நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 7

நமது நாட்டில் விளையாவிட்டாலும், பேரீச்சம் பழங்கள் அதன் அபார ருசியாலும், இனிப்புச் சுவையினாலும் நம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஆனால், பேரீச்சம் பழத்தை எப்போதாவது சாப்பிட்டால் போதுமா? பேரீச்சை தரும் பலன்களை இப்பதிவினைப் படித்து தெரிந்துகொண்டால், நீங்கள் தினசரி அதனை உண்ண ஆர்வம் காட்டுவீர்கள்!

இஸ்லாமியர்களின் முக்கிய உணவு

இஸ்லாமியரின் புராணக் கதைப்படி, ஆதாமின் முக்கிய உணவாக இறைவன் பேரீச்சம்பழத்தைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் புனிதப் புத்தகமான குரானில், முகம்மது நபி அவர்களின் விருப்பமான பழம் பேரீச்சை என்றும், அவரது இல்லம் பேரீச்சை மரத்தால் கட்டப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்தப் பழத்தைப் புனிதமாகக் கருதுவதால் ரம்ஜான் நாட்களில் நோன்பு இருந்த பிறகு, விரதத்தை ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு முடிப்பார்கள்.

இன்று நம்மிடையே பிரபலமாக அனைவராலும் சாப்பிடப்படும் வகை ‘டெக்லெட் நூர்’ என்று அழைக்கப்படும் பேரீச்சம் பழமாகும்.

பேரீச்சம்பழத்தில் பல வகைகள் உள்ளன. சில மிக இனிப்பாக, சில இனிப்பு குறைவாக, சில மிருதுவாக, மற்றும் சில கெட்டியாக, சில எளிதில் வீணாகிவிடக்கூடிய என்று பல வகைகள் உள்ளன. மிகவும் உலர்ந்த வகை பேரீச்சையை மாவாக இடித்து உணவு சமைப்பது பாலைவனத்தில் வாழ்பவர்களின் பழக்கம். இன்று நம்மிடையே பிரபலமாக அனைவராலும் சாப்பிடப்படும் வகை ‘டெக்லெட் நூர்’ என்று அழைக்கப்படும் பேரீச்சம் பழமாகும்.

பேரீச்சையில் உள்ள சத்துக்கள்

இன்றைய விஞ்ஞான முடிவுகளின்படி பேரீச்சை மிக ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. இதில் சர்க்கரை, கொழுப்பு, புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன. பேரீச்சம்பழம், நார்ச்சத்து நிறைந்த ஒரு பழம். நவீன மருத்துவத்தின்படி வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை பேரீச்சம்பழம் தடுக்க வல்லது. மேற்கூறிய பொருட்களைத் தவிர, பேரீச்சையில் எண்ணெய்ச் சத்து, கால்சியம், சல்ஃபர், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், செப்பு, மேங்கனிசியம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருட்கள் உள்ளன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அரேபிய மக்கள், பேரீச்சையில் பால், தயிர், பிரெட், வெண்ணெய் மற்றும் மீனுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். இந்த கலவையினால் சுவை கிடைப்பதோடு உடலுக்கும் மனதுக்கும் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்கின்றன. விரதத்தை பேரீச்சம்பழம் சாப்பிட்டு முடிக்கச் சொல்வது ஏன்? விரதமிருக்கும்போது, வயிற்றில் பசி அதிகமாக ஏற்பட்டிருக்கும். பசி எப்போது ஏற்படுகிறது? உடலில் சர்க்கரை அளவு குறையும்போது பசி உண்டாகிறது. அந்தச் சமயத்தில் ஒரு பேரீச்சை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை உடல் ஏற்று, அதீதமான பசியைக் குறைக்கும். இதனால் விரதம் முடிந்தபின் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட முடியாது.

மருத்துவ குணம்

பேரீச்சம்பழத்துக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் உண்டு. கருவைச் சுமந்திருக்கும் பெண்ணின் கருப்பை தசைகளை உறுதிபடச் செய்யும் சக்தி பேரீச்சைக்கு உண்டு. இதனைக் கர்ப்பிணிகள் பேறு காலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவத்தின்போது தசைகள் எளிதில் தளர்ந்து கொடுக்கும். பிள்ளை பிறந்த பிறகும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு ஏற்றதாகும். குழந்தை பிறந்த பிறகு சில தாய்மார்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். அதை நீக்கவல்லது பேரீச்சை. அதோடு இந்த பழத்தைச் சாப்பிட்டு தாய்ப்பால் அளித்தால், குழந்தைகள் நோய்களைத் தடுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்று வளர்வார்கள்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது.

குழந்தைகளுக்கு எலும்பில் வலு இல்லாதபோது, ரிக்கெட்ஸ் என்ற நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு எலும்பில் வலு குறையும்போது, ஆஸ்டியோபொரோஸிஸ் ஏற்படும். உடலில் கால்சியம் அளவு குறைவதே இதற்குக் காரணம். பேரீச்சையில் கால்சியம் இருப்பதால், இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பேரீச்சம்பழம் நம் கண்கள் பராமரிப்பிலும் உதவுகிறது. மாலைக் கண் நோய் வருவதை இதைச் சாப்பிடுவதால் தடுக்க முடியும். நம் உடலில் உள்ள தசைகள் உறுதி பெறவும் பேரீச்சை உதவுகிறது. இதனால்தான் இஸ்லாமிய போர் வீரர்கள், யுத்த காலங்களில் பைகளில் பேரீச்சம் பழம் நிரப்பிச் செல்வார்கள்.

பேரீச்சம்பழம் உடலுக்கு ஒரு சிறந்த டானிக் ஆகும். எளிதில் ஜீரணமடைந்து உடலில் ஏற்பட்டுள்ள சோர்வை நீக்கி, உடலுக்குத் தெம்பை அளிக்கவும் உதவுகிறது. உடல்நலம் குன்றிப்போனவர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற பாலில் பேரீச்சம்பழம் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் நிறைய ஏற்படும். இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவை.

யாருக்கெல்லாம் இது மருந்து?

பேரீச்சம்பழம் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கை கண்ட மருந்தாகும். முதல் நாள் இரவே சிறிதளவு நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்துச் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை அறவே நீக்கும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள், அதிலிருந்து மீண்டு வர பேரீச்சை உதவுகிறது. அவர்கள் குடிக்கும் நீரில் பேரீச்சம் பழத்தை ஊறப்போட்டுவிட்டால் மெதுவாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள். இருதயம் வலுவிழந்திருப்போர் வாரம் இருமுறை இரவே தண்ணிரில் பேரீச்சையை ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அதனை கசக்கிப் பிழிந்து ஊறவைத்த நீரோடு சேர்த்துச் சாப்பிட, இருதயம் வலுவடையும்.

பேரீச்சம்பழம் இத்தனை நற்குணங்களைப் பெற்றிருப்பதோடு மலிவாகக் கிடைக்கும் ஒரு பழமும்கூட. அதனைச் சுத்தப்படுத்தி, நல்ல முறையில் விற்பனை செய்பவர்களிடம் வாங்கிச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இந்தப் பழத்துக்கு இயல்பாக உள்ள பிசுபிசுப்புத் தன்மையினால் காற்றில் உள்ள மாசினையும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளும் குணம் கொண்டது. எனவே, தரமான பேரீச்சைதானா எனப் பார்த்து வாங்குங்கள்... பயனடையுங்கள்!

அடுத்த வாரம்...

மஞ்சள்-வேம்பு, புற்றுநோயைத் தடுக்குமா? சத்குரு எடுத்துரைக்கிறார்... காத்திருங்கள் அடுத்த வாரம் வரை!

நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்