பெண்கள் கருவுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது தற்போது பெரும் போராட்டமாகவும், பயமும் பதற்றமும் நிறைந்த நிகழ்வாகவும் மாறிவிட்டது. இதனை மாற்ற யோகாவில் வழி உள்ளதா?! ஆம், இக்கட்டுரை அதனை விளக்குகிறது. தொடர்ந்து படித்து, கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை அறிந்திடலாம்!

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. கர்ப்பம் மற்றும் பிரசவம் இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவற்றைச் சிக்கலானதாகவும், அச்சப்படும் ஒன்றாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு மாறிவரும் சூழலும், இந்தக் காலகட்டத்தில் பெண்கள் எவ்வாறு பார்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதைப் பற்றிய அறியாமையும்தான் காரணங்கள்!

கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சியான சூழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

கருவைச் சுமப்பதற்கேற்றவாறு ஒரு பெண்ணின் உடல் பருவ வயதிலிருந்தே மாற்றங்களை அடையத் தொடங்குகிறது. கருவுற்ற பின் இம்மாற்றங்கள் துரிதமாகச் செயல்பட்டு, ஆரோக்கியமான குழந்தை உருவாவதற்கும், எளிதாகப் பிரசவம் நிகழவும் உதவுகிறது.

பெண்கள், இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள, இளம்வயதில் இருந்தே இரும்பு, சுண்ணாம்பு மற்றும் புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை ரத்தச் சோகையைத் தடுப்பதுடன், உறுதியான எலும்பு மற்றும் தசைகளையும், ஆரோக்கியமான உடலையும் தருகின்றன. ஆரோக்கியமான உடலால்தான் சிறந்த கருமுட்டைகளை உருவாக்க முடியும். ஆரோக்கியமான குழந்தை உருவாகவும் இயற்கையான முறையில் பிரசவம் நிகழவும், கருவுற்றிருக்கும் தாயின் உடல் மற்றும் மனநிலை நல்ல நிலையில் இருப்பது அவசியம்.

உணவு

கர்ப்ப காலத்தில் அதிகப் புரதச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகொண்ட உணவுகளை உட்கொள்வது, கர்ப்பம் மற்றும் பிரசவ நேரங்களில் வரும் சிக்கல்களைத் தடுக்கும்.

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், குறிப்பாக நல்ல மூளை வளர்ச்சிக்கும் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். கடலை, சோயா, பருப்பு வகைகள், முட்டைக் கரு போன்றவற்றில் உள்ள கோலீன் எனப்படும் பொருள் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது நிச்சயம் கொடுக்க வேண்டும். இது குழந்தைக்கு ஊட்டச் சத்தாக மட்டுமின்றி, குழந்தையின் மூளையையும் நரம்பு மண்டலத்தையும் உறுதிப்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.

குழந்தை வயிற்றில் இருக்கும்போது ஒரு தாய் எடுத்துக்கொள்ளும் உணவும், மற்றும் பிறந்த மூன்று வருடங்கள் வரை அந்தக் குழந்தை எடுத்துக்கொள்ளும் சத்துள்ள உணவும்தான் அக்குழந்தையை சத்துக் குறைவில் இருந்து காப்பாற்றும்.

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படியே பயணம் மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். இந்நோய்கள் தாய் மற்றும் சேயின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதைத் தடுக்க ஆரோக்கியமான உணவும் மற்றும் உடலுக்குப் பயிற்சியும் தேவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உணவு எப்போதும் உண்ணும் அளவுபோல் இல்லாமல், அதிக அளவில் உண்ண வேண்டும்.

கீரை வகைகள், குறிப்பாக முருங்கை மற்றும் பசலைக் கீரை தினமும் உண்பது நல்லது.

பருப்பு வகைகள், பேரிச்சை, கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

உப்பு குறைவாகச் சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

வெளியே சமைக்கப்பட்ட உணவுகளால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மொத்த உணவில் பாதி பச்சைக் காய்கறிகளாகவும் பழங்களாகவும் இருப்பது அவசியம்.

பயிற்சி

கருவின் சுமையைத் தாங்குவதற்கும், இயற்கையான முறையில் பிரசவிக்கவும் எலும்புகள், தசை மற்றும் தசை நார்கள் உறுதியாகவும், வளையும் தன்மைகொண்டதாகவும் இருக்க வெண்டும். இளம் வயதில் இருந்தே யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக உடலை வைத்திருக்கும் பெண்களுக்குப் பிரசவம் இயல்பாக இருக்கும் வாய்ப்பும் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் வாய்ப்பும் மிக அதிகம். கர்ப்ப சமயத்திலும்கூட உடலை வருத்தாத அளவு வேலைகள் செய்யலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் உறங்கும் பொழுது மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

மனநிலை

நம்முடைய உடலும் மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கிறது.

கர்ப்பக் காலங்களில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படலாம். இதற்கு மரபுவழி மற்றும் வேறு காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் மன அழுத்தம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.

வளரும் கருவின் புலன் உணர்வுகள் வெளிச் சூழ்நிலைகளையும் புரிந்து உணரும் வகையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் புராணங்களில்கூட அபிமன்யு போன்ற உதாரணக் கதைகளைப் பார்க்க முடியும். தாய், கவலையான, மனக்கசப்பான, மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலையில் இருந்தால், அது கருவில் இருக்கும் குழந்தையின் உடலையும் மனதையும் பெரிதும் பாதிக்கிறது. இப்பாதிப்பு குழந்தை பிறந்த பின் வளரும்போது அதனுடைய செயல்களிலும், உணர்வுகளிலும் எளிதாக உணர்ச்சிவசப்படுவது, எரிச்சல் அடைவது, கோபப்படுவது போன்றவையாக வெளிப்படும். இதனால்தான் கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சியான சூழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என நம் கலாசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

உடலில் உள்ள குறிப்பிட்ட நாளமில்லாச் சுரப்பிகளின் அளவு அதிகரித்து கரு வளரவும், மகப்பேறு மற்றும் தாய்ப்பால் சுரப்பதற்கும் உதவுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண் உடல் மாற்றத்துடன் பல்வேறு மன மாற்றங்களையும் அடைகிறாள். இது சிலரை எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், வெகுசிலரை மன சோர்வுடையவராகவும் மாற்றிவிடுகிறது. குழந்தை பிறந்த பின்னரும் இந்த நிலை தொடரலாம். பெண்கள் இதுபற்றிய புரிதலோடு இருந்தால் இந்தச் சூழ்நிலையை எளிதில் கையாள முடியும். கணவரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இதனைப் புரிந்துகொண்டு பெண்களை அனுசரித்து நடக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த நிலை 2 வாரங்களுக்குமேல் தொடருமானால் மனநல மருத்துவரை அவசியம் அணுகவும். இதில் அலட்சியமாக இருப்பது அந்தப் பெண் மற்றும் குழந்தையின் நலவாழ்வு மற்றும் உயிருக்கே பாதிப்பாக முடியவும் வாய்ப்பு இருக்கிறது.

யோகா எவ்வாறு உதவுகிறது?

தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், கருத்தரித்தலில் இருக்கும் சிக்கல்கள் பல சரியாகின்றன. கர்ப்பம் மிக எளிதானதாகவும், பிரசவம் இயற்கையாகவும் நிகழ்கிறது.

பிறக்கப்போகும் குழந்தையின் உடல் மற்றும் மூளை நன்கு வளர பெரிதும் உதவுகிறது.

யோகப் பயிற்சிகள் செய்து வரும் பெண்களின் உடல் பேறு காலத்துக்குப் பிறகு விரைவில் பழைய நிலையை அடைகிறது.

தியானப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தி, மன உளைச்சல் மற்றும் மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. இத்தகைய சூழல் வளரும் உயிருக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

வளரும் உயிரைப் பற்றிய விழிப்பு உணர்வை தாயிடம் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பிறப்புக்கு முன்னால் இருந்து தாய்க்கும் சேய்க்கும் நல்ல பந்தம் உருவாகிறது.

சில காரணங்களால் கர்ப்பிணியைச் சுற்றி விரும்பத்தகாத சூழ்நிலைகள் நிகழ்ந்தாலும், அதனால் பாதிப்படையாத மனநிலையை யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிக்கும். இதனால் குழந்தை பலவிதமான பாதிப்புகளில் இருந்து காப்பற்றப்படுகிறது.

கர்ப்பக் காலத்தில் தீர்த்தக் குண்டம் மற்றும் தியானலிங்க வருகை தாய்க்கும் சேய்க்கும் உடலளவிலும் மன அளவிலும் பல நன்மைகளைச் சேர்க்கின்றன.

கர்ப்பக் காலத்தில் தகுந்த யோகா ஆசிரியரின் அறிவுரையின் படிதான் எந்த யோகப் பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும். புத்தகம் படித்தோ, வீடியோ பார்த்தோ கற்றுக்கொள்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக எவ்வித ஆசனப் பயிற்சிகளையும் செய்யக்கூடாது.

ஈஷாவில், ஷாம்பவி மற்றும் சக்தி சலனக் க்ரியாவில் தீட்சை பெற்றவர்கள், கர்ப்பக் காலத்தில் அந்தப் பயிற்சிகளை எத்தகைய மாற்றங்களுடன் செய்யலாம் என ஈஷா யோக மையத்தைத் தொடர்புகொண்டு (0422-2515300) அறிந்து, அதன்படி மட்டுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

யோகா பற்றிய ஆய்வுகளின் அறிக்கை

யோகப் பயிற்சிகள், பிரசவத்தின்போது ஏற்படும் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. பலர் வலியின் அளவும் குறைந்ததாகக் கூறியுள்ளனர். குறைப் பிரசவத்தின் சதவீதமும் குறைந்துள்ளது.

ஆரோக்கியமான கரு முட்டைகள் உருவாவதற்கும், கரு தரித்த பின்பு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும் பெண்கள் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமோ, அதேஅளவு கவனத்தை ஆண்களும் ஆரோக்கியமான விந்து உருவாக தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மது, சிகரெட், போதை மற்றும் இதர புகைப் பொருட்கள் விந்துவை வீரியம் இழக்கச் செய்யும். ஆரோக்கியமான அடுத்த சந்ததியினரை உருவாக்குவதில் தங்களுக்கு உள்ள பெரும் பங்கை உணர்ந்து குழந்தை பெற நினைக்கும் தம்பதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்!