ஈஷாவும் நானும் - நம்மாழ்வார்
தன் பூத உடலைத் துறந்தாலும், தனது தொண்டுள்ளத்தால் செயற்கரிய செயல்கள் செய்து, புகழ் உடலால் இன்றும் என்றும் நம்முடன் வாழும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ஈஷாவுடன் தான் கொண்ட பிணைப்பைப் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சுவைபடப் பகிர்ந்துகொண்ட பதிவு இங்கே!
 
 

இயற்கை விஞ்ஞானி

தன் பூத உடலைத் துறந்தாலும், தனது தொண்டுள்ளத்தால் செயற்கரிய செயல்கள் செய்து, புகழ் உடலால் இன்றும் என்றும் நம்முடன் வாழும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ஈஷாவுடன் தான் கொண்ட பிணைப்பைப் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சுவைபடப் பகிர்ந்துகொண்ட பதிவு இங்கே!

நம்மாழ்வார்:

பத்து ஆண்டுகளாக எனக்கும் ஈஷாவுக்கும் தொடர்பு என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. பத்து ஆண்டுகளாக நான் ஈஷாவில் கரைந்துகொண்டு இருப்பதை உணர்கிறேன். ஆன்மீகத்தின் மீது பற்றுகொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கு விளக்கம் அளிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆன்மீகத்தை சக்தியின் வெளிப்பாடாக சத்குருவிடம்தான் உணர்ந்தேன்!

ஐந்தாறு கிலோ மீட்டர் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய பிறகும் உடல் களைப்படையவில்லை.

குருவைப் பார்ப்பதற்கு முன்பு எதிராஜூலு, ஞான செல்வம், தர்மராஜூ என்று மூன்று சீடர்களைச் சந்தித்தேன். எனது பணி சிறக்க, என்னை மேலும் வலிமை வந்தடைய, யோகா முழுமைப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்கள். அதுவே வாழ்வில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது!

எனக்குக் கொடுத்த படிவத்தில், ‘எதற்காக இப்பயிற்சிக்கு வந்தாய்?” என்ற கேள்விக்கு இயற்கை உழவாண்மை, சுற்றுச்சூழல் காப்பு இவை இரண்டிலும் ஈடுபாடு கொண்டுள்ளேன். இவற்றை மேலும் வலுவாகவும் விரிவாகவும் செய்வதற்கு எனக்கு வலிமை சேர்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்று எழுதியிருந்தேன். தொடக்க நாள் முதலே சத்குருவின் கனிவான கண்காணிப்புக்கு ஆளானேன்!

‘குருவில்லா வித்தை பாழ்’ என்பது அவ்வை மொழி. யோகா என்பது கம்பி வளைப்பது போல, உடம்பை முறுக்குவது அல்ல. உடலை, மனதை, உள்ளத்தைப் பக்குவப்படுத்தி மனிதரை முழுமையாக்குவது என்பதை அறிமுக உரையிலேயே குரு உணர்த்தினார். தன்னார்வத் தொண்டர்கள் சத்துள்ள இயற்கை உணவை அளித்தனர். யோக ஆசிரியர்கள் உடலை வளைத்து, மடக்கி, யோகாசனப் பயிற்சியும் (ஹட யோகம்) மூச்சுப் பயிற்சியும் அளித்தார்கள், அவை இன்னும் என்னுடன் வருகின்றன.

ஐந்தாறு கிலோ மீட்டர் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய பிறகும் உடல் களைப்படையவில்லை. சத்குருவோடு விளையாடிக்கொண்டு இருந்தோம். அந்த நினைவு வரும்போதெல்லாம் இப்போதும் என்னுள் வியப்பு மேல் எழும்புகிறது.

ஈஷா பயிற்சியில் அடிப்படையானது தன்னை அறிதல்தான். இது என் உடம்பு, இது என் தலை என்று சொல்லும்போது, ‘நான் என்பது என் உடம்பு இல்லை’ என்ற புரிதலை குரு உணர்த்தினார். எனக்கு மகிழ்ச்சியைத் தருவது, எனக்கு முன்னால் இருப்பவை அல்ல; எனக்கு உள்ளேயே இருப்பவை. இதை விளக்குவதற்கு சத்குரு ஒரு கதையையும் சொன்னார்...

1

ஒரு வீட்டில் ஒரு குடும்பம் வசித்தது. இரண்டு படுக்கை அறை, படிப்பறை, சமையலறை, உணவறை, வரவேற்பறை, கழிவறையுடன் கூடிய மாடி வீடு அது. பெற்றோர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். எது வரை இந்த மகிழ்ச்சி? பக்கத்தில் ஒருவர் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தும் வரை!

சமூகப் பிரச்னைகளில் இருந்து ஆன்மீகம் தனித்திருக்க முடியாது என்று அறிவித்து கிராமப்புற வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்படுத்துவதில் ஈடுபாட்டை சத்குரு ஏற்படுத்தினார்.

புதுமனை புகுவிழா அழைப்பும் வந்தது. அங்கு போனபோதுதான் தெரிந்தது. அவர்கள் மூன்று படுக்கை அறை உள்ள வீடு கட்டியுள்ளார்கள். அதோடு மகிழ்ச்சி தொலைந்தது. மறு நாளே கடனை, உடனை வாங்கி கொத்தனாரைப் பிடித்து மேல்பகுதியை இடித்து மூன்றாவது படுக்கை அறையையும் கட்டினார்கள். அந்தோ பரிதாபம்? அஸ்திவாரம் புது நிலைக்கேற்ப அமைக்கவில்லை. ஆதலால் முழு வீடும் இடிந்து சரிந்தது.

இது பொழுதுபோக்குக்குச் சொன்னதல்லை. மனிதர்கள் அடிப்படையில் செய்ய வேண்டியதை ஒதுக்கி வைத்துவிட்டு ஆசைகளை மட்டுமே வளர்த்துக்கொண்டு போகும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். மகிழ்ச்சி என்பது உள்ளத்துள் எழுவது. பொருள் சேகரித்துக் குவிப்பதாலோ, அதனை நுகர்வதாலோ வருவது அல்ல என்ற புரிதல் வந்ததும் விரிந்து பரந்த உலகம் நமதாகிவிடுகிறது.

சத்குருவின் உறவில், உரையாடலில், எழுத்துக்களில் இந்தத் தெளிவைப் பெறுகிறோம். ஈஷாவின் தொண்டர்கள், நிர்வாகிகள், துறவிகள், யோக ஆசிரியர்கள், குழந்தைகளுடன் பழகும் போதெல்லாம் இதை உணர்கிறேன். எங்கு போனாலும் உணவு, உறைவிடம், உபசரிப்பு, எங்கெங்கும் ஆனந்தம்.

கடந்த காலம் இனி வரப் போவது இல்லை! எதிர்காலம் என்பது கனவு! எப்படி இருக்கப் போகிறது என்று எவராலும் கணிக்க முடியாதது நிகழ்காலம். அதாவது, இந்தக் கணம் நம் கையில், இந்தக் கணத்தில் வாழப் பழகுவோம். விழிப்போடும் ஆனந்தத்தோடும் ஒவ்வொரு கணமும்!

சமூகப் பிரச்னைகளில் இருந்து ஆன்மீகம் தனித்திருக்க முடியாது என்று அறிவித்து கிராமப்புற வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்படுத்துவதில் ஈடுபாட்டை சத்குரு ஏற்படுத்தினார்.

பாலை நிலத்தில்கூட பனைமரம் நிற்கும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பனைமரமே காய்ந்து போகிறதே! அப்படியானால் தண்ணீர் சிக்கல்தான் இங்கு தலையாய சிக்கல். இதற்குத் தீர்வு மரம் நடுவதுதான். தமிழ்நாட்டின் கால் பகுதியை காடாக்குவோம் என்று சொல்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகள் 12 கோடி மரங்கள் நடுவோம்’ என்று அறிவித்தவர், முதலாவதாக மனிதர் மனங்களில் மரம் நடச் சொன்னார்.

‘என்ன, 12 கோடி என்பது மிகப் பெரிதாகத் தெரிகிறதா? இதைக் கேளுங்க! தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6 கோடி! ஆளுக்கு 2 மரக்கன்று நட்டுப் பாதுகாத்தால், 12 கோடி. ஒவ்வொருவரும் தனக்கொரு மரம் நடவேண்டும். நாட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும்!’ என எளிதாக்கினார்.

மரம் நட ஆரம்பித்த முதலாண்டில் ஒரே நாளில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்று ஈஷாவில் முடிவு எடுத்தபோது, பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், உழவர், தொண்டர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சென்னையில் நடந்த அதன் முடிவு விழாவில் மல்லிகைப் பூமாலையை (மிகுநேர்த்தியாகத் தொடுக்கப்பட்டது) சத்குரு எனக்கு அணிவித்தார். உள்ளம் சிலிர்த்தது. கூடவே சத்குரு சொன்னார், ‘‘இது கடையில் வாங்கியது இல்லை. ஈஷா மையத்திலேயே தொடுத்துக் கொண்டு வந்தது’’. என் இதயத்தில் சத்குரு வலுவாக ஒரு இடம் பற்றிக்கொண்டார்!

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

அற்புதம்