சாதனா பாதை 2020 தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நாம் சில பங்கேற்பாளர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் அறிந்திட முற்பட்டோம். அவர்களை எது சாதனா பாதை நோக்கி இழுத்தது, அவர்களது பயணம் எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கேட்டறிந்தோம். இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடர் பதிவின் மூலம் நீங்கள் ஆசிரமத்தை, அந்த மூன்று பங்கேற்பாளர்களின் கண்கள் வழியாகக் காணலாம் – நேஹா, அனுபமா மற்றும் டாக்டர் சந்திரகாந்த் – இனி வரப்போகும் மாதங்களில் என்னவெல்லாம் அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று ஆவலாக அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது…

நேஹா

isha-blog-article-sadhanapada-2020-meet-the-participants-part1-neha

கேள்வி: ஏன் ஆன்மீகப் பாதையில் செல்ல விருப்பம் கொண்டீர்கள்?

நேஹா: நான் கடந்த ஆறு வருடங்களாக, ஒரு மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னால் தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் நான் உண்மையிலேயே விரும்பும் நிலைக்கு செல்ல இயலாததை உணர்ந்தேன். அதனால், நான் சுய-உதவிக்கான புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன். மேலும், சுய முன்னேற்றம், ஆளுமை வளர்த்துக்கொள்ளுதல் குறித்த வகுப்புகளில் பங்கேற்கத் துவங்கினேன். நான் என்னுடைய வேலையை விட்டு விட்டு ஒரு ஒப்பனை கலைஞராக பணியாற்றினேன். பிறகு ஒரு அழகுசாதனக் கடையில் (பொடீக்) பணியாற்றினேன், அதன்பின் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் டிப்ளொமா படிப்பு மேற்கொண்டேன், பிறகு எழுத ஆரம்பித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் பின்னரும் திருப்தியில்லை.

“எனக்கு ஒரு அழகான குடும்பமும், ஒரு அருமையான வேலையும் மற்றும் இனிய வீடும் இருக்கின்றன. நான் ஏன் இன்னும் திருப்தியடையவில்லை?” என்று நான் எனக்குள்ளேயே கேள்வியெழுப்பினேன்.

“எனக்கு ஒரு அழகான குடும்பமும், ஒரு அருமையான வேலையும் மற்றும் இனிய வீடும் இருக்கின்றன. நான் ஏன் இன்னும் திருப்தியடையவில்லை?” என்று நான் எனக்குள்ளேயே கேள்வியெழுப்பினேன். நான் லிஸா நிக்கொலஸ், ப்ரியா ரானா கபூர், இலியானா வான்சன்ட் மற்றும் லூயி ஹேய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் சுமார் நூறு சுய-உதவி புத்தகங்களைப் படித்தேன். ஏதோ ஒருவிதத்தில் அவை அனைத்தும் ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்டவை. இறுதியில் நான் சத்குருவை வந்தடைந்தேன்.

கேள்வி: இதனால்தான் நீங்கள் சாதனா பாதை வந்தடைந்தீர்களா?

நேஹா: நேரடியாக அப்படி சொல்ல இயலாது. சத்குரு எல்லா விஷயங்களையும் எளிமையான வழியில் விளக்குவது எனக்கு பிடித்திருந்தது. யூத் அண்ட் ட்ரூத் நிகழ்ச்சியில் அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். உங்களால் எதனையும் எளிமையாக விளக்க முடியவில்லையென்றால், உங்களுக்கே அது புரியவில்லை என்ற கருத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சத்குரு சொல்வதை கேட்கும்போது, “என்னைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும். இது வேறு ஏதோ பற்றியது அல்ல, இது என்னைப் பற்றிய ஒன்று” என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆள்காட்டி விரல் என்னை நோக்கி சுட்டிக் காட்டியபோது, எனக்குள் ஏதோ ஒன்று செய்ய வேண்டுமென்று தோன்றியது. சத்குருவின் எல்லா வீடியோக்களும் உள்நிலை வளர்ச்சியையே நோக்கியிருந்ததால், நான் அந்த வகுப்பில் சேர்ந்தேன்.

ஈஷா யோகா எனக்கு தெளிவைக் கொடுத்தது. எனக்கு வேண்டிய விஷயங்களை என்னால் செயல்படுத்த முடிந்தது. மேலும் விஷயங்களை செயல்படுத்த தடையாக இருந்த சுய சந்தேகமும், தயக்கமும் போய்விட்டன. மெதுவாக என்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் காண முடிந்தது. “ஆமாம், இது உண்மையாகவே வேலை செய்கிறது.”

கேள்வி: அதனால் நீங்கள் சாதனா பாதைக்கு விண்ணப்பம் செய்தீர்களா?

நேஹா: இல்லை, முதலில் எனக்கு அதைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. நான் வீடியோக்களைப் பார்த்து, வலைப்பதிவில் படித்தாலும், அது சரியாக எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதன் உள்ளடக்கமும் எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. இந்த இடத்தில் எனக்கு சமூக ஊடகம் பெரிதும் உதவியது. ‘Quora’ வில் பல்வேறு மக்களின் விமர்சனங்களைப் படித்ததால், அவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஒரு முன்னாள் மாணவர், “நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை என்னால் கூறமுடியாது, ஆனால் இது எனக்கு நிஜமாக உதவியது” என்றார்.

கேள்வி: எதனால் அப்படி நினைக்கிறீர்கள்?

நேஹா: உள்ளடகத்தைக் கூறிவிட்டால், அதன்மீதான சிலிர்ப்பு போய்விடுகிறது என்று நான் நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியவில்லை என்றால், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமது அனுபவத்தை மேலும் வளமாக்குகிறது.

கேள்வி:சாதனா பாதையில் கலந்துகொள்ள முடியாமல் பின்னிழுக்கப்படும், பல்வேறு பொறுப்புக்கள் உடைய ஒருவருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?

நேஹா: பொறுப்புகள் உங்களைப் பின்னிழுக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. உங்கள் குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருந்தால், உங்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும், அவ்வளவுதான். நம்மை ஏதோ ஒன்று பின்னிழுக்கிறது என்று நான் நினைத்ததேயில்லை - நீங்கள்தான் உங்களையே கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். ஏதோ ஒன்றை செய்யாததற்கு, நாம் எப்போதும் மற்றவர்கள் மேல் பழி சுமத்துகிறோம். நான் ஏதோ செய்ய வேண்டுமென்று நினைத்தப்பின் அதை செய்யாமல் விட்டால், அதற்கு ஒரு விளைவு உண்டு. அதை செய்துவிட்டால், வேறொரு விளைவு உள்ளது. அதனால், எந்த விளைவை நான் தாங்கிக்கொள்ள முடியும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நான் அங்கு திருப்தியில்லாமல் இருந்தேன், அதனால் “இதை நான் தொடர வேண்டுமா? இல்லை! நான் ஒரு மாற்று வாய்ப்பை முயன்று பார்க்க வேண்டும்” என்று நினைத்தேன். ஒருவேளை உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், பொறுப்புக் கூடவே வந்துவிடும். இங்கு சாதனா பாதையில், உங்களுக்கு ஒரு பரபரப்பான அட்டவணை உள்ளதால், குழந்தையை கவனித்துக்கொண்டே இதனை செய்ய முடியாது.

கேள்வி: ஆனால், அறியாத ஒன்றில் குதிக்கும் முன்னர் தடைகளும், பயமும் இயற்கையாகவே உங்களுக்கு இருக்கும் அல்லவா?

நேஹா: இதில் உற்சாகமும் உண்டு. நீங்கள் ‘பங்கீ ஜம்பிங்க்’ (மிக உயரத்திலிருந்து குதிப்பது) செய்தால் கூட, அந்த சிலிர்ப்பும், பயமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடன் இருக்கும். நான் என்னுடைய 6 வருட வேலையை விட்டுவிட்டு, இங்கு ஒரு பயிற்சியாளராக, முதலிலிருந்து துவங்க எண்ணினேன். அதுவும் குதிப்பது போலத்தான். இது என்னுடைய பொறுப்புகளைப் பற்றியோ, என்னுடைய குடும்பம் அதற்கு பதிலளிப்பது பற்றியோ மட்டும் அல்ல. இது “நான் எல்லாவற்றையும் முதலிலிருந்து துவங்கத் தயாரா? விழுந்துவிடக்கூடிய இந்த தாவுதலுக்கு நான் தயாரா? எனக்கு ஒருவேளை வெற்றி கிடைக்காமலும் போகலாம்” என்பவையெல்லாம் இதில் அடங்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம், சத்குரு எனக்கு விடைக் கண்டுபிடிக்க உதவினார். யூத் அண்ட் ட்ரூத் நிகழ்ச்சியில் சத்குருவிடம் பலர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டார்கள், “நான் இதை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் என் பெற்றோர்கள் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.” அதற்கு சத்குரு புத்திசாலித்தனத்துடன், “உங்கள் பெற்றோர் அவ்வாறு சொல்லவில்லை. உண்மையில் உங்களுக்கு இரண்டும் வேண்டும், ஆனால் இரண்டும் கிடைக்காது, அதனால் நீங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.” நான், “அவர் சொல்வது சரி!” என்று நினைத்தேன். நான் எனக்குள் தெளிவாக இருந்தால், எதுவும் என்னைத் தடுக்க முடியாது - எனக்குள் நான் இதனை உணர முடிந்தது.

கேள்வி: ஈஷா யோக மையத்தின் எந்தத் துறையில் நீங்கள் இப்போது தன்னார்வலராக இருக்கிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நேஹா: நான் IT துறையில் செயல் செய்து வருகிறேன். நான் வேலை செய்ய வேண்டாமென்று நினைத்த ஒரு துறை IT! நிறுவனங்களில் நடக்கும் அரசியல் எனக்குப் பிடிக்காது. ஆனால் அதை இங்கு என்னால் காணமுடியவில்லையாதலால், இது என்னை இங்கு பணிசெய்ய ஊக்கம் தருகிறது. நான் அதே பணியை வேறொரு சூழலில் செய்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் என்னையே கூர்ந்து கவனிக்கிறேன், அங்கு உண்மையில் எது “இல்லை?” அங்கு IT துறையில் என்னுடன் பணியாற்றியவர்கள் எனது ஊக்கத்தைக் குறைத்திருக்கலாம், ஆனால் இங்கு வந்த பிறகு, யாருடன் வேலை செய்வது என்பதை நான் முடிவு செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால் நான் என்னைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டும், இறுதியில் எல்லா விரல்களும் என்னையே சுட்டிக்காட்டும்.

அனுபமா

isha-blog-article-sadhanapada-2020-meet-the-participants-part1-anupama-2

கேள்வி: நீங்கள் எப்போதிலிருந்து ஆசிரமத்தில் இருக்கிறீர்கள்?

அனுபமா: ஐந்து-ஆறு மாதங்களாக இருக்கலாம். நான் இங்கு மஹாசிவராத்திரியின் போது தன்னார்வத் தொண்டு செய்ய ஒரு பத்து நாட்களுக்கு வந்தேன். அப்போது ஒருவர் என்னிடம்,” நீங்கள் ஏன் சாதனா பாதைக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது?” என்றார். “சாதனா பாதை என்றால் என்ன?” என்று எனக்குள் கேள்வியெழுந்தது. எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையென்றாலும் “சரி” என்று சொன்னேன். நேர்முகத் தேர்வு எப்படிப் போகும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நான் அதற்கு விண்ணப்பித்தேன். நான் வீட்டிற்குச் சென்றவுடன் எனக்கு இமெயில் மூலமாக உறுதிப்படுத்தும் தகவல் வந்தது. அப்போது நான், “நான் இன்னும் ஆசிரமத்தை முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை. வெறும் பத்து நாட்கள், அதுவும் என்னுடைய சேவை வெளியேதான் இருந்தது. நான் ஆசிரமத்தை இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று எண்ணினேன். பிறகு நான் இங்கு இரண்டு வாரங்கள் செலவிடலாம் என்று வந்தேன், அதற்குள் பொதுமுடக்கம் நடந்தது. நான், “சரி, எப்படியானாலும் நான் இங்கு இருக்கிறேன், திரும்பப் போய் என்ன பயன்? நான் ஆசிரமத்தை இன்னும் சிறிது தெரிந்துகொள்ளலாம்” என்று எண்ணினேன்.

கேள்வி: உங்கள் வீட்டில் செய்யக்கூடிய விஷயங்கள் எதுவும் உங்களுக்கு இருக்கவில்லையா?

அனுபமா: என்னுடைய தேர்வுகள் ஜூன் மாதம் நடக்க வேண்டியவை, ஆனால் கோவிட் 19 காரணமாக தாமதமாகிவிட்டது.

கேள்வி: நீங்கள் என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?

அனுபமா: காஸ்ட் அக்கவுண்ட்டிங்.

கேள்வி: உங்களது படிப்பை மகிழ்ச்சியுடன் படித்தீர்களா?

அனுபமா: என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் போது நான் ரொம்ப ரொம்ப சோம்பேறியாக இருந்தேன். நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய கல்வி வாழ்க்கை மிக நன்றாக இருந்தது. ஆனால் என்னுடைய பன்னிரண்டாவது பொதுத் தேர்வுகள் எனக்கு மிகவும் அழுத்தத்தைக் கொடுத்தது. எனக்கு படிப்பிலிருந்து ஒரு வருடம் இடைவேளை எடுக்கவேண்டும் என்றிருந்தது. ஆனால் எனது பெற்றோர், “இல்லை, நீ இடைவெளி எடுக்கக் கூடாது, நேரடியாகக் கல்லூரிக்குச் செல்லவேண்டும்” என்றனர். அது என்னை எல்லா வழிகளிலும் பாதித்தது. நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனக்கு படிக்கப் பிடிக்கும். படித்த கல்வியின் மூலம் எனக்கான தொழில் வாய்ப்பை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், எனக்கு எங்கோ ஒரு இடைவெளித் தேவையாக இருந்தது. ஆசிரமத்தில் நான் செய்த சேவை, தோட்டத்தை பராமரித்தல், சமையலறையில் சேவையாற்றுதல் போன்றவை. இதுபோன்ற எளிய சேவைகள்தான் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. காய்கறி நறுக்குவது, தட்டுக்களை கழுவுவது, உணவு பறிமாறுவது போன்ற, நான் வீட்டில் செய்துக் கொண்டிருந்த வேலைகள் போலவே இருந்தாலும், இது இன்னும் தீவிரமாக இருந்தது. ஆசிரமத்தின் ஒவ்வொரு அம்சத்துடன் ஈடுபடும் போதும் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஆசிரமத்திற்கு உயிர்களை எப்படிக் கையாள்வது என்பது தெரிந்திருக்கிறது; அதற்குத் தெரியும்.

சத்குரு அவரது வாழ்க்கையையே இதில் முதலீடு செய்திருக்கிறார் அல்லவா? அதில் எனக்கு ஒரு சொட்டு கிடைத்தாலும், நான் மகிழ்ச்சியடைவேன்.

கேள்வி: நீங்கள் ஏதாவது சவால்களை சந்தித்தீர்களா?

அனுபமா: முன்னர் யாராவது ஏதோ ஒன்றைக் கூறி அது என்னைப் புண்படுத்தியவுடன், “ஓ, ஒருவேளை அது என்னுடைய தவறாக இருக்கும். நான் ஏதோ தவறு செய்துவிட்டேன்” என்று நினைப்பேன். ஆனால், பிறகு அது தவறிழைப்பது பற்றியது அல்ல என்று உணர்ந்தேன். என்னால் மற்ற மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் என்னுடைய உணர்வுகளை நான் நிர்வகிக்க முடியும். முன்னர், வீட்டில் இந்த மாதிரி விஷயங்களைக் கையாளும்போது எனக்கு கடினமாக இருந்தது. யாருமே இதை எனக்குக் கற்றுத்தரவில்லை. இருபது வருடக் கல்வி எனக்கு என்னதான் கற்றுக் கொடுத்திருக்கிறது? என்று சில நேரங்களில் நான் வியந்துகொள்வேன். ஒன்றுமில்லை!

கேள்வி: சாதனா பாதைக்கு வரவேண்டுமென்று முடிவு செய்தவுடன் எப்படி உங்கள் பெற்றோரை சம்மதிக்க வைத்தீர்கள்? நிறைய பெற்றோர்கள் தங்கள் பெண்ணை இவ்வளவு தூரம் அனுப்புவதற்கு தயங்குவார்கள் அல்லவா?

அனுபமா: “உங்களுக்கு உண்மையிலேயே அதுபோன்ற கவலைகள் இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் இங்கு வாருங்கள், இங்கு ஆசிரமத்தில் ஓரிரு வாரங்கள் தங்கியிருந்து பாருங்கள்” என்று நான் அப்படிப்பட்ட பெற்றோர்களிடம் சொல்வேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் கவலை இருந்தது – என்னுடைய அம்மாவிற்கு இருந்தது, அப்பாவிற்கு அல்ல. அவருக்கு நான் இங்கு இருப்பது பிடித்திருந்தது. இதற்கு முன் ஆசிரமத்திற்கு வந்ததில்லையென்றாலும், என்னுடைய அம்மாவிற்கு நிறைய ஆட்சேபணைகள் இருந்தன. அவர் எதையும் கேட்கத் தயாராக இல்லை. யாராவது நாம் சொல்வதைக் கேட்கத் தயாராக இருந்தால், அவர்களிடம் சொல்லி புரிய வைக்கலாம்; அப்படியும் அவர்கள் திருப்தியடையவில்லை என்றால், அங்கே கொஞ்சம் போராடித்தான் காரியம் சாதிக்க வேண்டும், இல்லையென்றால் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

கேள்வி: அப்படியென்றால் நீங்கள் ஒரு புரட்சிப் போராளியா?

அனுபமா: நான் எனது பெற்றோரிடம் மிகவும் கீழ்படிந்திருப்பேன், ஆனால் அதிலுள்ள முட்டாள்தனத்தை புரிந்துகொண்டேன். அதில் பாதுகாப்பு இருந்தாலும், வளர்ச்சி எதுவுமில்லை என்று உணர்ந்துகொண்டேன். நான் ஒரு பெண்ணாக இருந்ததால், அவர்கள் பாதுகாப்புக் கருதி அவ்வாறு இருந்தார்கள். அவர்கள் “இது பாதுகாப்பானது, இது பாதுகாப்பானது” என்று கூறுவார்கள். அதற்கு நான், “இது பாதுகாப்பானதுதான், ஆனால் நான், நீங்கள் சொல்வதைக் கேட்பதால், வளர்ச்சியடையவில்லை. நான் என் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறேன்” என்று கூறினேன்.

கேள்வி: கடந்த இரண்டு மாதங்களாக சத்குருவை அருகில் இருந்து பார்த்து, சத்குரு தர்ஷனில் பங்குப்பெற்ற உங்களது அனுபவம் எப்படியிருந்தது?

அனுபமா: எனக்கு சத்குருவிடம் மாபெரும் மரியாதையும், பக்தியும் உள்ளது. ஆனால் அதே சமயம், அவர் எப்போதும் என்னை கடந்து போகும்போது, நான் கிளர்ச்சியடைந்ததில்லை. நான் நமஸ்காரம் செய்வதோடு சரி. அவர் எனது குரு, அவர் எனக்கு வழங்கியதற்கெல்லாம் நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன். அதனால் சத்குருவுடன் இருப்பது குறித்து கிளர்ச்சியடையாமல், அந்த அற்புத நிகழ்வை நான் அனுபவிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறேன். சத்குரு அவரது வாழ்க்கையையே இதில் முதலீடு செய்திருக்கிறார் அல்லவா? அதில் எனக்கு ஒரு சொட்டு கிடைத்தாலும், நான் மகிழ்ச்சியடைவேன்.

கேள்வி: ஆசிரமத்தின் உணவு எப்படி இருக்கிறது?

அனுபமா: வாவ், அற்புதமான உணவு. நான் வீட்டிலிருக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் உண்பேன், ஏனென்றால் என்னுடைய அம்மா சமைக்கும் உணவு எதிர்மறை பிராணச் சக்தியுடன் இருக்கும். அது என்னுடைய சக்தியை உறிஞ்சிவிடும்.

கேள்வி: நீங்கள் வீட்டில் என்ன வகையான உணவு உண்பீர்கள்?

அனுபமா: என் அம்மாவின் சமையல் ரொம்ப காரமாகவும், வண்ணமிக்கதாகவும் இருக்கும். உணவு மிகவும் அழகாகவும், சுவையுள்ளதாகவும் இருக்கும், ஆனால் அது உங்களுக்கு சக்தியைக் கொடுக்காது. நான் எப்படியோ காலை உணவு உண்பேன், எப்பொழுதும் மதிய உணவை தவிர்ப்பேன், பெரும்பாலான நேரங்களில் இரவு உணவையும் தவிர்ப்பேன். இது என்னுடைய ஆரோக்கியத்தை பாதித்தது; நான் ரொம்ப ரத்த சோகையுடன் (ஆனீமிக்காக) இருந்தேன். அதனால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோம்பேறியாக இருந்தேன். வீட்டில் எனக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காயமும், பூண்டும் சேர்ப்பார்கள். நான் ஆசிரமத்து உணவைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை ஆரோக்கியமான உணவு மற்றும் நிறைய வகைகள். நான் மிகவும் சக்தியுடனும், உயிர்ப்பாகவும் உணர்கிறேன்.

கேள்வி: உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

அனுபமா: நான் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நான் என் வீட்டிற்கு அடுத்த வருடம் திரும்பிப் போகலாம். நான் என் பெற்றோரிடமும் இதுபற்றி எனக்கு தெரியாது என்றுதான் கூறியிருக்கிறேன், தேவையில்லாத நாடகத்தை தவிர்ப்பதற்காக! அடுத்த வருடம் என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. சாதனா பாதையில் இன்னும் நிறைய இருக்கிறது, பார்க்கலாம். ஆனால், கடந்த இருபத்திமூன்று வருடத்தில் அவர்கள் எனக்கு செய்யாததை, இந்த இரண்டு மாதங்களில் ஆசிரமம் எனக்கு செய்திருக்கிறது.

டாக்டர் சந்திரகாந்த் (M.B.B.S) 

isha-blog-article-sadhanapada-2020-meet-the-participants-part1-dr.chandrakanth

கேள்வி: நீங்கள் எப்படி சாதனா பாதையை வந்தடைந்தீர்கள்?

டாக்டர் சந்திரகாந்த்: நான் என்னுடைய MBBS படிப்பை முடித்துவிட்டு, முதுகலை படித்துக்கொண்டே பெங்களூரில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வாழ்க்கை எதை நோக்கிப் போகிறது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. இது மிகவும் குழப்பமாக இருந்தது. நான் ஈஷா யோகா வகுப்பு முடித்திருந்தேன். மேலும் என் உள்நிலைக்காக இன்னும் சிறிது நேரம் செலவழிக்க நினைத்தேன். அதனால் நான் ஈஷா யோக மையத்திற்கு வந்தேன். கடந்த வருடம் நான் இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். அது மிக அற்புதமாக இருந்தது. இந்த தடவை நான் வந்தபோது, பொதுமுடக்கம் நடந்துக் கொண்டிருந்ததால், நான் இதை உபயோகித்துக் கொள்ளலாம் என்று நினைத்து சாதனா பாதைக்கு விண்ணப்பித்தேன்! இது எனக்கு மிகவும் தேவை என்று எனக்குத் தெரியும்.

இது எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு போல் இல்லை, இது வாழ்க்கையை மேலும் மேலும் அனுபவித்து உணர்வதற்கான ஒரு ஏக்கம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

கேள்வி: ஏன் ஆசிரமத்திற்கு வரவேண்டும்?

டாக்டர் சந்திரகாந்த்: நான் முதல் தடவை இங்கு வந்தபோது, வாழ்க்கை முறையில் சில விஷயங்களை மாற்றினேன். நான் என் வீட்டிற்கு திரும்பிப் போனவுடன் ஒரு நாளைக்கு இரண்டு தடவைதான் உணவு எடுத்துக்கொண்டேன். சில உணவுகளை மாற்ற முயற்சி செய்தேன், சில எதிர்மறை உணவு வகைகளைத் தவிர்த்தேன். ஆசிரமத்தை வேறு எந்த இடத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நான் நிறைய பயணம் செய்வேன் மற்றும் இயற்கையுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரமமும் இதுபோல ஒரு அனுபவமாகும். நமது ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை வழிகாட்டும், ஒரு வாழும் குரு இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், நான் இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, உள்நோக்கிப் போவதில் முதலீடு செய்யவும், வாழ்க்கையை வித்தியாசமானக் கண்ணோட்டத்தில் அணுகவும் இதுவே சிறந்த தருணம் என்று நினைத்தேன்.

கேள்வி: இந்த முதலீட்டினால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

டாக்டர் சந்திரகாந்த்: நான் கடந்த முறை இங்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தபோது, வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், வாழ்க்கையில் முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையை எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லாமல் கடந்து போகவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன். இவை எல்லாம் தேவைதான், ஆனால் இவைகளோடு மட்டும் நான் வரம்பு வைத்துக்கொள்ளவில்லை. இது எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு போல் இல்லை, இது வாழ்க்கையை மேலும் மேலும் அனுபவித்து உணர்வதற்கான ஒரு ஏக்கம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

கேள்வி: இதுவரை உங்கள் சாதனா பாதை பயணம் எப்படியிருந்தது?         

டாக்டர் சந்திரகாந்த்: கண்டிப்பாக நான் உள்ளுக்குள் இன்னும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கிறேன். நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை அல்லது எனது காரண அறிவுடன் ஒத்துப்போகவில்லை. கடந்த காலங்களில் நான் ஆசிரமத்திற்கு வந்தபோது, இந்த விஷயங்களுடன் நான் என்னை தகவமைத்துக் கொண்டேன். கண்டிப்பாக எனக்கு நிறைய கேள்விகள் எழுந்தன – ஏதாவது உண்மையிலேயே நடக்கிறதா? நிஜமாகவே ஞானோதயம் என்று ஒன்று உள்ளதா? இந்த மாதிரி கேள்விகள் பலமுறை வந்தாலும், எனக்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவது எனக்கு தெளிவாகத் தெரிகிறது. ஏதோ ஒன்று கண்டிப்பாக வேலை செய்கிறது.

ஆசிரியர் குறிப்பு: இந்தத் தொடரின் அடுத்தப் பகுதியில், 51 வயதான ஜெர்மானிய பங்கேற்பாளரின் வியக்கத்தகும் பயணத்தை உங்களுக்கு காண்பிக்கிறோம். மேலும், சில முன்னாள் பங்கேற்பாளர்களின் பொன்னான சில அனுபவங்களையும் பார்க்கலாம்.