எலக்ட்ரீசியனாக இருந்தவர் இயற்கை விவசாயியாக மாறிய கதை!
“இயற்கையான காய்கறிகளை குழந்தைகள் உண்பதில் மகிழ்ச்சியும், மக்களுக்கு இயற்கை காய்கறிகளை கொடுப்பதில் திருப்தியும் உள்ளது” என உளமகிழ்ந்து சொல்கிறார் திரு.பொன்முத்து
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 9
ஈஷா விவசாயக்குழு பல்லடம் வட்டம் கருடமுத்தூர் அருகில் வடமலைப்பாளையத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.பொன்முத்து அவர்களை சந்தித்தது.
எலக்ட்ரீசியன் தொழில் செய்துவந்த பொன்முத்து அவர்கள், கடந்த 5 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். தொடக்கத்தில் வேதி விவசாயம் செய்துவந்த இவர், பத்மஸ்ரீ பாலேக்கர் அவர்களிடம் இயற்கை விவசாயம் கற்றுக்கொண்ட பிறகு, முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார்.
இயற்கை விவசாயத்திற்கு மாறியது குறித்து உணர்வுப்பூர்வமாக சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“வேதி விவசாயம் செய்யும்போது செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பது வழக்கம், அப்போது பூச்சிமருந்து அடித்தபின் குளித்துவிட்டு குழந்தைகளுக்கு உணவூட்டினாலும் கூட, ‘பூச்சி மருந்து அடித்து விட்டு வந்தோமே! அதனால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ?’ என்ற அச்சம் ஏற்படும்.
‘இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா?’ என்று யோசித்தபோதுதான் வரப்பிரசாதமாக ஈஷா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சி அமைந்தது; கண் கண்ட தெய்வமாக பத்மஸ்ரீ பாலேக்கர் எனக்கு தோன்றினார்” இவ்வாறு உணர்ச்சிபொங்க பகிர்கிறார் திரு.பொன்முத்து.
“அட நம்ம பொன்முத்து அண்ணா மாறி மனசுல இயற்கை விவசாயம் செய்யோணும்னு ஆசை இருந்துச்சாக்கும் பொறவு அல்லாருக்குமே வழி வந்துருமுங்க. ஊசிய காந்தம் இழுக்கும் உத்தமன சிநேகம் இழுக்கும்னு சும்மா சொன்னாங்கோ?! உங்க மனசுலயும் அந்தமாறி ஆசைய வச்சிருந்தீங்கன்னா ஈஷா விவசாய குழுவ தொடர்புகொள்ளுங்கண்ணோவ்!”
பொன்முத்து அவர்கள் இரண்டரை ஏக்கரில் தென்னை பயிர் செய்து வருகிறார்; பூர்வீக சொத்தாக விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதபடி இருந்த 3 ஏக்கர் நிலத்தில், ஒன்றரை ஏக்கர் நிலத்தை மட்டும் தற்போது திருத்தி சீர்செய்து காய்கறிகள் பயிர்செய்து கொண்டிருக்கிறார்.
பயிர்செய்வதற்கு முன்பு அடியுரமாக எதையும் போடவில்லை, ஜீவாமிர்தம் மட்டும் மாதத்திற்கு மூன்று முறை விடுவதாகக் கூறுகிறார்.
ஜீவாமிர்தம் தயாரிக்க பயறு மாவு வாங்கும் செலவைக் குறைக்க, பழைய பூச்சியடித்த பயறுகளை வாங்கி அரைத்துக் கொள்வதாக கூறுகிறார்.
Subscribe
சர்க்கரைச் செலவை குறைக்க பழக்கடைகளில் கனிந்து அழுகிப்போன மாம்பழங்களை வாங்கி அதன் சாற்றை இரண்டு மூன்று மாதத்திற்கு பயன்படுத்தியதாக கூறுகிறார்.
“என்ற பெரிய வூட்டு ஆத்தா சொல்லுவாங்கோ, கீர மசிச்ச சட்டியில ரசம் வச்ச மாறின்னு! நம்ம பொன்முத்து அண்ணா நல்ல வெகராமாத்தே செய்றாப்டிங்கோ. அட ஜீவாமிர்தம் செய்றதுகூட ஒரு கலைதானுங்கண்ணா. என்ற பண்ணைக்கு ஒருநாள் அல்லாரும் வாங்கோ... அதய எப்படி செய்யோணும்னு செஞ்சு காட்டிப்போடுறேன்.”
காய்கறிகள்
தனது நிலத்தில் சின்ன வெங்காயம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இவர், ஊடுபயிராக முள்ளங்கி, பீட்ரூட், செடி அவரை, மிளகாய் போன்றவற்றை பயிர் செய்துள்ளார்.
காய்கறிகளில் தொடர்ந்து வருமானம் பெறுவதற்காக ஊடுபயிர் மற்றும் தொடர் சாகுபடி (Relay cropping) முறையை பின்பற்றுகிறார். சின்ன வெங்காயம் நட்ட 40வது நாளில் தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவைகளை நட்டு விடுகிறார்.
அடுத்த வயலில் முள்ளங்கியுடன் தக்காளி சேர்த்து பயிர் செய்கிறார். இதில் முள்ளங்கி அறுவடைக்கு வரும் போது தக்காளி காய்க்கத் துவங்கும்! மற்றொரு வயலில் தக்காளிக்கு பதில் வெண்டையையும் போட்டிருக்கிறார்.
இத்தகைய தொடர் சாகுபடி முறையால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக உள்ளது என்றும், வேலையாட்களுக்கு தொடர்ந்து வேலை தர முடிவதோடு வருமானமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்.
காய்கறிகளை ஆர்கானிக் கடைகளுக்கும், அதிகம் விளையும் போது கடைகளுக்கும் கொடுக்கிறார்.
நேரடியாக குழு வாடிக்கையாளர்களுக்கு, வகைக்கு அரை கிலோ என்ற அளவில் 10 வகையாக காய்கறிகளை பைகளில் கட்டி பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கிறார், இதன் மூலம் இவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
“ஏனுங்க கேட்டீங்களா... பல்லக்கு ஏறோணும்னா அதுக்கு உன்னி ஏற சீவன் வேணுமுங்க! அதுமாறி விவசாயம் செய்யோணும்னா வியாபாரம் செய்யுற டெக்னிக்கையும் தெரிஞ்சு வச்சிருக்கோணுமுங்க. நம்ம அண்ணா அதுல வெகரமாத்தேன் இருக்காப்டிங்கோ.”
பண்டமாற்றுமுறை
கொடிக் காய்கறிகளை இவர் பயிர் செய்வதில்லை, எனவே அமராவதிகவுண்டன் புதூரில் உள்ள இயற்கை விவசாயி திரு.கார்த்திகேயன் அவர்களிடமிருந்து பாகல், புடல், பீர்க்கன் போன்றவற்றை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முள்ளங்கி, பீட்ரூட், கத்தரி போன்றவற்றை அவருக்கு கொடுத்து காய்கறிகளை பரிமாறிக் கொள்கிறார், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எல்லாவிதமான காய்கறிகளையும் பெறுகிறார்கள்.
மீதம் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் திருத்தி ‘5 அடுக்கு மாதிரி’ செய்ய இருப்பதாக ஆர்வமாகக் கூறுகிறார்.
ஆள் பிரச்சினை இல்லை
மனைவி மற்றும் தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பு இருப்பதால் உற்பத்தி மற்றும் விற்பனையை நன்றாக செய்ய முடிகிறது என்று கூறும் இவர், தொழிலாளர்களை தன் குடும்பத்தில் ஒருவர்போல கவனித்துக் கொள்வதால் தனக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இருப்பதில்லை என்று கூறுகிறார்.
“மாவுக்கு தக்கதான் பணியாரம் மனசுக்கு தக்கதான் மனுச உறவுன்னு சொன்னது நம்ம பொன்முத்து அண்ணா விசயத்துல ரொம்ப கரெக்ட்டா இருக்குதுங்கண்ணா. நம்ம மனசுல அன்பிருந்தா இடமிருந்தா பொறவு மனுசங்க நமக்காக வேல செய்யுறதுக்கு கண்டிப்பா வருவாங்கண்ணா!”
வேதி விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை உண்டபோது போது தனது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவுகள் ஏற்படும் என்றும், தற்போது இயற்கை விவசாய காய்கறிகளை உண்பதால் கடந்த 9 மாதங்களாக மருத்துவ செலவுகளே இல்லை என்றும் திரு.பொன்முத்து கூறுகிறார்.
“இயற்கையான காய்கறிகளை குழந்தைகள் உண்பதில் மகிழ்ச்சியும், மக்களுக்கு இயற்கை காய்கறிகளை கொடுப்பதில் திருப்தியும் உள்ளது” என்று கூறிய திரு. பொன்முத்து அவர்களுக்கு, மூடாக்கு குறித்து ஒருசில ஆலோசனைகளையும், ஈஷா விவசாய இயக்கம் சார்பாக வாழ்த்துக்களையும், தெரிவித்துக்கொண்டு குழுவினர் விடைபெற்றனர்.
தொடர்புக்கு: திரு.பொன்முத்து -88831 04200