சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அதைப் பற்றி சில தகவல்கள்...

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில், தமிழகத்தில் உள்ள 7 ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது இதுவே முதல்முறை. மொத்தம் 101 மாணவ மாணவியர்கள் எழுதிய இந்தத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களின் சராசரி மதிப்பெண் 89 சதவிகிதம்.

இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாக பள்ளியில் சேர்ந்து படிப்பவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களில் பலர் உதவித் தொகை மூலம் கல்வி பயில்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சேலம் வனவாசி ஈஷா வித்யா மாணவியான ருத்ரா, கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களுடன், மொத்தம் 494 மதிப்பெண்கள் பெற்று ஈஷா வித்யா பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்துள்ளார். அவரை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.

ருத்ரா இதைப் பற்றி கூறும்போது, "பாடங்களை படிப்பதில் எப்போதும் எனக்கு மனஅழுத்தம் இருந்தது இல்லை. சத்குருவின் அருளை நான் எப்போதும் உணர்ந்துகொண்டிருந்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. இத்தனை மதிப்பெண்கள் எடுப்பதற்கு, இங்கே இருந்த சூழ்நிலை எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தது" என்றார்.

கோவை சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா மாணவியான கீர்த்தனா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

கீர்த்தனா இதைப் பற்றி கூறும்போது, "நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை அடைய என் பெற்றோரும், ஆசிரியர்களும்தான் எனக்கு ஊக்கமளித்தனர். நான் ஈஷா வித்யா பள்ளியில் 2ம் வகுப்பு முதல் கடந்த 9 வருடமாக படித்து வருகிறேன். இந்தப் பள்ளியில் முதல் நாள் நான் நுழைந்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. இங்கிருக்கும் சூழ்நிலையும், பயிற்றுவிக்கும் முறையும் மற்ற பள்ளிகளை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது. என் பெற்றோரைப் போலவே எங்கள் ஆசிரியர்களும் எங்கள் மீது அன்பையும் அக்கறையையும் பொழிகிறார்கள். இந்நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

சேலம் வனவாசி பள்ளியில் படிக்கும் அர்த்தநாரி என்ற மாணவர் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் 100% ஊக்கத்தொகை பெற்று ஈஷா வித்யாவில் படித்து வருகிறார். அவர் கூறும்போது, "நான் தமிழ் வழிக்கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறியவன். அப்படியிருந்தாலும் ஈஷா வித்யாவின் அணுகுமுறையும், மாணவர்களைக் கையாளும் விதமும் எனக்கு படிப்பில் முழுகவனம் செலுத்த உதவியாக இருந்தது" என்றார்.

100க்கு 100 பெற்றவர்கள்...

ஈஷா வித்யா பள்ளி மாணவர்களில், 17 பேர் கணக்கு பாடத்திலும், 45 பேர் அறிவியல் பாடத்திலும், 24 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

ஈஷா வித்யாவைப் பற்றி...

ஈஷா வித்யா என்பது கிராமப்புறக் குழந்தைகளுக்கான ஈஷா அறக்கட்டளையின் கல்வித் திட்டம். நகரத்துக் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்துக் குழந்தைகளும் கல்வி பெற்று அதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பது சத்குருவின் கனவு. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது (தமிழகம் மற்றும் ஆந்திரா) பள்ளிகள் நடந்து வருகின்றன.

தற்போது இந்த ஈஷா வித்யா பள்ளிகளில் மொத்தம் 5800 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் 70 சதவீத மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் பள்ளியில் சேர்ந்த முதல் வருடத்திலேயே குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். இப்பள்ளிகள் கிராமப்புற மக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.