ஸ்வாமி நிராகாரா 1996ல் பிரம்மச்சரியத்திலும் 2003ல் சன்னியாசத்திலும் தீட்சையளிக்கப்பட்டார். கணிதப்பட்டதாரியான இவர், ஆசிரமத்தில் முழு நேரமாக வருவதற்கு முன் வங்கியில் பணிபுரிந்தார்.

ஸ்வாமி அனைவராலும் ஆசிரமத்தின் "மாரத்தான் ஸ்வாமி" என்று பிரியமாக அழைக்கப்படுகிறார். அவர் ஈஷா வித்யாவிற்காக தனது 50களின் துவக்கத்தில் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்கத் துவங்கினார். அவரது இந்த உற்சாகம், ஆசிரமத்தில் மேலும் பலரையும் தற்போது இந்த மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்க ஊக்குவித்திருக்கிறது.

ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை

ஸ்வாமி நிராகாரா : அடிக்கடி, என் தந்தையார் சாதுக்களையும் சன்னியாசிகளையும் வீட்டிற்கு அழைத்து உணவளித்து மரியாதை செய்வார். நானும் அப்போதெல்லாம் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரிப்பேன். 1989ம் வருட வாக்கில் என் இளைய சகோதரன் வீட்டிலிருந்து வெளியேறி ராமகிருஷ்ண மடத்தில் ஒரு துறவியாக சேர்ந்தார். அப்போது கூட அவரின் செயல் எனக்கு ஒரு ஊக்கமாகவும் இல்லை அல்லது ஒரு உபத்திரவமாகவும் இல்லை, அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன். அது அவர் தனக்கென்று தேர்ந்தெடுத்த வழி என்று மட்டுமே அப்போது அதை பார்த்தேன். ஆனால் ஒரு நாள் நானும் அந்த வழியில் நடப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. அது எப்படி நடந்தது? அது முன்னரே விதிக்கப்பட்டுவிட்டதா? அவ்வப்போது இப்படி மனதில் நினைப்பதுண்டு.

நான் திருச்செங்கோட்டில் ஒரு வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். என் சொந்த ஊரான நாமக்கல்லில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அந்த நகரம் இருந்தது. அது ஒரு நல்ல, வசதியான வேலை. நான் அதில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். அதே நேரத்தில், நான் சில சமூகப் பணிகளும் செய்து வந்தேன். ஒரு இளைஞர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தேன். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு நகரங்களில் வேறு சில யோக அமைப்புகளின் மூலம் யோகா மற்றும் தியான முகாம்களையும் அவ்வப்போது ஏற்பாடு செய்து வந்தேன். நான் அப்போது யோகா மற்றும் தியானத்தை உடல்நலத்திற்கானது என்பதாகவே பார்த்தேன். இதுபோன்ற பொது சேவைகளில் இருந்த நாட்டத்தால் திருமணம் செய்து கொள்வதிலும் ஆர்வம் வரவில்லை.

அருளின் ஸ்பரிசம்

swami-nirakara-isha-meditating

1992ம் வருடம், திருச்செங்கோட்டில் நான் ஏற்பாடு செய்திருந்த யோகாசன வகுப்புகளில் பங்கேற்றிருந்த ஒரு சிலர், திருச்செங்கோட்டில் வேறு சிலர் மற்றொரு யோகா வகுப்பு ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து அவர்கள் தங்கள் பெயர் பதிவு செய்ததோடு எனக்கும் ஒரு இடம் ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்கள் விருப்பத்திற்கிணங்க அந்த யோக வகுப்பில் நான் இணைந்தேன். அது திருச்செங்கோட்டில் நடந்த முதல் ஈஷா யோக வகுப்பு. அந்த யோக வகுப்பை முடித்தபிறகும் கூட அது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கப்போகிறது என்று அப்போது நான் நினைக்கவில்லை. அந்த வகுப்பை சாமிநாதன் அண்ணா எடுத்தார். சத்குரு தியான தீட்சையன்று வந்தார். அப்போதுதான் நான் சத்குருவை முதன் முதலாக பார்த்தேன். தீட்சையின்போது பங்கேற்பாளர்கள் கதறினார்கள், உருண்டு புரண்டார்கள், ஏதேதோ செய்தார்கள். இதுவெல்லாம் எனக்குப் புதிதாக இருந்தாலும் அவற்றைப் பார்த்து அதிர்ச்சி ஏதும் அடையவில்லை. அவர்கள் ஏதோ ஒரு அருளால் தொடப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், சத்குரு வெறும் ஒரு யோகா ஆசிரியர் மட்டும் அல்ல என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். அன்றைக்கு பெரிதாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், சத்குரு மீது மிகுந்த மதிப்பு உருவாகியது.

1994ல் நடந்த ஹோல்னஸ் நிகழ்ச்சியின் போதுதான் அவருடைய திட்டங்கள் குறித்தும் அவர் உண்மையில் யார் என்றும் அறிந்தோம். அப்போதுதான் அவர் வெளியில் செய்யும் நிகழ்ச்சிகளை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என்று அறிந்தேன்.

அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்குள் பாவ-ஸ்பந்தனா, அதன்பிறகு சம்யமா என்று மேல்நிலைப் பயிற்சிகளையும் முடித்தேன். சம்யமா நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களின் சக்தி தீவிரத்தைப் பார்த்தபோது, சத்குருவின் பிரம்மாண்டம் எனக்குப் புரிந்தது. அந்த பிரம்மாண்டத்தின் ஒரு சிறு துளியை உணரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சம்யமா நிகழ்ச்சியின் போது, ஒரு நாளில், இடைவேளை வந்தபோது, இருமல் இருந்ததின் காரணமாக விக்ஸ் மிட்டாய் சுவைக்க ஆரம்பித்தேன். நான் அதை முழுவதுமாக முடிக்குமுன்பே இடைவேளை முடிந்துவிட்டது. அந்த மிட்டாய் என் வாயில் இருக்கும்போதே, சத்குரு வந்து வகுப்பையும் ஆரம்பித்து விட்டார். மிட்டாயை என்ன செய்வது என்று தெரியவில்லை. மிட்டாயை அப்படியே விழுங்கவும் விரும்பவில்லை, அதற்காக கார்ப்பெட்டிலும் துப்ப முடியாது. எனவே தொடர்ந்து வாயிலேயே வைத்திருந்து மிட்டாய் வேகமாகக் கரையட்டும் எனக் காத்திருக்க நினைத்தேன். நான் அப்படி நினைத்த கணமே அந்த மிட்டாய் மிகவும் கசப்பானதாக மாறி அந்தக் கணத்திலேயே நான் அதை கார்ப்பெட்டிலேயே துப்ப வேண்டியதாகி விட்டது.

அந்த நாட்களில், சம்யமா ஹாலில் என்னவெல்லாம் நடக்குமோ, அவையெல்லாம் சத்குரு ஹடயோகா வகுப்பெடுத்தால் கூட அரங்கேறும். திருச்செங்கோட்டில் சத்குருவின் ஹடயோகா வகுப்பின்போது அதைப் பார்க்க முடிந்தது. சூரிய நமஸ்காரம் பயிற்சியிலேயே கூட மக்கள் கத்துவதும், உருண்டு புரளுவதும் நடந்தது. அப்போதெல்லாம் மாத சத்சங்கங்களில் கூட பல நேரங்களில் தியான அன்பர்களை கட்டுக்குள் வைக்க சத்சங்க ஆசிரியர்கள் திணற வேண்டியிருக்கும். தியானலிங்கம் பிரதிட்சைக்கு முன் சத்குருவை சுற்றிய நிகழ்வுகள் மிகவும் தீவிர நிலையில் இருந்தன.

வாய்வழிப் பரப்புதலுக்கும் அடுத்து...

நாமக்கல்லிலும் ஈஷா யோகா வகுப்பு நடக்கவேண்டும் என நான் விரும்பினேன். அப்போதெல்லாம் சத்குருவே வகுப்பு பற்றிய முடிவுகள் எடுத்தமையால், நான் அப்போது சத்குரு தங்கியிருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டிற்கு சென்றேன். நான் வீட்டில் நுழைந்தவுடன், சத்குரு, விஜியம்மா இருவரும் வரவேற்றனர். என் வீட்டினர் என்னை வீட்டில் அழைக்கும் பெயரால் சத்குருவும் அழைத்து நலம் விசாரித்தார். இந்தப் பெயரை நான் எனது ஈஷா யோகா வகுப்பிற்கான நுழைவுப் படிவங்களில் குறிப்பிடவில்லை. எனவே அவர் இப்படி அழைத்தது சிறிது ஆச்சரியத்தைத் தந்தது. எனினும் சத்குருவைச் சுற்றி நிகழ்ந்த இத்தகைய விஷயங்கள் அப்போது அதிக வியப்பைத் தரவில்லை, ஏனெனில், அப்போது அதற்குப் பழகிவிட்டிருந்தேன்.

நாமக்கல்லிலும் வகுப்பு வேண்டும் எனக் கேட்டவுடன், “சரி, காலை வகுப்பு, 50 பேரை சேர்க்கலாம்” என்றார். 50 பேரை சேர்த்துவிடலாம், ஆனால் காலை வகுப்பிற்கு மக்கள் வருவார்களா என சந்தேகப்பட்டேன், ஏனெனில், திருச்செங்கோட்டில் வகுப்பு வைத்தபோது, மக்கள் மாலை வகுப்பிற்குத்தான் ஆர்வம் காட்டினார்கள். எனவே சத்குருவிடம் இது குறித்து சொன்னபோது, அவரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை, யோகாவிற்கு காலைதான் சிறந்த நேரம் என்று சொல்லி என்னை ஒப்புக்கொள்ள வைத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதுவரை யோகா வகுப்புகள் வாய்வழி மூலமாகத்தான் பரப்பப்பட்டு வந்தன. எனது மற்ற சமூக நடவடிக்கைகளில் நான் எதற்குமே நோட்டீஸ் அச்சிட்டு பழக்கப்பட்டிருந்ததால் இதற்கும் நோட்டீஸ் அச்சிட்டு வினியோகித்தேன். சத்குருதான் வகுப்பு எடுத்தார். சரியாக 50 பேர் வகுப்பு முடித்தார்கள். இந்த 50 பேரில் இருவர் பின்னாட்களில் ஈஷாவில் பிரம்மச்சாரிகளாக இணைந்தனர்.

நாமக்கல்லில் காலை வகுப்பு நடந்தபோதே, மதியம் வேலாயுதம்பாளையத்திற்கும் இரவு கரூரிற்கும் சென்று சத்குரு வகுப்புகள் எடுத்தார். அப்போது ஒரு இரவில் கரூர் வகுப்பிற்குச் சென்றிருந்தேன். ஆனால் நான் வகுப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே சத்குரு வகுப்பு ஆரம்பித்துவிட்டார். ஆனால் நான் உள்ளே நுழைந்தவுடன் சத்குரு என்னை ஓரிரு வார்த்தைகளில் வரவேற்று அமரச் சொன்னார். உட்கார்ந்தவுடன் தான் உணர்ந்தேன், வகுப்பு தடைபடக் கூடாது என்பதற்காக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும்போதே அவர் என்னிடமும் பேசியிருக்கிறார் என்று. அதாவது இரு வெவ்வேறு விஷயங்களை ஒரே நேரத்தில் என்னிடமும் பங்கேற்பாளர்களிடமும், ஒருவர் மற்றதைப் பற்றி அறியாமல், பேசியிருக்கிறார். பின்பு சத்குரு இதை உறுதிப்படுத்தினார்.

100 பேர்கள் இணைந்த முதல் வகுப்பு

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, நாமக்கல்லில் மீண்டும் வகுப்பு கேட்டேன். இம்முறை அவர் காலை மாலை 2 வகுப்புகள் அனுமதித்துவிட்டு 100 பேரை சேர்க்கலாம் எனக் கூறினார். ஒரு வகுப்பிற்கு 100 பேர் என நினைத்து வழக்கமான நோட்டீஸ்களுடன் சிறிய அளவிலான போஸ்டரையும் அச்சிட்டு வினியோகித்ததுடன், தனிப்பட்ட முறையிலும் வகுப்பு பற்றிக் கூற ஆரம்பித்தேன். அறிமுக வகுப்பு நடந்த அன்று நல்ல கூட்டம். அறிமுக வகுப்பு முடிந்தவுடன் மக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தனர். காலை வகுப்புக்கு பதிவுகள் 50ஐத் தொட்டவுடன் வகுப்பிற்கான துணை ஆசிரியர் என்னிடம் வந்து காலை வகுப்பிற்கு பதிவுகளை நிறுத்த சொன்னார். அப்போதுதான் புரிந்தது, 2 வகுப்பிற்கும் சேர்த்தே 100 பேர்தான் தேவைப்படுகின்றனர் என்று. ஆனால் பதிவை நிறுத்த நான் மறுத்துவிட்டேன், கடைசியில் காலை வகுப்பில் 100 பேரும் மாலை வகுப்பில் 50 பேரும் இணைந்தனர். அந்த வகுப்புகளில் அரசியல்வாதிகள், சமூகத்தில் செல்வாக்குள்ளவர்கள் உள்பட பலதரப்பினரும் இணைந்தனர். தயக்கமின்றி கேள்விகள் வந்ததால் வகுப்பு உயிரோட்டத்துடன் இருந்தது. சத்குரு அந்த வகுப்பை மிகவும் இரசித்தார் என நினைக்கிறேன். முதன்முதலாக ஒரு ஈஷா யோகா வகுபபில் 100 பேர் இணைந்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.

சத்குருவும் சடங்குகளும்?

நான் ஓரளவு பகுத்தறிவு கொண்டவனாகவும், எனவே சடங்குகளில் நம்பிக்கை அற்றவனாகவும் இருந்தேன். சில சித்தர்கள் போல சத்குருவும் சடங்குகள் மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவர் என்றுதான் நம்பியிருந்தேன். சத்குருவின் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். 1993ல் ஆசிரமம் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜை விழாவில் சத்குரு ஒரு சடங்கில் பங்கேற்றார். அந்த பூஜைக்காக வரவழைக்கப்பட்டிருந்த பூசாரி சத்குருவிடம் ஒரு பூசணிக்காயைக் கொடுத்து சில சடங்குகள் செய்யச் சொன்னார். ஈஷா நிகழ்ச்சியில் பூசாரி, மற்றும் சத்குரு சடங்கில் பங்கேற்பது இவையெல்லாம் எனக்கு சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த கணத்தில் சத்குரு திரும்பி என்னைப் பார்த்து, எல்லாம் மற்றவர்களுக்காகத்தான் என்பது போல சிரித்தார். 1994ல் நடந்த ஹோல்னஸ் நிகழ்ச்சியின் போதுதான் அவருடைய திட்டங்கள் குறித்தும் அவர் உண்மையில் யார் என்றும் அறிந்தோம். அப்போதுதான் அவர் வெளியில் செய்யும் நிகழ்ச்சிகளை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என்று அறிந்தேன்.

வழியில் எடுத்தவற்றை வழியிலேயே விட்டது

1994ல் நடந்த 90 நாள் ஹோல்னஸ் நிகழ்ச்சியின் முதல் 30 நாளில் மட்டும் நான் பங்கேற்றேன். அடுத்த 60 நாள், குறிப்பாக, ஆசிரியர் பயிற்சியில் பங்கேற்க அல்லது ஆசிரமத்தில் முழுநேரத் தன்னார்வத் தொண்டராக ஆக விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் நடக்க இருந்தது. ஆனால் இந்த இரண்டிலுமே ஆர்வம் அற்றவனாக இருந்தேன், அது மட்டுமல்ல ஒரு மாதம் மட்டுமே எனக்கு விடுமுறை கிடைத்திருந்தது. எனவே ஹோல்னஸ் நிகழ்ச்சியில் முதல் 30 நாள் பங்கேற்று முடித்தவுடன் விடை பெற்று எனது இன்னொரு குருவைப் பார்க்க சென்றேன். அவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தீட்சை அளித்திருந்தார். நான் பார்க்க சென்ற அன்று இரவில் அந்த குருவின் புதிய ஆசிரமம் தொடக்க விழா நடந்து கொண்டிருந்தது. சுமார் 3000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நான் சிறிது தாமதமாக சென்றதால் கடைசி வரியில் உட்கார்வதற்காக நாற்காலி நோக்கி சென்றபோது, மேடையில் இருந்த குரு தனது புருவங்கள் மேல் கை குவித்து என்னைக் கூர்ந்து கவனிப்பதைக் கண்டேன். அப்போதே உணர்ந்தேன், சத்குருதான் எனது குரு, அவர்தான் எனது பாதை என்று.

எனினும் 1995ல் நடந்த முதல் பிரம்மச்சரிய தீட்சையின்போது நான் பங்கேற்கவில்லை. அதற்கு ஒரு காரணம், சன்னியாசம்தான் என் பாதை அல்லது முக்திதான் என் குறிக்கோள் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், அது போதும் என்று நினைத்தேன். இன்னொரு காரணம் என் மூத்த சகோதரர் சமீபத்தில்தான் தன் இளம் மனைவி மற்றும் 10 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு விபத்தில் மரணம் அடைந்திருந்தார். என் பெற்றோர் அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீண்டிருக்கவில்லை. மேலும் என் இளைய சகோதரரும் சில வருடங்களுக்கு முன்பு துறவறம் பூண்டிருந்ததால் இது சரியான தருணமல்ல என்று நினைத்திருந்தேன். ஆனால் நீண்ட காலம் அப்படி காத்திருக்கவில்லை.

அடுத்த வருடம் பிரம்மச்சரியத்திற்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட போதும் நான் மனதளவில் தயாராகவில்லை, விண்ணப்பிக்கும் கடைசி தேதியும் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியவில்லை. அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக ஆசிரமத்தில் இருந்தேன். அப்போது கைவல்ய குடிர் அருகே சத்குரு நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவரிடம் சென்று என் முடிவைக் குறித்துக் கூறினேன். சத்குரு என் பெற்றோர் நிலை பற்றிக் கூறிவிட்டு மீண்டும் ஒரு முறை நன்கு யோசித்துக் கொள்ளுமாறு கூறினார், அப்போது என் மனதில் பட்டதை அவரிடம் கூறினேன். நான் அப்போது அவரிடம் கூறியதை சத்குரு 20 வருடங்கள் கழித்து ஒரு சத்சங்கத்தில் நினைவுகூர்ந்தார், நான் உண்மையில் அதை முற்றிலுமாக மறந்திருந்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் சத்குரு நினைவில் வைத்துக் கூறியது என்னை பிரமிக்க வைத்தது. ஆனால் அதுதான் சத்குரு! (see Note below).

சத்குரு நினைவாற்றல் குறித்த இன்னொரு சம்பவம் என் நினைவில் இருக்கிறது. ஒரு நபர், ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றவுடன் மற்றவர்களுக்கு அவராகவே வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டார். வகுப்பு குறித்த தனது சந்தேகங்களை நிவர்த்திக்கவோ என்னவோ அவர் தொடர்ந்து சத்குருவின் சத்சங்கங்களில் பங்கேற்று தனது சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கேட்டார். ஓரிரு சத்சங்கங்கள் கழித்து அவர் இன்னொரு முறை சந்தேகம் கேட்க முனைந்தபோது, சத்குரு அவரிடம் சொன்னார், “எனக்குத் தெரியும், நீங்கள் மற்றவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று”. அத்துடன் இன்றி முன் சத்சங்கங்களில் அவர் கேட்ட கேள்விகளையும் திருப்பிச் சொன்னார். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ச்சியாகி விட்டார். அதன் பிறகு ஈஷாவின் பக்கம் அவரைப் பார்க்கவேயில்லை.

லக்கி டிப்

1996ல் பிரம்மச்சரியம் எடுத்தபிறகு சத்சங்கங்கள் எடுக்கவும், தியானலிங்கத்திற்கு நிதி திரட்ட ‘லக்கி டிப்’ நன்கொடை திரட்டும் பணிகள் கவனிக்கவும் பணிக்கப்பட்டேன். லக்கி டிப் என்பது, ஒருவர் தன் முன் பரப்பி வைக்கப்பட்டுள்ள சீட்டுகளிலிருந்து ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து அதில் குறிக்கப்பட்டுள்ள தொகையை செலுத்துவது. சீட்டுகள் ரூ.1லிருந்து ரூ.2500 வரை எழுதப்பட்டதாக இருந்தன. எனவே இதற்காக மாநிலம் முழுவதும் பயணிக்கவும், ஒரு குறிப்பிட்ட தொகை சேர்வதற்கு உதவியாக இருக்கவும் நேர்ந்தது.

ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சத்சங்கத்திற்கோ அல்லது லக்கி டிப் பணிக்கோ சென்றால் அந்த நகரத்து ஒருங்கிணைப்பாளர் என் உணவு மற்றும் பிற உதவிகள் செய்ய தவறிவிடுவார். இது சத்குருவின் கவனத்திற்கு சென்றிருக்க வேண்டும், ஒரு நாள் நான் மீண்டும் அந்த நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அன்று மதியம் சத்குரு அந்த ஒருங்கிணைப்பாளரை சிங்காநல்லூர் அலுவலகத்திற்கு வரவழைத்து ஏதோ பேசியிருக்கிறார். என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த மாலை அந்த நகரத்திற்கு நான் சென்றிருந்தபோது, எனக்கு உதவிகள் தானாகக் கிடைத்தன. தற்செயலாக நடந்த நிகழ்வாக இது எனக்குத் தோன்றவில்லை. எந்த நகரத்திற்கு எப்போது செல்வது என்பதெல்லாம் நானாகவே தான் முடிவு செய்து கொள்வேன், அன்று அந்த நகரத்திற்கு போகப்போகிறேன் என்பதையும் நான் யாரிடமும் சொல்லவில்லை.

சமையல் தந்த மகிழ்ச்சி

பிரம்மச்சரியம் எடுத்தவுடன் நான் சிங்காநல்லூர் அலுவலகத்தில் தங்கியிருந்தேன். எனக்கு சமையல் தெரியாது. வேறு யாராவது அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பார்கள். சாப்பிட ஏதும் இல்லாத நேரங்களில் சாதம் வைத்து சட்னி செய்து சாதத்தைப் பிசைந்தோ அல்லது சாதத்துடன் தயிர் சேர்த்தோ மட்டும் சாப்பிடுவேன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்த சமையல். ஒரு நாள், ஆர்வத்தில், தோசை மாவு செய்வது எப்படி என்று யாரிடமோ கேட்டுத் தெரிந்துகொண்டு மிக்ஸியிலேயே அரைத்திருந்தேன். அந்த இரவு சத்குரு ராதேவுடன் சிங்காநல்லூர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் தோசையும் சட்னியும் அளித்தேன். இன்னொரு நாள் அதே போல் சமையல் புத்தகத்தைப் பார்த்து ரசம் செய்திருந்தேன். அன்று சத்குரு விஜியம்மாவுடன் வந்திருந்தார், ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்றும் கேட்டார். அந்த ரசம் சாதம் சாப்பிட்டதோடு அல்லாமல் நன்றாக இருந்தது என்று பாராட்டவும் செய்தார்.

இமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி

சத்குரு 7 பிரம்மச்சாரிகளைத் தேர்ந்தெடுத்து அமர்நாத்திற்கு பனிலிங்கம் தரிசிக்க அனுப்பினார். ஆனால் அப்போது அமர்நாத்தில் கலவரம் நடந்து கொண்டிருந்ததாக தகவல் வந்ததால், இடையிலேயே சத்குரு கூப்பிட்டு, அமர்நாத்திற்கு பதிலாக இமயத்தில் உள்ள மற்ற கோவில்களுக்கு மட்டும் சென்று வரும்படி கூறினார். அந்த இமயத்து தரிசனத்தின் போது, சத்குருவின் குறிப்புகளுக்கிணங்க, நாங்கள் அனைவரும் ஒவ்வொரு திசையில் பிச்சை எடுக்கச் சென்றோம். பிச்சை எடுத்து நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடினோம். எங்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான உணவு பிச்சையாக கிடைத்திருந்தது. ஒருவருக்கு பழங்கள், இன்னொருவருக்கு மிட்டாய் வகைகள் என விதம்விதமாக கிடைத்தன. அவரவருக்குக் கிடைத்த உணவு வகைகள் அவரவருடைய விருப்பத்திற்கேற்பவோ அல்லது இயல்பிற்கேற்பவோ இருந்தது. எனக்கு கோதுமை மாவு கிடைத்திருந்தது. ஆமாம், நான் எப்போதும் என் உணவை நானே சமைத்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவன். இப்படி பல வழிகளில், சத்குரு எங்களுக்கு எங்களுடைய இயல்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

இன்னொரு நாள் இமயத்தில் போஜ்வாசா போய் கொண்டிருந்த போது, ஒரு ஓடையைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த ஓடையில் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி தண்ணீர் மிகவும் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையைக் கடப்பவர்களுக்காக, அதன் மீது தற்காலிகமாக ஒரு குறுகலான மரக்கட்டையை போட்டிருந்தார்கள். அதன் மீது நடந்து செல்கையில் எனக்கு வழுக்கிவிட்டது. அந்த கட்டையை கைகளாலும் கால்களாலும் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தேன். அப்போது முதுகில் தொங்கிக் கொண்டிருந்த ட்ரக்கிங் பையும் கீழே ஒடிக் கொண்டிருந்த நீரில் பட்டு ஈரமடைந்து எடை கூடி கீழிழுத்தது. நாங்கள் அமர்த்தியிருந்த கைடும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரத்தில் ஓடையிலும் விழுந்துவிட்டேன். சில ஸ்வாமிகள் தண்ணீரில் குதித்து என்னைக் காப்பாற்றப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கே சரியாக நீச்சல் தெரியாது. அவர்களை ஸ்வாமி நிசர்கா புத்திசாலித்தனமாக தடுத்துவிட்டார். எனினும் எனக்குத் தெரிந்த கொஞ்சம் நீச்சலை வைத்து நீந்திக் கரையேறினேன். ஏதோ ஒரு அருள்தான் என்னை அன்று காப்பாற்றியது என்று அந்த கைடும் புரிந்திருந்தார்.

மாரத்தான் ஓட்டங்கள்

isha-bramacharies-participating-in-isha-vidhya-marathon

சிங்காநல்லூர் வாசத்திற்குப் பிறகு ஆசிரமத்திற்கு இடம் மாறினேன். சில காலம் ஆசிரமம் வரவேற்பில் பணிபுரிந்தேன். பிறகு கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் முழு நிதி மேலாண்மை - வவுச்சர் தயாரிப்பது, செலவை அங்கீகரிப்பது, கடைக்காரர்கள் மற்றும் சேவாதார்களுக்கு பணம் வினியோகிப்பது, மீதி பணத்தை சரிபார்த்து லாக்கரில் வைப்பது என. இதுவே பின்னர் ஈஷாவின் கேஷ் பாயிண்ட்டாக மாறியது. கடந்த 10 வருடங்கள் முன்னால் தமிழ் பப்ளிகேஷனின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் சூழ்நிலை வந்தது. அப்போதிருந்து தமிழ் பப்ளிகேஷனின் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன்.

ஆசிரமத்தில் வசிக்கத் துவங்கியபோது, ஆசிரமத்தின் ஆரோக்கிய சூழலால் உந்தப்பட்டு ஆசிரமத்திற்குள்ளேயே ஜாகிங் செல்ல ஆரம்பித்தேன். நான் ஒரு தடகள வீரனாகவோ அல்லது ஒரு விளையாட்டு வீரராகவோ எப்போதும் இருந்ததில்லை. நான் ஜாகிங் செல்ல ஆரம்பித்தவுடன் ஒரு முறை சத்குரு என்னைப் பார்த்துவிட்டு தொடர்ந்து ஓடுமாறு உற்சாகப்படுத்தினார். அப்போதே நான் 40ஐத் தாண்டியிருந்தேன். ஆனால் சத்குரு ஊக்கப்படுத்திய பின் ஜாகிங் என்பது எனது தினசரி கடமைகளில் ஒன்றாகியது. பிறகு அவர் நான் மாரத்தான்களில் பங்கேற்கவும் அனுமதித்தார். இப்போது ஆசிரமத்திலிருந்து பலர் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது பேறு

swami-nirakara-isha-blog-on-the-path-of-the-divine

தியானலிங்கம் பிரதிட்சையின்போது உடன் இருந்ததும், சத்குரு வாழும் காலத்திலேயே நானும் வாழ்ந்ததும் எனது பேறாக நினைக்கிறேன். தியானலிங்கம் என்பது சத்குருவே தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தியானலிங்கம் ஆவுடையாரில் வைப்பதற்காக நகர்த்தப்படும் முன்பு சத்குரு தியானலிங்கத்தை வைத்து ஒரு செயல்முறை நிகழ்த்தினார். அந்த செயல்முறை செய்தபோது, தியானலிங்கம் சுற்றி மட்டும் ஒரு லேசான தூறல் பெய்தது கண்டு ஆச்சரியப்பட்டேன். அதைப் பார்த்தபோது தேவர்களே இறங்கிவந்து தங்கள் ஆசிகளை தியானலிங்கத்திற்கு வழங்கியது போல இருந்தது.

நான் எப்போதும் ஒரு தர்க்கரீதியான மனிதனாகவே இருந்திருக்கிறேன். எதுவுமே என்னை எந்த சலனத்திற்கும் உட்படுத்தியதில்லை. ஏனெனில், எதற்குமே ஒரு காரணம் வைத்திருப்பேன். என் மூத்த சகோதரன் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தபோது கூட “சரி, ஏதோ நடந்துவிட்டது” என்றுதான் நினைத்தேனே தவிர கண்ணீர் சிந்தவில்லை. ஆனால் சமீபத்தில் குருபூஜை செய்தபோது கூட கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது. இப்போதெல்லாம் தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு செயல் செய்வதைப் பார்த்தால் கூட நான் எனக்குள் உடைந்து போகிறேன். ஹோல்னஸ் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பாகவே, சத்குரு ஒரு முறை என்னிடம், இலட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை உணரும்பொருட்டு ஈஷாவில் இணைவார்கள் என்று சொன்னார். அது இப்போது உண்மையாகி வருவதைப் பார்க்கும்போது, மனம் நெகிழ்கிறது.

ஒரு சில தலைமுறையினர் மட்டுமே சத்குரு போன்ற ஒரு குரு கிடைக்க அதிர்ஷ்டம் செய்திருப்பர். தெருவில் இருக்கும் ஒரு பிச்சைக்காரர் உட்பட ஒவ்வொருவரையுமே எப்படி மேன்மையுறச் செய்வது என்பதே சத்குருவின் சிந்தனையாக இருக்கிறது. சத்குரு எளிய கிராமத்து மக்களிடையேயும் கூட மிகவும் சாதாரணமாக பழகுவதைப் பார்க்கும்போது நெகிழ்வைத் தருகிறது. சத்குரு சமுத்திரம் போன்று பிரம்மாண்டமானவர். ஆனால் அவருடைய எல்லையற்ற கருணையால் அவர் நம்மிடையே வாழ்ந்தும், நமது ஆன்மீக மேன்மைக்காக செயலாற்றியும் வருகிறார். நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் குறித்தும் அவர்கள் செய்த அற்புதங்கள் குறித்தும் புத்தகங்களில்தான் படித்திருக்கிறேன். ஆனால் நான் புத்தகத்தில் படித்த அதே மனிதர்கள் போன்று இன்னொரு உயர்ந்த மனிதர் எனது கண்கள் முன்பேயே இப்போது இருக்கிறார்.

எனக்கு அவர் அளித்த சில வாய்ப்புகளை நான் தவற விட்டதாகக் கருதினாலும், அவருடைய சீடர்களில் ஒருவராக இருக்க முடிந்ததையே கூட பெரிதாகக் கருதுகிறேன். எனது முக்தி? அது அவரது பிரச்சனை. உண்மையில் நான் அதைக் குறித்து சிந்திக்கவும் இல்லை. அவருக்குத் தெரியும், எனக்குத் தகுதியான ஒன்றை, எனக்கு எப்போது, எப்படி கொடுப்பது என்று. ஏனெனில் என்னைப் பற்றி நான் அறிந்ததை விடவும் அவர் அதிகம் அறிவார்.

Note: சத்குரு, ஆசிரமத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது, ஸ்வாமியைக் குறித்த ஒரு பழைய நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

"ஸ்வாமி நிராகாரா அப்போது பிரம்மச்சாரியாக இல்லை. அவர் ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். எளிமையான நடுத்தரக் குடும்பம், வயதான பெற்றோர், சகோதரர்கள், குடும்பம், வேலை. அவருக்குத் திருமணம் ஆகவில்லை. ஆனால் அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். அவருக்குப் பொறுப்புகள் இருந்தன. திடீரென ஒரு நாள் அவர் சொன்னார், 'சத்குரு, நான் பிரம்மச்சரியம் எடுக்க விரும்புகிறேன். வேலையை ராஜினாமா செய்யப்போகிறேன்.' அதற்கு நான் சொன்னேன், 'உங்கள் வேலை என்ன ஆவது, உங்கள் குடும்பம் என்ன ஆவது மற்றும் உங்கள் வயதான பெற்றோர்?' அதற்கு அவர் மிகவும் எளிமையாக ஒன்று சொன்னார், அது யோகக் கலாச்சாரத்தில் மிகவும் சாதாரணமாகவே சொல்லப்படுவது, ஆனால் அவர் அந்த நேரத்தில் தன்னுடைய புரிதல்படி அதை சொன்னார். அவர் சொன்னார், 'எல்லாம் நடுவில வந்ததுதானே சத்குரு.' அவர் என்ன சொன்னார் என்றால், 'இவைகள் எல்லாம் வாழ்க்கைப் போக்கில் நான் சேர்த்துக் கொண்டவைதானே, எனவே வழியிலேயே, எங்காவது, நான் இவைகளை இறக்கித்தானே ஆக வேண்டும், அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.'"

ஸ்வாமி குறித்து சத்குரு மேலும் கூறும்போது, "இந்த இருபதுக்கும் மேற்பட்ட வருடங்களில், தனிப்பட்ட பிரச்சனைக்காகவோ அல்லது வேலை தொடர்பான பிரச்சனை என்றோ என்னிடம் ஒரு முறை கூட வந்ததில்லை. சத்குரு, அவர் எனக்கு இதை செய்துவிட்டார், இவர் எனக்கு அதை செய்துவிட்டார், என்னை இங்கே போட்டு விட்டார்கள் அல்லது அங்கே போட்டு விட்டார்கள் என்று ஒரு முறை கூட என் முன்வந்து நின்றதில்லை'. நீங்கள் அவரை எங்கே போட்டாலும் சரி, அவர் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்கிறார்".