பச்சை மலைகளை அடுத்து வந்த முதல் பனிச்சிகரம்
பத்ரிநாத் நோக்கி செல்லும் வழியில் தனக்கு மீண்டும் கிடைத்த ஜன்னல் சீட் பற்றியும் வழியில் தாங்கள் கண்ட காட்சிகளின் அழகியல் குறித்தும் விவரிக்கும் எழுத்தாளர், பத்ரிநாத் கோயிலுக்குள் நுழையும் முன் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஐதீகம் என்ன என்பது பற்றியும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்!
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 9
பத்ரிநாத் நோக்கி செல்லும் வழியில் தனக்கு மீண்டும் கிடைத்த ஜன்னல் சீட் பற்றியும் வழியில் தாங்கள் கண்ட காட்சிகளின் அழகியல் குறித்தும் விவரிக்கும் எழுத்தாளர், பத்ரிநாத் கோயிலுக்குள் நுழையும் முன் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஐதீகம் என்ன என்பது பற்றியும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்!
திரு. அஜயன் பாலா:
பேருந்தின் வழியாக மலைகளை கடந்தபடி பயணிக்கிறேன்.
முன்பு பார்த்த அதே மலைகள் இப்போது மிகவும் அர்த்தம் பொதிந்தனவாகக் காணப்படுகின்றன. அவற்றின் மௌனங்களில் எல்லா காலத்துக்குமான உண்மையை இப்போது உணர முடிகிறது.
நானும் கூட இப்போது மிகவும் மாறியிருக்கிறேன்.
என் மாற்றங்களை நானே உணர முடிகிறது.
கி.மு. கி.பி. போல கே.மு. கே.பி என என்னை அளவிடமுடியும் கேதாருக்கு முன்.. கேதாருக்குப் பின். அத்தகைய அழுத்தமான பாதிப்பை உண்டாக்கிய கேதார்நாத்திலிருந்து நேற்று மாலை கௌரிக்குண்ட் இறங்கி தயாராகக் காத்திருந்த பேருந்தில் ஏறி மீண்டும் குப்தகாசிக்குத் திரும்பி முன்பு தங்கிய அதே விடுதிக்கு திரும்பினோம். ஹெலிகாப்டரில் வந்திருந்தவர்கள் எங்களுக்கு முன்பாக வந்து காத்திருந்தனர். நொடியில் தரையிறங்கிய அதன் அனுபவத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
அன்று இரவு அங்கேயே தங்கினோம். மறுநாள் காலை கருக்கலில் எங்களது அடுத்த இலக்கான பத்ரிநாத் நோக்கி புறப்படத் துவங்கினோம்.
பேருந்து புறப்படுவதற்கு முன் குருபூஜை நிகழ்த்தப்பட்டது. இந்த குருபூஜை என்பது ஈஷாவின் தொண்டர்கள் மற்றும் சீடர்களால் தங்கள் குருவான சத்குருவுக்கு நிகழ்த்தும் குருவணக்கம். இந்நிகழ்வு முடிந்தபின் அனைவரும் தத்தமது பேருந்துகளில் உட்கார ஈரக்காற்றின் புத்துணர்ச்சியுடன் கைகோர்த்தபடி பயணம் பத்ரிநாத் நோக்கி தொடங்கியது.
பேருந்தில் அனைவரும் தத்தமது கேதார்நாத் அனுபவங்களை மிரட்சியும் மருட்சியுமாக பகிர்ந்து கொண்டனர். நான் எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தப்படி பயணிக்கிறேன். எனது அனுபவங்களை யாரிடமாவது வார்த்தையால் சொல்லிவிடமுடியுமா தெரியவில்லை. தந்தையின் அன்பை, தாயின் தொடுதலை, தூங்கும் மழலையினுடைய சிரிப்பின் அழகை இதையெல்லாம் எப்படி வார்த்தைகளால் உணர்த்த முடியும். அதுபோலத்தான் கேதார்நாத் அனுபவங்களும். இங்கு நான் உங்களோடு பகிர்வது கூட வெறும் துணுக்குகளே... நீங்களே நேரடியாக இங்கு வந்து அனுபவிக்கும்போதுதான் உங்களுக்குள் உண்டாகும் உள் அதிர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.
Subscribe
கொஞ்ச நேரத்தில் பேருந்து களைகட்டத் துவங்கியது. தொடர்ந்து பத்து மணிநேரத்துக்கு தொடர் பயணம் செய்தாக வேண்டிய நிலை.
பீப்பில்கோட்டி எனும் இடத்தில் தங்கி மறுநாள் பத்ரிநாத் செல்வதாக ஏற்பாடு. இந்த பயணத்தின் போது யாரும் சோர்ந்து விடாதிருக்க தொடர்ந்து பாடல்களை பாடுவது என முடிவெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக பேருந்தின் முன்புறம் அழைக்கப்பட்டனர். கைதட்டல்களுடன், வெட்கமும், மகிழ்ச்சியுமாய் ஒவ்வொருவராக தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி அசத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் வீடு, தங்கள் ஊர், தான் யார் என்ற நிலைகளை மறந்து மகிழ்ச்சி நிரம்பிய நிலைகளில் காணப்பட்டனர்.
ஆங்காங்கு உண்டான நிலச்சரிவுகளை கடந்து மதிய உணவுக்கு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. நாங்கள் இறங்கியபோது எங்களுக்கான உணவுகள் தயாராக காத்திருந்தன. இதற்கு காரணமான உணவுக்குழு பற்றியும் உங்களிடம் சில வார்த்தைகள் பகிர வேண்டும். அவர்கள் மொத்தமாக ஏழு அல்லது எட்டு பேர்தான் இருப்பர். அவர்களுடன் ஒரு ஜீப் காணப்படும். அதில் உணவு பொருட்களை ஏற்றியபடி எங்களுக்கு முன்பாக விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அரை மணி நேரத்தில் 120 பேருக்கு தேவையான சப்பாத்தி, சாதம், சாம்பார் மற்றும் கூட்டு பொறியல் இத்யாதிகளை ஏற்பாடு செய்வர். நாங்கள் அந்த இடத்துக்கு வந்ததும் பரிமாறிவிட்டு நாங்கள் புறப்பட்டதும் அவர்கள் சாப்பிட்டு எவ்வளவு லேட்டாக புறப்பட்டாலும் மீண்டும் எங்களுக்கு முன்பாக கடந்து செல்வர். நாங்கள் இறங்கும்போது மீண்டும் எங்களுக்கான உணவு அடுத்த இடத்தில் தயாராகக் காத்திருக்கும்.
இப்படியாக அவர்கள் செயல்படுவதற்கு பின் அபார உழைப்பும் சுறுசுறுப்பும் தேவை.
அதேபோல பரிமாறல்களிலும் அவர்களிடம் கனிவு புன்னகை...
அன்று இரவு பீப்பில்கோட்டி எனும் அந்த குட்டி நகருக்குள் நுழைந்தோம். இரவு அங்கிருந்த ஒரு சிறு விடுதிக்குள் பெட்டிகளை இறக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். உடைகளை மாற்றிக் கொண்டு விடுதிக்கு பின்புறமிருந்த சிறிய பின்கட்டுக்கு விரைந்தோம். அங்குதான் உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். விடுதி கட்டிடத்திற்கு பின்புறம் கறுப்பு பூசினார் போல் ஒரே இருட்டு. எவர்சில்வர் தட்டுகளில் ஒன்றை எடுத்து கொஞ்சம் சாதம், சாம்பார், சப்பாத்தி, உடன் ஆப்பிள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்தேன். நீண்ட பயணம் தந்த களைப்பும், பசியும் நொடியில் தட்டை சுத்தமாக்கியது. கைகழுவப் போன இடத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் ஒருவர் கறுப்பு பூசினார் போன்று இருட்டாக இருந்த அந்த இடத்தை நன்றாக பார்க்குமாறு கூறினார். நானும் பார்த்து ஒன்றும் தெரியவில்லை இருட்டாக இருக்கிறது என்றேன். நாளை காலை பாருங்கள் என்றார். மறுநாள் காலை கடுமையான குளிரில் அனைவரும் அவசரமாக புறப்பட்டபோது நான் கவனத்துடன் பின்கட்டுக்கு ஓடினேன். ஆகா! அற்புதமான காட்சி சிறு பள்ளத்தாக்கில் சரிந்து பின் பிரம்மாண்டமாய் உயர்ந்து விரிந்து கிடந்தது பச்சை பசேலென பெருமலை.
ஜன்னல் வழியாக வந்த குளிர்காற்றை தரிசித்தப்படி பத்ரிநாத் நோக்கி எங்கள் பயணத்தை துவக்கினோம். ஒரே இடத்தில் அமராமல் அனைவரும் மாறி மாறித்தான் உட்கார வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் பலர் அதே இடத்தில்தான் உட்கார விரும்பினர். ஆனாலும் எங்கள் பேருந்தின் இன்னொரு தலைவரான ஈஷாவின் மா சாகேதாவும் வலுக்கட்டாயமாக அனைவரையும் இடம் மாற்றி அமர வைத்துக்கொண்டிருந்தார்.
என் ஜன்னல் சீட்டு பறிபோகுமோ என பயந்தேன். நல்ல வேளையாக யாரும் எழுப்பவில்லை. கண்களுக்குள் பல மலைகள் கடந்து சென்று கொண்டிருந்தன. என் கண்கள் முதலில் தென்படும் அந்த வெள்ளை பனிச்சிகரத்தை காண ஏங்கியது. முன்னிரவு நடந்த சத்சங்கத்தில் திரையிடப்பட்ட சத்குருவின் வீடியோவில் இந்த பனிச்சிகரம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த காரணத்தால் அனைவரும் ஜன்னல் பக்கமாக ஆவலுடன் எட்டி பார்த்தப்படி பயணித்தனர். சிலர் கைகளில் கேமராவுடன் ஒவ்வொரு திருப்பத்தின்போதும் அப்படியும் இப்படியுமாக சரிந்தபடி ஆவலுடன் அந்த முதல் பனிச்சிகரத்தைக் காண தவித்தனர். பச்சை மலைகளாகத்தான் ஒவ்வொரு திருப்பத்திலும் வந்து கொண்டிருந்தன. சட்டென ஒரு திருப்பத்தில் தொலைவில் உச்சியில்..... நான் பார்ப்பதற்குள் என் பின்னாலிருந்து ஒரு பெண் குரல் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... அந்த காட்சி தந்த பரவசம் தாளாமல் மகிழ்ச்சி கூச்சலிட்டார். அனைவரும் அங்கே தாவிப்பார்க்க அங்கு உச்சியில் சூரியவெளிச்சத்தை பிரதிபலித்தப்படி முதல் பனிச்சிகரம் எங்கள் கண்முன் தோன்றி மர இலைகளினூடே நகர்ந்து கொண்டிருந்தது. அதுவே கிட்டத்தட்ட ஒரு தரிசனமாகத்தான் இருந்தது. என் வாழ்வின் மறக்க முடியாத காட்சியாக அதனை உள்வாங்கி மனபெட்டியில் இறுக்கமாக பூட்டிக்கொண்டேன்.
பத்ரிநாத்துக்கு காலை 11 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஒரு விடுதியில் மொத்தமாக அறைகளை ஆக்கிரமித்தோம். கோவிலுக்கு செல்பவர்கள் சீக்கிரம் வந்தால் மதியம் இரண்டு மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு இந்தியாவின் கடைசி கிராமம் மானாவுக்குச் சென்று இரவு திரும்பலாம் என கூறியிருந்த காரணத்தால் அனைவரிடமும் ஒரு வேகம். இம்முறை மூன்று படுக்கை கொண்ட அறை என்னுடன் தேனி செந்தில் மற்றும் ட்ரம்மா ஆகியோர் பகிர்ந்தனர். இருபக்கமும் எண்ணற்ற கடைகள் கொண்ட அந்த வீதிகளை கடந்து கோவிலை நோக்கிச் சென்றோம். வழி நெடுக கூட்டம். இமயமலையின் இதர முக்கியத்தலங்களை போல நெடிய பாதயாத்திரை இதற்கு தேவையில்லை. இதுவே பத்ரிநாத்தின் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமிருக்கக் காரணம். அதைத் தாண்டி ஒரு திருப்பத்தில் இறங்க கண்முன் சற்று தொலைவில் பத்ரிநாத் கோவில் வண்ணமிகு கோலத்துடன் பனிமலைகளின் பின்னணியில் காட்சியளித்தது.
இதுவரை எங்கும் கண்டிராத வண்ணமாய் எழில் மிகுந்த புத்தமடாலயங்களை நினைவுபடுத்தும் அதன் முகப்புத் தோற்றம் இங்கிருந்தே வசீகரித்தது.
ஜெய் பத்ரிநாத் விஷால் கி ஜெய்!
ஜெய் பாண்டுரங்கன் கி ஜெய் போலோ பத்ரிநாத் விஷால் கி ஜெய்..
என கோஷங்களிட்டப்படி பெரும் கூட்டம் முண்டித்தள்ளியபடி முன் நகர்ந்தது.
கோவிலுக்கு எதிரே ஓடும் அலக்நந்தா நதியின் மீது கட்டப்பட்டிருந்த இரும்பு பாலத்தின் மேல் கூட்டத்தோடு கூட்டமாக தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். பத்ரிநாத் கோவிலின் சிறப்பு அங்கிருக்கும் வெந்நீர் ஊற்று. அதில் குளித்த பின் கோவிலுக்குள் செல்வது கோவிலின் ஐதீகம் எனப் புறப்படும்போதே சொல்லியிருந்தபடியால் கையோடு கொண்டுவந்த மாற்று உடையுடன் சுடுநீர் குளத்திற்குச் சென்றோம். உள்ளே நுழைந்தவுடன் பெரும் புகை மூட்டம், கண்ணை மறைக்க ஒரு நிமிடம் எதிரே நிற்பவர்கள் கூட யார் என்பது தெரியாத நிலை.
புதிய அனுபவத்துக்கு நானும் தயாராகி அவசரமாக உடை மாற்றி நானும் இறங்கப் போக, ஒரு கை என் தோளில் விழுந்து என்னை தடுத்து இழுத்தது.
வரும் பதிவில்... தன்னை தடுத்து நிறுத்திய அந்த கை யாருடையது என்பதையும், அதற்கான காரணத்தையும் கூறும் எழுத்தாளர், தங்களை வழிமறித்த குரங்கு கூட்டத்திலிருந்து தப்பி வந்த அனுபவம் பற்றியும் விவரிக்கிறார்.
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org