பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 14

இயற்கை விவசாயி திரு.சக்திவேல் அவர்கள் ஜீவாமிர்தம் தயாரிக்க உருவாக்கியுள்ள நான்கு அடுக்கு தொட்டி முறையை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெரும்பாலான விவசாயிகள் ஜீவாமிர்தத்தை pvc ட்ரம்மில் தயாரிக்கிறார்கள். இதில் தேங்கும் கசடை வழித்தெடுத்து வெளியில் போடுவது சற்று சிரமமானதாக இருப்பதோடு, கசடாக கிடைக்கும் கழிவுச் சாணத்தையும் முறையாக பயன்படுத்தவும் முடிவதில்லை.

நான்கு நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி ஜீவாமிர்தம் மற்றும் சாண எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்த தொட்டி அமைப்பின் மூலம் பயிர்களுக்குத் தேவையான இயற்கை ஊட்டங்களையும் ஜீவாமிர்தத்துடன் கலந்துவிட முடியும்.

திரு.சக்திவேல் அவர்கள் இதற்கு தீர்வாக இந்த நான்கு அடுக்கு தொட்டி முறையை உருவாக்கியுள்ளார். இதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

நான்கு நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி ஜீவாமிர்தம் மற்றும் சாண எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்த தொட்டி அமைப்பின் மூலம் பயிர்களுக்குத் தேவையான இயற்கை ஊட்டங்களையும் ஜீவாமிர்தத்துடன் கலந்துவிட முடியும். இயற்கை வடிகட்டிகள் மூலமாக நுண் கசடுகளும் வடிகட்டப் படுகின்றன.

“மேய்க்காத மாடு கெட்டுப்போகும் பாக்காத பயிரு கெட்டுப்போகும்னு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டி. இயற்கை விவசாயத்துல மாடு ரொம்ப முக்கியமுங்கோ! அதிலயும் நாட்டு மாடு இருந்தா தானுங்க ஜீவாமிர்தம் தயாரிக்க முடியும்! அதுக்காக நீங்க மாடு மேய்க்க தனி ஆளெல்லாம் போடத் தேவையில்லீங்க! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி மாறியே ஓரஞ்சாரத்துல அகத்தி சோளம்னு அதுகளுக்கு தேவையான பயிர்கள வெதச்சு விட்டுப்போட்டா, அதைய வச்சே நாம சமாளிச்சு போடலாமுங்கண்ணா!”

மாட்டுக்கொட்டகை நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து வரும் சாணத்தை கழுவி விட்டால் சாணம் முழுவதும் முதல் தொட்டியில்(1A,1B) விழுகிறது. தொட்டிகள் அனைத்தும் சூரிய ஒளி படாதவாறு கொட்டகை நிழலில் உள்ளது.

முதல் தொட்டியில் சாணத்தை சிலுப்புவதற்காக ஒரு உருளை வடிவத் தொட்டி(1A) உள்ளது. சாணத்தை சிலுப்புவதற்காக மத்துபோன்ற அமைப்பும் உள்ளது. சுவற்றின் ஒரு பக்கத்தில் ஒரு குழாய் உள்ளது.

மோட்டாரை இயக்கும்போது குழாய் வழியாக தண்ணீர் வேகமாக வந்து சிலுப்பிக் கொண்டிருக்கும் சாணத்தில் கலக்கிறது, இதனால் சாணம் நன்றாக கலக்கப்பட்டு திப்பிகள் உடைக்கப்படுகின்றன.

சிலுப்பப்பட்ட சாணம், கூழ்மமாக தொட்டியில்(1B) வழிகிறது. தொட்டியில் வழிந்து தெளிந்தபின் அடியில் கசடுகள் சேகரமாகிறது. மேலே தெளிந்த சாணப்பால் அடுத்த தொட்டிக்கு(2) செல்கிறது. இதில் கசடாக உள்ள சாணம் வெளியேற குழாய் உள்ளது. தேவைப்படும்போது இதை மூடவோ, திறக்கவோ முடியும். கசடு சாணம் வெளியேறி சாண எரிவாயு கலனில் சேகரமாகிறது.

இரண்டாவது தொட்டியில்(2) சாணப்பாலில் உள்ள சிறுசிறு கசடுகளும் வடிகட்டும்படியாக கம்பிவலை, மணல், கூழாங்கற்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சாணப்பால் மேலும் வடிகட்டப்பட்டு மூன்றாவது தொட்டிக்கு(3) செல்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொழுவத்திலிருந்து வரும் கோமியமும் மூன்றாவது தொட்டியில்(3) சேகரமாகிறது. இந்த மூன்றாவது தொட்டி கோமியத்தையும், சாணப்பாலையும் சேகரிக்க மட்டுமே பயன்படுகிறது. இந்த கரைசல் நான்காவது தொட்டிக்கு செல்கிறது

நான்காவது தொட்டியில்(4) தோராயமாக 300 லிட்டர் சாணப்பால்+கோமியம் கரைசல் சேர்ந்தவுடன், 1 கிலோ நாட்டுச்சர்க்கரை சேர்க்கப்படுகிறது, 24 மணிநேரத்தில் நொதித்தல் (Fermentation) நடைபெற்று ஜீவாமிர்தம் தயாராகிறது.

ஜீவாமிர்தம் அல்லது அமுதக்கரைசல் என இதைக்கூறலாம், இது எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் அடங்கிய பயிரூட்டமாகும்.

“அட சாமி... பாத்தீங்களா?! நாம ரொம்ப பேருக சாணிய மிதிச்சுப்போட்டா கால நல்லா கழுவுவோம் இல்லீங்களா? ஆனா... மாட்டோட சாணியும் கோமியமும்தான் ஜீவாமிர்தம் தயாரிக்க முக்கியமா உதவுதுங்க. அதிலயும் நம்ம சக்திவேல் அண்ணா நல்லா ரோசன பண்ணி டெக்னிக்கா பண்ணிருக்காருங்ணா!”

ஜீவாமிர்தத்தை மூன்று நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும், 3 நாட்களுக்கு மேலே சென்றால் அரை கிலோ வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டும், 5 நாட்களுக்கு மேலே சென்றால் 1 கிலோ வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம், 7 நாட்களுக்கு மேலேயும் வைத்திருந்தால் அதில் நுண்ணுயிர்கள் இருக்காது, இந்தநிலையில் புதிதாக ஜீவாமிர்தம் செய்துகொள்வதே சிறந்தது.

நான்காவது தொட்டியில் வென்சுரியின் புட் வால்வ் (Foot valve) போடப்பட்டுள்ளது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தமும் சேர்ந்து விடப்படுகிறது.

பயிர் ஊட்டங்களை பயிருக்கு கொடுக்க எளிய நுட்பம்

இந்த நான்காவது தொட்டியில் ஒரு மிதவை உள்ளது. இந்த மிதவை இரண்டு அடி நீளமுள்ள இரண்டு புறமும் மூடப்பட்ட ஒரு இரண்டு அங்குல பைப் ஆகும்.

பயிர் ஊட்டங்கள் தேவையெனில் படத்தில் காட்டியபடி மூட்டையாக கட்டி அதில் தொங்கவிடலாம். இதனால் ஊட்டங்கள் சிறிது சிறிதாக கரைந்து பயிருக்கு செல்கிறது.

“ஏனுங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்லுவாங்க இல்லீங்கோ... அது இதுதானுங்க! ஜீவாமிர்தம் கூட ஒட்டுக்க ஊட்டச்சத்தையும் அனுப்புற மாறி டெக்னிக் பண்ணிருக்காருங்ணா! நல்ல வெகரமான ஆளுதானுங் நம்ம அண்ணா!”

இயற்கை பேரூட்டங்களாக
N (Nitrogen) தழை சத்து -Azospirillum
P (Phosphorus) மணி சத்து -phosphobacteria
K (Potassium) சாம்பல் சத்து -Frateuria
போன்றவற்றை ஏக்கருக்கு கால் கிலோ வீதம் பயன்படுத்தலாம். இவை 1 கிலோ 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. இவைகளை ஒன்றாக கலந்தோ அல்லது தனித்தனியாகவோ பயன்படுத்தலாம்.

வேர் அழுகல் மற்றும் கிழங்கழுகலுக்கு சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (Pseudomonas fluorescens) அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் (Bacillus subtilis) போன்ற பூஞ்சைக்கொல்லிகளை அரை கிலோ அளவுக்கு பயன்படுத்தலாம்.

நூற்புழுவை (Nematodes) கட்டுப்படுத்த ட்ரைகோடெர்மா விரிடி (trichoderma viride) நூற்புழுக் கொல்லியை ஒரு கிலோ பயன்படுத்தலாம். பூஞ்சைக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தனிதனியாகவே பயன்படுத்த வேண்டும், ஒன்றை மற்றொன்றுடன் கலக்கக்கூடாது. துணியில் கட்டிவிடுவதே சிறந்தது. அப்படியே தூவிவிட்டால் ட்ரிப்பில் அடைத்துக் கொள்ளும். தோட்ட மண், பயறுமாவு போன்றவற்றையும் இவ்வாறே துணியில் கட்டித் தொங்கவிடலாம்.

புதிதாக இற்கை விவசாயம் செய்வோர் தோட்ட மண்ணை கண்டிப்பாக ஜீவாமிர்தத்துடன் சேர்க்க வேண்டும். இந்த தோட்ட மண்ணை நிழலான மற்றும் வேதி உரங்கள் படியாத இடத்தில் இருந்து சேகரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை பல ஆண்டுகள் செய்கின்றவர்கள் மண்சேர்க்க அவசியமில்லை.

“பயிரு விளைய மண்ணப் பாரு, மனுசன் விளைய மனச பாருன்னு எங்க அப்பாரு சொன்னது ரொம்ப செரிதானுங்களே?! மண்ணு உயிரோட்டமா இருந்தா தானுங்க பயிரு நல்லா விளையும். அதைய இத்தன நாளா ரசாயன உரத்த போட்டு கெடுத்துப்போட்டு வச்சிருக்காங்க நெறய பேரு. இனிமேலாவது அவுகல்லாம் இயற்கை விவசாயத்துக்கு மாறோனும்னு இந்த கள்ளிப்பட்டி கலைவாணி ரொம்ப கரிசனையோட கேட்டுகிறேனுங்ணா!”

திரு.சக்திவேல் அவர்கள் கரைசல்கள் தயாரிக்க தனியாக ஒரு தொட்டியை கட்டியுள்ளார். வேப்பங்கொட்டை கரைசல், புண்ணாக்கு கரைசல் போன்றவை செய்ய இதை பயன்படுத்த முடியும்.

மூன்றடிக்கு மூன்றடி அளவுள்ள இந்த தொட்டியில் அடியில் கூழாங்கற்கள் அதன் மேல் மணல் போடப்பட்டுள்ளது அதில் நீர் ஊற்றி, எந்த கரைசல் தேவையோ அந்த பொருட்களை மூட்டை கட்டி போட்டுவிட்டால் அவை ஓரிருநாட்களில் ஊறிவிடும்.

அதன் பின் வெளியேற்றுக் குழாயை திறந்துவிட்டு கரைசல்களை ட்ரம்மில் பிடித்துக்கொள்ளலாம். அந்த ட்ரம்மில் வென்ச்சுரியின் புட் வால்வ்வினை போட்டு பாசன நீருடன் கரைசல்களை விட்டுக்கொள்ளலாம். சூரிய ஒளி தொட்டியில் படாமல் நிழல் வலை (Shade Net) அல்லது துணி கொண்டு தொட்டியை மூடிவைக்க வேண்டும்.

திரு.சக்திவேல் மேற்கண்ட இந்த தொழில் நுட்பத்துக்காக 2011 ஜபல்பூரில் நடைபெற்ற தேசிய வேளாண் அறிவியல் மாநாட்டில் விருது பெற்றவராவார்.

மேலும் 2013ஆம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தால் டெல்லியில் நடத்தப்பட்ட Mahindra Samriddhi Agri National Awardடையும் பெற்றுள்ளார்.

“ஐயோ நான் ஏற்கனவே சொன்னேன் இல்லீங்கோ... நாம ஆர்வத்தோட வேலைய பாத்தா இயற்கையும் நமக்கு அவாடு குடுக்கும் மத்தவங்களும் நமக்கு அவாடு குடுப்பாங்கோ! ஆனா அவாடுக்காகல்லாம் நாம வேல செய்யக்கூடாதுங்ணா! என்னைய மாறிய அவாடுக்கெல்லாம் ஆசப்படாம இருக்குறது கொஞ்சம் கஷ்டம்தானுங்க... அட சும்மா சோக்குக்காக சென்னேங்கோ! எனக்கு விருது குடுத்தா வாங்குறதுக்கு மொத ஆளா போய் நிப்பேனுங்க!”

தற்போது கரையான்கள் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதாகவும், மண்புழுக்களை போலவே கரையானும் மண்ணுக்கு மிக அதிக நன்மையை செய்வதாகவும் தெரிவித்தார், இது குறித்த ஆய்வுகள் இயற்கை விவசாயத்திற்கு மிக உதவியாக இருக்கும் என்று கூறிய திரு. சக்திவேல் அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு வாழ்த்துகூறி விடைபெற்றது. (தொடர்புக்கு: 94863 16041)