IYO-Blog-Mid-Banner

சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கெல்லாம் பதற்றமடைகின்றனர். ஆகமொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்துகொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும்போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்திருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும்போதோ, மாறும்போதோ அல்லது அதிலிருந்து விலகும்போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய்விடுகிறது.

கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மனநலக் கேடுகளை விளைவிக்கிறது.

பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை.

பதற்றம் உடலுக்குக் கெடுதலா?

ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும்கூட! இது எதிர்பாராத ஆபத்திலிருந்தோ, தாக்குதலிலிருந்தோ நம்மைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, கவனத்துடன் இருக்கச் செய்து, வேலைகளைத் திறம்படச் செய்ய உதவுவதுடன், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தூண்டுகோலாகவும் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் எல்லா நேரமும் பதற்றமாக இருக்கும்போது உடல், மனஅளவில் பல உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

‘பேனிக் அட்டாக்’ (Panic Attack)

குறுகிய கால அவகாசத்துக்குள் (10 நிமிடங்களுக்குள்) பதற்றத்தின் அறிகுறிகள் பன்மடங்காக உச்சத்தை அடையும். மூச்சடைப்பு, மூச்சுத் திணறல், சாகப் போவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

ஃபோபியா (Phobia) அதிக பயம்

மற்றவர்கள் சாதாரணம் என்று நினைக்கக் கூடிய சூழ்நிலைகள், குறிப்பிட்ட சில இடங்கள், பொருட்கள் அல்லது மிருகங்களிடம் சிலருக்கு அளவு கடந்த பயம் இருக்கும். அதிக ஜனநெரிசல் கொண்ட இடங்களையோ அல்லது எளிதில் வெளியே செல்ல முடியாத இடங்களையோ (உதாரணமாக ரயில், பேருந்து) கூட சிலர் தவிர்க்க நினைப்பார்கள்.

ஆனால் இவ்வாறு தவிர்ப்பது, பயத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, குறைக்காது. பதற்றப்படுவோம் என்று ஒவ்வொரு சூழ்நிலையையும் தவிர்த்தால் அதிலேயே பொழுது கழிந்துவிடும். வாழ்க்கை இன்னமும் சிக்கலாகத்தான் போகும்.

பதற்றமும் உடல் நலமும்

பதற்றம் பல உடல் உபாதைகளுடன் தொடர்பு உடையது. பதற்றம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த அறிகுறிகளும் தீவிரமாகி உடலளவில் நெஞ்சு படபடப்பு, மூச்சுவாங்குதல், மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலில் வலி, சோர்வு, நடுக்கம், முகம் வெளிறிப் போதல், வியர்த்தல், மரத்துப் போதல், வாய் உலர்தல், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

எப்பொழுதும் கவலையுடன் இருத்தல், கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதில் எரிச்சலடைவது, மனச் சோர்வு போன்ற மன உபாதைகளும் ஏற்படும்.

பதற்றம் காரணமாக வரும் உடல், மன உபாதைகள் வேறு சில நோய்களுக்கும் பொதுவானவையாக இருக்கின்றன. எனவே பதற்றம் காரணமாக இந்த உபாதைகள் வரும்போது, வேறு ஏதோ நோய் வந்துவிட்டதாக தவறாகக் கணிக்கக் கூடாது.

பதற்றம் ஏற்படக் காரணங்கள்
  • மரபுவழி காரணங்கள் முக்கியமானவையாகக் கூறப்படுகின்றன. குடும்பத்தினர் யாருக்காவது இது இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • மூளையில் உள்ள சில புரதங்கள் குறைவினாலும் பதற்றம் ஏற்படலாம்.
  • வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள், உதாரணமாக, விபத்து, இறப்பு போன்றவை மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை அதிகப்படுத்தும்.
  • மன அழுத்தமும் பதற்றத்தை அதிகரிக்கும்.

பதற்றத்திலிருந்து எப்படி வெளிவருவது?

  • புரிந்து கொள்ளுதல்
  • உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பதற்றத்தின் அறிகுறிகள், எந்தவிதமான சூழ்நிலையில் ஏற்படுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எப்படிச் சரியாகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை தினமும் எழுதி வைப்பதன் மூலம் உங்கள் பதற்றத்தைப் பற்றிய புரிதல் அதிகமாகும். அதை எப்படிச் சரிசெய்வது என்றும் பார்க்க முடியும்.

உணவுமுறை

அதிகமாக காபி பருகுவது பதற்றத்தை அதிகரிக்கும்.

பழக்கம்

புகை பிடித்தல், மது அருந்துதல் பதற்றத்தை அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை

எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பது, உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், மன அழுத்தத்தின் காரணம் அறிந்து திறம்பட சமாளிப்பது பதற்றத்தைச் சரிசெய்ய உதவும்.

பதற்றம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். மருந்துகள் தவிர கௌன்சலிங் (Counselling), காக்னிடிவ் பிஹேவியர் தெரபி (Cognitive Behaviour Therapy) என பலவிதமான கலந்தாய்வு சிகிச்சைகள் உள்ளன.

உடற்பயிற்சி, யோகா போன்றவையும் பெரிதும் உதவும். ஒரு நாளைக்கு 30 நிமிடம் விகிதம் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

  • ஆசனம், மூச்சுப்பயிற்சிகள், தியானம் அனைத்துமே பதட்டத்தைப் பெருமளவில் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • பதற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படும் புரதக் குறைவுகளை யோகா சரி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • யோகப் பயிற்சிகளால் உடலும், மனதும் எப்பொழுதும் தளர்வு நிலையில் இருப்பதால் எளிதில் பதற்றம் அடையமாட்டோம்.
  • யோகா, விழிப்புணர்வை அதிகரிப்பதால் உடலிலும், மனதிலும் ஏற்படும் நிகழ்வுகளில் அதிக கவனத்துடன் இருக்க முடிகிறது. பதற்றத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து சரிவரக் கையாள முடிகிறது.