திடீரென்று பத்து நாட்கள் பணி நிமித்தமாக மும்பை செல்ல வேண்டியிருந்தது! நானும் ஊரெல்லாம் பெருமையாக ‘நான் மும்பைக்கு போறேன்! நான் மும்பைக்கு போறேன்!’ என தம்பட்டம் அடித்துவிட்டு மும்பை சென்றிறங்கினேன்.

எங்கே போனாலும், நமது வாயும் வயிறும் செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்யும் அல்லவா?! வயிறு பசிக்கான அமிலங்களை வேளா வேளைக்கு செவ்வனே சுரந்தது! நாக்கோ நமக்கு பழக்கமான ருசியான சாம்பார், சோறு, கூட்டு, பொரியலை எதிர்பார்த்தது. ஆனால், கிடைத்ததோ சப்பாத்திகளும் ரொட்டிகளும், பாவ் பாஜிக்களும்தான்!

ஒரிரு நாட்களென்றால் அதையும் எஞ்சாய் செய்தோம் என்ற ரீதியில் சாப்பிடலாம்; ஆனால் அலுவலகப் பணியோ பத்து நாட்களையும் தாண்டி சென்றுகொண்டிருந்தது! ஒருவழியாக தமிழகம் வந்தடைந்ததும், நேராக வீட்டிற்கு சென்று உமையாள் பாட்டியின் கையால் மணக்க மணக்க சாப்பிட ஆவல் கொண்டிருந்தேன்.

சோறு தேடி ஒரு நெடிய பயணம் என்று கூட இதற்கு தலைப்பிடலாம் என மனதிற்குள் என்னை நானே பரிகசித்துக்கொண்டேன்.

“என்னப்பா மும்பை எப்படி இருந்தது! அமிதாப் பச்சன், தீபிகாவெல்லாம் பாத்தியா?” பாட்டி கலகல சிரிப்புடன் கேட்க,

“அட ஏம்பாட்டி நீங்க வேற… மும்பையில நெறைய விஷயம் பாக்கலாம், ஆனா நல்ல ருசியான சோற கண்ணுல பாக்க முடியல!” என்று எனது ஆற்றாமையை வெளிப்படுத்தினேன்.

பாட்டியும் என் ஆவலைப் புரிந்துகொண்டு தலைவாழை இலையுடன் வகை வகையாய் செய்து விருந்து வைத்து அசத்திவிட்டாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்ட மயக்கத்தை ஓரத்தில் வைத்துவிட்டு, நம் ருசிக்கு விருந்தாகி அன்றாடம் சக்தி தந்து, நம்மை வாழவைக்கும் இந்த அரிசி சாதம் பற்றி பாட்டியிடம் கேட்டறிய முற்பட்டேன்.

“இந்த அரிசி சாதம் அதிகமா சாப்பிடுறதனாலதான் சர்க்கரை வியாதி வருதுனு ஒரு பேச்சு அடிபடுதே அதப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க பாட்டி!”

“நீ அளவுக்கு அதிகமா அமிர்தம் சாப்பிட்டா கூட நோய் வரும்னு முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்களே?! அத மறந்துட்டு வெறும் அரிசிச் சோறு மட்டும் வட்டில் நிறைய போட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டு, அதுகேத்த உடல் உழைப்பு இல்லாம இருந்தா நிச்சயம் நோய் வரத்தான் செய்யும் இல்லையா?! நாம சாதம் எவ்வளவு சாப்பிடுறோமோ அதுக்கு சமமா பலவகை காய்கறிகளையும் பழங்களையும் சேத்துக்கணும்! அப்போதான் அது முழுமையான உணவா அமையும். தப்ப நம்ம மேல வச்சுகிட்டு சோறு மேல குறை சொன்னா எப்படிப்பா நியாயமாகும்?”

“யெஸ் பாட்டி, நீங்க சொல்றது ரொம்ப சரிதான்! அரிசிச் சோறு சாப்பிடுறதுனால ஆரோக்கியம் மேன்மை அடையும்னு நினைக்குறீங்களா?”

“அதென்னப்பா அப்படி கேட்டுட்ட…. நம்ம அரிசி சாதத்துக்குனு நிறைய ஆரோக்கிய பலன்கள் இருக்குதுப்பா! அதே நேரத்துல சோற எப்படி சாப்பிடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அரைகுறை வேக்காட்டுல வெந்துருக்குற அரிசி சாதத்த சாப்பிடவே கூடாது! அதனால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறுவதுல சிக்கல் வரும்.! அதே போல அதிகமான சூட்டோட இருக்குற சாதத்த சாப்பிடக் கூடாதுப்பா! அப்படி சாப்பிட்டா குருதி அழல் (இரத்தத்தில் பித்தம் அதிகரிப்பது), அதிக தாகம், மயக்கம் உண்டாகும்; தொப்பை உண்டாகும்.

மிதமான சூட்டுல, சீரா வெந்திருக்குற சாதத்த சாப்பிடணும். அப்படி சாப்பிடும்போது வாத, பித்த, கபம் ஆகிய பிரச்சனைகள் நீங்கி, வாய்ச்சுவை உண்டாகும்; உடலுக்கு நன்மை உண்டாகும்! சோறும் நெய்யும் கலந்து சாப்பிட்டா கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாவதோட நல்ல ஜீரணமும் நடக்கும்; பித்த நோய்களும் நீங்கும்.

பச்சரிசி சாதம் சாப்பிட்டா பித்தம் தணியும்; சிறுநீர் எரிச்சல் நீங்கும். குழந்தைகளுக்கு பச்சரிசி சாதம் மந்தம் உண்டாக்குவதால குடுக்கக்கூடாது!

அதேபோல நம்ம ஊர்ல பிரசித்தபெற்ற ஊற வச்ச பழைய சாதத்துல சிறப்பான மருத்துவ குணமிருக்குன்னு உனக்கு தெரியுமா?”

“என்ன பாட்டி சொல்றீங்க பழைய சோத்துல மருத்துவ குணமா?”

“ஆமாம்பா… சாதத்த இரவு தண்ணியில ஊற வச்சு காலையில அத சாப்பிட்டா, உடல் சூடு தணியும்! அதோட ஆண்மை குறைவு நீங்கி ஆண்மை பெருகும். மேனி பொலிவு உண்டாகும்”

“பாட்டி நான் யோகா கத்துக்கும்போது, இந்த பழைய சாதம் சாப்பிட்டா தமஸ் உண்டாகும்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்னடான்னா பழைய சாதம் சாப்பிட்டா நல்லதுன்னு சொல்றீங்களே?! எங்கயோ இடிக்குதே?!

“எங்கயும் இடிக்கல… நீதான் தப்பா புரிஞ்சுகிட்டே! நான் டெய்லி பழைய சாதம் சாப்பிட சொல்லலயே?! ஒரு மருந்தா தான் சாப்பிட சொன்னேன். அப்படியில்லேன்னா ஒன்னு பண்ணலாம், அதாவது சாதத்த ஒரு மணிநேரம் தண்ணியில ஊற வச்சு அத சாப்பிடலாம்”

“ஹா ஹா ஹா! ஓ.கே பாட்டி… புரிஞ்சிருச்சு!

“சரி சரி… நம்ம பாரதி சொன்ன மாதிரி, தேடி சோறு நிதந் தின்று வேடிக்கை மனிதரைப்போல ஆகாம இருக்க, போய் சாப்பிட்டதுக்கு ஏத்தமாறி நம்ம வயல்ல கொஞ்சம் வேலைய பாத்துட்டு வருவோம் வா!”

பாட்டியின் நெல் வயலுக்கு என்னையும் அழைக்க, அந்த கழனியில் கதிராக விளையவிருக்கும் அரிசியை உருவாக்கும் பணியில் எனது பங்கையும் வழங்கிட பாட்டியுடன் புறப்பட்டேன்.