தன்னார்வத் தொண்டு என்பதை மன திருப்திக்கான செயலாக சிலர் நினைக்கலாம். இந்த செயல்கள் செய்வதால் ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படி அது உதவும் என்ற கேள்வியும் பலருக்கு எழலாம். உண்மையில், தன்னார்வத் தொண்டு என்றால் என்ன? ஈஷாவில் தன்னார்வத் தொண்டு புரிவதால் நிகழும் அற்புதம் என்ன என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

சத்குரு:

யோகாவின் முழு அம்சமே, உங்களை முழுமையாகத் தருவதுதான். தன்னையே எப்படி தருவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. தருவதென்பது சில வழிவகைகள் மூலம்தான் சாத்தியம் என்று கருதுகிறார்கள். அப்படி மனிதர்களுக்கு நீங்கள் பலவற்றையும் தரலாம். பணம், உணவு, கல்வி என எதைத் தந்தாலும், அவை உங்களுக்கு உரிமையானவை அல்ல.

உங்களிடம் உள்ளவற்றை உங்களுக்கு சொந்தமென்று கருதுகிறீர்கள். அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம். ஆனால், அவை உங்களுக்கு சொந்தமில்லை.

உங்கள் உடல் உட்பட, உங்களிடம் இருக்கும் அனைத்துமே, இந்த பூமியிலிருந்து நீங்கள் சேகரித்தவை. போகிறபோது நீங்கள் அவற்றைத் திருப்பித்தர வேண்டும்.

முழு விருப்பத்தோடு தருவதற்கான தயார்நிலையில் இருப்பதன் பெயரே தன்னார்வத் தொண்டு. இதையோ அதையோ செய்வது மட்டுமல்ல. முழுமையான தயார் நிலையில் இருப்பது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களிடம் உள்ளவற்றை உங்களுக்கு சொந்தமென்று கருதுகிறீர்கள். அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம். ஆனால், அவை உங்களுக்கு சொந்தமில்லை. உங்கள் இல்லம், உங்கள் உடைகள், உங்கள் குழந்தைகள், உங்கள் மனைவி, உங்கள் கணவன் என எல்லோரையும் எல்லாவற்றையும், இங்கிருக்கும் வேளையில் நீங்கள் அனுபவிக்கலாம். ஆனால், விட்டுவிட்டுத்தான் போக வேண்டும்.

ஏனென்றால், எவையுமே உங்களுக்கு சொந்தமில்லை. எது உங்களுக்கு சொந்தமில்லையோ அதை உங்களால் வழங்க இயலாது. உண்மையில், வழங்குவது என்றால் இதுவல்ல.

அடிப்படையில் நீங்கள் எதையாவது வழங்க முற்பட்டால் உங்களைத்தான் வழங்க முடியும். ஆனால், உங்களை எப்படி வழங்குவதென்று உங்களுக்குத் தெரியாததால் சில வழிகளில் உங்களை வழங்குகிறீர்கள்.

செயல் வழியாக உங்களைத் தருகிறீர்கள். இது உங்களுக்குப் புரியவில்லையென்றால் அது பெரிய சிக்கலாகிவிடுகிறது. தருவதற்கான விருப்ப நிலையில் நீங்கள் இல்லாவிட்டால் அது மிகவும் வலிமிகுந்த அனுபவம் ஆகிவிடுகிறது.

தருவதென்பது, ஏதேனும் பொருள்களைத் தருவதுதான் என்பதாக நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், இயல்பாகவே உங்களுக்கு பயம் வந்துவிடும். “எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட்டால் எனக்கு என்ன நேரும்,” என்கிற பயம் அது. இதனாலேயே பலர் தருவதற்கு அஞ்சுகிறார்கள். இது கருமித்தனத்தில் முடிகிறது. அன்பில், ஆனந்தத்தில் என எல்லாவற்றிலும் அந்தக் கருமித்தனம் படிகிறது. ஏனென்றால், தருவது என்றாலே ஏதேனும் பொருளாகத் தருவது என்று புரிந்துகொள்கிறார்கள்.

விருப்பமுடன் தருவது என்னும் நிலைவரும் வரை எவ்வித ஆன்மீக வளர்ச்சியும் சாத்தியமில்லை. தன்னார்வத் தொண்டு, அந்த விருப்ப நிலைக்கான அற்புதமான கருவியாகும். இந்தக் கணக்குகள் காரணமாய் மனிதர்களிடம் அன்பு குறைகிறது, ஆனந்தம் குறைகிறது, அமைதி குறைகிறது.

தன்னார்வத் தொண்டு என்பது உங்களையே தருவதற்கான வாய்ப்பு. நீங்கள் இங்கே வெறுமனே கண்மூடி அமர்ந்த நிலையில் உங்களை இந்த உலகத்திற்கே தந்துவிட முடியும். ஆனால், அதற்கான விழிப்புணர்வு பெரும்பாலான மனிதர்களுக்கு இல்லை. எனவே, தங்களைத் தருவதற்கு அவர்களுக்கு ஏதேனும் பொருட்கள் தேவைப்படுகின்றன.

பொதுவாகவே மனிதர்கள் அவர்கள் செயல்களுக்கு கணக்கு பார்ப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? எனக்கு இதில் என்ன கிடைக்கும்? என்பது போன்ற கணக்குகள் இவை.

இப்படி நீங்கள் கணக்கு போடும்போது, செயல்கள் செய்வதிலுள்ள அழகே போய் விடுகிறது. வாழ்க்கை நடக்கும் முறையே அருவருப்புக்கு உள்ளாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பெரும்பாலான செயல்கள் நீங்களே தேர்ந்தெடுத்து செய்பவைதான். இருந்தாலும், எளிமையான செயல்களைக் கூட மிகவும் போராட்டத்துடன் செய்கிறீர்கள். ஏனெனில் அச்செயல்களில் நம்மையே அளிப்பதற்கு நாம் விருப்பத்துடன் இல்லை. இந்த செயல்களை நாம்தான் விருப்பப்பட்டு ஆரம்பித்தோம் என்பதையே கூட எங்கோ மறந்துவிட்டீர்கள். எனவே, தன்னார்வத் தொண்டு என்பது தருவதற்கும், முழு விருப்பத்துடன் இருப்பதற்குமான பயிற்சி.

முழுமையான விருப்ப நிலை உருவாகும் வரை ஆன்மீக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. அந்த விருப்ப உணர்வை ஏற்படுத்த மகத்தான வழி, தன்னார்வத் தொண்டு. இந்நிலை பாதுகாப்பான சூழலில் உருவாவது முக்கியம். ஈஷாவில் அதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமே, தவறாக பயன்படுத்தப்படாமல் உங்கள் 100% முழுமையாக வழங்கும் வாய்ப்பை உருவாக்கத்தான்.

தன்னார்வத் தொண்டை நாம் வலியுறுத்தக் காரணமே இந்தச் சூழலை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த விருப்ப நிலையில் இருப்பதற்குத்தான். இந்தப் பண்பு உங்கள் அன்றாட வாழ்விலும் ஊடுருவி, உங்கள் தன்மையையே விருப்ப நிலையில் மலர்த்தும்.

ஈஷாவில் தன்னார்வத்தொண்டு பற்றி மேலும் விபரங்கள் அறிய:
தொலைபேசி: 83000 98777, 944 210 8000
இ-மெயில்: volunteering@ishafoundation.org
இணையம்: isha.sadhguru.org/volunteer