மஹாராஷ்டிரா கிராமிய இசை நிகழ்ச்சியுடன் முதல்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற முதல்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... உங்கள் பார்வைக்கு!

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா நேற்றிலிருந்து 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18) வரை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய முதல் நாள் கொண்டாட்டத்தில் மகாராஷ்டிர நாட்டுப்புற இசைக்குழுவான ஸ்ரீ ஓம்கார் கப்லனே குழுவினரின் கிராமிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
நாட்டுப்புற இசையில் மக்களை தாளமிடச்செய்த இசைக்குழு!

மஹாராஷ்டிராவின் நாட்டுப்புற இசையை தங்கள் உயிர்த்துடிப்பு மிக்க குரல் வளத்தின் மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர் இசைக்குழுவினர்.
நாட்டுப்புற கலைவடிவங்கள் நலிவடைந்து வரும் நிலையில் இத்தகைய திறமைமிக்க கிராமிய குழுவினரின் தனித்தன்மைகள் அரங்கேற்றப்பட்டு, ஈஷா வாயிலாக உயிர்ப்பெற்றுவருவது குறித்து பார்வையாளர்கள் பலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Subscribe
லிங்க பைரவி ஊர்வலம்...

நவராத்திரியின் முதல் நாளான நேற்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் ஈஷா பிரம்மச்சாரிகள் அக்னி நடனமாடுவது தனித்துவமான ஒன்றாக விளங்குகிறது. ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு ஈஷா யோக மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கொலு...

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிப்பாள்.
இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.
இன்று…
இரண்டாம் நாள் விழாவான இன்று (அக்டோபர் 11 ) ஶ்ரீ விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாடல்களுடன் இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.
நாளை...
மூன்றாம்நாள் விழாவான நாளை (அக்டோபர் 12 ) சம்ஸ்கிருதி மாணவர்களின் பாடல்களுடன் இசைநிகழ்ச்சி நிகழவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !