குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்கள்!
இமாலய பயண தடத்தில் ஒரு குட்டி நகராக விளங்கும் குப்தகாசி, தன்னகத்தே மறைத்து வைத்துள்ள பிரம்மாண்டங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்! குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்களையும் இதன்மூலம் அறியமுடிகிறது!
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 6
இமாலய பயண தடத்தில் ஒரு குட்டி நகராக விளங்கும் குப்தகாசி, தன்னகத்தே மறைத்து வைத்துள்ள பிரம்மாண்டங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்! குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்களையும் இதன்மூலம் அறியமுடிகிறது!
திரு. அஜயன் பாலா:
குப்தகாசி இமயத்துக்கு பெருமை சேர்க்கும் அழகுமிகு மலை நகரம்.
இமயத்தின் மிக முக்கிய ஆன்மீக திருத்தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாத இறைசக்தி கொண்ட திருத்தலம். யோக வாழ்வில் ஈடுபாடு கொண்டோருக்கும் ஆன்மீக சாதகர்களுக்கும் அது கிட்டத்தட்ட எவரெஸ்ட் போல. ஆனால் பார்ப்பதற்கு புறத்தோற்றத்தில் அது சாதாரண பழமைமிக்க கோயிலாக காட்சியளிப்பதால் இதரத்தலங்களின் முக்கியத்துவத்தையும் கவர்ச்சியையும் அது பெறவில்லை.
சுருக்கமாக சொல்வதானால் உள்ளுணர்வுகளின் மூலம் ஆன்மீகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு குப்தகாசி முக்கியமான வாயில்.
கேதார்நாத் செல்லும் மலைப்பாதையில் அமைந்த அந்த சிறிய நகரத்தின் அமைப்பை பற்றி சொல்வதானால் ஒரு கடைத்தெரு அவ்வளவுதான். அதுவும் முழங்கையால் நூறுமுறை அளந்து முடிக்கும்போது அந்த நகரத்தைவிட்டு வெளியேறிவிடலாம். அவ்வளவு குட்டி நகரம். சாலையின் இருபக்கமும் குட்டி குட்டியாக உணவு மற்றும் தங்கும் விடுதிகள், ஸ்வெட்டர் கடைகள், மற்றும் நகரத்துக்கு உண்டான மளிகை, சிகை அலங்காரம், செல்போன் கடையென இத்யாதி இத்யாதிகள்.
அவற்றுக்கு நடுவே குட்டியாக ஒரு மலை படிக்கட்டின் வழி ஏறிப்போனால் குப்தகாசியின் புகழுக்கு காரணமான அந்த புராதனமான சிவன் கோயிலை அடைந்துவிடலாம். நகரத்தின் துவக்கத்திலேயே இருந்த அழகான பல அறைகள் கொண்ட சிறுவிடுதி முன் எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க ஒழுங்கு குழுவினர் மூலம் இரண்டுபேருக்கு ஒருவராக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்னும் அரை மணிநேரத்தில் அனைவரும் கோவிலுக்குள் நடைபெறவிருக்கும் சத்சங்கத்துக்கு ஆஜராக வேண்டும்படி ஒரு தன்னார்வலர் எல்லோருக்கும் கேட்கும் விதமாக கூவிக்கொண்டிருந்தார். எனக்கு கீழ்தளத்தில் ஒதுக்கப்பட்ட அறை நோக்கி அவசரமாக படியில் இறங்கி விடுதியின் பின்புறத்துக்கு வந்தேன்.
Subscribe
கதவை திறந்து சுமைகளை இறக்கிய கையுடன், என் அறைக்கு முன்பிருந்த பால்கனியில் நின்றபோது... வாவ்... பிரமாண்ட மலைவெளியும் முழு வானத்துடன் காட்சியளித்தது. கீழேயும் பச்சையாக சரிந்த மலைவெளியில் பாம்பு போல நாங்கள் வந்த தார்சாலை. மெல்ல குளிர் காற்று வீச துவங்க சட்டென குளிர் அதிகரிக்கத் துவங்கியது. உடல் நடுங்கிக்கொண்டே பலரும் முழு பாதுகாப்பு உடைக்கு மாறினர். ஸ்வெட்டர், ஜெர்கின், தலைக்கு அணியும் மங்கி கேப், கையுறை, ஷூ அணிந்தபடி பலரும் கோவிலுக்கு புறப்பட்டு கொண்டிருந்தனர். நானும் என்னுடைய குளிர்கவசங்களை தரித்துக்கொண்டு வெளியே வந்தபோது வானம் மாறியிருக்க வலப்பக்க மூலையிலிருந்து பெருந்திரளான சற்று கரிய மேக கூட்டம் மெல்ல அந்த பச்சை மலைகள் மேல் பாம்பை போல நுழைய துவங்கியது. அதுவரையிருந்த வெளிச்சம் மெல்ல விலக, குப்தகாசியின் கடை வீதியிலிருந்த படிகட்டு வழி ஏறி கோவிலுக்குள் சென்றோம். படிகட்டு முழுக்க இருபக்கமும் நெரிசலாக வீடுகள் கடைகள்.
அந்த பாழடைந்த கோவிலின் முகப்பு இடிந்த கோபுரத்துக்குள் நுழைந்தபோது ஆகாயத்தை கூரையாக கொண்ட சிறுகோவிலை பார்க்க முடிந்தது. வடக்கத்து கோவிலுக்கு உண்டான சிறு கூம்பு வடிவ கோபுரம் கொண்ட அந்த கோவிலின் கர்ப்ப கிரஹத்தில் சிறிய லிங்கம். அந்த கருவறைக்கும் வாசலுக்குமிடையில் சிறு சதுரவடிவ அகழி. கருவறைபக்கமாக அந்த அகழியிலிருந்து படிக்கட்டில் இறங்கினால் இரண்டு பக்கமும் இரண்டு மிருகங்களின் வாய் திறந்த முகம் ஒன்று பசுவினுடையது. இன்னொன்று யானை முகம் கொண்டது. இரண்டு வாயிலிருந்தும் அகழிக்குள் தண்ணீர் வேகமாக கொட்டிக் கொண்டிருக்க அந்த சத்தம் இடையறாது அங்கு கேட்டுக்கொண்டிருந்தது.
அகழியின் கீழிருந்த இன்னொரு துளை வழியாக தண்ணீர் உடனுக்குடன் வெளியேறிக்கெண்டிருந்ததால் வெற்று தரையில் இருபக்கமும் வேகமாக கொட்டும் தண்ணீரின் ஓசை அந்த சூழலுக்கு ஒரு வினோதமான ஆன்மீக உணர்வை உண்டாக்கியது. அக்கம் பக்கத்தோர் குடத்துடன் வந்து அவ்வப்போது அந்த அகழிக்குள் இறங்கி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர். இங்கு கோவிலை கண்டு தரிசிக்கவோ பூஜைக்கோ பெரிய கூட்டம் எதுவும் இல்லை. முகப்பில் அமர்ந்திருந்த யோகிகள் மட்டும் குத்துகாலிட்டு அமர்ந்தபடி எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கோவிலுக்குள் நுழைந்த அனைவரும் அந்த அகழியை சுற்றி ஆங்காங்கு அமர்ந்து, தியானம், செய்ய துவங்கினர். சில நிமிடங்களில் அங்கு எங்கள் முன் வழக்கமான குட்டி திரை விரிந்து கிடந்தது. அகழியை சுற்றி அமர்ந்தபடி அனைவரும் திரையை பார்த்தவாறு தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள பிரசாந்த் அண்ணா அந்த சத்சங்கத்தை துவக்கும்விதமாக குப்தகாசி பற்றியும், நாளை காலை கேதார்நாத் மலை பயணம் போக போவது பற்றியும் சுருக்கமாக பேசிமுடித்தபின் திரையில் சத்குருவின் முகம் ஒளிரத் துவங்கியது. குப்தகாசியில் சிவன் மறைபொருளாய் உறைந்து இருப்பதாக கூறியபடி, அதற்கு உதாரணமாக ஒரு கதையும் சொல்ல துவங்கினார்.
மகாபாரத கதையில் பஞ்சபாண்டவர்கள் கடைசியாக கௌரவர்களை வென்றதுக்கு அப்புறம் அவங்க கையில படிஞ்ச ரத்தக்கறை அவங்களை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிடுச்சி. நம்ம சொந்த ரத்தங்களின் மாமன் மைத்துனர்களை, குருமகான்களை கொன்ற இந்த பாவத்தை போக்க, அவங்க வழியை தேடினாங்க. அப்ப அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே வழி சிவதரிசனம்தான். அதனால சிவாவை தேடி இமயமலை முழுக்க அலைஞ்சாங்க. ஆனா எங்கையும் அவங்களால சிவனை கண்டுபிடிக்க முடியலை, கடைசியில் அவங்க வந்த இடம் நீங்க இப்ப இருக்கிற இந்த கோவில். இங்கதான் சிவா சப்தமா, மறைபொருளா ஒளிஞ்சிருக்கிறதா கண்டு வணங்கினாங்க. இந்த குப்தகாசிக்கு அப்படி ஒரு பெருமை இருக்கு. மேலும் தான் தொடர்ந்து 29 வருடங்களாக இங்கு வருவதாகவும் ஒவ்வொரு முறையும் தன் அனுபவத்தில் பலவிதமான உயரங்களை தீண்ட குப்தகாசி உதவியிருப்பதாகவும் கூறினார். துவக்க காலங்களில், தான் தனியாக வரும்போது கையில் கொண்டு வரும் சிறு பையை தலைக்கு வைத்து நடைபாதையில் நினைத்த இடங்களில் உறங்கியிருப்பதாகவும் அப்போதெல்லாம் இந்த அளவு விடுதிவசதிகள் இல்லை என்றும் கூறி சிரித்தார். தொடர்ந்து அவர் தன் பழைய அனுபவம் ஒன்றை கூற..
அது ஒரு செப்டம்பர் மாசம்னு நெனைக்கிறேன்.. அப்ப நம்ம தியானலிங்கம் திட்டம் இன்னும் முடிவடையாத சூழ்நிலை. நிறைய நெருக்கடி எப்படியாவது அதை முடிக்கவேண்டிய கட்டாயத்துல இருந்ததால குளிருக்கு தேவையான உடைகளை கூட எடுக்காம அப்படியே கிளம்பி வந்துட்டேன். இங்க நல்ல மழை, உடம்பு நடுங்குது, கடுமையான பசி வேற. சாப்பிட்டு நாலு நாள் ஆயிடுச்சு படுக்கறதுக்கு இடமும் கிடைக்கலை. அப்போ யாரோ சொல்லி ஒரு ஆசிரமத்துக்கு போறேன். அங்க பலஹரிபாபான்னு ஒரு யோகி இருந்தார். அவர் ஒரு ஆப்பிள் பழம் கொடுத்தார். அதை சாப்பிட்டு படுத்தேன். நாலு நாளைக்கு அப்புறம் கிடைச்ச முதல் உணவு அதுதான். அப்புறம் இங்கிருந்து அடுத்த நாள் காலையில காந்த்திசரோவர்ங்கிற ஒரு இடத்துக்கு போய், அங்க தியானத்துல உட்கார்ந்தேன். கால்சட்டையோட வெறும் டீ சர்ட் மட்டும் போட்டுகிட்டு அங்க உட்கார்ந்தேன். கண்ணை மூடினதுதான் தெரியும் என்னை சுத்தி கடுமையான பனிப்பொழிவு. ஆனா உள்ளுக்குள்ள நான் முழுக்கவும் இறைநிலையோட ஐக்கியமாகி இருந்தேன். அப்ப எனக்குள்ள ஒரு நாதம் தொடர்ந்து கேட்டு, உடம்பு முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கிக்கிட்டே இருந்தது. சாயந்தரம் கண் விழிக்கிறப்போ என் உடம்பு முழுக்க பனிக்கட்டியா போர்த்தி கிடக்க, கால்கள் இரண்டும் மரக்கட்டையா இறுகி உணர்வே இல்லாம ஏதோ ப்ரிட்ஜுக்குள்ள ப்ரீசர்லேயிருந்து எழுந்து வர்ற மாதிரி இருந்தது என அவர் சொல்ல சொல்ல மொத்த குழுவும் மெய்மறந்து அந்த அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டது.
இப்போது சத்குரு இந்த அகழி பற்றியும், அதில் கொட்டும் இரண்டு முகவாய்களின் நீர்பற்றியும் விவரிக்க துவங்கினார்.
அதில் யானை முகம் கொண்ட நீர் யமுனையிலிருந்து வருவதாகவும் கோ முகம் கொண்ட நீர் கங்கையிலிருந்து வருவதாகவும், இரண்டு நீரும் எவ்வழியில் இங்கு வருகிறது என யாருக்கும் இதுவரை தெரியாது என்றும் கூறினார். பின் அனைவரையும் கண்கள் மூடி அவர் தியானிக்க சொல்ல அனைவரும் கண்களை மூடி தியானத்தில் இருந்தனர். பின் வலது நாசியிலிருந்து இடது நாசிக்கும் - இடது நாசியிலிருந்து வலது நாசிக்கும் மூச்சை இழுத்து பிராணயாமம் செய்ய சொல்ல அனைவரும் அதை செய்ய பின் அனைவரையும் புருவத்தின் மையத்தில் கவனத்தை குவிக்க சொல்லி உடன் அங்கு அகழியில் கொட்டிக் கொண்டிருக்கும் நீரின் சத்தத்தை மட்டும் கவனிக்குமாறு சொல்ல அதுபோல செய்தபோது அந்த தண்ணீரின் ஓசையில் மனம் குவிந்து ஐக்கியப்பட்டது.
சிலர் அந்த ஆழ்நிலை தியானத்தின் நடுவே அதிர்வலைகள் தாங்காமல் சிவா என கூக்குரலிட்டனர். அந்த இடமே சற்று நேரம் மௌனத்தில் உறைந்துகிடக்க, அந்த தண்ணீரின் சத்தம் மட்டும் இடையறாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்சங்கம் முடிந்த பின்னும் கூட, பலரும் அங்கு தியானத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். நான் வாசலுக்கு வந்து அங்கிருந்த இரு சாமியார்களிடம் அளவளாவ துவங்கினேன். பின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அனைவரும் படிக்கட்டின் வழி விடுதி நோக்கி நடந்து கொண்டிருந்தனர். வீடுகள், கடைகள் அடைக்கப்பட்டிருக்க தொலைதூர மின்விளக்கில் பனி கொட்டிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. கடுமையான குளிரில் நடுங்கிக்கொண்டே நான் இறங்க என் தோளை தொட்ட சேலம் பிரபா அண்ணன்.
என்ன எழுத்தாளரே, இதுக்கே இப்படி நடுங்குறீங்க நாளைக்கு கேதார்நாத் குளிர் எப்படியிருக்கும் தெரியுமா?
எப்படியிருக்கும்?
அடுத்த பதிவில், கேதார்நாத் மலையேற்றத்தின்போது நடப்பதில் தனக்கிருந்த சிரமத்தை விவரிக்கும் எழுத்தாளர், அதற்கு மாற்றாக மேற்கொண்ட குதிரை பயணத்தில் ஏற்பட்ட இடையூறுகளையும் சுவைபட விவரிக்கிறார்.
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org