இரசாயன பூச்சிக்கொல்லிகள் விவசாயத்தை பாதிப்பது எப்படி?
பூச்சிகளின் வீரியம் நிலத்தில் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கணக்கிடுவதற்கு கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கும் இந்தபதிவு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் மண்ணும், மனிதனும் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்தும் பேசுகிறது!
பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 5
பூச்சிகளின் வீரியம் நிலத்தில் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கணக்கிடுவதற்கு கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கும் இந்தபதிவு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் மண்ணும், மனிதனும் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்தும் பேசுகிறது!
பூச்சி இரவுக் காட்சி
பூச்சிகள் வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படுவதால் இரவில் நல்ல ஒளியுடன் கூடிய மின்சாரவிளக்கை பண்ணையில் வைத்து பூச்சிகளைக் கவரவேண்டும். அந்திமாலையில் (dusk- 6 to 7pm) பூச்சிகள் அதிகமாக ஒளியை நோக்கி வரும். அப்பூச்சிகளைக் கண்டறிந்து பழகவேண்டும்.
வயல்ஆய்வு மற்றும் உழவர் வயல்வெளிப்பள்ளி
பொதுவாக பூச்சிகள் தாக்கினால் இழப்புமட்டும் ஏற்படும் என்பதல்ல, பயிர்களுக்கு நன்மையும் ஏற்படுகிறது. உதாரணமாக குருத்துப்பூச்சி நெற்பயிரைத் தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்துவிடும். ஆனால் அதிகமான பக்ககிளைகள் வெடிக்கும். இதனால் நிறைய தூர் கட்டுகிறது. வயலில் களப்பயிற்சி செய்யும்போது புதிதான பல விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இதனால் பூச்சிகளை எப்படி மேலாண்மை செய்வது என்ற புரிதல் எற்படுகிறது.
வயல் ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
பூச்சிகளின் இனப்பெருக்கம்
வயல்வெளியில் ஏதோ ஒரு தீமைசெய்யும் பூச்சியைப்பார்த்தால், அந்த பூச்சி நிறைய பெருகி பயிருக்கு சேதம் விளைவித்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு எழும். ஆனால், எந்த பூச்சியும் தன்னிச்சையாக அதிக அளவில் பெருகிவிடமுடியாது.
ஏனெனில் வயலில் வெவ்வேறு விதமான சூழ்நிலைகள் ஒரு பூச்சியின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கின்றன. இந்த சாதக பாதக சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துகொண்ட பின்புதான் ஒரு பூச்சி அந்த வயலில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரஇயலும். கீழ்கண்ட சாதக, பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
1. நன்மைசெய்யும் பூச்சிகள்
நிலத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் எவ்வளவு உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக அசுவினிப்பூச்சிகள் இருந்தால் அவற்றை கட்டுப்படுத்த எவ்வளவு பொறிவண்டுகள் உள்ளன என்பதை கவனிக்கவேண்டும்.
2. பயிரின் வயது
சில வகையான பூச்சிகளின் தாக்குதல் நாற்றுபருவத்தில் அதிகமாகவும், வேறு சிலவகையான பூச்சிதாக்குதல் வளர்ந்த பயிர்களிலும் ஏற்படுகிறது. எனவே பயிரின் வயதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
3. பருவநிலை
பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியை காற்றின் திசைவேகம், வெப்பம், ஈரப்பதம் ஆகியவை தீர்மானிக்கின்றன. சாதகமான சூழ்நிலையில் அதிகமாக பெருகுகின்றன. பாதகமான சூழ்நிலையில் அதிகமாக பெருக முடிவதில்லை.
உதாரணமாக நெல்லில் புகையான் தாக்குதலில் வெப்பமும், ஈரப்பதமும் முக்கியப் பங்காற்றுகின்றன. நெற்பயிரின் நெருக்கம் அதிகமாக இருக்கும்போது புகையான் தாக்குதல் அதிகம் இருக்கும்.
4. பயிரின் ஊட்டம்
இயற்கை முறையில் பயிர் நன்றாக வளர்ந்து ஊட்டமுடன் இருக்கும்போது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கிறது.
5. பூச்சியின் சாப்பிடும் சக்தி
சிறிய பூச்சிகள் அதிகம் உண்ணக்கூடியவை. வயதான பூச்சிகள் அதிகமாக உண்ண இயலாது. மேலும் பூச்சிகள் புழு பருவத்தில்தான் அதிகமாக சேதத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் புழுபருவத்தில் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.
Subscribe
6. கலப்புப்பயிர்கள்
ஒருபயிர் சாகுபடி செய்யாமல் கலப்புபயிர் சாகுபடி செய்யும்போது பலவகையான பூச்சிகள் அங்கு வருகின்றன. இதில் நன்மைசெய்யும் பூச்சிகளும் அடங்கும். வெவ்வேறு வகையான பயிர்கள் உள்ளதால் பூச்சிகளின் கவனம் பல தாவரங்களின் மேல் செல்கிறது. இதனால் பாதிப்பு மற்றும் பரவுதல் தடுக்கப்படுகிறது.
7. மண்வளம்
பெரும்பாலான பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மண்ணில் வாழ்கிறது. வேப்பம் புண்ணாக்கு இடுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் மக்கவைக்கும் திறன் அதிகமாக இருக்கும்போது இடப்பட்ட மூடாக்கு விரைவாக மக்க வைக்கப்படுகிறது. இதனால் மூடாக்கில் பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் தங்குவது தவிர்க்கப்படுகிறது.
8. பூச்சியின் பருவநிலை
உதாரணமாக நெல்லில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அந்துப்பூச்சியின் இளம்புழுக்களால் ஏற்படுகிறது. வளர்ந்த அந்துப்பூச்சி நெல்லுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அவை முட்டையிடும் என்பதை கவனத்தில் வைக்கவேண்டும்.
9. பயிரின் எதிர்ப்புசக்தி
உதாரணமாக குருத்துப்பூச்சி தாக்குதலின்போது பயிர் மேலும் நன்றாக வீரியத்துடன் வளரும். பூச்சிகள் தாக்கும்போது பயிர்கள் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்துக் கொள்கிறது.
10. பயிர் வெளியிடும் வாசனை
வேதி உரங்கள் இடும்போது பயிர் நீராவிப்போக்கை அதிகமாக செய்து ஒரு வாசனையை வெளியிடுகிறது, இந்த வாசனை பூச்சிகளைக் கவருகிறது, இயற்கை உரமிடும்போது இத்தகைய வாசனையை பயிர்கள் அதிகமாக வெளியிடுவதில்லை.
இரசாயன பூச்சிக்கொல்லிகள் - உணர்வும் அடையாளமும்
கொசுக்களை ஒழிப்பதற்காக 1945 ல் தயாரிக்கப்பட்ட முதல் பூச்சிகொல்லி மருந்து DDT. பின்னர், இந்த DDT விவசாயத்தில் பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தப்பட்டது. இது தொடுநஞ்சு வகையாகும். இரசாயன பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ச்சியடைந்து தற்போது மனிதகுலத்திற்கே பேராபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளன.
தொடுநஞ்சு - தோல்மூலம் ஊடுருவிச்சென்று பூச்சிகளை அழிக்கிறது,
உடல்நஞ்சு - பயிர்களை சாப்பிடும் பூச்சிகளின் உள்ளே ஊடுருவிச்சென்று அழிக்கிறது,
ஊடுருவும்நஞ்சு - தோல் வழியே ஊடுருவி பூச்சிகளைக் கொல்கிறது,
நரம்புநஞ்சு - பூச்சிகளின் நரம்பு மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது,
புகைநஞ்சு - பூச்சிகளின் மீது புகையாக தெளிக்கப்படுகிறது.
இந்த ஐந்துவகை நஞ்சுகளும் அபாயமானவையே! மேலும், புதியவகை பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்வதற்காக பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளும் தற்போது செய்யப்படுகிறது.
பூச்சிகளின் மீது பூச்சிக்கொல்லிகள் ஏற்படுத்தும் தாக்கம்
மகரந்தச்சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு
இந்த நஞ்சுகளால் தேனீக்களும் பாதிக்கப்படுகிறது, தேனீ அது செல்லும் பாதையை மறந்து விடுகிறது. தேன்கூட்டிற்கு அடையாளம் கண்டு செல்லமுடியாமல் வழிமாறிச் சென்று விடுகின்றன. தேனும் சேகரிப்பதில்லை.
அயல் மகரந்தச்சேர்க்கை
ஒரு செடியின் பூவில் இருந்து மகரந்தத்தூள்கள், அடுத்த செடியின் பூக்களில் உள்ள சூலக முடியில் விழும்போது மட்டுமே பூக்கள் காய்களாக மாறும், இந்த செயல்முறை அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படுகிறது. இந்த அயல் மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகள் மிகபெரிய பங்களிப்பை செய்கிறது. தேனீகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் சில வண்டுகள் மிக முக்கிய பங்குவகிக்கிறது.
ஒரு மலரில் தேனைப்பருகும்போது மகரந்தங்களை அதன் கால்மேல் வைத்திருக்கும் பூச்சிகள் அடுத்தடுத்த செடிகளுக்கு செல்லும்போது சேகரித்த மகரந்தங்களை உதிர்க்கிறது. இதன்மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்களில் இருந்து காய்கள் காய்க்கின்றன. பெரும்பாலான காய்கறிப் பயிர்களில் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற்றே காய்கள் காய்க்கின்றன.
மகரந்தச்சேர்க்கை நடைபெறவில்லை என்றால் பூக்கள் காய்க்காமல் அப்படியே உதிர்ந்துவிடும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது இத்தகைய நன்மைசெய்யும் பூச்சிகளும் அதிகமாக பாதிப்பதால் மகரந்தச்சேர்க்கைக்கு தேவையான பூச்சிகள் இருப்பதில்லை.
இறைவிழுங்கிகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு
நன்மைசெய்யும் பூச்சிகள் மறைந்து வாழாது, அவை வெளிப்படையாக சுற்றித்திரிபவை, நாம் அடிக்கும் பூச்சிக்கொல்லிகள் முதலில் நன்மைசெய்யும் பூச்சிகளையே அழிக்கிறது.
இவ்விதம் நன்மைசெய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் அடுத்தபருவத்தில் தீமைசெய்யும் பூச்சிகளை இயற்கையாக கட்டுப்படுத்த நன்மைசெய்யும் பூச்சிகள் இல்லாததால், தீமைசெய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தீமைசெய்யும் பூச்சிகளின் தற்காப்புத்திறன்
தீமைசெய்யும் பூச்சிகள் இலைகளை மடக்கிக்கொண்டோ, அல்லது இலைகளை சுருட்டிக்கொண்டோ, இலைகளின் பின்புறமாகவோ மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன இதனால் பூச்சிக்கொல்லிகள் இதன்மீது படுவதில்லை.
பூச்சிகள், பூச்சிமருந்துகளை தாங்கக்கூடிய எதிர்ப்புதிறனை குறுகியகாலத்தில் ஏற்படுத்திக் கொள்கிறது. ஏனெனில் பூச்சிகளின் இனப்பெருக்க காலம் மிகக்குறைவு, இதனால் அடுத்தடுத்த தலைமுறையில் பிறக்கும் பூச்சிகள் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறனுடனே பிறக்கின்றன.
பூச்சிமருந்து சாப்பிட்டு இறக்கும் நிலையில் உள்ள பூச்சிகள் இடும் முட்டையிலிருந்து வரும் இளம்பூச்சிகள் பூச்சிமருந்துகளால் பாதிக்கப்படாமல் எதிர்ப்புத்திறனைப் பெற்றிருக்கும்.
புழுக்களுக்கு தோலை உறித்துக்கொள்ளும் திறன் இருப்பதால் பூச்சிமருந்துபட்ட தோலை உடனே உறித்து விடுகின்றன. புழுக்கள் சாப்பிடும் இலை தழைகளில் 96 சதவீதம் கழிவாக வெளியேற்றப்படுவதால், கழிவுடன் பூச்சிமருந்துகளையும் சேர்த்து வெளியேற்றி விடுகிறது.
இவ்விதம் பூச்சிகள் ஒவ்வொரு பூச்சிகொல்லிகளுக்கும் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொள்வதால் அடுத்தடுத்து புதியவகை பூச்சிக்கொல்லிகள் உருவாக்கப்படுகின்றன.
பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளில் உள்ள அபாய குறியீடுகள்
பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளின் மேல் "இந்த பூச்சிக்கொல்லியை காய்கறிகளுக்கு பயன்படுத்தக்கூடாது" (Band for vegetables) என்று அச்சிடப்பட்டிருக்கும். பொதுவாக விவசாயிகள் இந்த எச்சரிக்கையை எல்லாம் கவனிக்காமல் அவற்றை காய்கறிப் பயிர்களுக்கு அடிக்கிறார்கள்.
பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளில் ஒரு முக்கோண அடையாளம் இருக்கும். அதில் அச்சிட்டுள்ள வண்ணங்கள் பூச்சிக்கொல்லிகள் நச்சுத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. சிவப்பு > மஞ்சள் > நீலம் > பச்சை போன்ற வண்ணங்களில் முக்கோணங்கள் அச்சிடப்பட்டிருக்கும். கீழ்கண்ட பூச்சிக்கொல்லிகள் இதற்கு உதாரணமாகும்.
சிவப்பு - கடும் விஷம் - காப்போபியூரான் (Carbofuran)
மஞ்சள் - அதிக விஷம் - டைமீதொயேட்(Dimethoate)
நீலம் - ஓரளவு விஷம் - கேப்டான் (Captan)
பச்சை - சிறிது விஷம் - மேங்கோசெப் (Mancozeb)
இதில் சிவப்பு வண்ணமிருந்தால் அது மிகக் கடுமையான விஷம் என்றும் பச்சை இருந்தால் சற்றுக் குறைவான விஷம் என்றும் அர்த்தமாகும். இந்தியாவில் எண்டோசல்பானுக்கு மஞ்சள் நிற அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது.
LD50 (leathal dose 50%)
ஒரு பூச்சிக்கொல்லி எந்த அளவு பயன்படுத்தும்போது 50 சதவீத பூச்சிகளைக் கொல்கிறதோ அது LD50 எனப்படுகிறது. இந்த அளவீட்டை பயன்படுத்தியே மேற்கண்ட வண்ணங்கள் பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளில் அச்சிடப்படுகிறது. ஒரு பூச்சிக்கொல்லி வயலில் அடிக்கப்பட்டபின் அதன் LD50 அளவு முற்றிலும் குறைவதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகும்.
பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...