சத்குரு: அர்ஜுனனின் வாழ்க்கையின் ஒரே லட்சியம் உலகிலேயே‌ மிகச்சிறந்த வில்வித்தை வீரனாக வேண்டும் என்பதுதான். மாவீரனாக இருந்தாலும், அர்ஜுனனிடம் தனக்குள்ளேயே மூழ்கி கிடக்கும் குணம் இருந்தது. ஒழுக்கமும், நோக்கத்தில் முழுமையான கவனமும் இருந்தாலும், தன் வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு இல்லாத உணர்வுடனேயே இருந்தான். வில்வித்தையில் தன்னை யாராவது மிஞ்சி விடுவார்களோ என்பதே அவனுக்கு பெருங்கவலையாக இருந்தது. அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மனிதத்தன்மையற்ற செயல்களையும் செய்தான்.

அற்புதமான பல குணங்கள் அர்ஜுனனிடம் இருந்தாலும், பாதுகாப்பின்மை அவனை பீடித்திருந்தது

ஒருநாள், ஏகலைவன் என்ற பெயருடைய சிறுவன் துரோணரை தேடி வந்தான். ஏகலைவன் ஆரிய வம்சத்தை சேர்ந்தவனில்லை, இந்தியாவின் பூர்வ பழங்குடிகளில் ஒன்றான நிஷாதா எனும் பிரிவை சேர்ந்தவன். புராணங்கள் ஏகலைவனை இப்படித்தான் வர்ணிக்கிறது - ஏகலைவனின் நடை சிறுத்தையைப் போலிருந்தது. கருத்த தோலும், சடை முடியுடன், தெய்வீகமான மனிதனாக அதீத வலிமையும் கொண்டிருந்தான். வில்வித்தை கற்றுக்கொள்ளும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினான். துரோணர் "நீ ஷத்ரியன் இல்லை, எனவே உனக்கு கற்றுத்தர முடியாது" என்றார்.

துரோணரின் காலில் விழுந்த சிறுவன், "சமுதாய சூழ்நிலை எனக்கு புரிகிறது. ஆசிர்வாதம் மட்டும் வழங்குங்கள். உங்கள் ஆசிராவாதத்தில் நான் கற்றுக்கொள்வேன்" என்றான். ஏகலைவனின் பணிவையும் நேர்மையையும் கண்ட துரோணர், அவன் தலை மீது கை வைத்து, "நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்" என்றார். காட்டுக்குள் சென்ற ஏகலைவன் ஆற்றிலிருந்து களிமண்‌ எடுத்து, அன்பில் கட்டுண்டவன் போல் துரோணரின் உருவத்தை உருவாக்க துவங்கினான். நீங்கள் ஒரு சிறந்த பாடகராகவேண்டும் என்றால், உங்களிடம் நல்ல குரல் வளம்‌ மட்டும் இருந்தால் போதாது - நல்ல செவிப்புலனும் வேண்டும். கேட்பதில் உங்களுக்கு இருக்கும் திறன்தான் உங்களை ஒரு சிறந்த இசைக் கலைஞராக்குகிறது. இதேவிதமாக, நீங்கள் சிறந்த வில்லாளி ஆகவேண்டும் என்றால், அது உங்கள் கைகளைப்‌ பற்றி மட்டுமல்லாமல் உங்கள் கண்களின் கூர்மையையும்‌ பொறுத்திருக்கிறது‌ - எதையும் நீங்கள் எவ்வளவு கவனமாக பார்க்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு தூரம் உங்கள் கவனத்தை தொடர்ந்து அதிலேயே தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பறவையின் கண்

அர்ஜுனன் இந்த குணங்களை வெளிப்படுத்தியிருக்கிறான். ஒருநாள் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது, துரோணர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வில்வித்தை திறனை பரிசோதித்து பார்க்க விரும்பினார். எனவே ஒரு மரத்தின் உச்சியில் மரத்தாலான கிளி பொம்மையை தொங்கவிட்டு அவர்களை அழைத்து கிளியின் கண்ணுக்கு குறி வைக்கச் சொன்னார். முதலில் கௌரவர்கள், அடுத்து பாண்டவர்கள் என ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர். அவர்கள்‌ அனைவரிடமும் துரோணர் ஒரே கேள்வியை கேட்டார், "நீ என்ன பார்க்கிறாய்?" அவர்கள், "இலை, மரம், மாங்காய், பறவை, வானம்" என பலவற்றையும் கூறினார்கள். துரோணர் அனைவரது பதிலையும் நிராகரித்தார். கடைசியாக அர்ஜுனன் வந்தான். துரோணர், "நீ என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டதும் அர்ஜுனன், "ஒரு பறவையின் கண் தெரிகிறது" என்றான். "அடுத்தகட்ட பயிற்சிக்கு தயாராக இருப்பவன் நீ ஒருவன்தான்" என்ற துரோணர் வில்வித்தையின் நுட்பங்களை கலையாகக் கற்றுத்தரத் துவங்கினார். கண்ணைக் கட்டிக்கொண்டு இலக்கை வீழ்த்துவது, இருளில் இலக்கை நோக்கி அம்பெய்வது - பார்க்காமலே இலக்கை துளைப்பது என பலவும் இதில் அடங்கும். கும்மிருட்டாக்கப்பட்ட ஒரு சிறு அறையில் தினமும் அர்ஜுனனை உணவு உண்ண வைத்த துரோணர் இப்படி விளக்கம் தந்தார், "உணவை பார்க்காமல், இருட்டிலேயே உணவை சரியாக உன் வாய்க்குள் உன்னால் போடமுடியும் என்றால், எதிரியை பார்க்காமலே அம்பை அவன் இதயத்தை ஏன் துளைக்க முடியாது?"

ஏகலைவனின் அசைவற்ற நோக்கம்

இப்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறைகளில் பயிற்சி மேற்கொண்ட அர்ஜுனன் தானே உலகின் சிறந்த வில்வித்தை வீரன் என்று நம்பினான். ஆனால் ஏகலைவன் வந்தான், துரோணரின் ஆசிர்வாதம் பெற்றான், மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டான். துரோணரை சந்திக்க வந்தபோது ஏகலைவன் துரோணரைப் பற்றிய நுணுக்கமான அம்சங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தினான். ஒரு வில்லாளியின் குணம் இதுதான் - அவனது பார்வை எதையும் தவறவிடாது. ஒன்றை பார்க்கும்போதே அதைப்பற்றிய விவரங்களை தவறவிடும் ஒருவர், அம்பெய்யும்போதும் நிச்சயமாக அவற்றை தவறவிட்டு விடுவார். தனக்குள் துரோணரின் உருவத்தை எடுத்துச் சென்ற ஏகலைவன், களிமண்ணில் அவரை வடித்து, அந்த சிலையை வணங்கி தன் பயிற்சிகளை துரோணரின் ஆசியுடன் செய்து வந்தான்.

ஏகலைவனை பார்த்த ஷணத்தில் அர்ஜுனனுக்கு மூச்சு முட்டியது, இந்த கண்களை அவன்‌ அறிவான். இப்படி அசைவில்லா தீர்க்கமான பார்வை கொண்டவர்கள் வைத்த குறி தவறாது என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.

ஒருநாள் பாண்டவர்களும் கௌரவர்களும் வனத்திற்கு வேட்டையாட சென்றார்கள். அவர்களுக்கு முன் அவர்களின் வேட்டை நாய் சென்றது. ஓரிடத்தில் அது திடீரென குறைக்கத் துவங்கியது. வேட்டையாட எதையோ பார்த்துவிட்டுதான் அது குறைக்கிறது என்று அவர்கள் நினைத்துக் கொண்டு அந்த திசையில் சென்றார்கள். திடீரென்று குறைப்பு சத்தம் நின்றது. ஒரு புலியோ அல்லது கரடியோ நாயை கொன்றிருக்கும் என்று நினைத்து நாயைத் தேடத் துவங்கினார்கள். அப்போது, குறைக்க முடியாதபடி தன் வாயை பூட்டி தொடுக்கப்பட்டிருந்த ஆறு அம்புகளை சுமந்தபடி அதுவே வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் நாயைப் பார்த்ததுமே பீமன் கேட்ட முதல் கேள்வி, காட்டுக்குள் துரோணர் இருக்கிறாரா என்பதுதான். ஏனென்றால், அர்ஜுனன் உட்பட வேறு யாராலும் இப்படிச் செய்ய முடியாது என நினைத்தான் பீமன். வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஆறு அம்புகளையும் எய்திருந்தால் மட்டுமே எய்தவரால் இப்படி வாயைச் சுற்றிலும் பூட்டு போட்டிருக்க முடியும். அம்பெய்தது யார் என்று தேடிக்கொண்டு சென்றவர்கள், கருத்த தோலும், சடைமுடியுமாக திடகாத்திரமான உருவத்துடன் சிறுத்தை போலிருந்த இளைஞன் ஒருவனைக் கண்டார்கள். அவன் கையிலிருந்த அம்பு அர்ஜுனனின் நெற்றியை குறிபார்த்துக் கொண்டு இருந்தது. ஐந்து சகோதரர்களையும் பார்த்த ஷணத்திலேயே அவர்களில் அர்ஜுனன் ஒரு வில்லாளி என்பதைக் கண்டுகொண்டு, முதல் ஆளாக குறி வைத்திருந்தான். ஏகலைவனை பார்த்த ஷணத்தில் அர்ஜுனனுக்கு மூச்சு முட்டியது, இந்த கண்களை அவன்‌ அறிவான். இப்படி அசைவில்லா தீர்க்கமான பார்வை கொண்டவர்கள் வைத்த குறி தவறாது என்பது அவனுக்கு நன்றாக தெரியும். தங்கள் நாய்க்கு வாய்ப்பூட்டு போட்டது இந்த வில்லாளி இளைஞனே என்பதை உணர்ந்தான். தனக்கு மிஞ்சிய வில்லாளி ஒருவன் இருக்கிறான் என்பதில் மனம் சோர்ந்தான்.

குரு தட்ஷினை கேட்கும் துரோணர்

"நீ யார்? இதை நீ எங்கே கற்றுக் கொண்டாய்? நீ ஒரு ஷத்ரியனும் இல்லையே!" என தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் அர்ஜுனன். அந்த இளைஞன், "நான் ஏகலைவன். என் ஆசிரியர் துரோணர்" என்றான். நேராக துரோணரிடம் ஓடிச்சென்ற அர்ஜுனன், "இந்த உலகிலேயே மிகச்சிறந்த வில்லாளியாக நான்‌ இருப்பேன் என்று வாக்கு கொடுத்தீர்கள், ஆனால் என்னைவிட வேறு ஒருவனை இன்னும் சிறப்பாக உருவாக்கிமிருக்கிறீர்கள். இது நியாயமில்லை" என்று அழுதான். "என்ன பேசுகிறாய் நீ?" என்று புரியாமல் கேட்டார் துரோணர். "அங்கே காட்டுக்குள் ஒரு இளைஞன் என்னைவிடச் சிறந்தவனாக இருக்கிறான், நீங்களே தனது குரு என்றும் சொல்கிறான். உங்கள் சிலையை வைத்து வில்வித்தை பயிற்சி செய்கிறான்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் அர்ஜுனன்.

"குருவே, உங்களுக்கு என்ன வேண்டுமென நீங்கள் நினைத்தாலும் அது உங்களுடையது" என்றான் ஏகலைவன். துரோணர், "எனக்கு உனது வலது கை கட்டைவிரல் வேண்டும்" என்றார்.

துரோணர் தான் யாரென்பதை காட்ட துவங்கினார். "ஆம், உன்னை மிகச்சிறந்த வில்லாளியாக்க நான் வாக்கு கொடுத்திருந்தேன். இந்த இராஜ்ஜியத்திற்கு நீ முக்கியம், நீ தலைசிறந்த வில்லாளியாகவில்லை என்றால் எனக்கான கூலியே வேண்டாம். உனக்காக நான் இதை சரிசெய்கிறேன்" என்றவாறு ஏகலைவனை தாமே நேரில் சந்திக்க கிளம்பினார். தனக்கு எதையும் கற்றுத்தராத போதும், தான் குருவாக மதிக்கும் துரோணர் தன்னைத்தேடி வந்ததை பார்த்த ஷணமே காலில் விழுந்து வணங்கினான் ஏகலைவன். பேரானந்தத்துடன் அவரை வரவேற்று, காட்டில் கிடைக்கும் பூக்களையும் பழங்களையும் கொடுத்து அவரை உபசரித்தான். ஆனால் துரோணரின் மனதில் வேறு எண்ணம் குடிகொண்டிருந்தது. "நீ அற்புதமான வில்லாளியானது சரிதான். ஆனால் எனது குரு தட்சணை எங்கே?" என்று வினவினார். அன்றைய காலகட்டத்தில், தனக்கு வேண்டிய குரு தட்சணையை பெறாமல், சீடன் கற்றுக்கொண்டதை பயன்படுத்த குரு அனுமதிப்பதில்லை என்பது வழக்கமாக இருந்தது.

"குருவே, உங்களுக்கு என்ன வேண்டுமென நீங்கள் நினைத்தாலும் அது உங்களுடையது" என்றான் ஏகலைவன். துரோணர், "எனக்கு உனது வலது கை கட்டைவிரல் வேண்டும்" என்றார். பாரம்பரிய இந்திய வில்வித்தையில், வலது கை கட்டைவிரலைக் கொண்டே அம்பு செலுத்தப்படுகிறது. வலது கை கட்டைவிரல் இல்லாமல், நீங்கள் வில்லாளி ஆக முடியாது. போர்க்கலைகளில், வாள் அல்லது ஈட்டியை பயன்படுத்துவதில் வல்லவராக இருப்பவர்களைவிட வில்லாளிக்கே அதிக மதிப்பு இருந்தது. ஏனென்றால் இவர்களால் தூரத்திலிருந்தே எதிரியை அம்பால் வீழ்த்தமுடியும். ஆனால் மற்ற ஆயுதங்களை கொண்டு அருகில் சென்றே தாக்க முடிந்தது, இதில் அந்த வீரனது உயிருக்கும் ஆபத்து இருந்தது. மற்றவர்களைவிட வில்வித்தை வீரர்களின் திறன் மிகச்சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்களுக்கும் அவர்களது திறனுக்கும் தனி மதிப்பு இருந்தது.

கடமை தவறாத சீடனாக தனது வலதுகை கட்டைவிரலை துண்டிக்க தனது வாளை உருவினான் ஏகலைவன். ஒரு ஷணம் ஏகலைவனை நிறுத்திய துரோணர் அர்ஜுனன் தடுக்க விரும்புகிறானா என்று பார்த்தார். ஆனால் அர்ஜுனனின் பார்வை சில்லிட வைப்பதாக இருந்தது. எந்த சலனமுமின்றி, சம்பிரதாயமாக ஏதோ நடக்கிறது என்ற பாவனையுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். அற்புதமான பல குணங்கள் அர்ஜுனனிடம் இருந்தாலும், பாதுகாப்பின்மை அவனை பீடித்திருந்தது. உலகிலேயே சிறந்த வில்லாளி ஆகவேண்டும் என்று விரும்பினான் அர்ஜுனன். ஏகலைவனின் கட்டைவிரல் துண்டானதும் மீண்டும் அர்ஜுனனே உலகின் சிறந்த வில்லாளி ஆனான்.

தொடரும்...