கரும்பு-வெல்லத்துடன் இனிக்க இனிக்க இயற்கை விவசாயம்!
கரும்பு-வெல்லத்துடன் இனிக்க இனிக்க இயற்கை விவசாயம்!
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 26
பட்டினத்தார் கையில் கைத்தடியாய் இடம்பிடித்த கரும்பு, தமிழர் வாழ்வில் நீங்கா இடம்பெற்ற ஒரு பயிர். கரும்பிலிருந்து வந்த அச்சு வெல்லமில்லாமல் தைப்பொங்கல் விழா மணப்பதில்லை! இங்கே, இயற்கை விவசாய கரும்பு சாகுபடியில் வாழ்வை இனிமையாக்கி, பிறருக்கும் இனிப்பைச் சேர்க்கும் இயற்கை விவசாயிகளின் இனிக்கும் செய்திகள் உங்களுக்காக!
ஈஷா விவசாயக்குழு கிழக்கு மண்டல இயற்கை விவசாயிகளைப் பார்வையிட்டபோது, தஞ்சாவூர் பானாசுரம் தாலுக்காவில் கீரமங்களம் கிராமத்தில் இயற்கை விவசாயத்துடன், வெல்லம் தயாரிக்கும் தொழிலும் செய்துவரும் திரு.இளஞ்செழியன் அவர்களைச் சந்தித்தோம். வெல்லம் தாயரிப்பு பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்...
"வெல்லம் காய்ச்சுவதுதான் எங்கள் பரம்பரைத் தொழில், அதோட இயற்கை விவசாயமும் சேர்த்தே செய்யறேன். கரும்புதான் நிறைய போடுவேன், நம்மாழ்வார் ஐயா தொடர்பு கிடைத்த பிறகு பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிர் செய்துட்டிருக்கேன். கரும்பை அரைத்துச் சாறு எடுக்க முன்பெல்லாம் மாடு வச்சு பட்டறை போடுவோம், இப்ப மோட்டார் வச்சுதான் பட்டறை போடுறோம்."
"இயற்கை முறையில கரும்பு உற்பத்தி செய்கிறேன், நிறைய வியாபாரிகள் வெல்லம் கேட்கிறதால மற்ற விவசாயிகளிடமிருந்தும் கரும்பை வாங்கி அரைக்கிறேன். இயற்கை விவசாயம் செஞ்சு விளைஞ்ச கரும்பு, இரசாயன விவசாயம் செய்து விளைஞ்ச கரும்பு என எல்லா மாதிரியான கரும்பையும் வாங்குறேன். காய்ச்சுகிற முறையைப் பொறுத்து வெல்லத்தின் தரம் இருக்கும்."
‘ஆலையிட்ட பூங்கரும்ப சேலையில கட்டிக்கிட்டு போறவளே பொன்னுரங்கம்’னு என்ற ஊருல பெருசுக எசப்பாட்டு படிச்சு ரவுசுபண்ணிகிட்டு இருப்பாங்கோ. கரும்புனாலே நமக்கெல்லா வாயில ஒரு தித்திப்பு வந்திருது இல்லீங்கோ?! அட என்னதா கரும்பா இருந்தாலும் அதுக்கு இயற்கை முறையில வளந்ததா இருந்தா தானுங்களே நல்லது? நம்ம தஞ்சாவூரு செழியன் அண்ணா அதுக்கு தானுங்க ஆசப்படுறாப்டி!
வெல்லம் காய்ச்சுவது எப்படி?
"கருப்புச் சாற்றை தச்சில் ஊற்றி 120-130 டிகிரி வெப்பத்தில் காய்ச்சினா பாகு பதத்திற்கு வரும், அந்தப் பாகை பலகையில் ஊற்றி கிளறினால் கிடைப்பது சர்க்கரை, அந்த சர்க்கரையை லேசான சூட்டுடன் உருண்டை பிடித்தால் அது மண்டை வெல்லம். காய்ச்சிய பாகை அச்சில் ஊற்றினால் அது அச்சு வெல்லம். லேசாக காய்ச்சி வைத்தால் அது பாகு வெல்லம்."
"கரும்புச்சாறு இனிப்பா இருக்கிறதால அதில் வேகமா நுண்ணுயிர்கள் வளர்ந்துடும். அதனால சாற்றில் புளிப்புச்சுவை ஏறிவிடும். அந்த அமிலத் தன்மையை நீக்குவதற்கு கொஞ்சம் சுண்ணாம்பு கலப்போம். கரும்புச் சாறு அழுக்கேறி பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் இருக்கும், அந்த அழுக்கை எடுக்க கொஞ்சம் சமையல் சோடா சேர்ப்போம், இதனால அழுக்கெல்லாம் பிரிஞ்சு வந்துடும்."
"1000 கிலோ கரும்பு அரைச்சா 700 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். தோராயமா ஒரு டன் கரும்புக்கு 80-110 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். கரும்பில் இருக்கிற சர்க்கரையோட அளவப் பொறுத்து இந்த வித்தியாசம் வரும். பிப்ரவரி மாதம் முதல் மே வரை வெட்டும் கரும்பில் அதிக சர்க்கரை இருக்கும். ஒரு டன் அரைச்சால் 110 கிலோ வரை வெல்லம் கிடைக்கும். மழைக்காலத்தில் வெட்டுற கரும்பில் இருந்து 80 கிலோ சர்க்கரைதான் கிடைக்கும். கரும்பு அதிகமா முத்திட்டாலும் சர்க்கரையோட அளவு குறைஞ்சுடும்."
மூன்று ரகங்களில் வெல்லம்
முதல் தரமான இயற்கை வெல்லம்: இது முழுசா இயற்கையில விளைஞ்ச கரும்பு, காய்ச்சும்போது சுண்ணாம்பையும் சமையல் சோடாவையும் தவிர எதுவும் சேர்ப்பதில்லை. இந்த ரக சர்க்கரையை 60 ரூபாய்க்கும், உருண்டை பிடிக்கிற வேலை இருக்கிறதால மண்டை வெல்லத்தை 65 ரூபாய்க்கும் தருகிறோம். இது பழுப்பு நிற வண்ணத்தில் இருக்கும்.
இரசாயனம் சேர்க்காத வெல்லம் (இரண்டாம் தரம்): இந்த கரும்பு யூரியா போட்டு விளைஞ்சது, இயற்கை வெல்லத்தைப் போலவே சுண்ணாம்பு மற்றும் சமையல் சோடா மட்டும்தான் சேர்க்கிறோம். இந்தச் சர்க்கரையை 50 ரூபாய்க்கும், உருண்டையை 55 ரூபாய்க்கும் தருகிறோம்.
இரசாயன வெல்லம் (மூன்றாம் தரம்): யூரியா போட்டு விளைஞ்ச கரும்பில் சுண்ணாம்பு மற்றும் சமையல் சோடாவுடன், மட்டி பெளடர் மற்றும் வெள்ளைச் சர்க்கரையையும் சேர்க்கிறோம். இந்த வெல்லம் பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மட்டிப் பெளடர்
மட்டிப் பெளடர் என்பது ஹைட்ரோஸ் (Sodium Hydro Sulfide) என்ற இரசாயனமாகும். வெல்லத்துக்குப் பொன் வண்ண நிறத்தை இந்த இரசாயனம்தான் தருகிறது, வெல்லமும் நைஸ்ஸாக வரும். இந்த ஹைட்ரோஸ் நாற்றம் அடிக்கும். கொஞ்சம் தண்ணீர் பட்டுவிட்டாலும் நாற்றம் தாங்க முடியாது. (தண்ணீர் சேரும்போது அழுகிய முட்டை நாற்றமுடைய ஹைட்ரஜன் சல்பைடாக மாறுகிறது) திருப்பூரில் நூல் மற்றும் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் இந்த ஹைட்ரோஸ் அழுக்கு நீக்கியாகப் பயன்படுகிறது. வெள்ளைச் சர்க்கரை தயாரிப்பிலும் இந்த ஹைட்ரோஸ் பயன்படுகிறது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்.
Subscribe
வெல்லத்தில் வெள்ளைச் சர்க்கரை
"சாதாரண வெல்லத்தில் பத்தில் ஒரு பங்கு வெள்ளைச் சர்க்கரையே இருக்கும், ஆனால் அச்சு வெல்லத்தில் இதைவிட அதிகம். தஞ்சாவூர் பகுதியில் அச்சுவெல்லம் செய்யும்போது 160 கிலோ வெல்லத்துக்கு 50 கிலோ வெள்ளைச் சர்க்கரைச் சேர்ப்போம். ஆனா வேறு சில பகுதிகளில் 50 : 50 சர்க்கரை சேர்க்கிறார்கள், அச்சு வெல்லத்தைச் சாப்பிடும் போதே இது தெரியும்."
"சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ. 40க்கு கிடைக்குது, வெல்லம் சர்க்கரையோட கொஞ்சம் விலை அதிகமா இருக்கிறதால எங்களுக்கு நஷ்டம் எதுவும் வராது. தீபாவளி, பொங்கல் காலங்களில் 45 ரூபாய் வரை கிடைக்கும். எந்த வேலைக்கும் சரியான ஆள் கிடைப்பதில்லை. கரும்பு பாலையும், சர்க்கரையையும் கொட்டி ஹைட்ரோஸ் பெளடரை போட்டுட்டா காய்ச்சுறபோது கிண்டுற வேலை மிச்சம்."
ஐயோ சாமி... செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேலு காமடி பாத்திருப்பீங்க இல்லீங்கோ...?! அதுமாறி வெள்ளையா இருக்குற பொருளெல்லாம் நல்ல பொருள்னு நெனச்சுக்காதீங்ணா! வெள்ளச் சக்கரையோட அபாயம் பத்தி இப்பதான் அங்கங்க பேச ஆரம்பிச்சிருக்காங்கோ. நமக்கு ஆரோக்கியம் வேணும்னா நாம தானுங்க கவனமா பாத்து வாங்கோணும்! ‘கரும்ப விரும்ப அது வேம்பா போச்சு’ன்னு என்ற அப்பாரு ஒரு பழமொழி சொல்லுவாப்டிங்கோ! அதுமாறி இனிப்ப விரும்பி வாங்குனாலும் அது இயற்கை முறையில வந்ததான்னு பாத்து வாங்குறது நம்ம கடமைங்கண்ணா!
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
"எங்களுக்கு இயற்கை வெல்லம் தயாரிக்கவே விருப்பம், ஆனால் வியாபாரிகள் எங்களிடம் இரசாயன வெல்லத்தையே கேட்கிறார்கள். 'மக்கள் பழுப்பு வண்ண வெல்லத்தை விரும்புவதில்லை, அவர்கள் பொன் மஞ்சள் நிறமான வெல்லத்தையே கேட்கிறார்கள், அதனால் அந்த வெல்லத்தையே கொடுங்கள்.' என்று கேட்பதால் நாங்களும் அப்படியே செய்யவேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அவர்கள் கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்து வாங்கினாலும் நல்ல பொருளை வாங்கிச்சாப்பிட வேண்டும் என்ற மனப்பக்குவம் வரவேண்டும்."
"இயற்கை முறையிலான சர்க்கரையை மக்கள் தற்போது பரவலாக வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சர்க்கரையை 1 டன் வரைக்கும் கொடுக்கிறேன். இரண்டாம் தர வெல்லம் 3 டன் வரைக்கும் கொடுக்கிறேன். தேவை அதிகம் உள்ளதால் மூன்றாம் தர வெல்லத்தைத்தான் அதிகமாக உற்பத்தி செய்கிறேன்."
"எங்கிட்ட இந்த வெல்லத்தை வாங்குறவங்க 'நாங்க பூஸ்ட், ஹார்லிக்ஸ்ன்னு எதுவும் வாங்குவதில்லை, அதற்கு பதிலா இந்த வெல்லத்தைத்தான் பாலில் கலந்து குழந்தைகளுக்கு தருகிறோம், அவர்களும் விரும்பி சாப்பிடுகிறார்கள்' என்று கூறி தொடர்ந்து என்னிடம் இயற்கை வெல்லத்தை வாங்குகிறார்கள்."
"வெல்லம் தயாரிக்கறதுல சில குறைகள் இருக்கலாம், அதனால வெள்ளைச் சர்க்கரை பரவாயில்லை என்று நினைச்சிராதீங்க, இந்த மாதிரி இரசாயன வெல்லத்துக்கு வழிகாட்டினதே அந்த வெள்ளைச் சர்க்கரைதான். வெள்ளைச் சர்க்கரையைப் பற்றி நம்மாழ்வார் ஐயா போன்ற பெரியவர்கள் ஏற்கனவே நிறைய சொல்லியிருக்கிறார்கள்."
"10 ரூபா அதிகமா செலவழிச்சாலும் நல்ல பொருளா வாங்கி மக்கள் சாப்பிடனும், மக்கள் இயற்கை வெல்லத்தை விரும்பி வாங்கத் தொடங்கும்போது நாங்க உற்பத்தியையும் அதிகப்படுத்திடுவோம், மொத்தமா செய்யும்போது, கொஞ்சம் விலையும் குறையும். அந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படனும். என்பதுதான் எங்களைப் போன்றோரின் விருப்பம்."
‘மாவிளக்கு போட்டவளுக்கு மண்ட வெல்லம் மிச்சம், கரும்புச்சாறு குடிச்சவனுக்கு தோகை தானே மிச்சம்’னு என்ற பெரியவூட்டு ஆத்தா ஒரு பழமொழி சொல்லுவாப்டிங்கோ?! அட சாமி... இதுக்கு அர்த்தமெல்லாங் கேக்கப்பிடாதுங்க! அதெல்லா போறபோக்குல சொல்லிட்டு போறதுங்க! என்னதான் கரும்பு இனிப்பா இருந்தாலும் அதைய வெள்ளாம செய்யுற விவசாயிக வாழ்க்கையில இனிப்பு கம்மிதானுங்களே?! அல்லா விவசாயிகளும் ஒட்டுக்க இயற்கை விவசாயத்துக்கு திரும்புற காலம் வந்துச்சுன்னா, ஒட்டுக்க அல்லாரு வாழ்க்கையும் இனிப்பாயிடுமுங்க!”
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, இயற்கையான முறையில் வெல்லம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்ததில், சமையல் சோடாவிற்கு பதில் வெண்டைச் செடியில் இருந்து எடுக்கப்படும் சாறு பயன்படுகிறது என்பது தெரிய வந்தது.
இயற்கை முறையில் வெல்லம் காய்ச்சும் முறை
தமிழகத்தில் ஒரு சிலர் முழுமையாக இயற்கை முறையிலும் வெல்லம் காய்ச்சுகிறார்கள், இதற்கு வெண்டைக்காய் மற்றும் வெண்டைச்செடியில் இருந்து கிடைக்கும் மியூசிலேஜ் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில விவசாய பல்கலைக்கழகங்களும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. 400 லிட்டர் கரும்புச் சாறுக்கு 1லிட்டர் வெண்டைச் சாறு விட்டுக் காய்ச்சும்போது அழுக்குகள் அனைத்தும் பிரிந்துவிடுகிறது.
(Hibiscus ficulneus - டியோலா செடி, Hibiscus esculentus - வெண்டைச் செடி) போன்ற வெண்டைச் சிற்றினங்களில் இருந்து கிடைக்கும் வழவழப்பான சாறு (Mucilage - மியூசிலேஜ்) வெல்லம் காய்ச்சும்போது அழுக்கு நீக்கியாக சேர்க்கப்படுகிறது. வெண்டைச்செடி நமக்கு எல்லா பருவத்திலும் கிடைக்கக்கூடியது, படிப்படியாக அனைவரும் இந்த முறையை பயன்படுத்தி வெல்லம் காய்ச்ச முன்வரவேண்டும்.
இயற்கை முறையில் கருப்பட்டி
இனிப்பு என்றாலே பனைவெல்லமும் சேர்ந்துதானே நினைவுக்கு வரும், அதனால் தென் மாவட்ட பயணத்தின்போது அறிமுகமான தூத்துக்குடி திரு.சிவமுருகன் அவர்களைத் தொடர்பு கொண்டோம், பனை வெல்லம் தயாரிப்பு பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.
பதநீர்
"பதநீர் எல்லா மாசமும் கிடைக்காது, கோடை காலத்தில் 5 மாசம் தான் பதநீர் எடுக்க முடியும். பாளையை தினமும் லேசா சீவி விட்டா தினமும் பதநீர் வடியும், வடிகின்ற இடத்தில் சுண்ணாம்பு தடவின பானையை கட்டிவச்சா பதிநீர் அதுல சேர்ந்துடும். இந்த பதநீர் நல்ல சத்து பானமாகும், இதில் இனிப்புச் சத்துடன் நிறைய சத்துக்கள் சேர்ந்திருக்கு. உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.
இயற்கை கருப்பட்டி
"இந்த பதநீரைக் காய்ச்சிதான் பனைவெல்லம் செய்யறோம். சுண்ணாம்பு அளவு பதமா இருக்கனும். குறைஞ்சாலும் பதநீர் புளிச்சுடும், அதிகமானாலும் காரம் எடுக்கும். கிடைத்த பதநீரை தாமதம் இல்லமால் காய்ச்ச வேண்டும். இல்லையென்றால் புளிப்புச் சுவை அதிகரித்துவிடும். மேலும் நுண்ணுயிரிகளால் சர்க்கரையின் அளவும் குறைந்து விடும்.
"பாகு காய்ச்சும் போது 45 லிட்டர் பதநீருக்கு 100 கிராம் கொட்டை முத்தை (ஆமணக்கு) இடித்து போடுவோம், அதனால் பதநீரில் உள்ள அழுக்கு எல்லாம் தனியாக பிரிந்து விடும். தோராயமா 100 லிட்டர் பதநீருக்கு 18 கிலோ கருப்பட்டி கிடைக்கும். நாங்க வருஷத்துக்கு தோராயமா 600 கிலோ கருப்பட்டி உற்பத்தி செய்யறோம்."
"பதநீரைக் காய்ச்சி ஒரு பதம் வந்ததும் அத பனை ஓலையில் விட்டு அப்படியே தண்ணிரில் வைத்தால் கெட்டியாயிடும், அந்த பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிடனும். அந்த பாகை ஒரு 10 நிமிஷம் கிண்டிக்கிட்டே இருக்கனும், பாகுல நுரை மாதிரி வரும் அது தான் கருப்பட்டிக்கான பக்குவம், அந்தப் பாகை சிரட்டையில் ஊற்றி வச்சா அரை மணி நேரத்தில் கருப்பட்டி தயாராகிடும்."
பனங்கற்கண்டு
"பனங்கற்கண்டு வேண்டும் என்றால் இறக்கிய பாகை கிண்டிவிடாமல் அப்படியே பானையில் ஊற்றி விடவேண்டும், கொதிக்க வைத்த பதத்தைப் பொறுத்து கற்கண்டு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கிடைக்கும். உதாரணமாக இளவேக்காடு என்றால் பெரிய கற்கண்டு கிடைக்கும். கருப்பட்டிக்கு காய்ச்சியது போல் நன்கு காய்ச்சி ஊற்றினால் பொடி கற்கண்டு கிடைக்கும்."
உடல் வெப்பம் தணிக்கும் பனங்கற்கண்டு
"இயற்கையான கருப்பட்டி சாப்பிடும்போது மாவு பதத்தில் இருக்கும். நீண்டநாட்களுக்குக் கெடாது, குளிர்ச்சிக்கு உருகாது. உடல் உஷ்ணம், நீர் சுருக்கு போன்றவற்றிற்கு பனங்கற்கண்டு உண்பது நல்ல பலனைத் தரும். பாலில் கலந்து சாப்பிட நல்ல சுவையுடன் இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் அளவோடு இயற்கையான பனை வெல்லத்தைச் சாப்பிட்டலாம்."
கற்கண்டு கழிவுகளில் இருந்து பனைவெல்லம் தயாரிப்பு
பனைவெல்லம் தயாரிப்பில் ஒரு சில இடங்களில் வெள்ளைச் சர்க்கரையை சேர்க்கிறார்கள், அதிக அளவில் பனை வெல்லம் தயாரிக்கும்போது சுண்ணாம்பின் காரத்தன்மையை நீக்க கொஞ்சம் சூப்பர் பாஸ்பேட் சேர்க்கிறார்கள்.
சர்க்கரை ஆலைகளில் கற்கண்டு தயாரித்த பின் ஒரு இனிப்புக் கழிவு கிடைக்கும். இது சிவப்பு நிறத்தில் உள்ள இனிப்பான திரவமாகும். பார்ப்பதற்கு தேன் போல இருக்கும். இந்த இனிப்புக் கழிவுகளை மொத்தமாக சிலர் வாங்கி அதனுடன் வெள்ளைச் சர்க்கரை மற்றும் சுண்ணாம்பு கலந்து கருப்பட்டி போல் தயாரித்து விடுகிறார்கள். இந்த சர்க்கரைக் கருப்பட்டியை தண்ணீரில் போட்டால் சிறிது நேரத்திலேயே கரைந்துவிடும். இயற்கை கருப்பட்டி ஒரு நாள் வரைக்கும் கரையாமல் இருக்கும்.
அட சாமி... எப்படியெல்லாம் நடக்குதுங்க பாத்தீங்ளாண்ணா?! கரி வித்த பணம் கருப்பாவா இருக்கும்னு சொல்லுவாங்க இல்லீங்கோ?! நாம கரிய விக்குறோமா கரும்ப விக்குறோமான்னு நம்ம மனசாட்சிக்கு மட்டும் தானுங்க தெரியும். அல்லாரும் இந்த கள்ளிப்பட்டி கலைவாணி மாறி நல்ல மனசு உள்ளவங்களா இருபாங்கன்னு நாம எதிர்பாக்க கூடாதுங்க. அதானுங்க நான் திரும்பவும் சொல்றேன்... நாம பொருள வாங்கும்போது வெகரமா பாத்து வாங்கோணுமுங்க!
இயற்கை வெல்லத்தில் நல்ல ஜீவாமிர்தம்
ஜீவாமிர்தம் அல்லது அமிர்தக் கரைசல் போன்ற இடுபொருள் தயாரிக்கும்போது இயற்கை வெல்லத்தை பயன்படுத்தும்படி நம்மாழ்வார் ஐயா அவர்களும், பாலேக்கர் ஐயா அவர்களும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.
இரசாயனம் கலந்த வெல்லத்தை பயன்படுத்தும்போது நுண்ணுயிர்கள் நன்றாக வளராது. வேதி பொருட்கள், நுண்ணுயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி கரைசல்கள் கெட்டுப்போகச் செய்துவிடும். ஓரிரு நாட்களில் கரைசல்கள் கெட்டுபோய் நாற்றமடிக்கத் தொடங்கிவிடும். இந்த இடுபொருள்களை பயன்படுத்தும்போது அவைகளின் தரம் குறைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். பயன்படுத்தினாலும் நல்ல பலனைத் தராது.
இதனால் தான் "இடுபொருள் தயாரிப்பு முறையை சரியானபடி செய்யவேண்டும், தயாரிப்பு முறைகளில் தவறு ஏற்படும்போது கரைசல்கள் வேலை செய்யவில்லை என தவறாக எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது. ஜீவாமிர்தத்தை பாலேக்கர் ஐயா சொன்னதை விட ஒரு படி அதிக சுத்தமாகத் தயாரிக்க வேண்டும் அப்போதுதான் அது நல்ல பயனைத் தரும்" என்று முன்னோடி விவசாயிகள் கூறி வருகிறார்கள்.
எனவே ஜீவாமிர்தம் தயாரிப்பதற்கு நம்பிக்கையான இயற்கை விவசாயிகளிடம் இருந்து தரமான வெல்லத்தை வாங்குவது சிறந்தது, இதனால் இயற்கை விவசாயம் இன்னும் இனிக்கும், நமது உடலும் நமக்கு நன்றி சொல்லும். தகவல்களை பகிர்ந்து கொண்ட திரு. இளஞ்செழியன் அவர்களுக்கும், திரு. சிவமுருகன் அவர்களுக்கும் ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:
திரு. இளஞ்செழியன் : 90427 75813
திரு. சிவமுருகன் : 97889 80481
தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம் : 83000 93777