சத்குரு என்னிடம் பேசிய முதல்வார்த்தை… சிலாகிக்கும் முகவரி ரமேஷ்!
பகுத்தறிவு பேசித்திரிந்த தனது இளம்பிராயம் முதல் சத்குருவிடம் சம்யமா தீட்சைபெற்று முகவரி ரமேஷாக தான் பரிமாற்றம் அடைந்ததுவரை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் திரு.முகவரி ரமேஷ் அவர்கள், சத்குருவை சந்தித்த தருணங்கள் பற்றியும், தன்னுடன் அவர் பகிர்ந்துகொண்ட வார்த்தை பற்றியும் விவரிக்கிறார்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் - தலைவாசல் பகுதியில் உள்ள ஆராத்தி அக்ரஹாரம் என்ற குக்கிராமமே என் பூர்வீகம். சின்ன வயதிலிருந்தே எனக்குப் பெரிதாக கடவுள் நம்பிக்கை கிடையாது. அம்மா, அப்பா அடிக்கடி கோயிலுக்குப் போகச் சொன்னாலும், அதையெல்லாம் நான் பொருட்படுத்தியதில்லை. புரிதல் இல்லாமல், திராவிடம், கம்யூனிசம் என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது.
2004 டிசம்பர் மாதத்தில் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நடந்த சில சம்பவங்கள் என்னை எதிர்மறையாக சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், தாங்கமுடியாத வலியையும் எனக்கு கொடுத்திருந்தது. தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் கூட இருந்தேன். அந்த நேரத்தில்தான் என் நண்பர் அசோக், ஈஷா யோகா பயிற்சி வகுப்பு பற்றிய நோட்டீஸ் ஒன்றை என் கையில் திணித்தார்.
எனக்குள் ஏதோ ஒரு தயக்கம்! என் தம்பி லட்சுமணனின் தொடர் வற்புறுத்தலின் பேரிலேயே, நான் 2005 ஜனவரி மாதம் 29ம் தேதி மயிலாப்பூரில் நடந்த ஈஷா அறிமுக வகுப்பிற்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த சுவாமி சுயக்னாவிடம் நான், இந்த யோகா பயிற்சிக் கட்டணத்திற்கு ரூ.550 வாங்குகிறீர்களே. இதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தருவார்கள், புகைப்படத்தில் இருக்கும் தாடிக்காரருக்கு (சத்குரு) எவ்வளவு போகும் என்று அறியாமையில் கேட்டேன். அதற்கு சுவாமி சுயக்னா கொஞ்சம் கூட கோபப்படாமல், 4 வருடம் ஈஷா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள், யாருக்கு எவ்வளவு என்று உங்களுக்கே புரியும் என்று சொன்னார். அதற்கு பின்பு நான் படிப்படியாக பாவ-ஸ்பந்தனா, ஹட யோகா, சம்யமா போன்ற உயர் வகுப்புகளில் வரிசையாக பயிற்சி எடுத்தேன், உடல் ரீதியாக முன்னேற்றம் பெறுவதை உணர்ந்தேன். சம்யமா வகுப்பில் நான் கலந்துகொண்டபோது அனைவருக்கும் சத்குரு சம்யமா தீட்சை கொடுத்ததும், அவரிடமிருந்து ஆனந்த கண்ணீர் பொங்கிவந்தது. சத்குருவின் தாயுள்ளத்தை அப்போது அறிய முடிந்தது. அது எனக்குள் ஒரு புதிய புரிதலை உருவாக்கியது. அறிவை விட அருளே முக்கியம் என நான் உணர்ந்த தருணம் அது. அத்தருணம்தான் எனக்கான திருப்புமுனை.
முகவரி தந்த குருவருள்!
இன்று சமூகத்தில், முகவரி பவுண்டேஷன், 360 மாணவர்களுக்கு உயர் கல்வி கொடுத்து, இதில் 70 மாணவர்கள் மருத்துவமும், 2 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் பயிற்சி பெற்றும், 100க்கும் அதிகமானவர்கள் படித்து முடித்து அரசு மற்றும் தனியார் வேலைகளில் இருக்கிறார்கள் என்றால், அது சத்குரு அவர்களின் கருணைதான்... அத்தோடு வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருந்த என்னை ஒவ்வொரு நாளும் அவருடைய அருளால், வழிநடத்திக் கொண்டு செல்வதும் சத்குருவே... 2006 ல் முகவரியில் மாணவர்கள் எண்ணிக்கை 7 பேர், இக்குழுவிற்கு பெயர் வைப்பதில் எனக்குள் ஓர் குழப்பம்... அமைதிப்புரட்சி, கல்விப்புரட்சி, தேடல், என பல பெயர்கள் மனதில் வந்தாலும் ஏதோ திருப்தியில்லாமல் இருந்தேன். அச்சமயத்தில் ஈஷா மையம் சென்று இருந்தேன். தியானலிங்க கோவிலில் ஒரு அரை மணிநேரம் தியானம் செய்துவிட்டு, வெளியில் வரும்போது முகவரி என்ற ஒரு ஸ்பார்க் என்னுள் தோன்றியது. அப்படித்தான் முகவரி என்ற பெயர் வந்தது.
2007 ஆகஸ்டில், முகவரியில் மாணவர்களின் எண்ணிக்கை 21 பேர்.
அப்போது நானும் C.A படித்துக் கொண்டிருந்த மாணவன்தான். அச்சமயத்தில் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலை. இந்த சூழ்நிலையில் முகவரியை நடத்தலாமா, வேண்டாமா? முகவரியா, C.A -வா? என எனக்குள் ஒரு கேள்வி. ஆகஸ்ட் 31-ம் தேதி முகவரி மாணவர் தம்பி வெற்றிவேலிடம், நீ சொல்லும் வார்த்தையையே, நான் சத்குருவின் வாக்காக எடுத்துக்கொள்கிறேன், எனச் சொல்லி தெளிவான அறிவுரை சொல்லும்படி கேட்டேன் (வெற்றிவேலிடம் உண்மை தன்மை இருந்த காரணத்தினால்). வெற்றிவேலும், உங்களுக்கு தற்போது பொருளாதார சிக்கல் இருந்தாலும், உங்கள் இயல்புக்கு C.A - வை விட முகவரியை தொடர்ந்து நடத்துவதுதான் சரியாக இருக்கும் என தெளிவாக கூறினார். அவரின் சொல்லை சத்குருவின் வாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.
Subscribe
செப்டம்பர் 23, 2007ல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஈஷா கிராமோத்சவ விழாவிற்கு 40 மாணவர்களை எங்கள் ஊரிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அவர்களை ஊருக்குத் திருப்பி அனுப்ப பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு போராடி நண்பர்கள் உதவியினால், ஒரு வழியாக ஊருக்கு அனுப்பி வைத்தேன். சரியோ, தவறோ உங்களை நம்பிதானே முகவரியை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன், எனக்கு மறுபடியும் கஷ்டமான சூழ்நிலையா? என நினைத்து சத்குரு ஃபோட்டோ முன்பு நின்று கண் கலங்கினேன். சரியாக 4 நாட்கள் கழித்து செப்டம்பர் 27, 2007 அன்று சைதை துரைசாமி ஐயா அவர்கள் - எப்போதோ நான் முகவரி மாணவர்களின் கல்வி உதவிக்காக எழுதிய கடிதத்திற்காக - தொடர்பு கொண்டார். 'முகவரிதான் என் இயல்புக்கு சரியாக இருக்கும்' என்று சொன்ன தம்பி வெற்றிவேலுக்கே ஃபோன் செய்தார். முகவரி மாணவர்கள் தங்கி படிக்கவும், அவர்களின் உணவுக்கும் உதவ அவர் முன்வந்தார். இவன் தாக்குபிடிக்கிறானா, இல்லையா? என எனக்குள் ஒரு சோதனையை உருவாக்கி, என் கண்ணீரைத் துடைத்தது மட்டுமல்லாமல் இன்றுவரை முகவரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அடிப்படையான கட்டமைப்பை உருவாக்க, மனிதநேயர் சைதை துரைசாமி அய்யா மூலமாக அருள் புரிந்தவர் சத்குருவே.
சத்குருவை நினைத்ததும் நிகழ்ந்த அற்புதங்கள்!
ஜுன் 26, 2012-ல் முகவரி பவுண்டேஷனுக்கு வருமானவரி விலக்கு கேட்டு, சேலம் வருமானவரி அலுவலகத்திற்கு போயிருந்தேன். அந்த தினத்தில் என் ஆடிட்டர் ஊரில் இல்லை. நான் மட்டுமே தனியாகச் சென்று எல்லா கணக்குவழக்குகளையும் சரியாக சமர்ப்பித்தும், ஏதோ எதிர்பார்த்து 6 மாதம் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொன்னார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், வெளியே சோபாவில் அமர்ந்து ஒரு நிமிடம் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு சத்குருவை மட்டுமே நினைத்தேன். அடுத்த நிமிடத்தில் ஒரு நேர்மையான உயர் அதிகாரி என்னை அவரின் அறைக்கு அழைத்து ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தை எடுத்துப்பார்த்துவிட்டு, இப்போதே முகவரி பவுண்டேஷனுக்கு வருமானவரி விலக்கு (80 G) சான்றிதழ் தருகிறேன் என கையொப்பம் இட்டார். என்ன ஒரு அருள், முகவரி மேல் சத்குருவுக்கு...
2014 மார்ச் மாதத்தில் 42 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தேன் அச்சமயத்தில் என் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது, இச்சமயத்தில் மலைக்குச் செல்லவேண்டாம் என எல்லோரும் என்னை பயமுறுத்தினார்கள். நானோ வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றே தீருவேன் என ஒரே பிடிவாதமாக இருந்தேன். வேறு வழியில்லாமல் என்னுடன் வந்த முகவரி மாணவர்கள் எனக்கான மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்தனர். காலை 5 மணிக்கு குருபூஜையை முடித்துவிட்டு செல்ல ஆரம்பித்த எனக்கு மலை ஏறி திரும்பி கீழே வரும்வரை எடுத்துச்சென்ற மருத்துவ உபகரணங்களைப் பற்றிய நினைப்பே இல்லாமலும், எவ்வித வலியும் இல்லாமலும், நல்லபடியாக சிவனை பார்த்துவந்தேன். இது சாத்தியமானதென்றால் சத்குரு மீது நான் வைத்திருந்த என் நம்பிக்கையே...
என் ஏக்கம் சத்குருவிற்கு எட்டியது!
2018 அக்டோபர் மாதத்தில் இமயமலைக்கு பயணம் சென்று வரும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. உத்திரகாசி, கங்கோத்ரி, பத்ரிநாத், குப்தகாசி என ஒவ்வொரு இடத்தையும் நன்கு பார்க்க, உணர முடிந்த என்னால், கேதார்நாத்தை சரியாக உணர முடியாமலும், உள்வாங்க முடியாமலும் இருந்தேன். ஒரு வித ஏக்கத்துடன் அன்று இரவு கேதார்நாத்தில் தங்கியிருந்தேன் (காரணம் என் நண்பர்களுடன் ஹெலிகாப்டருக்காக காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை காத்திருந்தும், சரியான மேக சூழ்நிலை அமையாத காரணத்தினால் ஒரு வழியாக மாலை 5.30 மணிக்குத்தான் எங்களால் கேதார்நாத்துக்கு செல்லமுடிந்தது. ஹெலிகாப்டரில் ஏறிய சமயத்தில் ஒரே மழை. அச்சமயத்தில் பைலட் what can I do? என சொல்கிறார். நான் பயத்தில் சத்குருவை நினைத்து `பிரம்மானந்த ஸ்வரூபா’ மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தேன், எப்படியோ நல்லவிதமாக போய் சேர்ந்தோம். மறுநாள் காலை 4 மணிக்கு சுந்தரமூர்த்தி அண்ணாவின் உதவியால் கேதார்நாத் கருவறையிலேயே 30 நிமிடங்கள் இருக்கும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்தது. இவ்வளவு தூரம் வந்தும் கேதார்நாத்தை சரியாக உணரமுடியாமல் போய்விடுவோமோ என்று ஒரே ஏக்கத்தில் இருந்தேன். நிச்சயம் என் ஏக்கம் சத்குருவிற்கு எட்டியிருக்கும். அக்டோபர் 6, 2018 அன்று எனக்கு கிடைத்த அந்த அற்புதமான கேதார்நாத் தரிசனத்திற்கு சத்குருவின் பெருங்கருணையே காரணம்.
நாம் எடுத்துக்கொண்ட எந்த ஒரு செயலும் சுயநலம் இல்லாமல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், யாரோ ஒருவர் மூலமாக என்ன நடக்கவேண்டுமோ, அதை சரியான சமயத்தில் நடத்திக்காட்டுகிறார் சத்குரு.
இது வரைக்கும் எத்தனையோ மீடியாக்களில் முகவரி பரவி வந்திருந்தாலும், எந்த ஒரு இடத்திலேயும் என் முகம் வருவதை நான் விரும்பியதில்லை. நாம் செய்கிற நல்ல விஷயங்கள் மட்டும் வெளியில் தெரிந்தால் போதும் என்று இருந்த எனக்கு, வருங்காலத்தில் திறமை மற்றும் ஆர்வமுள்ள அடித்தட்டு ஏழை பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்காகவாவது வெளியில் வந்தாக வேண்டும் என நான் என் தங்கை சந்தியாவிடம் மட்டும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன். சரி, அதற்கும் சத்குரு வழி காட்டுவார் என ஆணித்தரமாக நம்பினேன். அதே தங்கை சந்தியாவுடன் ஜுலை 22, 2018 அன்று நான் பேசிக்கொண்டிருந்த தருணத்திலேயே, முகவரியின் முதல் மாணவியை படிக்க வைத்த திரைப்பட இயக்குநர் ஏ,ஆர். முருகதாஸ் அண்ணாவின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு. சர்கார் திரைப்படத்தில் ஒரு காட்சி உள்ளது. அக்காட்சியில் தாங்கள் வந்தால், எங்கள் மொத்த படக்குழுவும் சந்தோஷப்படுவோம் என்று சொன்னார்கள். அதே போல் சர்கார் திரைப்படத்தில் `ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் வழியாக முகவரி பவுண்டேஷனைப் பற்றி சரியான அங்கீகாரத்துடன் சொல்லப்பட்டு, நவம்பர் 6, 2018 (தீபாவளி) அன்று வெளியாகி, இன்று உலகளவில் முகவரி பவுண்டேஷனையும், முகவரி ரமேஷ் என்கிற என்னையும். ஏ.ஆர். முருகதாஸ் அண்ணா வழியாக கொண்டு சேர்த்தது சத்குருவின் கருணையே...
நாம் எடுத்துக்கொண்ட எந்த ஒரு செயலும் சுயநலம் இல்லாமல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், யாரோ ஒருவர் மூலமாக என்ன நடக்கவேண்டுமோ, அதை சரியான சமயத்தில் நடத்திக்காட்டுகிறார் சத்குரு. இதுவரைக்கும் முகவரி பவுண்டேஷன் மூலமாக 360 பேர் உயர்கல்வி படிப்பதும், அவர்கள் வேலைக்குச் செல்வதும், வருங்கால முகவரியின் கனவான பள்ளி தொடக்கமும், அதனுடைய வளர்ச்சியும், அதில் படிக்கப் போகும் ஆயிரக்காணக்கான மாணவர்கள் நேர்மையானவர்களாகவும், தன்னலமில்லாதவர்களாகவும் மற்றும் தலைமைப் பண்பு உள்ளவர்களாகவும் உருவாகுவார்கள் என்றால், அது சத்குருவின் கருணையினால் மட்டுமே நடக்கும் என்பதே என் ஆணித்தரமான நம்பிக்கை.. (உதாரணமாக முகவரிக்கு ஒரு அலுவலகம் வேண்டுமென்று தேடிக்கொண்டிருந்த சமயத்தில் முகவரிக்கு உதவி செய்துவரும் தியானலிங்க பில்டர்ஸ் உரிமையாளரும் ஈஷா தன்னார்வாலருமான நாவுக்கரசு அண்ணா மூலமாக சிறப்பான அலுவலகம் அமைந்து, செப்டம்பர் 3, 2016 அன்று குருபூஜையுடன் தொடங்கி இன்று நல்லமுறையில் சத்குருவின் அருளால் செயல்படுகிறது)
சத்குரு பேசிய முதல் வார்த்தை…
என் குருவிடம் முகவரி பற்றி பேசிய அத்தருணத்தையே, என் வாழ்வில் உயர்வாக நினைக்கிறேன்.
பல ஈஷா தன்னார்வலர்களின் (குறிப்பாக வளசரவாக்கம் சங்கீதா அக்கா மற்றும் ஆத்தூர் ஈஷா நண்பர்கள்) உதவியினால், பெரும்பாலான முகவரி மாணவர்கள் ஈஷா யோகா கற்று, தொடர்ந்து பயிற்சி செய்து பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் செயலின் Seriousness -ஐ புரிந்து கொள்ளாமல், Basic Ethics இல்லாமல் யாராவது நடந்து கொண்டால், நான் கோபப்படுவேன். இப்போது ஈஷா கற்றுக்கொடுத்த தியானம் நான் தொடர்ந்து செய்துவருவதினால் என் கோபம் கட்டுப்படுகிறது. இப்போது அனுபவத்தின் அடிப்படையில், தீர்வை நோக்கியே என் பார்வை செல்கிறது. தனக்கு புரியாதது மற்றவர்க்கும் புரியாது என நினைப்பது முட்டாள்தனம் என்பதை எனக்கு உணர்த்தி தெளிவான புரிதலையும் விழிப்புணர்வையும் உருவாக்கியவர் சத்குருவே.
சத்குருவின் கருணை மட்டும் எனக்கு இல்லையென்றால், இந்த ரமேஷ் என்ற ஜீவனே இல்லை என்றுதான் சொல்வேன். சத்குருவை இதுவரை மூன்று முறை சுவாமி தீரஜா மற்றும் சுவாமி ஏகாவின் மூலம் பார்த்திருக்கிறேன். முகவரி பவுண்டேஷன் பற்றியும் சத்குருவுடன் பேச வாய்ப்புக் கிடைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் 25, 2013 அன்று முகவரி பற்றி மட்டுமே சத்குருவுடன் பேசினேன். அத்தருணத்தில் எங்களை (நான், முகவரி மாணவர்கள் பிரிதிவிராஜ் மற்றும் வித்யா) ஒரு நிமிடம் பார்த்துவிட்டு கண் மூடினார் சத்குரு, பின்பு ஒரு நிமிடம் கழித்து எங்களைப் பார்த்து பேசிய முதல் வார்த்தையே நன்றியுணர்வு பற்றியதாகும். அப்பா, அம்மாவின் வளர்ப்பில் என் சிறுவயது முதலே, நன்றியுணர்வையே நான் எனக்கான கருவியாக எடுத்துக்கொண்டு செயல்படுபவன். என்னிடம் சத்குரு பேசிய முதல் வார்த்தையே 'நன்றி' என்றால், முக்காலத்தையும் உணர்ந்த அற்புதர் சத்குருதானே... என் குருவிடம் முகவரி பற்றி பேசிய அத்தருணத்தையே, என் வாழ்வில் உயர்வாக நினைக்கிறேன். சத்குருவின் இவ்வாசகமே ` A moment of absolute gratitude can transform your whole life’ எனக்கு மிகவும் பிடித்த வாசகம். நன்றியுணர்வே என் வாழ்க்கை (Gratitude is my Life).