நோயின் பிடியில் மாமியார்! மனிதநேயம் காட்டிய மருமகள்! - ஈஷா செய்த அற்புதம்!
ஏதோ ஒரு காரணத்தால் உயிர்க்கொல்லும் நோய் வந்துவிட்டால், குடும்பத்தில் இருப்பவர்கள் அதனை பெரும் பாதிப்பாகவும் துன்பமாகவும் பார்ப்பது இயல்புதான். ஆனால், அதையும் தாண்டி நாம் அந்த சூழலில் வளர முடியும் என்பதற்கு உதாரணமாய் இங்கே ஒரு ஈஷா அன்பரின் அனுபவ பகிர்வு!
ஏதோ ஒரு காரணத்தால் உயிர்க்கொல்லும் நோய் வந்துவிட்டால், குடும்பத்தில் இருப்பவர்கள் அதனை பெரும் பாதிப்பாகவும் துன்பமாகவும் பார்ப்பது இயல்புதான். ஆனால், அதையும் தாண்டி நாம் அந்த சூழலில் வளர முடியும் என்பதற்கு உதாரணமாய் இங்கே ஒரு ஈஷா அன்பரின் அனுபவ பகிர்வு!
நான் ராதா. இல்லத்தரசி. சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக வசிக்கிறேன். நான் என் அடையாளங்களைத் துறக்க ஆரம்பித்தது அதாவது ஈஷா யோகா சாம்பவி செய்தது 2011 மார்ச் - பச்சையப்பா கல்லூரியில் சத்குருவுடன் 3 நாட்கள் வகுப்புக்குப் பின்னர்தான்.
அந்த 3 நாட்கள் என் வாழ்வையே மாற்றிப் போட்டது. சத்குருவை நேரில் கண்ட நாள் முதல் இன்றுவரை எனது வாழ்வை அவரே வழி நடத்துகிறார் என மனப்பூர்வமாக உணர்கிறேன். 2 வருடங்களில் சம்யமா வகுப்பும் முடித்தேன். இது வரை பல ஏற்ற இறக்கங்கள். ஆனால் எனது வாழ்வு சந்தோஷங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் நிறைந்திருக்கிறது.
Subscribe
காலையில் பயிற்சி, பள்ளி செல்லும் மகள், கல்லூரி செல்லும் மகன், அலுவலகம் புறப்படும் கணவர் என என் வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாகவே நகரும். எங்கள் வீட்டில் மாலையில் சந்நிதி பூஜை தினமும் மிகுந்த மனநிறைவைத் தரும்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு நாள் எனது மாமியாருக்கு Pancreatic Cancer என அறிந்தோம். அவருக்கு இரண்டே மகன்கள் - என் கணவர் மூத்தவர். அவர்கள் இருவரும் வருத்தமடைவதை நான் அன்றுதான் முதல்முறையாகப் பார்த்தேன். 2 வருடங்களே எனது மாமியார் உயிர் வாழ்வார் என்றார் டாக்டர். சென்னையில் மருத்துவம் செய்துகொள்ளலாம் என்று எனது வீட்டிற்கு வந்தார்கள். அன்றிலிருந்து இரவு பகல் பாராது அனைவரும் அவருக்குச் சேவை செய்தோம்.
முதல் ஒரு மாதம் அவர்களுக்கு கேன்சர் என்றே தெரியாமல் வைத்திருந்தோம். பின்னர் அவரே யூகித்துவிட்டார். ‘எனக்கு ஏதோ பெரிய வியாதி வந்துவிட்டது’ என்றார். அன்று, எனக்கே வந்ததுபோல் வருத்தப்பட்டேன். எங்கள் வீட்டில் உள்ள சத்குரு போஸ்டரில் உள்ள வாசகம், “உங்கள் மனிதநேயம் உச்சத்திற்குச் செல்ல நீங்கள் அனுமதிக்காவிட்டால் பிறகு தெய்வீகம் என்பது வெற்றுப் பேச்சுதான்,” இதை தினமும் காலையில் வாசித்துவிட்டு மனதில் நிறுத்திக்கொண்டுதான் அந்த நாளைத் துவங்குவேன். நாள் முழுக்க சத்குரு chanting கேட்பேன்.
மிகுந்த மன உளைச்சலும், மருத்துவமனை - வீடு என அலைச்சலும், மாமியாரின் உடல் வலியால் அவர் படும் வேதனையும் எங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினாலும், நான் அமைதியுடனும் அன்புடனும் நாளை நகர்த்த முடிந்தது. என் குழந்தையை எப்படி வளர்த்தேனோ, அப்படி எனது மாமியாருக்கும் சேவை செய்தேன்.
எப்போது மருத்துவமனை செல்வோம், எப்போது வீடு திரும்புவோம் என்றே சொல்ல முடியாது. இந்தச் சேவை, எனக்குள் நான் வளர்வதை எனக்குக் காட்டியது. மருத்துவமனையில், “அருணா அம்மா, இது உங்க மகளா?” என்று கேட்கும்படி அவரைக் கவனித்துக் கொண்டேன். செப்டம்பர் 17 நிலைமை கை மீறியது. நீர் ஆகாரம் மட்டுமே அவர்களால் உட்கொள்ள முடிந்தது. லட்சங்களில் செலவு செய்தும் எந்தப் பலனும் இல்லை.
சிறிது நாட்களில் தலைகூட அவர்களுக்குச் சரியாக நிற்கவில்லை. வலு இழந்து விட்டார்கள். மூன்றரை மாதமும் நானே குளிப்பாட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, மருந்து கொடுப்பது, ஆயில் போட்டு விடுவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்தேன். எனது கணவர், என் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்தார். எனது மாமனார் மற்றும் குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்தனர். எனது மாமியாரால் நடக்கக்கூட முடியவில்லை. எனது மாமனாரும் அவரை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
அன்று என் மகளுக்கும், மகனுக்கும் தேர்வு. அதனால் அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, பாதி சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக மருத்துவமனை சென்றேன். மாமியார் வலியால் அழுதவாறே உறங்கிப் போனார். மதியம் நான் சாப்பிட்டு விட்டு அவருக்கு நீராகாரம் மட்டும் ஊட்டினேன். அக்டோபர் 12 மஹாளய அமாவாசை அன்று மருத்துவமனையில் எங்களைப் பிரிந்தார். ஏதோ பேச நினைத்தவர் என்னைப் பார்த்தவாறே உயிர் பிரிந்தார். அவர் உயிர் பிரிந்தபோது, நான் தனியாக அந்த அறையில் அவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். மிகவும் அமைதியாக அவர் உயிர் பிரிந்தது. என் மனதில் வெறுமை குடிகொண்டிருந்தது.
எந்த முன்முடிவும் இன்றி நான் செய்த அந்தச் செயல்களுக்குக் காரணம் சத்குருவின் வாசகங்களே! அவையே என்னை எனக்குள் வளர்த்தன. நான் செய்த ஈஷா வாலண்டியரிங் என்னை மாற்றி இருப்பதை உணர முடிகிறது. சத்குருவுக்கு நன்றி.