பாம்பின் வால் தலையை இழுத்துச் சென்றால்... - சிந்திக்க வைக்கும் ஜென்கதை!
‘நல்லதைத் தனக்கு வைத்துக்கொண்டு, நஞ்சை மற்றவனுக்கு வழங்கலாம்‘ என்று திட்டமிட்டால், அந்த நஞ்சில் ஒரு பகுதி வழங்கியவனுக்கு வந்து சேரும். அதேபோல் வளமானதை வழங்கினால், அதில் ஒரு பகுதியும் கொடுத்தவனுக்கு வந்து சேரும். உங்களுக்கு நீங்கள் செய்வது உலகத்துக்குச் செய்ததாகும். உலகத்துக்குச் செய்தது உங்களுக்குச் செய்ததாகும்.
ஜென்னல் பகுதி 24
ஒருநாள் திடீரென்று பாம்பின் வால், அதன் தலைப்பகுதியுடன் வாக்குவாதம் செய்தது. “நீ நகர்வதற்கே நான்தான் காரணம். அப்படியிருக்க, எப்போது பார்த்தாலும் உன்னை நான் பின்தொடர வேண்டுமா? இன்று முதல் நான்தான் வழிகாட்டுவேன்.”
சொன்னதோடு நிற்காமல், பிடிவாதமாக அதன் போக்குக்கு பாம்பை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. ஒரு மலையின் விளிம்புக்கு வந்துவிட்டதை, பார்வையற்ற வால் உணரவில்லை. பாம்பு, அதல பாதாளத்தில் விழுந்து உயிரை விட்டது.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
Subscribe
“மிக எளிமையாகத் தோன்றினாலும், இந்தக் கதைக்குப் பின்னால் ஒரு மாபெரும் அர்த்தம் பொதிந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்துக்கும் ஒரு குறிப்பிட்ட மகத்துவம் இருக்கிறது. வாய்ப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் வரையறைகளும் இருக்கின்றன.
இதை நான் ஏன் செய்ய வேண்டும், அவன் ஏன் செய்யக் கூடாது என்று எல்லாவற்றையும் தர்க்கரீதியாக அணுகினால், வாழ்க்கையின் லயத்தில் இருந்து வெகுவாக விலகிப் போய்விடுவீர்கள். உங்களுக்கு விழிகள் மிக முக்கியமானவை என்பதற்காக, அடுத்த முறை உணவைக் கண்களுக்கு நேரடியாகக் கொடுத்துப் பாருங்களேன்.
பசியால் உடலின் எந்தப் பகுதி சோர்ந்துபோனாலும், வாயிடம்தான் உணவை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. வயிறுதான் ஜீரணம் செய்யும். அதைத் தனக்கென மட்டும் வைத்துக்கொள்ளாமல், உடலின் அத்தனை பகுதிகளுக்கும் சக்தியை அது வழங்கும். ஒன்றில்லாமல் அடுத்தது இல்லை.
உங்கள் உடல் மட்டும் அல்ல, மொத்தப் பிரபஞ்சமும் அப்படித்தான் ஓர் உடலின் வெவ்வேறு பகுதிகளாக இயங்குகிறது. எங்கோ ஒன்று வழங்கப்பட்டால், அது எல்லாவற்றுக்கும் போய்ச் சேர்கிறது. ‘நல்லதைத் தனக்கு வைத்துக்கொண்டு, நஞ்சை மற்றவனுக்கு வழங்கலாம்‘ என்று திட்டமிட்டால், அந்த நஞ்சில் ஒரு பகுதி வழங்கியவனுக்கு வந்து சேரும். அதேபோல் வளமானதை வழங்கினால், அதில் ஒரு பகுதியும் கொடுத்தவனுக்கு வந்து சேரும். உங்களுக்கு நீங்கள் செய்வது உலகத்துக்குச் செய்ததாகும். உலகத்துக்குச் செய்தது உங்களுக்குச் செய்ததாகும்.
இது ஏதோ வறட்டுத் தத்துவம் அல்ல. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவும் மற்றதுடன் தொடர்பு வைத்திருக்கிறது என்பதை விஞ்ஞானம் அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது.
‘இந்தப் பிரபஞ்சத்தில் நான் ஓர் அங்கம்; என்னில் இந்தப் பிரபஞ்சம் ஓர் அங்கம்; என்ற பரிமாணத்தைப் புரிந்து கொண்டால்தான் வாழ்க்கையை முழுமையாகச் சமநிலையில் வாழமுடியும். எல்லாமே ஒன்றுதான். இதைப் பங்கு போட இயலாது. வாழ்க்கையில் இந்தப் பரிமாணம் வந்துவிட்டால், ‘அது இதைவிடத் தாழ்ந்தது, இது அதைவிட உயர்ந்தது’ என்ற பாகுபாடும், ‘அதை எப்படியாவது தவிர்க்கவேண்டும், இதை எப்படியாவது அடைய வேண்டும்‘ என்ற வெறியுணர்வும் விலகி, வாழ்க்கை சரியான சுருதியில் இயங்கும். முழுமையான பரவசத்தைக் கொண்டு தரும்!”
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418