பாதை முடிகிறது பயணம் தொடர்கிறது!
பாதை முடிகிறது பயணம் தொடர்கிறது!
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 17
கடும் சவால்கள் நிறைந்த பயணமாக அமைந்த கோமுக் பயணத்தை பற்றியும், வழிநெடுகில் தான் அனுபவித்த மறக்கமுடியாத தருணங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், இமாலயப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சில முக்கிய பயணக்குறிப்புகளைத் தந்து தொடரை நிறைவு செய்கிறார். மயங்கி விழுந்துகிடந்த மனிதர், கோமுக்கை அடைந்தது எப்படி சாத்தியமானது என்பதைத் தொடர்ந்து படித்தறியுங்கள்!
திரு. அஜயன் பாலா:
இமாலயப் பயணத்திலும் சரி, என் வாழ்க்கைப் பயணத்திலும் சரி, இந்த நாள் எனக்குள் பல மாறுதல்களை அகமாற்றங்களை உருவாக்கிய நாள்.
இந்த நாளில் நான் உணர்ந்த அனுபவத்தை உங்களிடம் எவ்வளவுதான் பகிர்ந்து கொண்டாலும் அது நூறில், ஆயிரத்தில் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். மனைவியிடம் கூட முழுவதையும் சொல்லாதீர்கள் என ஒரு சொல்வழக்கு இருக்கிறது.
நிறையப் பேசுபவன் உட்பொருளை இழக்கிறான் என்பார்கள். இத்தொடரில் பல பகுதிகளில் நான் சொல்லாமல் விட்ட அல்லது மௌனமாக கடந்து சென்ற பகுதிகள்தான் அதிமுக்கியமாவை. அந்த பகுதிகளை வாசிக்க லெக்சிகன் டிக்ஷ்னரி எதுவும் பயன்படாது.
முழுவதுமாக தன்னை இழப்பவர்கள் அப்பகுதிகளின் இரகசியங்களை உட்கிரகிக்க முடியும்.
அல்லது பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலோடு தன்னை சங்கமிக்க விழைவு கொள்பவர்கள், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் படிக்கட்டுகளில் மனதால் ஏறிச்செல்ல முடியும்.
இதோ, நான் கோமுக் செல்லும் மலைப்பாதையில் விழுந்து கிடக்கிறேன். மனம் அளவுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை, கைவிட்டுவிட்டது! பிரம்மாண்டமான இந்த மலைப்பகுதியில் இந்த பாதையில் நான் மட்டும் ஒரு மர நிழலில் விழுந்துகிடக்கிறேன், என்னுடன் வந்தவர்கள் பலர் எனக்கு முன்பாக பல கிலோமீட்டர்கள் கடந்துவிட்டனர். எனக்குப் பின்னால் வந்தவர்கள் இனி வரக்கூடும். இப்போதைக்கு இங்கு நான் மட்டுமே கீழே விழுந்துகிடக்கிறேன். இரண்டு பக்கமும் திட்டுத்திட்டாக பனி போர்த்திய மலைகள், மலைகளுக்கு நடுவே கோமுக்கிலிருந்து கங்கோத்ரிக்கு ஓடும் கங்கா நதி. மேலே பளிச் ஆகாயம். நிர்மலமான வானத்தில் நகரும் தும்பைப்பூ மேகக் கூட்டம்.
இதையெல்லாம் இப்போது உங்களுக்காக எழுதுகிறேனே தவிர, உண்மையில் அப்போது நான் கண்கள் மூடி சுயநினைவற்றவனாக கவிழ்ந்து கிடந்தேன்.
தோளை யாரோ உசுப்பினர். குரல் எங்கோ ஆழத்தில் கேட்கிறது. அண்ணா! பாலா அண்ணா! நான் எழுந்தபோது, என்முன் ஸ்வாமி நாத்தி. தண்ணீர் கொடுத்து என் லக்கேஜை துரையண்ணா வாங்கிக் கொண்டார். ஆனந்தபாபு களைப்பைப் போக்க குளுகோசை கொடுத்தார். அவர்கள் பேக் அப் டீம். எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதி ஆட்களாய் மலையேற்றம் செய்து, வந்து என்னை போல கிடப்பவர்களுக்கு உதவி செய்து அழைத்து வருபவர்கள்.
ஸ்வாமி நாத்தி குதிரை வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டார்.
எங்கிருந்து எனக்குள் அந்த பதில் வந்ததோ தெரியவில்லை. வேண்டாம் நடக்கிறேன் என்றேன். இன்னும் பதினான்கு கி.மீ. மலையில் ஏற வேண்டும் முடியுமா என அவர்கள் கேட்க நிச்சயம் முடியும் என நான் கூற...
உங்களால் தாராளமாக முடியும் எனக்கூறி கை நீட்டினார் ஸ்வாமி நாத்தி.
எழுந்து நின்றேன் எங்கிருந்தோ வந்தது புது ஆற்றல். எனக்குள் எப்படி வந்ததோ அப்படி ஒரு உற்சாகம். உண்மையில் நான் ஏறவில்லை. என்னை ஒரு காற்று கைப்பிடித்து வழிநடத்தி ஏற்றிச் செல்வதைப் போல உணர்ந்தேன். அப்படி ஒரு வேகம். எங்கேயும் வழியில் இளைப்பாறக்கூடாது. அதுதான் உடல்சோர்வை அதிகம் கூட்டுகிறது. ஒரே மூச்சாக இன்னும் உள்ள பத்து கி.மீ. நடந்துவிட்டால் பின் போஜ்வாசா வந்துவிடும். போஜ்வாசாவில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Subscribe
உடலில் போர்த்தியிருந்த ஜெர்கின் ஸ்வெட்டரை கழற்றி பையில் வைத்துக்கொண்டேன். ஊன்று குச்சி அழுத்தும் ஒவ்வொரு முறையும் சத்குரு சொன்னதை போல ஷம்போ! என உச்சரித்தேன். வழியில் மலையைப் பிளந்தபடி கங்கையில் கலக்க விழையும் கிளை நதிகள்.
அவற்றைத் தாண்டுவது மட்டும் கொஞ்சம் சிரமம். இடையில் இருக்கும் கட்டைப் பாலத்தை கவனமாகப் பார்த்து கடக்க வேண்டும்.
இப்போது வரும் வழியில் பலரும் என்னைப் போல பாதியில் களைப்புடன் அமர்ந்தும், படுத்தும் கிடக்க அவர்களுக்கு உதவி செய்து உடன் அழைத்துக் கொண்டோம்.
மிக ஆபத்தான வழிகளில் கவனமாய் கம்பை ஊன்றி கடந்தோம். ஆங்கிலப் படங்களில் காணப்படுவது போல த்ரில்லான திருப்பங்கள், வளைவுகள் குறுகலான சரிவுகள். ஒரு கட்டத்துக்குப் பின் தொலைவில் உயரமான பனிமலைகள் எங்களை சூழத் துவங்கின. இந்தப் பனிமலைகள் உருகிதான் கோமுக் வழியாக கங்கை நதி இதோ கீழே பெருக்கெடுக்கிறது.
இத்தனை பரிசுத்தமான இதயம் நிரம்பும் அற்புதமான காற்று வேறெங்கும் அனுபவிக்க முடியாததாக இருந்தது. உடலின் அத்தனை நோய்களும் காணாமல் போகச் செய்யும் இதயத்தையும், மனதையும் உயரத்தில் நிறுத்தும் இந்த அற்புதக் காற்று மனதளவில் இயல்பாகவே உயர்ந்த ஆன்மீக நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதை உணர்ந்தேன். இங்கு எங்கும் பறவைகளோ, இதர உயிரினங்களோ எதுவும் இல்லை. புழு பூச்சிகளோ, எதுவும் இல்லை. நேரடியாக பனிக்கட்டி உருகிப் பெருக்கெடுத்து, ஆறு ஓடிவருவதால் ஆற்றிலும் உயிரினங்கள் இல்லை. ஒருவேளை அதில் இருந்திருந்தால் பறவைகளும் இன்னப்பிற உயிரினங்களும் இங்கே சூழ்ந்திருக்கும். இவையெதுவும் இல்லாத காரணத்தாலேயே இங்கு பெரும் மௌனம் சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் ஆங்காங்கு ஆடுகள் மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கிறது.
எனக்கு முன்னால் வேகமாக கடந்த பலரும் ஆங்காங்கு அமர்ந்திருந்தனர். அவர்களைக் கடந்தபடி வழியில் இளைப்பாறாமல் ஏறிக்கொண்டிருந்தேன். எட்டாவது கி.மீட்டர் வந்துவிட்டேன். இன்னும் இரண்டு கி.மீட்டர்கள் மட்டும்தான். ஆனால் உடம்பு ஒரு பக்கம் இழுத்தது. கொஞ்சம் உட்கார்ந்துவிட்டு, நண்பர் கொடுத்த தண்ணீரையும் பிஸ்கெட்டையும் உட்கொண்டு பின் மீண்டும் பயணத்தைத் துவக்கிக் கொண்டேன். காலையில் புறப்பட்ட நாங்கள் ஒருவழியாக நான்கு மணிக்கு போஜ்வாசா அடைந்தோம். போஜ்வாசா சுற்றிலும் பனிமலைகளுக்கு நடுவே அமைந்த சமதளபிரதேசம்.
கோமுக் இங்கிருந்து நான்கு கி.மீ.தான். அங்கு யாத்ரீகர்களுக்காக டெண்ட்கள் போடப்பட்ட விடுதி இருந்தது.
தொலைவில் அதனைக் கண்டதும் உள்ளம் அளப்பரிய மகிழ்ச்சி. பெரிய சாதனையை எட்டியதுபோல ஆனந்தம். எங்களுக்கு முன்பே வந்த பலரும் அங்கு முன்பே தயாரித்து வைக்கப்பட்ட உணவை அருந்தி அருகில் போடப்பட்டிருந்த டெண்டுகளில் படுக்கையைப் போட்டனர். இனிமேல் போனால் இருட்டிவிடும், பாதை தடுமாறக்கூடும் என்ற காரணத்தால் இரவு இங்கேயே தங்கி நாளை காலை கோமுக் செல்ல முடிவெடுக்கப்பட்டது. மெல்ல இருட்டத் துவங்கியபின் கடும் குளிர் உடல்கிடுகிடுங்க.
கேம்ப்பயர் ஏற்றப்பட்டு சுற்றி அமர்ந்து பலரும் பாடல்கள் பாடத் துவங்கினர். இரவு என்னோடு ஐந்து நண்பர்களுக்கு சேர்ந்து சிறு குடில் கங்கைக்கு மிக அருகே ஒதுக்கப்பட்டது. நாளை காலை எழுந்து கோமுக்கை தரிசிக்கப் போகும் ஆவலில் அனைவரும் சீக்கிரமாக உறங்கப் போனோம்.
நள்ளிரவு திடுமென தூக்கம் கலைந்தது. எதுவோ என்னை போர்வையிலிருந்து எழுப்பியது. சுற்றிலும் பார்த்தேன். அனைவரும் உறங்கி கிடக்க அருகில் கங்கையின் சப்தம் மட்டும் சலசலவென என்னோடு பேசுவதைப் போல இருந்தது. என்னை வந்து பார்க்கும்படி அது அழைப்பது போலிருக்க.. குளிர் குலைநடுக்கம் உண்டாக்கினாலும் துணிந்து எழுந்து வெளியே வந்தேன். அடடா! இத்தனை அழகா.. ஊ.. என கூச்சலிட்டு அனைவரையும் எழுப்பி பாருங்கள் மனிதர்களே இயற்கையின் பேரழகை எனக் கத்த வேண்டும் போலிருந்தது. என்னைச் சுற்றி பிரகாசமான பனிமலைகள், மேலிருந்து கீழே சரியும் வானில் நட்டநடுவே பளிங்கு நிலவு பிரகாசிக்க, உடன் நட்சத்திரங்கள். நிலவின் பிரதிபலிப்புத்தான் வெந்நீர் மலைகளின் நீலபிரகாசத்துக்குக் காரணம். தொலைவிலிருந்து தரையில் என்னை நோக்கியப்படி பெருக்கெடுத்து வரும் கங்கையிலும் நிலவின் முழு பிரதிபலிப்பு சுழித்து பெருக்கெடுத்து ஓடும் கங்கையின் அருகே சென்றேன். கடுமையான குளிர் என் பற்களை கிடுகிடுக்க வைத்தது. க்ளவுசைக் கழற்றி துணிந்து கை வைத்தேன். உடல் மீண்டும் நேற்று மாலை அனுபவித்த அந்த பேரின்பத்தை அனுபவித்தது.
மறுநாள் காலை கருக்கலில் எழுந்து வரிசையாக போஜ்வாசாவிலிருந்து புறப்பட்டு கோமுக் நோக்கி நடந்தோம். இதுவரை நடந்ததை விட மிகக் கடுமையான பாதை என்றார்கள். குதிரைகள் கூட வருவதில்லை. மலை ஏறத் துவங்கினோம். பனிமலையை நெருங்கிக் கொண்டிருந்தோம். இதோ வரும் என நடந்தபோது பாதைதான் நீண்டுகொண்டே இருந்ததே தவிர கோமுக் இன்னும் வந்தபாடில்லை. மூச்சு கடுமையாக இழுத்தது.
உடல் மீண்டும் சிரமப்பட்டது, பலர் உட்கார்ந்துவிட்டனர். நான், என்னால் முடியவில்லை. ஆனாலும் இழுத்துக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தேன். ஒரு கடுமையான பாறைமீது ஏறிப் பார்த்தபோது வாயடைத்து, விக்கித்து நின்றேன். என் கண்களுக்கு எதிரே எதை இத்தனை நாளும் ஏங்கி அதன் பொருட்டு சிரமங்களை அனுபவித்தேனோ அக்காட்சி.
கோமுக் பனிமலையின் அடியில் பசுவின் முகம் போன்ற அதன் வாய் போன்ற அகன்ற அகழியிலிருந்து, பிரம்மாண்டமாய் கங்கை பனிக்கட்டிகள் பாளம் பாளமாக சரிந்து நீராக கொட்டிக் கொண்டிருந்தாள்.
பிரபஞ்சத்திற்கே மூலத்தாயாக உயிர்களின் மூலப்பிறப்பிடம் போல காட்சி தந்து கொண்டிருக்கிறாள்.
அனைவரும் அதன் அருகே சென்று தரிசிக்க, பூஜை செய்ய.. அதன் அகழியினுள் எட்டிப்பார்க்கச் செல்ல.. நான் மட்டும் அதற்கு நேர் எதிராக இருந்த பாறை மீது சம்மணமிட்டு அமர்ந்து அதன் முழு தோற்றத்தையும் காணத் துவங்கினேன்.
வேறெங்கும் அனுபவிக்க முடியாத ஒரு ஆற்றலின் இருப்பை உணர்கிறேன்.
சிவா எனும் பிரக்ஞையை அதை உச்சரிக்கும்போது உண்டாகும் அதிர்வை முழுமையாக அங்கு உணர முடிந்தது.
சட்டென என் உள்ளத்தில் பேரன்பும் கருணையுமாய் நிரம்பிவழிய கண்ணீர் தானாக கொட்டத்துவங்கியது.
இந்த இடத்தை அடைவேனா, என்னால் இங்கு வந்து கோமுக்கை பார்க்க முடியுமா என்ற நிலை விலகி கடைசியாக இந்த இடத்தை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்புக்காக இயற்கையின் மீதான என் நன்றியறிதலாக இது இருக்கலாம். அல்லது உடல் இதுவரைப் பட்ட துன்பத்திலிருந்து விடுதலை பெற்ற காரணத்தால் இருக்கலாம். அல்லது இந்தச் சூழலே நானாக மாறி வானமும் பனிமலைகளும் காற்றும், வெளியும் நானாக உணர வைத்த காரணத்தாலோ இருக்கலாம். ஆனாலும் கண்ணீர் தாரைதாரையாக கொட்டிக்கொண்டே இருந்தது.
கண்ணீர் முழுவதுமாக நின்றபோது, நான் என்பது இல்லாத அல்லது அந்த இயற்கையான சூழலே நானாக மாறி நிற்பது போன்ற ஒரு அனுபவத்தை உணர முடிந்தது.
பலப்பிறவிகள் அனைத்தையும் ஒரு மணித்துளியில் அனுபவிக்க முடிந்த உணர்வு அது வாழ்வின் பெரும்பேறான கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை நல்கிய சத்குருவை குருவாக வணங்கி மனதால் தொழுதபடி கண்களை மூடினேன். உள்ளத்தில் பல மலைகள் விரியத்துவங்க, அதில் பறவையாக பறக்கத் துவங்கினேன்.
பயணம் தொடர்கிறது.
நன்றி.
பயணக்குறிப்பு 1:
இமயமலை நீங்கள் செல்வதாக இருந்தால் சுமையை கூடுமானவரை இங்கேயே குறைவாக எடுத்துச் செல்வது பயணத்தை சுலபமாக்கும். அவசியமான குளிர் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் தவிர்த்து அனாவசியமான சுமைகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அங்கு பெரும்பாலும் ஸ்வெட்டரில் இருக்க போவதால் பழைய உடைகளை எடுத்துச் சென்றால் அணிந்துவிட்டு அங்கேயே யாருக்காவது தானம் கொடுத்துவிட்டு வரலாம். அது அங்குள்ளோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். திரும்பும் வழியில் சுமையை குறைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
பயணக்குறிப்பு 2:
இமயமலைக்கு பயணிப்பவர்கள் பயணத்துக்கு அவசியம் தேவைப்படும் குளிர் பாதுகாப்பு பொருட்களான ஸ்வெட்டர், ஜெர்கின், கையுறை, காலுறை, மங்கி கேப் மலையேறும் ஷுக்கள் போன்றவற்றை இங்கிருந்தே வாங்கி, தேவையில்லாத சுமைகளை ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை. காரணம் இமயமலை அடிவாரமான ஹரித்துவாரிலேயே அனைத்தும் கிடைக்கும். மேலும் இங்கு நாம் வாங்கும் விலையைவிட அவை குறைவான விலையிலும், தரமாகவும் இருக்கும்.
பயணக்குறிப்பு 3:
கௌரிக்குண்டிலிருந்து கேதார்நாத் செல்ல குதிரை டோலி ஆகியவற்றுடன் ஹெலிகாப்டர் வசதிகளும் இப்போது உள்ளன. மேலே ஏற மட்டும் 3,600 ரூபாய் இறங்க 2000 ரூபாய். இப்படி ஹெலிகாப்டர் மூலம் பயணிப்பவர்கள் குறைந்த உடைகொண்ட சுமைகளை மட்டுமே ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஏழே நிமிடத்தில் மலை உச்சியை அடைந்துவிடலாம். குறிப்பிட்ட எடைகுள்ளாக இருக்கும் ஐந்து பேர் மட்டுமே ஒரு வழிப் பயணத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படிச் செல்ல விருப்பமுடையவர்கள் கண்டிப்பாக கையில் அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஈஷா சேக்ரட் வாக்ஸ் (Isha scared walks)
கயிலாயம், இமாலயம் மற்றும் வாரணாசி, ஆன்மீக சாதகர்களுக்கு மிக முக்கியமான புனிதத்தலமாகத் திகழ்கிறது. இத்தலங்கள், காலம் காலமாக எண்ணிலடங்கா ஞானிகளுக்கும், யோகிகளுக்கும் வசிப்பிடமாகத் திகழ்வதால் அருள் நிரம்பிய தலமாகவும் பல்வேறு விதமான ஆன்மீகமுறைகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. இறைநிலையை அடைவதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆன்மீக சாதகர்களும் பக்தர்களும், இப்புனிதத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர்.
ஈஷா சேக்ரட் வாக்ஸ் (Isha scared walks) சத்குருவின் அருளோடும் வழிகாட்டுதலுடனும், இப்புனிதத்தலங்களுக்கு, தியான அன்பர்களை அழைத்துச் சென்று வருகிறது.
இத்தகைய ஆன்மீக செயல்பாடுகள் நிறைந்த புனிதத்தலங்களின் தனித்தன்மையை உணர்வதற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கு வாய்ப்பாகவும், இத்திருத்தலங்களில் தியானங்கள், சத்சங்கங்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் சில எளிய யோகப் பயிற்சிகளை ஈஷா சேக்ரட் வாக்ஸ் வழங்குகிறது. இவை விழிப்புணர்வின் உச்சநிலையை நம் அனுபவத்தில் கொண்டு வந்து, ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த இப்புனிதத்தலங்களின் சக்தியையும், ஞானிகளின் அருளையும் உணர்வதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.
"ஈஷா சேக்ரட் வாக்ஸ்', பயிற்சி பெற்ற ஈஷா ஆசிரியர்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலம், பங்கேற்பவர்களின் அனைத்து தேவைகளையும், அக்கறையோடு கவனித்து மிக நல்ல அனுபவங்களைத் தரும்விதமாக இந்த நிகழ்ச்சியை நிகழ்த்துகிறது. மலைச்சிகரங்களில் பொதுவாக உடல் நிலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தகுந்த உபகரணங்களுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஒருவரும் இக்குழுவில் இடம் பெற்றிருப்பார்.
தொடர்புக்கு:
இ-மெயில்: tn@sacredwalks.org
தொலைபேசி: 91 9488 111 333
இணையதளம்: www.sacredwalks.org