ஆஸ்துமா, தீர்வு இங்கே
நாட்பட்ட நோய்களில், தவிர்க்க முடியாத நோயாக மாறிவிட்டிருப்பது "ஆஸ்துமா" எனும் நுரையீரல் நோய். இந்திய மக்களில் 17 சதவிகிதத்திற்கும் மேலானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதோ அதற்கான சிகிச்சை முறையையும், யோகா மூலம் இதை குணப்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.

நாட்பட்ட நோய்களில், தவிர்க்க முடியாத நோயாக மாறிவிட்டிருப்பது "ஆஸ்துமா" எனும் நுரையீரல் நோய். இந்திய மக்களில் 17 சதவிகிதத்திற்கும் மேலானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதோ அதற்கான சிகிச்சை முறையையும், யோகா மூலம் இதை குணப்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.
டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:
ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது.
ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும்.
தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால், நாளடைவில், நுரையீரல் விரிவடையும் தன்மையை இழந்து நுரையீரலில் பல்வேறு நோய்கள் வருவதற்குக் காரணமாகிவிடும்.
ஆஸ்துமா தாக்குதலின்போது சுவாசக் குழாய்கள் சுருங்குகின்றன. இதனால், உள்ளே மற்றும் வெளியே செல்லும் காற்று தடைபடுகிறது. இதனுடன் சேர்ந்து அதிகச் சளி சுரக்கிறது. இது மூச்சு விடுவதற்குச் சிரமமாகவும், இருமலாகவும், மூச்சிரைப்பாகவும் வெளிப்படும். பதட்டமும் பயமும் ஏற்படும்போது மூச்சு விடுவதின் சிரமம் மேலும் அதிகமாகும்.
ஆஸ்துமா தாக்குதலின்போது ஒவ்வொரு முறையும் உடலும் மனமும் சோர்ந்துவிடும். தகுந்த கவனிப்பும் சிகிச்சையும் கொடுக்காவிட்டால், அடுத்த தாக்குதல் சுலபமாக ஏற்படும். பலருக்கு முதல் தாக்குதல் மோசமான அனுபவமாக இருப்பதால், அடுத்த தாக்குதல் பற்றிய பயமும் பதட்டமுமே மேலும் தாக்குதல் வரக் காரணமாக அமைந்துவிடுகிறது.
Subscribe
சிகிச்சை முறைகள்:
ஆங்கில மருத்துவம்: சுவாசக் குழாய்களின் இறுக்கத்தைக் குறைக்கவும் அவற்றில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் பல்வேறு மருந்துகள் உள்ளன. இவை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரியாக உட்கொள்ள வேண்டும். ஆஸ்துமாவுக்கான மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. இவை உங்கள் ஆஸ்துமாவை மேலும் மோசமடையச் செய்யலாம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகளும் ஆஸ்துமாவுக்கு உதவுவதாக அறியப்படுகிறது.
யோகா எப்படி உதவுகிறது?
பிராணாயாமப் பயிற்சிகள்
- நுரையீரல்களுக்கு நன்கு பயிற்சியளித்து பலப்படுத்துகிறது.
- சாதாரணமாகச் சுவாசிக்கும்போது, முழு நுரையீரலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிராணாயாமப் பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதால், நுரையீரல்களின் பல்வேறு பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் எளிதாகச் செல்கிறது.
- நுரையீரல்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகிறது.
ஆசனப் பயிற்சிகள்
- இவற்றை மேற்கொள்வதன் மூலம் நம் உடல் பலமடைகிறது.
- நம் உடல் தளர்வு நிலையை அடைகிறது.
- சீரான சுவாசம் ஏற்படுகிறது.
- தொடர்ந்த ஆஸ்துமா தாக்குதலினால் நெஞ்சுக்கூட்டில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கிறது.
தியானம்
- நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வுநிலையைக் கொடுக்கிறது. இதனால் பயமும் பதட்டமும் குறைந்து எந்த வகையான மன அழுத்தம் தரும் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மனதையும் உடலையும் தயார் செய்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா தாக்குதலை நாம் பெருமளவில் தடுக்க முடியும்.
- "அம்" (Aum) மந்திர உச்சாடணையின்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் உடலையும் மனதையும் சமநிலையில் வைக்கிறது. இதனால் ஆஸ்துமாவின் பாதிப்பு குறைவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. (இந்த உச்சாடணத்தை தகுந்த வழிகாட்டுதலுடன் கற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.)
சத்குரு என்ன சொல்கிறார்?
சத்குரு:
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராணாயாமம் ஒரு வரப்பிரசாதம். பிராணாயாமம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆஸ்துமாவிலிருந்து மட்டுமல்லாமல் வயிற்றுப் புண், இருதய நோய்கள் மற்றும் முதுகு வலியிலிருந்து குணமாகி இருக்கின்றனர்.
இன்றைக்கு மருத்துவர்கள், உடலில் ஏற்படும் நிகழ்வுகள் மனதைப் பாதிப்பதாகவும், மனதில் ஏற்படும் நிகழ்வுகள் உடலைப் பாதிப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கும் பெரிய அளவில் உடல் மற்றும் மனம் சார்ந்த (Psychosomatic disease) வியாதிகள் வருகின்றன. பதட்டம் ஒருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், மற்றொருவருக்கு நுரையீரலில் ஆஸ்துமாவாகவும் வெளிப்படுகிறது.
உடல் மற்றும் மனம் - இந்த இரண்டு பரிமாணங்கள் வன்பொருள் (Hardware) மற்றும் மென்பொருள் (Software) போல உள்ளன. software மற்றும் hardware நன்றாக இருந்தாலும் அதை நீங்கள் மின்சாரம் என்னும் ஒரு சக்தியில் இணைக்கும்போதுதான் அவை இயங்கும். அதைத்தான் நாம் பிராணமயகோசம் அல்லது சக்தி உடல் எனக் கூறுகிறோம்.
யோகாவின் பெரும்பான்மைப் பணியே இந்த பிராணமயகோசத்தை சமன் செய்து அதை முழுமையான அதிர்வு நிலையில் வைத்திருப்பதுதான். உங்களுடைய சக்தி உடல் குறிப்பிட்ட சமநிலையிலும் முழு அதிர்விலும் இருக்கும்போது, உடல் அளவிலும் மனதளவிலும் நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் உணவு வகைகளைப் பொறுத்தவரையில் வாழைப்பழம், பலாப்பழம், சமைத்த பீட்ரூட் ஆகியவை ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. அவரைக்காய் ஆஸ்துமாவை மோசமடையச் செய்யும். குறிப்பாக, பால் மற்றும் தயிர் போன்றவை உடலில் சளி ஏற்படுத்தக்கூடியவை. பலருக்கு பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினாலே, ஆஸ்துமா போய்விடுகிறது. நீங்கள் பால் பொருட்கள் சாப்பிட்டுக்கொண்டும் அதே நேரத்தில் ஆஸ்துமா பற்றியும் குறைப்பட்டுக்கொண்டால் பயன் இல்லை!