Question: ஆன்மீகமும், யோகாவும் போர்க்குணம் கொண்ட மனிதர்களை பலவீனப்படுத்தி அமைதியாக்கிவிடுமா? இப்படி ஆகிவிட்டால், நான் வெளிசூழ்நிலையை எப்படி கையாள்வது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அமைதியான மனிதன் என்றால் மந்தமான மனிதன் என்று பொருள் அல்ல. ஒரு சூழ்நிலையைக் கையாள வேண்டுமென்றால், உங்களிடம் அமைதி வேண்டும். அதற்குத்தான் யோகா, ஆன்மீகம் எல்லாம். வெளிச்சூழ்நிலையை பலர் உருவாக்குவார்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நடக்கும். ஆனால் நீங்கள் உள்நிலையில் சுதந்திரமாக இருந்தால்தான் உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

இன்று வெளி சீதோஷ்ணத்தைக் கட்டுப்படுத்த உங்களால் முடிகிறது. குளிர் அதிகமுள்ள நேரங்களில் ஹீட்டர் போட்டுக் கொள்கிறீர்கள். அதேபோல் உங்கள் உள்தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற தொழில்நுட்பம்தான் யோகா. மனம் பதட்டமடைகிறபோது முட்டாள்தனமாக செயல்படுகிறது. பதறாதபோது பக்குவமாக செயல்படுகிறது.

எது வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Question: ஜென் தியானம், பதஞ்சலி முனிவர் தியானம், குண்டலினி யோகம், இந்த தியானங்களிலிருந்து ஈஷா தியானம் எந்த விதத்தில் வேறுபட்டது. அல்லது அனைத்தும் ஒன்றுதானா?

சத்குரு:

அடிப்படையில் தியானத்தன்மை என்பது ஒன்றுதான். தியானத்தின் முறைகள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கேற்ற முறைகளில் தியானம் சொல்லித் தரப்பட்டு வருகிறது. புத்தர் 2500 வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவரைச் சுற்றி என்ன விதமான மனிதர்கள் இருந்தார்களோ அதற்கேற்ற முறையை அவர் போதித்தார். பதஞ்சலி எந்த தியானமும் கற்றுத் தரவில்லை. அவர் அடிப்படையை மட்டும் போதித்தார். அந்த அடிப்படையைப் பயன்படுத்தி ஒவ்வொரு குருவும் தன் காலத்தில் இருக்கும் மக்களுக்கும், கலாச்சாரத்திற்கும், சூழ்நிலைக்கும் எது ஒத்து வருகிறதோ அதற்கேற்ப சொல்லித் தருகிறார்கள். எனவே நீங்கள் இப்போதுள்ள ஈஷா தியானத்தைக் கற்றுக் கொள்வது நல்லது.