மிளகு பயன்கள் (Milagu benefits in tamil)
நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்னெ மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உமையாள் பாட்டி நமக்காக சொல்ல வருகிறாள். முழுமையாகப் படித்து மிளகு தரும் மருத்துவ பயன்களை அறிந்துகொள்ளலாம்!
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 11
நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்னெ மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உமையாள் பாட்டி நமக்காக சொல்ல வருகிறாள். முழுமையாகப் படித்து மிளகு தரும் மருத்துவ பயன்களை அறிந்துகொள்ளலாம்!
"பாட்டி...! பாட்டி...!" அழைத்தபடியே உமையாள் பாட்டியின் குடிலுக்குள் நுழைந்தேன்.
"என்னப்பா... வா... வா...! பாட்டி என்ன வெச்சிருக்கா பாரு?!" என்று கேட்டுக்கொண்டே அஞ்சறைப் பெட்டியில் கையை விட்டு, மிளகுகளை கைவிரல்களின் ஆதரவோடு அள்ளினாள்.
"என்ன பாட்டி இன்னைக்கு மிளகு ரசமா?! இல்ல... பெப்பர் சிக்கனா?!" ஆர்வக்கோளாறில் பாட்டி சைவம் என்பதை மறந்து கேட்டுவிட்டேன்.
"பெப்பர் சிக்கனெல்லாம் நான் சாப்பிட்டதில்ல... ஆனா... பெப்பர் சாப்பிட்டா என்னென்ன பலன் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும்!" என்று சிரித்தாள் பாட்டி.
"ஓ இது வேறயா....?! நான் மிளகு வாசனைக்காவும் ருசிக்காகவும் போடுற பொருள்னுதான் நினைச்சிருந்தேன். காலைல சாப்பிட்ட வெண்பொங்கல்ல கூட எல்லா மிளகையும் எடுத்து வெச்சிட்டுதான் சாப்பிட்டேன். நீங்க சொல்றதப் பாத்தா, நான் மிளக மிஸ் பண்ணிட்டேன்னு நெனக்கிறேன்! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாட்டி, அப்போதான் நான் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரியும்!"
Subscribe
பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்
"பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்னு சொல்லுவாங்க...! அந்த அளவுக்கு மிளகுல விஷத்த முறிக்கக் கூடிய தன்மை இருக்கு..." பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடை மறித்து,
"பாட்டி... நாம எதுக்கு பகைவன் வீட்ல போயி சாப்பிடணும்! நம்ம வீட்ல சாப்பாடு இல்லேன்னா ஹோட்டல்ல போயி சாப்பிட வேண்டியதுதான?!" கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக இருந்தாலும் ஒரு நகைச்சுவைக்காகக் கேட்டேன்.
"இப்போல்லாம் ஹோட்டல்கள்ல சாப்பிடறதும் பகைவன் வீட்ல சாப்பிடுற மாதிரிதான். நெறய ஹோட்டல்கள்ல அப்படித்தான் சமையல் பண்றாங்க!" என்று சொல்லி பதில் நையாண்டி செய்ததும் பாட்டியிடம் நான் சரண்டர் ஆனேன்.
"சரி... சரி... மிளகு பத்தி முழுசா சொல்லுங்க...!"
மிளகு நன்மைகள் (Milagu benefits in tamil)
"மிளகோட குணங்கள்னு பாத்தா... அது விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. அப்புறம்... பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கு. திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா அந்த பிரச்சனைகள்ல இருந்து விடுபடலாம். திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்குது. இந்த திரிகடுகு சூரணம் நம்ம ஈஷா ஆரோக்கியாவிலயே நாம வாங்கிக்க முடியும்"
"ஓ... அப்படியா?! சூப்பர்...!"
"இன்னும் மிளகுல எவ்வளவோ பயன் இருக்கு. நீ டெய்லி பல் தேய்ப்பேல்ல?!"
"பாட்டி இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!"
"அதுக்கில்லப்பா... நீ டெய்லி பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்ச்சிட்டு வந்தா பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்! அப்புறம்...
சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தா மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்!"
"என்ன பாட்டி... இவ்வளவு சின்ன மிளகுக்குள்ள இவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கா?!"
"பின்ன... சும்மாவா வெள்ளக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தான்?! இந்த மிளகுக்காகத்தான் வந்தான்!" என்று சொல்லியபடியே மிளகை அம்மியில் நுணுக்கத் துவங்கினாள் பாட்டி.
நான் என்னுடைய ஸ்மார்ட் ஃபோனில் மிளகைப் பற்றி மேலும் அறிய கூகுல் செய்துகொண்டிருந்தேன்.
மிளகின் மேலும் சில மருத்துவ பயன்கள்:
மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள்
தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்
மருத்துவ குறிப்புகள்:
(உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளுதல்)
- பசியின்மை - தினசரி மிளகு பொடி 1/2 கிராம் வெதுவெதுப்பான நீரில் பருகிவர பசி உண்டாகும். உமிழ்நீரை பெருக்கி உணவை செரிக்க உதவும்.
- செரியாமை - மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் எடுத்துவர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.
- ஜலதோஷத்தால் வந்த இருமல் - மிளகு கஷாயத்தில் பனை சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.
- உடல் சூட்டினால் வரும் இருமல் - மிளகு பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து, கண்மையளவு 2 (அ) 3 நாட்கள் எடுக்க தீரும்.
- உடல் நச்சுத்தன்மை நீங்க, விஷக்கடி நஞ்சுகள் நீங்க - மிளகு 10, வெற்றிலை 1, அருகம்புல் 1 கைப்பிடி - இடித்து போட்டு குடிநீரிட்டு குடித்து வரவும்.
- பூரான் கடி - வெற்றிலை சாறு 180 மிலியுடன் மிளகு 35 கிராம் சேர்த்து 1 நாள் முழுவதும் ஊற வைத்து பின் ஊறிய மிளகை உலர்த்தி பொடி செய்து பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை இருவேளை 2 விரல் அளவு வெந்நீரில் எடுத்து வர பூரான் கடி விஷம் உடலில் நீங்கும். (பத்தியம்: உப்பு, புளி நீக்கல்)
- புழுவெட்டுக்கு - மிளகு, வெங்காயம், உப்பு - அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்கும் (புண் ஏற்பட்டால் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பூசிவர புண் ஆறிவிடும்)
- மிளகு இரசம் - தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்யும்.
- ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் - மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.