நம்பிக்கையுடன் கேட்டு நடக்கும் கலை - வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 3
கொரோனா நோய் தடுப்பு பற்றி அறிந்து கொள்ள மக்கள் எவ்வளவு வெளிப்படையாக, ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை காணும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தினமும் ஆச்சரியமே ஒவ்வொரு கிராமத்திலும் காத்திருக்கிறது. நமக்காக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த எளிமையான அந்த மக்கள் வெளிப்படுத்தும் நம்பிக்கையும், நன்றியுணர்வும் அவர்களது சின்னச்சின்ன செயல்களிலும் பரிவுடன் வெளிப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த நம் உள்ளம் கவர்கிறாள் 8 வயது சிறுமி.

விழிப்புணர்வு நாயகர்கள்
கடும் கோடையின் சீற்றம் சிறு தென்றலின் தாலாட்டில் காணாமல் போவதுபோல, நெஞ்சைத்தொடும் நெகிழ்வான நிகழ்வுகள் நம் தன்னார்வத் தொண்டர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது அனைவருக்குமே காணக்கிடைத்தது. பூலுவப்பட்டி கிராமத்தில் நமது தன்னார்வத் தொண்டர்கள் வழங்கிய கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் ஒன்றை எட்டு வயது சிறுமி ஒருவர் தனது கிராமத்தினர் ஐவருக்கு சத்தமாக படித்துக்காட்டிக் கொண்டிருந்தார். ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அவர் படித்து முடிக்கும் வரை கவனமாக கேட்டறிந்து கொண்டனர் ஐவரும். படித்து முடிக்கும்போது சுற்றியிருந்த அனைவரின் இதயத்தையும் வென்றிருந்தாள், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் குட்டி இளவரசி.
மத்வராயபுரம் கிராமத்தில் இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது.
கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலிபெருக்கி மூலம் கொங்கு தமிழில் சமூக இடைவெளி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் குறித்த அறிவிப்புகளை வழங்கியபடி மெதுவாக சென்று கொண்டிருந்தது ஆட்டோ ஒன்று. அறிவிப்புகளை வழங்கும் குரலில் இருந்து ததும்பிய அக்கறையும், அன்பும் ஒரு மூதாட்டியை அசைத்துவிட்டது. தாம் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அசைவின்றி எல்லா குறிப்புகளையும் கவனமாக கேட்டார். "எவ்வளவு அழகா, நிதானமா, தெளிவா கொங்கு தமிழ்ல பேசுறாங்க" என்று மெதுவாக பேசியபடியே தமது செயலை தொடர்ந்தார்.
Subscribe

அந்த குடியிருப்புப் பகுதி முழுவதையும் ஆட்டோ வலம் வர, மக்கள் நின்று தங்களை தாங்களே கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை அக்கறையுடன் உணர்த்திய அன்புக்குரிய குரலை நின்று கேட்டார்கள்.
மகேஸ்வரன் எனும் தன்னார்வத் தொண்டர் ஒரு சுவற்றில் ஏறி விழிப்புணர்வு சுவரொட்டி ஒன்றை ஒட்ட முயன்றார். அவருக்கு உதவ அந்த பகுதியை சேர்ந்த இருவர் தாமாகவே முன்வந்தனர். மாதம்பட்டி மெயின் ரோட்டில் அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கு அவர்கள் உதவினார்கள். மற்ற கிராமங்களிலும் இதேபோன்ற காட்சிகளை காண முடிந்தது. உதாரணத்திற்கு பச்சாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தாமாகவே முன்வந்து ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு உதவினார்கள். தினமும் தன்னார்வத் தொண்டர்கள் கிராமத்தை அடையும்போது அவர்களும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களை குரல் கொடுத்து அழைத்து, தகவல்கள் அனைவரையும் சென்றடைய உதவினார்கள். வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் தாமாகவே தன் கிராமத்திற்கு தன்னார்வத் தொண்டராக செயல்படத் துவங்கியுள்ள கிரி எனும் இளைஞர், நிவாரணப் பொருட்களை வழங்கும் இடத்திற்கு ஈஷா குழுவினருக்கு முன்னதாகவே வந்து தயாராக காத்திருப்பார். தங்களால் இயன்றவகையில் தாமாகவே முன்வந்து பொருட்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட அனைவருமே பங்கெடுத்தார்கள்.

வைரஸால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களின் உத்வேகம் குறையவில்லை. தொண்டாமுத்தூரில் நமது தன்னார்வலர்கள் களத்தில் உறுதியாக உள்ளனர்.
— IshaFoundation Tamil (@IshaTamil) April 26, 2020
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்கான பணியில் எங்களுடன் இணையுங்கள்.
நன்கொடை செய்க: https://t.co/sLqjwJuB69#BeatTheVirus pic.twitter.com/qfPmJbxajz
கிராமம் கிராமமாக விழிப்புணர்வு நிகழ்வுகள், உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பயணிக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஒட்டுமொத்தமாக கிராமத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் கிடைக்கும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. நமது தன்னார்வலர்களின் நடையில் ஒரு உற்சாகத் துள்ளலை இது கொண்டு வந்துள்ளது மட்டுமில்லாமல், நாம் வழங்கும் விழிப்புணர்வு தகவல்கள் அனைவரையும் மிகவேகமாக சென்று சேரவும் உதவியிருக்கிறது. கொரோனா வைரஸ் விடுத்திருக்கும் இந்த சவாலை நம் கிராம மக்கள் வென்றிட அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவும் நமது முயற்சிகள் மிக நீண்ட தூரம் செல்லும் என்று நாம் நம்புகிறோம்.
கிராமிய இந்தியாவுக்கு நம் உதவி தேவை.ஈஷா தன்னார்வத் தொண்டர்கள்,கிராம சமூகங்களுக்குள் நோய்தொற்று நுழையாமல் தடுக்க,பஞ்சாயத்துகளில் உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவி வருகின்றனர்.நீங்கள் எங்கு இருந்தாலும்,உங்களால் இயன்ற விதங்களில்,அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களை பாதுகாத்திடுங்கள்-Sg pic.twitter.com/6smDFaGG5S
— IshaFoundation Tamil (@IshaTamil) April 13, 2020