ரூ7.91 கோடி வருமானம் ஈட்டி வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் சாதனை
விவசாயிகள் என்னதான் காட்டிலும் மேட்டிலும், வெயிலிலும் மழையிலும் சிரமப்பட்டு உழைக்கும் போதிலும், லாபம் இருப்பதில்லையே என்ற புலம்பல்கள் விவசாயிகள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், விவசாயிகள் ஒன்றுபட்டு கூட்டமைப்பாக இணைந்தால் இதற்கு தீர்வு உண்டு என சொல்லும் வகையில் உருவான ‘வெள்ளிங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம்’ நிகழ்த்தியுள்ள சாதனை பற்றி இங்கே சில வார்த்தைகள்!
ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91 கோடி வருமானம் (Annual turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனத்தின் 5-ம் ஆண்டு பொதுக் குழு கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (செப்.26) நடைபெற்றது. இதில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் திரு.குமார், நிறுவன இயக்குநர்கள் திரு.வள்ளுவன், திரு. எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றனர்.
Subscribe
இது தொடர்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் திரு.குமார் அவர்கள் கூறியதாவது:
“ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் ஆலோசனையின்படி, 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் 5-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. 400 விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 1,063 விவசாயிகளுடன் மிகப்பெரிய உழவன் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதில் 70 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள், 15 சதவீதம் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் இந்திய அளவில் 9-வது இடத்திலும் தமிழக அளவில் முதல் இடத்திலும் உள்ளது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் ரூ.7.91 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் வருமானம் முன்பை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.10 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளோம்.
ஈஷா அறக்கட்டளையானது திட்ட ஆலோசகர் என்ற முறையில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவது, விளைப்பொருட்களின் தரத்தை உயர்த்துவது, விளைப்பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பல்வேறு வழிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு ஈஷா அறக்கட்டளை மிகவும் உறுதுணையாக உள்ளது.
தொண்டாமுத்தூர் பகுதியில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வந்தனர். இடைத்தரகர்களின் தலையீடு காரணமாக விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் நஷ்டமடைந்து வந்தனர். ஆனால், எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு சந்தை நிலவரத்துக்கேற்ப விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. சந்தை விலை நிலவரம் விவசாயிகளின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய விளைப்பொருட்களுக்கான பணமும் வங்கி கணக்கு மூலம் உடனடியாக சென்று சேர்கிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதால், தடாகம், உடுமலை போன்ற இடங்களிலும் நிறுவனத்தை விரிவாக்க செய்ய முடிவு செய்துள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.