அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 5

நல்ல சமையல் என்றால், சாப்பிடத் தூண்டும் உணவின் மணம், நாவூறச் செய்யும் அதன் ருசி, கவர்ந்திழுக்கும் உணவின் நிறம் என பல அம்சங்கள் இதில் அடங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, நமது சமையலில் ஆரோக்கியமே முதன்மையாய் பார்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இங்கே ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள் காத்திருக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சமைக்கும் முன்..

  • சாப்பாட்டில் தலைமுடியைக் காணும் போது, அந்த உணவு எவ்வளவுதான் சுவையானதாக இருந்தாலும் அதன் மதிப்பை இழந்துவிடுகிறது. எனவே சமைக்கும் முன் உங்கள் தலைமுடியை பின்னி முடிச்சிடுங்கள்.
  • காய்கறிகளை நறுக்குவதற்கு முன்னால் கைகளைக் கழுவுங்கள். காய்கறிகளை, குறிப்பாக பச்சிலைக் காய்கறிகளை நன்றாகக் கழுவுங்கள்.
  • உப்பு நீரில் சில நிமிடங்கள் அலசிய பின்னர், அது சுத்தமாகிவிட்டதென நீங்கள் திருப்தியடையும் வரை குளிர்நீரில் மென்மையாக அலசுங்கள்.
  • இதன் மூலம் காய்கறிகளின் மேல் படிந்திருக்கும் தூசி, மண் மற்றும் பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் நீக்கிவிட முடியும்.

எந்த உப்பு சேர்க்க...?

உப்பை பொறுத்தவரை கடல் உப்பிற்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம். இந்துப்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், organic உணவு பொருட்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கும். இந்துப்பு உபயோகப்படுத்தும் போது, கடலுப்பினால் ஏற்படக்கூடிய வயிற்று புண், அதிக ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

எதில் எல்லாம் சுத்தம் தேவை?

  • பாத்திரங்களை சுத்தமாக வைத்திருங்கள்.
  • சமையலறையை சுத்தமாக, எலி மற்றும் பூச்சித் தொந்தரவுகள் இல்லாமல் வைத்திருங்கள்.
  • உங்கள் ஆரோக்கியம் என்பது நீங்கள் சாப்பிடக் கூடிய உணவைப் பொறுத்தும், சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதிலும் இருக்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
  • நீங்கள் உண்ணும் உணவை ருசித்து சாப்பிடுவது முக்கியம்.
  • அது விலை குறைந்ததாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
  • உங்கள் உடலை தினமும் கவனியுங்கள். அது என்ன சொல்கிறது என்பதை கவனமாகக் கேளுங்கள்.
  • உங்களுடைய உடலுழைப்புக்கும், நீங்கள் உண்ணும் உணவிலிருந்து எத்தனை சக்தியை செலவழிக்கிறீர்கள் என்பதற்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்கிறது.
  • நீங்கள் செலவு செய்யும் சக்தியை விட அதிகமான அளவு சாப்பிட்டால், அந்த அதிகப்படியான உணவு உடலில் கொழுப்பாகத் தங்கிவிடுகிறது; அதாவது உங்கள் எடை அதிகரிக்கத் துவங்குகிறது.
  • இது நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கும், முடங்கிப் போவதற்குமான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பழங்களிலிருந்தும், காய்கறிகளிலிருந்தும் கிடைக்கும் இயற்கையான உடல்நலப் பலன்களை, ஊட்டச்சத்து மாத்திரைகள் அல்லது துணை உணவுகள் மூலம் பெற்றுவிட முடியாது. எனவே உங்கள் உணவில் பழங்களையும், காய்கறிகளையும் போதுமான அளவு சேர்ப்பதன் மூலம் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்

அடுத்த வாரம்...

வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்தும், வீட்டைச் சுற்றி வளரக் கூடிய மரங்கள் மற்றும் கீரை வகைகளின் பலன்கள் குறித்தும் பார்ப்போம்!