நில்... கவனி... சாப்பிடு! - பகுதி 18

"இளநீர்..." என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது?! எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. அவற்றை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்!

கோடை காலம் வந்துவிட்டது. தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது இளநீரே. கோடை காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது.

இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். தேங்காய் என்பது பழமெனவும் கருதப்படுகிறது. பழங்களில் நடுவே உள்ள 'எண்டோஸ்பெர்ம்' என்ற பகுதியே, பழம் பெரிதாகி சதைப் பற்றுடன் உருவாகக் காரணம். இந்த 'எண்டோஸ் பெர்ம்' தேங்காயில் திரவ வடிவில் உள்ளது.

வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பெரிதளவில் வளரும் தென்னை மரங்கள், இந்தியாவில் அதிக அளவில் கேரளாவில் காணப்படுகிறது. உஷ்ணம் அதிகமுள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு இயற்கையே தந்த அருமருந்து இளநீர் என ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தின்படி இளநீர், உடலின் முக்கிய செயல்கள் பலவற்றை எளிதாக்க மிகவும் உதவும் ஒரு மருந்து.

நோய் தடுக்கும் இளநீர்!

உடல் உஷ்ணத்தை பெரிதளவில் தணிக்கும் இளநீர், ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கத் தேவையான சூட்டை மட்டும் உடலில் தங்க வைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோடை வெயிலில் பல தொற்று நோய்கள் உடலின் உள்உறுப்புகளையும், சருமத்தையும் பாதிக்கக் கூடும். அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது உடலில் உள்ள சலைன் சத்தும், ஆல்பமின் சத்தும் குறையக் கூடும். இதனை சீராக்க தினமும் இளநீரை பருகுவது நல்லது.

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர் தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது.

'உயிர் தரும் திரவம்'

இளநீர் 'உயிர் தரும் திரவம்' என மருத்துவர்களால் போற்றப்படுகிறது. காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க 'டிரிப்ஸ்' போல் ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையிலிருப்போர்க்கு உயிர் தரும் மருந்தாகிறது. அதோடு நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது.

இளநீரில் உள்ள சத்துக்கள்

இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள 'சுக்ரோஸி'ன் அனவே காரணம். இளசாக உள்ள போது இதில் 'சுக்ரோஸ்' அதிக அளவு இருக்கும்.

இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.

தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.

இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. அதோடு சதைப் பகுதி புரதச்சத்தும் நிறைந்ததாகும்.

சரும பாதுகாப்பிற்கு...

இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது. இத்தனை நல்ல குணங்களை கொண்டிருக்கும் இளநீரை நமக்களித்ததற்கு இயற்கைக்கு நன்றி கூறி பாராட்டுவோம்.

அடுத்த வாரம்...

உணவு உண்ணும் முறை குறித்தும் வெள்ளைச் சர்க்கரையால் விளையும் கேடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள... காத்திருங்கள்!


நில்... கவனி... சாப்பிடு! தொடரின் பிற பதிவுகள்