உணவு நஞ்சாகிவிட்டது. உயிர் மூச்சும், காற்றும் கரியாகிவிட்டது. நீரும் கெட்டுவிட்டது, நிலமும் கெட்டுவிட்டது. மொத்தத்தில் இந்த பூமி ரணகளமாகிக் கிடக்கிறது.

காயப்பட்டுக் கிடக்கும் பூமியில் வாழும் மனிதர்கள் மட்டும் எப்படி சுகப்பட முடியும்?

இருப்பது ஒரு பூமி. காப்பது நம் கடமை. காயப்பட்டுக் கிடக்கும் பூமிக்கு மருந்து தடவி காயங்களை ஆற்றி முழுமையாக வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

இந்த அரும்பணியை, இறைப்பணியை ஏற்று செயல் வடிவம் கொடுக்க, ‘ஜீரோ பட்ஜெட்’ சேனாதிபதிகள் ஈஷாவின் துணையோடு சபதம் ஏற்றுள்ளது, மகிழ்ச்சி தரும் நம்பிக்கை செய்தி.

ஜீரோ பட்ஜெட் சந்திப்பு கூட்டங்கள்!

மதுரைக்கு அருகில், முக்குளம் ஏகாம்பரம் மற்றும் பொள்ளாச்சி ஆனைமலை பொம்முராஜ், வள்ளுவன் அவர்களின் தோட்டத்தில் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ சேனாதிபதிகள் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்த உரையாடல்களைக் கேட்டபோது, “தன்னலமில்லா 100 இளைஞர்களைக் கொடுங்கள்; இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியதுதான் நினைவிற்கு வந்தது.
‘‘100 என்ன? நாங்கள் 1000 பேர் தயாராகவே இருக்கிறோம், நல்வழி காட்டுங்கள்’’ என்று அவர்கள் கூறிய வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை பிறந்தது. பூமித்தாயை உயிர்ப்பிக்க நம்பிக்கை தரும் நல்ல மைந்தர்கள் கிடைத்துவிட்டார்கள்.

எந்தப் பயிராக இருந்தாலும், இயற்கை அல்லது ரசாயன விவசாயமாக இருந்தாலும் பயிர்கள் உணவு தயாரிக்க, வளர, விளைச்சல் கொடுக்க 98.5 சதவிகிதம் சூரியஒளியும் காற்றும்தான் தேவையான மூலப்பொருட்கள்! மீதி 1.5 சதவிகிதம்தான் பூமியிலிருந்து பெறப்படுகிறது. இதை ஆழமாக மனதில் பதிவுசெய்து கொண்டாலே போதும், இயற்கை விவசாயத்தின் மீது முழு நம்பிக்கை கிடைத்துவிடும்.

முதன்முதலாக ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கும்போது, சில சந்தேகங்கள், நம்பிக்கையின்மை எழுவது நியாயம்தானோ... ‘ஜீரோ பட்ஜெட்’ சேனாதிபதிகள் கலந்துரையாடல்களிலும் அந்த சந்தேகக் குரல்கள் எழுந்தன.

சுபாஷ் பாலேக்கரின், ‘ஜீரோ பட்ஜெட்’ சித்தாந்தங்களில் மிக முக்கியமானது நான்கு அம்சங்கள். அதாவது, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மூடாக்கு, வாப்ஸா ஆகிய இந்த நான்கும் ஒரு தேரின் 4 சக்கரங்கள் போல! ஏதாவது ஒரு சக்கரம் முறிந்து போனால் எப்படி தேர் ஓடாதோ, அதுபோல இந்த நான்கில் ஏதாவது ஒன்றைச் சரியாகச் செய்யவில்லை என்றாலும், ஜீரோ பட்ஜெட் இயற்கைவிவசாயம் தோற்றுவிடும். தவறு, செயல்பாட்டில் இருக்கலாமே ஒழிய, சித்தாந்தத்தில் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் தயாரிப்பது பற்றி பாலேக்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த 4 சக்கரங்களில் மிகமிக முக்கியமானது மூடாக்கு (Mulching). மூடாக்கு மட்டும் சரியாக அமைந்துவிட்டால் போதும். நான்காவது சக்கரமான வாப்ஸா - அதாவது ஈரப்பதம் தானாகவே சரியாக அமைந்துவிடும். வாப்ஸா என்பது ஒரு நுணுக்கமான சங்கதி. ஈரப்பதம், சூழல் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அதாவது (Micro Climatic Zone) நுண்ணுயிரிகள் வாசம் செய்ய ஏற்ற சூழல் உருவாக்க வேண்டும்.

மூடாக்கின் முக்கியத்துவங்கள்!

மூடாக்கில் 2 வகைகள் உண்டு. ஒன்று உயிர் மூடாக்கு (Live Mulching); இரண்டாவது காய்ந்த இலை, தழைகள் மூடாக்கு (Dead Mulching). அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் இலை, தழைகள், வைக்கோல் போன்றவற்றை பூமி மீது பரப்பி, சிறிது ஜீவாமிர்தக் கரைசலைத் தெளித்துவிட்டால், விரைவில் மக்கி, மண்ணில் கரிமத்தைக் கூட்டிவிடும். கரிமம் தண்ணீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. கரிமம் கூடக் கூட, நுண்ணுயிரிகளும், மண்புழுக்களும் பெருகும். மூடாக்கு சரியாக அமைந்துவிட்டால், 4-வது சக்கரமான, வாப்ஸா தானாகவே அமைந்துவிடும்.

உயிர்மூடாக்கு என்பதை, இரட்டை இலைத் தாவரங்களான துவரை, தட்டை, பயிறு, உளுந்து, கொள்ளு போன்றவற்றை அடர்த்தியாக விதைத்து உருவாக்கலாம். இந்தப் பயிர்கள், களையைக் கட்டுக்குள் வைப்பதோடு, காற்று மண்டலத்தில் இருக்கும் நைட்ரஜனை எடுத்து பயிர்களுக்கு வழங்கும் வேலையையும் செய்கிறது. வளர்ந்து முடிந்த பிறகு வயலிலேயே மடிந்து மக்காகிவிடுவதால், பயிர்களுக்குத் தேவையான சத்துக்களையும் கொடுக்கிறது.

ஆக, ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தில் மூடாக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது என்று விரிவாக, தெளிவாக ஒருங்கிணைப்பாளர் மகேஷ் விளக்கம் அளித்தார். சூரியஒளி, பசுமை இலையில் பட்டால் அது உணவாக மாறுகிறது. அதே சூரிய ஒளி வெறும் தரையில் பட்டால் பூமி சுடாகிறது. பூமியை பசுமை போர்வையால் மூடி வைக்க வேண்டும். ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையை, இயற்கைவிவசாயியினால் மட்டுமே அடைக்க முடியும்.

விவசாயத்தின் சூட்சுமங்களை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கைபிறக்கும்.

எந்தப் பயிராக இருந்தாலும், இயற்கை அல்லது ரசாயன விவசாயமாக இருந்தாலும் பயிர்கள் உணவு தயாரிக்க, வளர, விளைச்சல் கொடுக்க 98.5 சதவிகிதம் சூரியஒளியும் காற்றும்தான் தேவையான மூலப்பொருட்கள்! மீதி 1.5 சதவிகிதம்தான் பூமியிலிருந்து பெறப்படுகிறது. இதை ஆழமாக மனதில் பதிவுசெய்து கொண்டாலே போதும், இயற்கை விவசாயத்தின் மீது முழு நம்பிக்கை கிடைத்துவிடும்.

சிக்கல்களும் தீர்வுகளும்

“இயற்கை விவசாயம் செய்வதால் இப்போது பிரச்சனை இல்லீங்க, விற்பனையில்தான் பிரச்சனை. உரியவிலை கிடைக்கவில்லை. அதற்கு ஏதாவது வழி செய்யுங்கள்!” என்று சிலர் வினா எழுப்பினர்.

உண்மைதான், பொருளாதாரரீதியாக வெற்றி பெறாதஎந்தச் சித்தாந்தமும் நீண்டகாலம் நிலைத்து நிற்காது.

ஜீரோ பட்ஜெட் இயற்கைவிவசாயச் சித்தாந்தம் நிலைபெற வேண்டுமானால், அதற்கான சந்தை மிக முக்கியம். சிலர் மதிப்பு கூட்டி விற்கலாம் என்றனர். சிலர் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம் என்றனர். இல்லை, இல்லை ஏற்றுமதியெல்லாம் செய்யக்கூடாது, நம் மக்கள் நல்ல உணவை, நஞ்சில்லா உணவை உண்ணட்டும். நம் மக்களுக்குத்தான் விற்க வேண்டும். நம் மக்கள் மருந்து தெளித்து பளபளக்கும் காய்கறிகள் பார்த்து மயங்கி அதைத்தானே வாங்குகின்றனர். நல்லசரக்கு விலைபோக மறுக்கிறதே... என்ற சப்தங்களும் எழுந்தன.

முட்டி மோதிய முரண்பாடுகளுக்கு விடையாகவும், விளக்கமாகவும் சில தகவல்களைக் கூறி அமைதிப்படுத்தினார் ஆலோசகர் எத்திராஜலு.

நெல்லாக விற்றால் விலை குறைவுதான். மதிப்பு கூட்டி, இட்லி, தோசையாக விற்றால், 1 கிலோ நெல்லுக்கு ரூ.100, 200 வரைகூடக் கிடைக்கலாம். ஒரு விவசாயிக்கு இது சாத்தியமா? பால் ஒரு லிட்டர் ரூ.25. இதையே மதிப்பு கூட்டி, டீ, காபியாக மாற்றி விற்றால், ரூ.200 கிடைக்கலாம். ஒவ்வொரு விவசாயியும் டீக்கடை போட முடியுமா?

நம்மால் எது முடியுமோ, அதைப்பற்றியே சிந்திக்கலாம். நேரடி விற்பனை செய்ய முடிந்தால், அது மிகவும் சிறந்தது தான். அதன் நுணுக்கங்கள்தான் என்ன?

ஜீரோ பட்ஜெட் இயற்கைவிவசாய விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனி ஆரம்பிக்கலாம். சரக்கு முறுக்காக, அதாவது 100 சதவிகிதம் இயற்கையாக இருப்பதால், விலையை நாமே நிர்ணயிக்கலாம். இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு, விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை, வாங்கி உண்பவர்களுக்கு அதாவது உபயோகிப்பாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருள் கிடைக்கும். அது பற்றியும் முயற்சிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

லண்டனில் விவசாயிகள் சந்தை...

லண்டனில் விவசாயிகள் சந்தை (Farmers Market) செயல்படுகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டும். லண்டன் நகரிலிருந்து 50 கி.மீ சுற்றளவில் இருக்கும் நிலம் உள்ள விவசாயிகள் மட்டுமே உறுப்பினர்களாக தகுதிபடைத்தவர்கள். சந்தேகம் என்று வந்தால், உடனே அரைமணி நேரத்தில், இயற்கை விவசாயியின் தோட்டத்தை ரகசிய ஆய்வு செய்யஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக, 50 கி.மீ. சுற்றளவில் அந்த விவசாயநிலம் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாத எந்த தொழிலும் சிதைந்துவிடும்.

காலை 10 மணிக்கு உழவர் சந்தை தொடங்கினால், 2 மணிக்குள் எல்லா காய்கறிகளும் விற்றுவிடுகின்றன என்கின்றனர். எப்படி சாத்தியம் என்றால், (acceptability, availability, accountability) ‘‘நம்பிக்கை, நாணயம், தொய்வு இல்லாமல் வருடம் முழுக்க கிடைத்தல் மிக முக்கியம். அதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம்’’ என்கிறார்கள் லண்டன் நகர இயற்கை விவசாயிகள்.

அந்தச் சித்தாந்தம் நமக்கும் பொருந்தும். நம்பிக்கையோடு நடை போட்டால், நாளைய நாடு நாமும் நம் சந்ததியும் நலமுடன் வாழ ஏற்றதாகும்.