யார் விருந்தாளி ?

யார் விருந்தாளி

தனது வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சத்குரு அவர்கள் தியான அன்பர்களுக்கு அழகாக விவரித்தபோது…

சத்குரு:

“ஒவ்வொரு உயிருக்கும் தன் உயிரை நடத்திக் கொள்வதற்கு, இயற்கை அளப்பரிய அறிவைக் கொடுத்திருக்கிறது. ஒரு இளம் பறவை முதல் முறையாக முட்டை இடப்போகிறது. ஆனால் முட்டை இடுவதற்கு கூடு எப்படிக் கட்டுவது? இந்தச் சந்தேகம் அந்தப் பறவைக்கு வருவதில்லை. அதற்காக அது எந்தப் பொறியியல் கல்லூரிக்கும் சென்று கற்கவில்லை. கர்ப்பம் தரித்த ஷணத்திலேயே அந்த அறிவு அதற்குள் புகுத்தப்பட்டு விட்டது. எங்கு, எப்படி, எத்தனை நாளுக்குள் கூடு கட்ட வேண்டும், அனைத்தும் இப்போது அதற்குத் தெரியும். அப்படி ஒரு குட்டிப்பறவை தன் அழகான கூட்டைக் கட்டும் வித்தையை என் வீட்டிலேயே, அருகேயே இருந்து கவனித்திருக்கிறேன். ஏனெனில் என் வீட்டில் பறவைகள், அணில்கள்… ஏன்… பல்லி, பாம்பு இவைகூட எப்போதும் இருக்கும்.

என் வீட்டைப் பொருத்தவரையில் அவைகள்தான் வசிப்பவர்கள். நான் விருந்தாளிதான்.
என் வீட்டைப் பொருத்தவரையில் அவைகள்தான் வசிப்பவர்கள். நான் விருந்தாளிதான். ஏனெனில் நான் எப்போதும் நாள்கணக்கில்தான் தொடர்ந்து தங்குவேன். ஆனால் ஒரு முறை 4 மாதங்களாக நான் தொடர்ந்து என் வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவற்றில் சில, ‘யார் இந்த விருந்தாளி’ என்று ஆச்சரியத்தோடு பார்த்தன. பிறகு நாளாக, நாளாக, இவர் ஏன் நமது இடத்தில் இவ்வளவு நாள் தங்கியிருக்கிறார் என்று வேண்டாத விருந்தாளி போல் பார்க்கத் தொடங்கின. ஒவ்வொரு வருடமும் குஞ்சு பொறிக்கும் பருவத்தில் எங்கிருந்தோ பறவைகள் வரும். அவை என் வீட்டிற்குள் உள்ள வீட்டுத் தோட்டத்தில் வந்து கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் திரும்பிச் செல்லும். இப்படி கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. அப்போது அது குஞ்சு பொறிக்கும் பருவம். அவை குஞ்சு பொறிக்கும் பருவத்தில் நான் இந்த முறை மாதக்கணக்கில் அங்கிருப்பது அவற்றுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா? ஆனால் நான் அவற்றுக்கு எப்போதும் தொந்தரவு செய்வதே இல்லை, இருந்தாலும் என்னால் அவர்களின் தனிமை கெட்டுப் போனது நன்றாகப் புரிந்தது.

அவை எப்போதும் என் வீட்டிற்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட மரக்கிளையைத்தான் இதற்காகத் தேர்ந்தெடுத்து கூடு கட்டி கடைசியாக குஞ்சுகளுடன் திரும்பிச் செல்லும். அவை சென்ற பிறகு மழைக்காலங்களில் அந்த கூடு சேதமடையாமல் இருக்க நான் சிறிது முயற்சி எடுப்பேன். அப்படி செய்யும்போது, அடுத்த ஆண்டு அவைகள் திரும்பி வரும்போது மீண்டும் புதிதாகக் கூடு கட்டத் தேவையிருக்காது. அதே கூட்டில் சிறிது ரிப்பேர் வேலைகள் மட்டும் செய்துவிட்டு அதிலேயே முட்டையிடலாம். இப்படித்தான் நடந்து வந்தது. ஆனால் இந்த முறை, நான் வீட்டில் இல்லாதபோது, அந்தக் கூடு தேவையில்லை என நினைத்து வேலை செய்யும் தொழிலாளிகள் அந்தக் கூட்டை அப்புறப்படுத்தியிருந்தனர்.

சில மாதங்கள் கழித்து நான் வீட்டிற்குத் திரும்பியபோது, அதே பறவையைப் பார்த்தேன். நான் அதை என் வீட்டிற்குள் பார்த்தபோது, அது அங்கு வந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம். அதனுடைய கூடு காணாததால், அது தற்போது மிகவும் கஷ்டப்பட்டு புதிதாக ஒரு கூடு கட்ட முயற்சி செய்து கொண்டிருந்தது. என் வீட்டில் ஒரு ஊஞ்சல் இருக்கிறது. அந்த ஊஞ்சல் தாங்கும் கம்பியில் அந்தக் கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அது அங்கு கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் அது அங்கு கூடு கட்டி விட்டால் நான் ஊஞ்சலில் உட்கார முடியாது. மேலும் அந்த ஊஞ்சலிலேயே எச்சமிட ஆரம்பிக்கும். ஊஞ்சலும் சமையலறைக் கதவுக்கு வெகு அருகாமையில் இருந்தது. நான் சமையல் அறைக்குள் போகும்போதும், வரும்போதும், அவைகளுக்கும் அது தொந்தரவாக இருக்கும். எனவே நான் அதற்கு சிறிது இடையூறு செய்ய நினைத்தேன். அப்போதாவது அது வேறெங்காவது கூடு கட்டிக் கொள்ளட்டுமே என நினைத்தேன்.

இந்தப் பறவை 30 மணி நேரத்தில் தனது கூட்டைக் கட்டிவிடும். அது முதல் குச்சியை கொண்டு வரும்போதே அதன் கவனத்தைத் திருப்பி விட நினைத்தேன். ஆனால் அப்போது ‘சம்யமா’ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததால் அந்தக் கவனத்தில் சிறிது இருந்துவிட்டேன். எனவே, அன்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன். அடுத்த நாள் பார்த்தால் அந்தப் பறவை தனது கூட்டை முழுதாகக் கட்டிவிட்டிருந்தது. 24 மணி நேரத்திற்குள் தனது கூட்டைக் கட்டியிருந்தது. அது ஏதோ அவசரத்தில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். எனவே அதைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சரி இருந்து கொள் என்று விட்டுவிட்டேன். ஊஞ்சலில் உட்காரும் இடத்தில் அது தனது எச்சத்தைப் போடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த இடத்தில் ஒரு துணியைப் போட்டு மூடி விட்டேன். பிறகு இரண்டாவது நாளில் அது 3 முட்டையைப் போட்டது. அதன்பிறகு அந்தப் பெண் பறவையைக் காணவில்லை. ஆண் பறவைதான் குஞ்சு பொறிப்பதற்காக முட்டை மீது உட்கார ஆரம்பித்தது. உண்மையில் அது கடினமான வேலையாக அப்போது அதற்கு இருந்திருக்கும். ஏனெனில் பலரும் வந்து போகும் இடத்தை அது தேர்ந்தெடுத்து விட்டது. நாங்கள் நடக்கும் இடத்திலிருந்து 1 அடி தள்ளிதான் அந்தக் கூடு இருந்தது. எப்போதும் அந்த முட்டைகளின் மேல் உட்கார்ந்து கண்களை அகலத் திறந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஒன்றில் நீங்கள் இறங்கிவிட்டால், பொறுமையாக உட்கார்ந்திருக்க வேண்டும். குஞ்சு பொறிக்கும் வரை முழுமையாக உட்கார்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் குஞ்சு பொறித்தலே நடக்காது.
யாருமே அந்தப் பறவையை அப்படியே கையில் தூககியெடுக்கக் கூடிய தூரத்தில்தான் அது இருந்தது. அந்த ஒரு அபாயத்தில் அந்தப் பறவை இருந்தது. ஏனோ இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்திருந்தது. ஒருவேளை தனது வழக்கமான கூடு இல்லையென்றவுடன், அடுத்த கூடு கட்டுவதற்குத் தகுந்த இடம் தேட நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். அந்தப் பறவை 17லிருந்து 18 நாட்கள் இரவு பகலாக அடை காத்தது. காலை 8 மணிக்குக் கூண்டிலிருந்து கிளம்பி மீண்டும் 8.30க்கு திரும்பிவிடும். ஒரு வேளை காலைக்கடனுக்காவும் உணவுக்காகவும் போயிருக்கும். மீண்டும் மாலை சுமார் 6 மணிக்குக் கிளம்பி 20 நிமிடம் கழித்துத் திரும்பி வந்து உட்கார்ந்து கொள்ளும். அந்தக் கூட்டைக் கடந்து செல்லும் போதெல்லாம் பார்ப்பேன், அதன் கண்கள் திறந்தே இருக்கும். இரவில் விளக்கு போடும்போது பார்த்தால்கூட அதன் கண்கள் அகலத் திறந்து வைத்துக் கொண்டு நம்மையே பார்க்கும். அதன் வாழ்க்கை எப்போதும் அபாயத்திலேயே இருந்தது. ஆனால் அது அங்கிருந்து நகரவில்லை. அந்த முட்டைகள் மேல் முழுமையாக உட்கார்ந்திருந்தது. ஏனெனில் குறிப்பிட்ட நேர இடைவெளி விட்டால்கூட பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளி வராது.

இறுதியாக சுமார் 18வது நாளில் 3 முட்டைகளிலிருந்தும் குஞ்சுகள் வெளிவந்தன. அப்புறம் நடந்தவை அற்புதமான செயல்கள். குஞ்சுகள் வெளிவந்ததுமே திடீரென பெண் பறவையும் அங்கு வந்து சேர்ந்தது. பிறகு இரண்டும் குஞ்சுகளுக்கு எல்லாவித பூச்சிகளையும் உணவாகக் கொண்டு வந்து கொடுத்தன. அந்தக் குருவிகளே மிகச் சிறியவை. ஆனால் அவை பெரிய பெரிய பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வந்தன. 3 குஞ்சுகளும் கிடைத்ததை எல்லாம் லபக், லபக் என்று விழுங்கிக் கொண்டிருந்தன. பகல் நேரம் முழுவதும் அந்தப் பறவைகள் உணவைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. 3 குஞ்சுகளும் அவற்றைப் பெற்று விழுங்கிக் கொண்டே இருந்தன. அது அந்தக் குஞ்சுகள் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறை. அதை கேமரா மூலமும் படம் பிடித்தோம். ஏனெனில் ஈஷா ஹோம் ஸ்கூலின் சின்னமும் அதுதான். அந்தக் குஞ்சுகள் நம்ப முடியாத அளவில் வேகமாக வளர்ந்தன. முதலில் உடலில் வெறும் 2 புள்ளிகளாக இருந்தவை எட்டே மணி நேரத்தில் சிறகாக மாறியிருந்தது. எட்டு மணி நேரத்திலேயே இந்த அற்புதம் நடந்திருந்தது. உயிர்த்தன்மையின் செயல்முறை பல வழிகளிலும் விவரிக்கமுடியாத அற்புதமாகத்தான் இருக்கிறது.

யார் விருந்தாளி , Yaar virunthaali

அந்தப் பறவைகள் குடும்பமாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பறந்து போகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த 3 குஞ்சுகளில் ஒன்று மட்டும் மிகவும் துறுதுறுவென இருந்தது. உடனே பறந்து போக வேண்டுமென துடித்துக் கொண்டிருந்தது. இரவில் 12 மணி சுமாருக்கு அதைப் பார்த்தேன். மீண்டும் காலை வந்து பார்க்கும்போது கூட்டிலிருந்து கீழே குதித்து இறந்திருந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீதிப் பறவைகள் அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்றன. இந்தக் குஞ்சும் இன்னமும் சில மணி நேரங்கள் காத்திருந்தால் அவைகளுடன் சேர்ந்து சென்றிருக்கலாம்.

இயற்கையாக வாழ்க்கை செயல்முறைகள் இப்படித்தான் இருக்கின்றன. ஈஷாவிலும் இப்படித்தான். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒன்றில் நீங்கள் இறங்கிவிட்டால், பொறுமையாக உட்கார்ந்திருக்க வேண்டும். குஞ்சு பொறிக்கும் வரை முழுமையாக உட்கார்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் குஞ்சு பொறித்தலே நடக்காது. உண்மையில், யோகாவில் சில குருமார்கள் கூர்ம குருக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். கூர்ம என்றால் கடல் ஆமை. ஆமை எப்போதும் தனது முட்டைகளை இட்டு மணலை அதன் மேலே தள்ளி முடிவிடும். பிறகு சிறிது தூரத்தில் உட்கார்ந்து கவனிக்கும். இப்படிச் செய்வது ஒரு விதமான குருமார்கள். இன்னொரு வகை குருமார்கள் முட்டை மேலேயே உட்கார்ந்து கொள்வார்கள். நாம் முட்டை மேலேயே உட்காரும் வகைதான். தூரத்தில் உட்கார்ந்து நம்மால் கவனிக்க முடியாது. ஏனெனில் நமக்கு அவ்வளவு நேரமில்லை”.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert