ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான கலைவாணி தனது கணவர் மகேஸ்வரனுடன் இணைந்து கடந்த 8 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள கள்ளிப்பட்டியில் அவர்களுடைய ‘ஷாம்பவி’ இயற்கை விவசாய தோட்டம் அமைந்துள்ளது. மேகமூட்டத்துடன் கூடிய இனிய காலை வேளை ஒன்றில் அவர்களுடைய தோட்டத்துக்கு சென்று இருந்தோம். கணவனும் மனைவியும் இன்முகத்துடன் வரவேற்று தோட்டத்துக்குள் அழைத்து சென்றனர்.

கெமிக்கல் விவசாயம் பண்றவங்கள விட நல்ல மகசூல் கிடைக்குது..

“எங்க குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். நாங்க 2010 வரைக்கும் கெமிக்கல் விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தோம். அது மனசுக்குள் உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இப்படியே விஷத்தைப் போட்டு மண்ண மலடாக்கிவிட்டால் நாளைக்கு நம்ம குழந்தைங்க என்ன பண்ணும். அடுத்த தலைமுறை எப்படி ஆரோக்கியமா இருக்கும்னு தோணுச்சு. அதுனால இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு நினைச்சோம். ஆனா, இயற்கை விவசாயம் எப்படி முறையா பண்றதுன்னு எங்களுக்கு தெரியலை.

அப்போதான் ஈஷா விவசாய இயக்கத்தோட தொடர்பு கிடைச்சுது. எங்களை மாதிரி புதுசா இயற்கை விவசாயம் பண்ண விரும்புறவங்களை ஒரு குழுவா இணைச்சு நேரடி களப் பயிற்சி கொடுத்தாங்க. முன்னோடி இயற்கை விவசாயிங்களோட தோட்டங்களுக்கு கூட்டிட்டு போயி ப்ராக்டிக்கலா சொல்லிக் கொடுத்தாங்க. எந்த மண்ணுல எந்த பயிர் நல்லா வளரும். அதுக்கு என்னெல்லாம் செய்யணும். தண்ணீரை எப்படி சிக்கனமா பயன்படுத்துறதுன்னும் தெளிவாக தெரிஞ்சுக்கிட்டோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கற்றுக்கொண்டதை பயன்படுத்தி எங்கள் தோட்டத்துல இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சோம். முதல் 2 வருஷம் எதிர்பார்த்ததைவிட மகசூல் ரொம்பவும் குறைவாதான் வந்துச்சு. இவ்வளவு பண்ணியும் நம்மளால் வெற்றி பெற முடியலையே என்று கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. ஆனால் ஈஷாவில் இருந்து எங்களை தொடர்ந்து என்கரேஜ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. இயற்கை இடுபொருட்களை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருந்ததுனால கொஞ்சம் கொஞ்சமா மண்ணு மாறிக்கிட்டே வந்துச்சு. இப்போ பார்த்தா கெமிக்கல் விவசாயம் பண்றவங்கள விட நல்ல மகசூல் கிடைக்குது” என்று கூறும்போது கலைவாணி முகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி.

“மொத்தம் 13 ஏக்கரில் இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம். எங்கள் தோட்டத்தில் ஒவ்வொரு இடத்திலேயும் குறைஞ்சது 2 அல்லது 3 பயிராவது இருக்கும். 5 ஏக்கர்ல பி.கே.எம் ரக முருங்கை போட்டுருக்கோம். அதுக்கு இடையில மகோகனி மரங்கள் வளர்க்கிறோம். முருங்கை பயிரிட்டதுக்கு முன்னாடி, தக்கப்பூண்டு, பல தானிய விதைப்பு விதைச்சு அதை மல்ச்சிங்கா போட்டுடுவோம். அதனால பயிருக்கு தேவையான எல்லா சத்தும் அதுல இருந்தே கெடைச்சுரும். 15 நாளுக்கு ஒருவாட்டி ஜீவாமிர்தம் மட்டும் ட்ரிப்ல தண்ணியோட சேர்த்து கலந்து விட்டுருவோம்.

அடுத்து மூன்றரை ஏக்கர்ல தென்னையும், பாக்கும் போட்டுருக்கோம். ஒரு ஏக்கர்ல தென்னை, எலுமிச்சை, இடையில கற்பூர வள்ளி வாழை போட்டுருக்கோம். இன்னொரு ஏக்கர்ல மாதுளை, கொய்யா, சாத்துக்குடி, எலுமிச்சைன்னு பழ மரங்கள் மட்டும் போட்டுருக்கோம். அப்புறம் ஒரு ஏக்கர்ல குவிண்டால் நேந்திரமும் மகோகனியும் போட்டுருக்கோம். இதுதவிர 2 ஏக்கர்ல தனியா குமிழ் தேக்கு, மஞ்சள் கடம்பை, நீர் மருது, சிசு போன்ற டிம்பர் மரங்கள போட்டுருக்கோம்”என்று தோட்டத்தில் உள்ள அனைத்து பயிர்கள் குறித்தும் விளக்கமாக பேசினார், கலைவாணியின் கணவர் மகேஸ்வரன்.

ஜீவாமிர்தம், மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களை தயாரிப்பது, கூலி ஆட்களுடன் சேர்ந்து தோட்ட வேலை பார்ப்பது போன்ற பணிகளை கலைவாணி கவனித்துக் கொள்கிறார். ஆட்களை அழைத்து அறுவடை செய்வது வெளி வேலைகளுக்கு செல்வது போன்ற பணிகளை மகேஸ்வரன் கவனிக்கிறார். நாங்கள் தோட்டத்துக்கு சென்றிருந்தபோது வாழை மற்றும் முருங்கை அறுவடை நடந்துகொண்டு இருந்தது.

“வாழையையும் முருங்கையையும் உள்ளூர் வியாபாரிங்க தோட்டத்துக்கே வந்து நேரடியா அறுவடை பண்ணிக்கிட்டு போறாங்க. அதனால போக்குவரத்து செலவோ அலைச்சலோ இல்லை. பழங்களை மட்டும் கோபி மார்க்கெட்டுக்கு எடுத்துட்டு போய் மொத்தமா வித்துருவோம். கொப்பரையை செக்குல கொடுத்து ஆட்டி தேங்காய் எண்ணெய்யா மாத்தி அதை சென்னைக்கு அனுப்பிக்கிட்டு இருக்கோம். முருங்கை கீரையை நேரடியாக விற்காமல் அதை பதப்படுத்தி பொடியா மாத்தி விக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. கொஞ்சம் நாள் கழிச்சு அதை பண்ணலாம்னு இருக்கோம்” என்று விற்பனை முறையையும் எதிர்கால திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார் மகேஸ்வரன்.

தோட்டத்துக்குள் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும்போது தென்னை மரங்களை காட்டி “இந்த தென்னை மரங்களுக்கும், பாக்கு மரங்களுக்கும் 2 வருஷமா எந்த பராமரிப்பும் செய்யல. ஆனாலும் எப்படி நல்லா காய்ச்சுருக்கு பார்த்தீங்களா? இதுதான் இயற்கை விவசாயத்தோட சிறப்பே. மல்ச்சிங்க் போட்டிருப்பதால் மண்ணெல்லாம் நெகிழ்ந்து மென்மையாகிவிட்டது. மண் புழுக்களும் நிறைய இருக்கு. எப்படியோ இருந்த மண்ணு இப்படி மாறுனது எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. பக்கத்து தோட்டங்களில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கு. ஆனா, நம்ம தோட்டத்துல அப்படி எதுவுமே இல்லை. அதற்கெல்லாம் எங்களுக்கு கிடைச்ச பயிற்சிதான் காரணம்..” என்று பூரிக்கிறார், கலைவாணி.

விதை விதைப்போம்...

நன்றி: தினத்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!