இந்தியாவின் கடைசி கிராமம் மானாவைப் பற்றி...
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 12
இந்தியாவின் கடைசி கிராமம் என அழைக்கப்படும் மானாவிற்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி சுவைபடப் பகிர்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா. பொன்னிறமாக மாறிய மலைச்சிகரம் பற்றி குறிப்பிடும் விவரிப்பு அந்த காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது!
திரு. அஜயன் பாலா:
ஒருவழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்து விடுதிக்குத் திரும்பப்போகும் சமயத்தில் ராமகிருஷ்ணன் அண்ணன் வழியில் தென்பட்ட தென்னிந்திய உணவு விடுதியை நினைவூட்டினார். உடனே தேனி செந்தில் ஆமாம் அங்கு இட்லி, தோசை கிடைக்கும் என எழுதியிருந்தார்கள் என ஆர்வத்துடன் கூற அனைவரும் அசுர வேகத்துடன் அந்த விடுதிக்குப் படையெடுத்தோம். மதியம் முன்னமே சொல்லியிருந்தார் போல் பேருந்துகள் வரிசையாக காத்திருக்க அனைவரும் ஓடிச்சென்று இருக்கையை ஆக்கிரமித்தனர். அடுத்து நாங்கள் செல்லப் போகும் இடம் மானா.
இந்தியாவின் கடைசி கிராமம். பத்ரிநாத்திலிருந்து 3 கி.மீ. தூரம்தான். ஆனாலும் அந்த பாதையில் இருபுறமும் கொட்டிக் கிடக்கும் அழகு இருக்கிறதே அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கண்களை நிறைக்கும் உயர்ந்த வெண்ணிற மலைகள் அதனை அகண்ட நிலப்பரப்பில் காணும்போது கைகளை விரித்து ஹோவென கூவச் சொல்கிறது. இந்தியாவின் எல்லை பகுதியாதலால் ஆங்காங்கு ராணுவ முகாம்கள் கூடாரங்கள் தென்பட்டன. பேருந்திலிருந்து இறங்கி இருபுறமும் நெருக்கமான வீடுகள் கொண்ட பாதையில் வரிசையாக நடந்து சென்றோம். அங்கு குட்டி வீடுகளில் எங்களை எட்டிப்பார்த்த குழந்தைகள் மிகவும் பரிதாபமாக இருந்தன. அங்கிருந்த அனைவரும் திபெத்தியர் போல இருந்தனர். அடுத்து திபெத் எல்லை வருவதை இது முன் கூட்டியே உணர்த்தியது. கூலிகள் ஆட்களைத் தூக்கும் பிரம்பு கூடைகளை முதுகில் சுமந்தபடி எங்களை நோக்கி வந்து தூக்கி செல்வதாகக் கேட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது கடும்பனிபொழிவு காரணமாக இங்கு எங்களுக்கு விவசாயம் இல்லை. கால்நடை மேய்ப்பு மற்றும் சுற்றுலா வருபவர்கள் மூலமாகத்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது எனக்கூறினர். பெரும்பாலும் எல்லை பகுதிகளில் வசிக்கும் எல்லோருக்கும் இந்த நிலைதான். இதில் இவர்களும் விதிவிலக்கில்லை என நினைத்துக்கொண்டு படிக்கட்டுகளின் வழி மலை ஏறினோம். மலை உச்சிக்குச் சென்றபோது அங்கு வியாசமுனிவரின் குகை இருந்தது. உடன் விநாயகர் கோவிலும் இருந்தது. வியாச மகரிஷி சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதம் எழுதியது இங்குதான் என நம்பப்படுகிறதாம். இந்த இடத்தில் இதைவிடப் பிரதானமான இன்னொரு விஷயம் இருக்கிறது.
அது இங்கு காணப்படும் டீக்கடை.
Subscribe
இந்தியாவின் கடைசி டீக்கடை என்பதுதான் இதன் பெருமை.
அப்படி ஒரு பெருமையையும் ஏன் விட்டுவைப்பானேன் என்றபடி அனைவரும் அந்த கடையில் டீ சாப்பிட்ட பெருமையுடன் வேகமாக படியிறங்கினோம். அன்று மாலையில் சத்சங்கம் நடந்தது. சத்சங்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒளித்திரையில் சத்குரு மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு அங்குள்ள பனிச்சிகரம் ஒன்றில் சூரியனின் முதல் பிரதி படும் காட்சியைப் பாருங்கள். உலகில் அது போல அழகை வேறெங்கும் தரிசிக்க முடியாது எனக்கூற, அலாரம் வைத்து சரியாக நான்கு மணிக்கு எழுந்தேன். வெளியே கடும் குளிர். மஃப்ளர், ஸ்வெட்டர், ஜெர்க்கின், மங்கி கேப் இது பத்தாது என கம்பளி என இத்தனை கவசம் போட்டும் குளிரில் உடல் உதறலெடுத்தது.
என்னைப் போல பலரும் பலமான கவசத்துடன் வெளியே வந்தனர். சில தேநீர் கடைகள் திறந்திருக்க பலரும் அதுபோல அந்த தருணத்துக்காக காத்திருந்தனர். அனைவரும் ஆளுக்கு வசதியான இடத்தில் சாலையில் நின்றபடி அந்த பனிச்சிகரம் நோக்கிப் பார்வையைக் குவித்திருந்தனர்.
வானம் முழுவதும் நட்சத்திரங்களுடன் இருண்டிருக்க அந்த வெண்பனிச்சிகரம் மட்டும் நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருங்கள் இன்னும் சில நொடிகளில் அந்த சிகரம் மட்டும் பொன்னிறமாக மாறும் என நண்பர் ஒருவர் கூறினார்.
அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க சற்று நிமிடங்களில் சாலை முழுக்க பெரும் கூட்டம் எங்களைப்போல தலை உயர்த்தி அந்த நீல பனிச்சிகரத்தையே பார்த்துக் கொண்டிருக்க திடீரென அனைவரும் கூக்குரலிட உற்சாகத்தில் சிலர் கைகளைத் தட்ட மெல்ல அந்த நீல பனிச்சிகரம் பொன்னிறமாக மாறிக்கொண்டிருந்தது.
அடுத்த பதிவில்... ஆகம விதிமுறைகள் மனிதனுக்குச் சொல்வது என்ன என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், பத்ரிநாத்திலிருந்து கங்கோத்ரிக்கு புறப்படும் வேளையில் நிகழ்ந்தவற்றை விவரிக்கிறார்!
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org