண்டியவை என்னென்ன என்று கடந்த சில வாரங்களில் இந்தத் தொடரின் மூலம் புரிந்து கொண்டோம். இறுதி வாரத்தில் விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பார்க்கிறோம். மேலும், மலக்குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு சில எளிய குறிப்பையும் கொண்டுள்ளது இந்தப் பதிவு...

விரதம்

உடல் நலம் பேணுவதற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது. நீங்கள் தகுந்த உடல்நலத்துடன் இருப்பது உங்கள் ஆன்மீக சாதனைகளுக்கும் கூட அவசியமாக உள்ளது. ஆன்மீகத்திற்காக மட்டும் என்பதில்லை, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நலமாக இருப்பதற்குக்காக கூட, உடல்நலம் பேணுவது அவசியமாக இருக்கிறது.

வயிறு காலியாக இருக்கும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.

உடல்நலத்தைப் பேணாமல் உங்கள் உடலே உங்களுக்கு ஒரு சுமையாக உணர்வீர்களேயானால்,பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லை,உங்கள் வீடு,அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும்ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் செல்லுமிடமில்லாம் அந்த பாதிப்பை விநியோகிப்பீர்கள். எனவே, உங்கள் உடலை சரியாகப் பராமரித்து வருவது அவசியமாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சரியான பயிற்சிகள் மற்றும் சரியான உணவு ஆகியவற்றால் உங்கள் உடலில் பளுவற்ற, இலேசான தன்மையைக் கொண்டுவர முடியும். குறிப்பாக சரியான உணவுமுறை மிகுந்த வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

உணவின் இடைவெளி

உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும் அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். இது மிக முக்கியம். யோகாவில், 8 மணி நேர இடைவெளி கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் 5 மணி நேர இடைவெளி ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை. ஏனெனில்,வயிறு காலியாக இருக்கும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.

இதை ஒரு பரிசோதனை மூலமாக பார்க்க முடியும். ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவை இரண்டாகப் பிரித்து இரு வேளைகளில் சாப்பிட்டு வாருங்கள். சில நாட்கள் கழித்து அதே அளவு உணவை பத்தாகப் பிரித்து 10 வேளைகளில் சாப்பிடுங்கள். 10 வேளைகள் சாப்பிடும்போது உங்கள் உடலில் எடை கூடியிருக்கும். 10 வேளை சாப்பிடும்போது எப்போதும் வயிறு நிறைந்திருப்பதால்.உங்கள் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. எனவே, உங்கள் உடலை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய கழிவுப்பொருள், வெளியேறாமல் அப்படியே உங்கள் உடலிலேயே தங்கியிருக்கும். வயிறு காலியாக இருக்கும்போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எனவே, ஏற்கனவே சாப்பிட்டது ஜீரணமாகும்வரை காத்திருந்து பிறகு அடுத்த வேளைச் உணவைச் சாப்பிட வேண்டும்.

பழ ஆகாரம் உண்ணும்போது வயிற்றில் அதிக பளு இல்லாததால், வயிற்றிலுள்ள பழைய கழிவை வெளித்தள்ளுவதற்கு உடலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தப் புரிதலில்தான் விரதம் வலியுறுத்தப்படுகிறது. விலங்குகள் கூட இதை தெரிந்து வைத்திருக்கின்றன. சில நாட்களில் அவை உணவருந்தாது. குழந்தைகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அறிவுள்ள பெரியவர்கள் இந்த விழிப்புணர்வை இழந்துவிட்டார்கள். சில நாட்களில் குழந்தைகள் உணவை மறுப்பார்கள். ஆனால் பெற்றோர் ஒழுக்கம் என்ற பெயரால் அவர்களை அடித்துச்சாப்பிட வைப்பார்கள்.

மாதம் ஒரு முறையாவது ஒரு நாள் முழுக்க விரதம் இருங்கள். இதற்காகத்தான் ஏகாதசி போன்ற நாட்களை வைத்திருந்தார்கள். மாதாமாதம் உங்களுக்கு உகந்த ஏதோ ஒரு நாளில்,நீங்கள் விரதம் இருக்கலாம். அன்று எதையும் சாப்பிட வேண்டாம். அப்படி முழு விரதம் இருக்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பழ ஆகாரத்தில் இருக்கலாம். கவனிக்கவும் பழ ஆகாரம், பல ஆகாரம் அல்ல. பழ ஆகாரம் உண்ணும்போது வயிற்றில் அதிக பளு இல்லாததால், வயிற்றிலுள்ள பழைய கழிவை வெளித்தள்ளுவதற்கு உடலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

உணவுக்கு நீங்கள் அடிமையாக இருப்பதாக உணர்ந்தால் ஒருவேளை உணவைத் துறந்திடுங்கள். இது உங்கள் உடலைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. உடலின் கொடுமையிலிருந்து விடுதலை பெற. குறைந்தது மாதம் ஒரு நாளாவது பழ ஆகாரத்தில் இருப்பது ஒவ்வொருவருக்கும் நல்லது.

முதியோருக்கு...

  • அதிக நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்வது மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
  • வேக வைத்த காய்கறிகள், புதிய பழங்கள், தானியங்கள், அதிக நார்ச்சத்து மிகுந்த காலை உணவு இவையெல்லாம், பல்லுக்கு சேதம் விளைவிக்காமல், உணவில் நார்ச்சத்தினை அதிகப்படுத்தும் வழிகள்.
  • மொச்சை மற்றும் காராமணி ஆகியவையும் சத்து மிகுந்த, விலை மலிவான உணவுகள். கொள்ளு மற்றும் பச்சைப் பயிறை பல வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுவாசக் குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது.
  • நிறைய திரவ உணவுகளை உட்கொள்வது முக்கியம். இதுவும் மலச்சிக்கலிலிருந்து பாதுகாக்கும்.
  • உணவுடன் எளிமையான உடற்பயிற்சிகள், வேகமான நடைபயிற்சி, நல்ல ஓய்வு ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

- முற்று பெற்றது


அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்