திரும்பிய திசையெங்கும் அறிவிப்புகள், சர்ச்சையை கிளப்பும் சிகிச்சை முறைகள் என தனக்கே உரிய சாதகப் பாதகங்களோடு நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது புற்றுநோய். வந்தால்தான் தெரியும் என்று சொல்பவர்கள் போய் இன்று அனுபவமாகவே வாழ்ந்து கொண்டிருப்போர் பலர். தன்னை ஆட்டிப் படைத்த புற்றுநோயிலிருந்து மீண்டு வெளியேறிய திருமதி. சித்ராதேவி அவர்களுக்கு புற்றுநோயும் புனிதமானது! எப்படி?

ரி.சித்ராதேவி, சேலம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னுடைய பெயர் சித்ராதேவி. நான் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் வசித்து வருகிறேன். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் ஒரு ஆஸ்துமா நோயாளி. பால்ய பருவத்தில் நான் நன்றாக நடமாடிய நாட்கள் வருடத்தில் ஒருசில மாதங்களே. திருமணத்தின் போதும் ஆஸ்துமா இருந்தது. வயது 40 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆஸ்துமாவின் அதிகபட்ச தாக்குதலுக்கு நான் ஆளாகவே இனி இதிலிருந்து விடுதலை இல்லையென்று டாக்டர்களால் கைவிடப்பட்டேன். வாழ்க்கையே இருண்டுவிட்டது என்ற மனநிலையில் வேதனையின் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டேன்.

ஈஷா வகுப்பாலும் சத்குரு அவர்களாலும் புற்றுநோயையும் புனிதமாக ஏற்கும் மனநிலையைப் பெற்றேன்.

2000ம் வருடம் நவம்பரில் நான் என் வீட்டின்முன் வருத்தத்தோடு அமர்ந்து இருந்தபோது என் முன் வந்து விழுந்தது ஒரு துண்டு பேப்பர். அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப்போகும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. அதுதான் ஈஷா யோகா வகுப்பிற்கான நோட்டீஸ். வகுப்பின் முதல் நாளிலேயே எனது மனதில் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. ஒரு சில நாட்களிலேயே எனக்குள் சில மாற்றங்கள் உண்டானதைக் கண்டேன். தொடர்ந்து மேல்நிலை வகுப்புகள் அனைத்திலும் கலந்துகொண்டேன். அப்போது சத்குருவை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அவரது தரிசனம் எனக்குக் கிடைத்தவுடனேயே எனக்குள் மனதளவிலும், உடலளவிலும் பல மாற்றங்கள் உண்டானதை உணர்ந்தேன். நான் உணர்ந்ததை பலரும் உணரவேண்டும் என்று தன்னார்வத் தொண்டராக பல வருடங்கள் பணியாற்றினேன், பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் கடந்த 2008ம் வருடம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றபோது ‘உனக்கு மார்பக புற்றுநோய்’ என்று அதிர்ச்சியான தகவலை தந்தார் டாக்டர். சத்குரு சொல்வது போல அந்த தகவலை எந்தவித பதட்டமோ, பயமோ, வருத்தமோ இன்றி ஏற்றுக் கொண்டேன். அறுவை சிகிச்சை, கீமோ, ரேடியேசன் என்று தொடர்ந்து 6 மாதங்கள். சிகிச்சையை தாங்க முடியாத தருணங்களில் எல்லாம் சத்குருவின் உருவம் என் கண்முன்னே தெரியும். வாய் ‘சம்போ’ என்று உச்சரிக்கும். அப்போதெல்லாம் என்னுள் ஒரு தெளிவு பிறப்பதை நான் நன்கு உணர்ந்தேன். ஈஷா வகுப்பாலும் சத்குரு அவர்களாலும் புற்றுநோயையும் புனிதமாக ஏற்கும் மனநிலையைப் பெற்றேன்.

ஈஷாவின் உயர்ந்த தன்மையை மற்றவர்களும் உணரவேண்டும் என்ற நோக்கில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வகுப்பில் கலந்துகொள்ள வைத்துள்ளேன். அவர்களில் பலரும் உடலளவிலும் மனதளவிலும் இன்று நிறைவுடன் இருப்பது கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன்.

அனைவரும் வந்து தியானம் செய்வதற்காக சுமார் 40 பேர் அமர்ந்து தியானம் செய்யும் அளவிற்கு எங்கள் வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளேன். இவை அனைத்தும் வெற்றிகரமாக நடக்க முழுமுதற்காரணமாய் இருப்பவர் என் கணவர். ஈஷாவின் குடும்பத்தில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்து சேவை செய்வது எனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

நான் உடலளவில் பல விதத்தில் பாதிக்கப்பட்டாலும் எங்கள் குடும்பம் ஆனந்தமாக, அமைதியாக, சந்தோஷமாக, எளிமையாக, தெளிந்த நீரோடையாக செல்கிறது என்றால் அது சத்குரு அவர்களின் ஆசியும் அருளும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

waterrose @ flickr