கடந்த வாரங்களின் சத்குரு நிகழ்வுகள்... ஒரு கண்ணோட்டம்!
சவாலான இந்நேரத்திலும் சத்குரு தொடர்ந்து நம்முடன் பல்வேறு இணைய நிகழ்வுகள் வாயிலாக நமக்கு வழிகாட்டி வருகிறார். கடந்த சில வாரங்களில் இணையத்தில் பங்கேற்ற சத்குருவின் நிகழ்வுகள் பற்றி இங்கே படித்தறியலாம்.

சத்குருவின் வழிகாட்டுதலை நாடிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்
கடந்த மார்ச் 26ல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு) வழங்கிய "உடான் 2021" என்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவில், மாணவர்கள் மற்றும் குழுவினரோடு சத்குரு உரையாடினார். இணையவழியில் பங்கேற்ற சத்குரு, ஆயுர்வேதம் குறித்து குழுவினர் கேட்ட பல கேள்விகளுக்கு உலகம் பயன்பெறும் வகையில் இந்த விஞ்ஞானத்தை எவ்வாறு காத்து வளர்ப்பது என்ற நோக்கில் விளக்கமளித்தார். இரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அலோபதி போல அல்லாமல், ஆயுர்வேதத்தை ஒரு உள்நிலை விஞ்ஞானமாக அணுக வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார்.
#கோவில்அடிமைநிறுத்து இயக்கம் குறித்து இந்தியா டுடே டிவியின் பேட்டி
ஆதியோகியின் அற்புதமான பின்னணியில் இந்தியா டுடே நிருபர் ஒருவர் மார்ச் 31 அன்று ஈஷா முன்னெடுத்துள்ள #கோவில்அடிமைநிறுத்து இயக்கம் குறித்து சத்குருவிடம் பேட்டி கண்டார். அரசின் கைகளில் தமிழ்நாட்டு கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் எப்படிப்பட்ட சிதைவை அடைந்துள்ளன என்பது பற்றி சத்குரு தனது தீர்க்கமான பார்வையை வழங்கினார். கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார். பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களின் புனிதத்தன்மை மற்றும் சக்தியை காத்து பராமரிக்க சரியானவர்கள் பக்தர்களே என்று கூறினார்.
சத்குருவுடன் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி
சத்குருவுடன் ரிபப்ளிக் மீடியா நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி #கோவில்அடிமைநிறுத்து இயக்கம் குறித்து உரையாடினார். இந்த பேட்டி ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பானது. தமிழ் கலாச்சாரத்தில் கோவில்கள் பெற்றுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திய சத்குரு இவ்வாறு கூறினார், "தமிழ்நாட்டில் பல நகரங்களும் கோவில் நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. காரணம், நாம் முதலில் கோவிலை கட்டிய பின்னர்தான் நம் இல்லங்களைக் கட்டினோம். அதுவே இந்த கலாச்சாரத்தின் இயல்பு." அதைத் தொடர்ந்து இந்து ஆலயங்கள் புறக்கணிக்கப்படுவதையும் இந்தியாவில் மதங்கள் குறித்து இழைக்கப்படும் வெளிப்படையான அநீதி பற்றியும் சத்குரு எடுத்துரைத்தார்.
திரைக்கதை எழுத்தாளர் பிரையன் கோப்பல்மேனின் "The Moment" நிகழ்ச்சியில் சத்குரு
பிரையன் கோப்பல்மேன் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களான Ocean’s Thirteen, Rounders மற்றும் Solitary Man போன்ற படங்களின் கதாசிரியர். அமெரிக்க தொலைக்காட்சி தொடரான பில்லியன்ஸின் இயக்குனர் மற்றும் துணை கதாசிரியர். மேலும் The Moment என்ற பிரபலமான வலையொளியின் தொகுப்பாளர். தன்னை "இயல்பிலேயே சந்தேகம் கொண்டவர்" என்று கூறிக்கொள்ளும் பிரையன் கோப்பல்மேன் சத்குருவோடு ஏப்ரல் 5 அன்று கர்மா, மரணம், மாற்றத்துக்கான வாய்ப்பு மற்றும் மறைஞானத்தை தர்க்கத்தின் வாயிலாக அணுகுவது போன்ற பல தலைப்புகளில் ஆழமான உரையாடலில் ஈடுபட்டார்.
Subscribe
கிருஷ்ணனை குறித்து சுவாமி கோவிந்த தேவ் கிரி சத்குருவுடன்
அயோத்தியாவில் ஸ்ரீ இராமர் கோவிலை கட்டவும், பராமரிக்கவும் இந்திய அரசால் அமைக்கப்பட்ட டிரஸ்ட் ஸ்ரீ இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி (ஆச்சார்யா கிஷோர் வியாஸ்) ஆவார். மேலும் மக்கள் பகவத்கீதையை படிக்க, பாராயணம் செய்ய, புரிந்துகொள்ள, பின்பற்ற உதவும் கீதா பரிவார் என்ற ஒரு கல்வி நிறுவனத்தையும் அவர் துவங்கியுள்ளார். சுவாமி கோவிந்த தேவ் கிரி மற்றும் சத்குரு பகவத்கீதையின் சம்பந்தம் மற்றும் கிருஷ்ணரின் குணங்கள் குறித்து ஏப்ரல் 12ல் உரையாடினர்.
சத்குரு அமெரிக்காவின் மிகப்பெரிய சமூகவியல் நிகழ்வில் பேசினார்
உலகப் புகழ் பெற்ற பேராசிரியரான டாக்டர். சாம் ரிச்சர்ட்ஸ் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் ஒரு புதுமையான சமூகவியல் வகுப்பான SOC119-ற்கு சத்குரு தன் ஞானத்தை வழங்கினார். ஏப்ரல் 20ல் இந்நிகழ்வு யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பானது. டாக்டர். சாம் ரிச்சர்ட்ஸ் சத்குருவிடம் கர்மா, சமூக மாற்றத்தை அணுகுவதற்கான புதிய வழி மற்றும் தேசங்களின் எல்லைகள் குறித்து கேள்விகளை முன்வைத்தார். தனிநபரின் மாற்றமே நிலையானது, அதுவே சமூக நீதி மற்றும் ஒற்றுமையை காக்க தேவையான தீர்வு என்று சத்குரு விளக்கினார்.
போர்ப்ஸ் பத்திரிக்கையின் மூத்த பங்களிப்பாளர் ஜிம் டாப்சனோடு சத்குரு
சத்குருவின் சமீபத்திய வெளியீடான Karma: A Yogi’s Guide to Crafting Your Destiny என்ற புத்தகம், பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை கையாளும் வழிமுறைகள், மோட்டார் பைக்குகளின் மேல் சத்குரு கொண்டுள்ள விருப்பம், அமெரிக்காவில் உள்ள இனவாதம், நம்பிக்கை மற்றும் தெளிவை உருவாக்கும் வழிமுறைகள் போன்ற பல கேள்விகளை ஜிம் சத்குருவிடம் கேட்டார். சத்குரு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் தான் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறித்து கூறினார். இந்த பேட்டியின் மூலம் வாழ்க்கை குறித்த ஞானியின் கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறை குறித்த ஆழமான தரிசனங்கள் கிடைக்கப்பெற்றன.
எழுத்தாளர் சேத்தன் பகத் சத்குருவின் சமீபத்திய புத்தகமான 'கர்மா' பற்றி...
பிரபல இந்திய எழுத்தாளர் சேத்தன் பகத் 2021 ஏப்ரல் 17ல், ஒரு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியில் சத்குருவை நேர்காணல் செய்தார். இந்த நிகழ்வில், சத்குரு புத்தகங்களை எழுதும் விதம், ஒரு குரு உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும், சத்குரு மற்றும் ஈஷா சமூகத்தைச் சென்றடைந்துள்ள வீச்சு, சத்குருவின் சமையல் கலைத் திறன் போன்ற பல்வேறு சுவாரஸ்யக் கேள்விகளை முன்வைத்து சேத்தன் பகத் சத்குருவிடம் உரையாடினார்
உடல், உயிர் மற்றும் இருப்பு நிலைக்கேற்ப சிறப்பாக செயலாற்றுதல்
நடிகை டிஃப்பனி ஹதீஷ், பாடகர் கெரி ஹில்சன் மற்றும் சமூக செயல்பாட்டாளர் சக்கபார்ஸ் ஆகியோர் சத்குருவுடன் கலந்துரையாடலில் இணைந்தனர்
சக்கபார்ஸ், கெரி மற்றும் டிஃப்பனி ஆகியோர் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் சத்குருவுடன் இணைந்தனர். ஒத்திசைவு, உயிர்சக்தியை மேம்படுத்துதல் மற்றும் எந்த வகையான உணவை உண்ண வேண்டும் போன்ற தலைப்புகளில் அவர்கள் விவாதித்தனர். பார்படோஸில் பிறந்த சக்கபார்ஸ் கிளார்க் ஒரு வெற்றிகரமான உடற்பயிற்சி தொழில்முனைவோரும் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளரும் ஆவார். கெரி ஹில்சன் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகையும் ஆவார். டிஃப்பனி ஹதீஷ் ஒரு எரிட்ரியன்-அமெரிக்க நடிகை ஆவார். ஒரு நகைச்சுவை நடிகையாக, பாடகியாக, எழுத்தாளராக திகழும் இவர், மதிப்புமிக்க எம்மி மற்றும் கிராமி விருதுகளை வென்றவர். 2018ம் ஆண்டில், டைம் பத்திரிகை டிஃப்பனியை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக கூறியது.
சவாலான இந்நேரத்தில் மக்களை மேம்படுத்த சத்குருவின் நேரலை நிகழ்ச்சி
'ஈஷா கொரோனா நடவடிக்கை - இந்தியா' என்ற தலைப்பில், இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் பற்றியும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் நாம் செய்ய வேண்டியவை பற்றியும் ஏப்ரல் 29 அன்று மாலை 6:30 மணிக்கு சத்குரு நேரலையில் உரையாற்றினார்.
கொரோனா சிகிச்சை மையங்களாக ஈஷா வித்யா பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களிலுள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்ளுமாறு சத்குரு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக ஈஷா வித்யா பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
#ஈஷாவித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். -Sg @ishavidhya #BeatTheVirus #COVID
— Sadhguru (@SadhguruJV) April 27, 2021