நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 15

திராட்சைப் பழங்களை யாருக்குத்தான் பிடிக்காது?! ஆனால், அதனை சாப்பிடும் பழக்கம்தான் அதிகம் தென்படவில்லை. திராட்சைப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை தொடர்ந்து படித்து அறியலாம் இங்கே!

பார்த்ததுமே எடுத்து சாப்பிடத் தூண்டும் பழங்களில் ஒன்று திராட்சை. கருப்பு, பச்சை, சிவப்பு என அதன் நிறங்களிலும், கொத்து கொத்தாக, உருண்டையாக உள்ள அதன் வடிவத்திலும் எல்லோரையும் கவரும் பழம்.

உடலில் சக்தி குறைந்துள்ளது போலத் தோன்றும் போது, திராட்சை பழங்களைச் சாப்பிட்டால் உடனடியாகத் தெம்பு கிடைக்கும்.

கிரேக்கர்களும், ரோமானியர்களும் பெரிய அளவில் விளைவித்த திராட்சையை நம் நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் முகலாய அரசர்கள்தான். இந்திய நாட்டின் தட்பவெப்ப நிலை இப்பழங்களை ஏராளமாக வளர வழி வகுத்தது. சாதாரண கறுப்பு நிற திராட்சையாக முதலில் வளர்க்கப்பட்ட இப்பழம், நாளடைவில் பல்வேறு நிறங்களில், அதற்கேற்ப வித்தியாசமான சுவைகளுடன் இனிப்பாக, புளிப்பாக, கொட்டை உள்ளதாக, கொட்டை இல்லாத வகையாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திராட்சையில் என்ன உள்ளது?

திராட்சைப் பழங்களில் நிறைந்திருப்பது ‘க்ளுக்கோஸ்’ என்ற மாவுச் சத்து. அதுதான் இதற்கு இனிப்பு சுவையைத் தருகிறது. இதில் நிறைய ‘டார்டாரிக்’ அமிலமும், ‘பெக்டின்’ அமிலமும் இருப்பதால் இப்பழத்தை பழரசங்கள், ‘ஜாம்’ செய்யப் பயன்படுத்துகின்றனர்.

திராட்சைப் பழத்தில் உள்ள புளிப்புச் சுவையால் இதில் ‘வைட்டமின் சி’ இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இதில் நிறைந்திருப்பது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் என்ற தாதுப் பொருட்களே. க்ளுகோஸினால் இதன் கலோரி அளவு அதிகமாக உள்ளது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், உடல் பலவீனமடைந்தவர்கள் இதைச் சாப்பிடுவதால் உடல் தேர்ச்சியடையும். உடலில் சக்தி குறைந்துள்ளது போலத் தோன்றும் போது, திராட்சை பழங்களைச் சாப்பிட்டால் உடனடியாகத் தெம்பு கிடைக்கும். திராட்சையை பழரசமாக சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும்.

பழுத்த திராட்சை பழங்கள் மிக எளிதாக ஜீரணமாகிவிடும். சுவைக்க இனிப்பாக உள்ள பழம், தாகத்தைத் தணிக்க வல்லது. திராட்சைப் பழம் ஒரு சிறந்த மலமிளக்கி. கடுமையான மலச்சிக்கலால் சிரமப்படுபவர்கள் உலர்ந்த திராட்சை பழங்களை இரவு நீரில் ஊற வைத்து, காலையில் உட்கொண்டால் குணம் தெரியும். மலமிளக்கியாக மட்டுமில்லாமல் வயிறு, குடல் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைக்கவும் இது உதவும்.

கறுப்பு மற்றும் சிவப்பு நிற திராட்சைகளில் ‘பையோஃப்ளாவனாய்ட்ஸ்’ நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. அதோடு நம் உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. சிவப்பு நிற திராட்சைப் பழரசம் இருதயத்திற்கு மிகவும் நல்லது.

திராட்சைப் பழத்தை அளவாக சாப்பிட வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் அதிலுள்ள அமிலங்கள் வயிற்றைப் பாதிக்கும். சிவப்பு நிற திராட்சையிலுள்ள ‘பாலிஃபீனால்’, மைக்ரேன் தலைவலியைத் தூண்டக்கூடும். அந்த பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். திராட்சைப் பழம் நன்கு வளர, அதன் மீது பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்கும். எனவே திராட்சைப் பழத்தை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்.

ஒரு கொத்து திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவதால்...

  • உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  • புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
  • உடலின் உட்புறத்தை, சுத்தப்படுத்தி, நச்சுப் பொருட்களை வெளியேற்றலாம்.
  • இரத்த ஓட்டத்தை உடலில் அதிகரிக்கலாம்.
  • கண் பார்வை பழுதடைவதை தவிர்க்கலாம்.
  • தலைமுடியை நன்கு வளர்த்துக் கொள்ளலாம்.
  • தோல் சுருக்கம் அடையாமல், இளமையாக, அழகாகத் திகழலாம்.

அடுத்த வாரம்...

பழ உணவுகளால் கிடைக்கும் பொதுவான பலன்கள் குறித்து அடுத்த வாரம் அறிந்துகொள்ளலாம்!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்