ஞானம்... ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்தது!
இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு அறைந்து மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்.
ஜென்னல் பகுதி 28
ஒரு சாது கடைத்தெரு வழியே நடந்துகொண்டு இருந்தார்.
இறைச்சி விற்கும் கடையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரின் குரல் சாதுவின் காதில் விழுந்தது. “பன்றி இறைச்சி வேண்டும். இருப்பதிலேயே எது முதன்மையான பகுதியோ, அங்கே இருந்து வெட்டிக் கொடு!”
கடைக்காரன் குரல் சொன்னது: “இந்த இறைச்சியில் முதன்மையான பகுதி என்று எதுவும் இல்லை”
இதைக் கேட்டதும் சாது ஞானம் அடைந்தார்.
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
ஞானம் அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, எல்லாமே புனிதம் என்று பார்ப்பது. இரண்டாவது எல்லாமே அசிங்கம் என்று பார்ப்பது. இரண்டிலும் பாரபட்சமற்ற தன்மை இருக்கிறது.
இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று எந்தக் கணம் பிரிக்கிறீர்களோ, அந்தக் கணமே ஞானோதயத்துக்கான கதவு அறைந்து மூடப்பட்டுவிடுகிறது. புனிதம் என்றும், அசிங்கம் என்றும் பாகுபாடு எதையும் காட்டாதவர்கள்தாம் மேன்மையான நிலைக்குப் போகிறார்கள்.
‘பன்றி இறைச்சியில் இந்தப் பகுதி ருசியாக இருக்கும். இதில் அவ்வளவு ருசி இருக்காது’ என்று இறைச்சி விற்பவன் பாகுபாடு பார்க்கத் தயாராக இல்லை. இதைக் கவனிக்கும் சாதுவுக்கு, இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையற்ற அம்சம் என்று எதுவும் இல்லை என்பது சடாரென்று உறைக்கிறது. பகுதி பகுதியாகப் பிரிவினை செய்து, ஒரு பகுதியைக் கொண்டாடிக் கொண்டும், மற்றதை அவதூறு சொல்லிக்கொண்டும் உலகத்தைப் பார்ப்பதை விடுத்து, எல்லாவற்றையும் ஒருமித்த ஒன்றாகவே பார்க்கத் தொடங்குவதே ஞானத்துக்கான வழி என்பது விளங்குகிறது.
பிரபஞ்சத்தில் ஒவ்வோர் அணுவும் முக்கியமானதுதான். பிரமாதமானதுதான். ஞானத்தின் நுழைவாயில்தான் என்பது அந்தக் கணத்தில் அவருக்கு ஞானோதயம் ஆகிறது. ஞானம் என்பது அனைத்துப் பாரபட்சங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அந்த ஞானம் ஒரு கசாப்புக்கடை வாசலில் கிடைத்ததுதான் அற்புதம்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418