கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈஷா அவுட்ரீச்!
சமீபத்தில் கஜா புயல் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்த மக்கள் உதவிநாடி தவித்தபோது, முதலில் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர்களுள் ஈஷா அவுட்ரீச் குழுவினரும் அடங்குவர். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈஷா அவுட்ரீச் மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்து சில பதிவுகள்!

'கஜா புயல்' பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை ஈஷா அவுட்ரீச் குழுவினர் முதன்முதலாக அடைந்தபோது, அங்கே அவர்கள் பார்த்த காட்சிகளெல்லாம் பரிதவிப்பும் நம்பிக்கையின்மையும்தான்! கஜா புயலால் தமிழக டெல்டா மாவட்ட மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்தனர். குறிப்பாக, டெல்டா விவசாயிகளின் முக்கிய இயற்கை ஆதாரமாக இருந்துவரும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை, கஜா போகிறபோக்கில் வேரோடு சாய்த்துத் தள்ளிவிட்டுச் சென்றது! இதனால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் அத்தியாவசியமான நிவாரணப் பணிகள் எதுவென அறிந்துகொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உடனடி ஆய்வுக்குப் பின், இரண்டு ஈஷா நடமாடும் மருத்துவமனைகள் Isha Mobile Health Clinics (MHC) சென்றுசேர்ந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் இறங்கி நிவாரண பணியாற்றிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக ஈஷா அறக்கட்டளை இருந்ததை இது காட்டுகிறது.

நவம்பர் 23ம் தேதியிலிருந்து இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் முகாமிட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவக் குழுவினர் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர். மேலும், இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களும் ஈஷா அவுட்ரீச் குழுவினரால் வழங்கப்படுகின்றன.
ஆனால் நிவாரணப் பணிகளில் கூடுதலான உதவிகள் தேவைப்பட்டதால், மூன்றாவது நடமாடும் மருத்துவமனை கூடுதலாக வரவழைக்கப்பட்டு, நவம்பர் 26 முதல் செயல்படத் துவங்கியது.
Subscribe
பேராவூரணி மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் 1வது நடமாடும் மருத்துவமனை மூலம் (MHC 1) ஆனவயல், சேந்தங்குடி, சோழகனார் வயல், சின்னமணி, மல்லிப்பட்டினம், இந்திரா நகர் மற்றும் பேராவூரணியில் பொக்கன் விடுதி, தம்பிக்கோட்டை கீழக்காடு, தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டையில் வடகாடு சுந்தரம் காலனி ஆகிய பகுதிகளில் மட்டும் இதுவரை சுமார் 2194 பேருக்கு மருத்துவ நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

2வது நடமாடும் மருத்துவமனை (MHC 2) ஏனாதி, கட்டாதி, வாட்டக்குடி வடக்கு மற்றும் பழவேறிக்காடு, அத்திவெட்டி மறவக்காடு தளிக்கோட்டை, பலத்தலி-பில்லங்குழி, நடுவிக்கோட்டை, பத்தரங்கோட்டை, வேதாரண்யம், வடமலை மணக்காடு, மணக்காடு, வத்தவபுரம், தகட்டூர் கல்யாணசுந்தரம், தகட்டூர் அதியநடுவிக்கோட்டை, நாகக்குடையன் நடுச்சாலை, நாகக்குடையன் சரஸ்வதி பள்ளி, செட்டிபுலம் தியாகராஜபுரம் போன்ற பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணித்து, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் மட்டும் இதுவரை 2068 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர் 26ல் மூன்றாவது நடமாடும் மருத்துவமனை (MHC 3) கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தஞ்சாவூர் பகுதியில் திருத்துறைப்பூண்டி, கீரக்கல்லூர் மற்றும் குரும்பல் ஆகிய பகுதிகளில் இதுவரை 466 பேருக்கு மருத்துவ நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. எனவே நமது மருத்துவ குழுவினர் மற்ற மருத்துவ உதவிகளோடு, டெங்கு பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கஷாயத்தை முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. எனவே நமது மருத்துவ குழுவினர் மற்ற மருத்துவ உதவிகளோடு, டெங்கு பரவாமல் தடுக்கும் விதமாக நிலவேம்பு கஷாயத்தை முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

புயல் பாதிப்பில் பல்வேறு இழப்புகளைச் சந்தித்த மக்களிடத்தில் முதலில் காணப்பட்ட நம்பிக்கையின்மை, தற்போது சிறிது சிறிதாக மாறி மக்களின் உள்நிலையில் சற்று தெம்பும் நம்பிக்கையும் உருவாகி வருவதை ஈஷா நிவாரண குழுவிலுள்ள தன்னார்வத் தொண்டர்களால் காணமுடிந்தது. நிலவேம்பு கஷாயம் தயாரிக்கும் பணியில் அங்குள்ள கிராம மக்கள் சிலரும் உடன்வந்து தன்னார்வத்தொண்டு புரிந்ததோடு, தங்களுடைய கிராம மக்களுக்கு தாங்களே விநியோகிக்கவும் செய்தனர்.
நிவாரணப் பணிகளில் துவக்கத்திலிருந்தே பல மருத்துவர்களும் ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் தாங்களாக முன்வந்து தங்களது சேவையை வழங்கி வருகின்றனர். ஈஷா அவுட்ரீச் குழுவினர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புயலால் சேதமடைந்த வீடுகள், இயற்கை வளங்கள் என எண்ணற்ற இழப்புகளையும் அங்கு சரிசெய்வதற்கு தொடர்ந்து நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் போதிலும், அந்த மக்களின் தெம்பும் உறுதியும் மீண்டுவருவது நல்லதொரு அறிகுறியாக நமக்கு நம்பிக்கை தருகிறது!
ஆசிரியர் குறிப்பு: தொடர்ந்து நிகழ்ந்துவரும் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக நீங்கள் நன்கொடை வழங்க விரும்பினால், தயவுகூர்ந்து கீழ்க்கண்ட இணைய முகவரிக்குச் செல்லவும்: இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு: http://isha.co/disasterrelief-