தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய்...
பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள்! இதைப் பற்றிய தெளிவை உருவாக்குவதற்கு பதிலாக தவறான எண்ணப் போக்கே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. மாதவிடாய் சுழற்சி என்பது என்ன? அதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு யோகா எப்படி உதவும் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

சில நேரங்களில் உங்களுக்கு எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறதா? அல்லது உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா?

ஆம் என்றால், உங்களுக்கு மாதவிடாய் வர இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று கணக்குப் போடுங்கள். ஒரு வேளை 14 முதல் 2 நாட்களாக இருக்கலாம். உடல் மற்றும் மன அளவில் வெளிப்படும் மேற்கண்ட அறிகுறிகளைத்தான் ‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ (pre menstrual syndrome) என்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

‘மாதவிடாய்க்கு முந்தைய நோய்க்குறிகள்’ என்றால் என்ன?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதை உணர்வதில்லை. இவை சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்த மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச் செய்துவிடும்!
2

இந்த அசௌகரியங்கள் ஏன் ஏற்படுகின்றன?

இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம்!

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்!

வயிறு உப்புசம், பசியின் அளவில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக்கொள்வது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை ஆகியன!

இந்த அறிகுறிகள் மாதத்துக்கு மாதம் வித்தியாசப்படலாம்!

பெண்கள் அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்வது, குடும்பத்தார் மற்றும் அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவை இந்த நேரங்களில்தான் அதிகம் நிகழ்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிந்திக்கும் திறன் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதே இதற்குக் காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நேரங்களில் உடலையும் மனதையும் நன்கு வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்!

சிகிச்சை முறைகள்!

 • உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாறுதல்களைத் தொடர்ந்து குறித்துக்கொண்டு வந்தால், எந்த மாதிரிச் சூழ்நிலைகளின்போது அந்த மாறுதல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த சூழ்நிலைகளுக்கானக் காரணங்களைத் தடுக்கலாம்.
 • இந்த நேரங்களில் உப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைத்துச் சாப்பிடவும்.
 • காபி தவிர்ப்பது நல்லது.
 • அதிக நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.
 • திடீர் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
 • உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது.
 • உடலிலும் மனதிலும் ஏற்படும் இந்த மாறுதல்கள் மிகவும் பாதிப்பாக இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகவும்.


யோகா எப்படி உதவுகிறது?

 • யோகா நமது நரம்பு மண்டலத்தை தளர்வான நிலையில் இருக்கச் செய்கிறது. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது குறைகிறது.
 • யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச் சமநிலைப்படுத்துகிறது.
 • யோகாவின் மூலம் நமது உடலையும் மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.
 • யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர்செய்கிறது.
 • வளர்சிதை மாற்றம் சீராவதால் குறிப்பிட்ட உணவுக்கான ஏங்குதல்கள் குறைகின்றன.

ஆண்களும் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்!

TipsTimesAdmin @ flickr