சூழ்நிலையை ஆழ்ந்து உணர, காதுகொடுத்து கேட்பதன் அவசியம்?

சூழ்நிலையை ஆழ்ந்து உணர, காதுகொடுத்து கேட்பதன் அவசியம்?, soozhnilaiyai azhnthu unara kathukoduthu ketpathan avasiyam

வள்ளுவர் ‘கேள்வி’ எனும் அதிகாரத்தில் “நுணங்கிய கேள்விய ரல்லார்…” எனும் குறளில் நுட்பமான கேள்வியறிவு ஏன் அவசியம் என்பதை உணர்த்துகிறார். சத்குருவின் இந்த உரை, பிறரின் பேச்சிற்கு கவனம் கொடுப்பதன் அவசியத்தை வேறொரு பரிமாணத்தில் உணர்த்துகிறது!

கேள்வி
ஒரு சூழ்நிலையில் செய்யத் தகுந்தது எது, செய்யத் தகாதது எது என்பதை எப்படி தெளிவாகப் புரிந்து கொள்வது?

சத்குரு:

சூழ்நிலையை ஆழ்ந்து உணரும் திறன் உங்களுக்கு தானாகவே இல்லையென்றால், குறைந்தபட்சம் உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றுக்கும் கவனிக்கவும், காதுகொடுக்கவும் தயாராக இருக்கவேண்டும். யாரோ ஒருவர் சுத்த முட்டாள்தனமாக பிதற்றிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றினாலும், அவர் சொல்வதையும் நீங்கள் முழுமையாய் கேட்க வேண்டும். உலகின் அதிபுத்திசாலிகளின் பேச்செல்லாம், ஆரம்பத்தில் பிறரால் பிதற்றல்களாகவே ஒதுக்கப்பட்டன. ஓரிரு தலைமுறைகள் சென்றபின்தான், அந்தப்பிதற்றல்கள் அறிவார்ந்த பொக்கிஷங்களாய் ஆராதிக்கப்பட்டன. ‘தலைவர்’ என்றால், உலகில் உள்ள ஒவ்வொன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் யார் பேசினாலும், அதைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். பேசுபவர் யாராக இருந்தாலும் – ஒரு குழந்தையாக இருக்கலாம் அல்லது ஒரு மேதையாக இருக்கலாம் அல்லது ஒரு அடிமட்ட தொழிலாளியாக இருக்கலாம் – அதைக் கேட்பதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். அது மிகவும் முக்கியம்.

உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பழகினால் மட்டுமே, இக்கணத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து, அடுத்து நீங்கள் செய்ய வேண்டியவற்றை முடிவு செய்யமுடியும்.
கேட்கும்திறன் என்றால், அது காதின் கேட்கும்சக்தி பற்றியல்ல. உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளை மிக உன்னிப்பாய் கவனிப்பது. அவற்றைக் கவனித்து உணர்வது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பழகினால் மட்டுமே, இக்கணத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து, அடுத்து நீங்கள் செய்ய வேண்டியவற்றை முடிவு செய்யமுடியும். இப்போது என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், இந்த சூழ்நிலைக்கு ஒத்துவராத ஏதோ ஒரு செயலில் இறங்குவது வேலை செய்யாது. அது எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், சூழ்நிலைக்கு ஒவ்வாத செயல் என்பதால், அது வீணாகத்தான் போகும்.

ஒருநாள் சங்கரன்பிள்ளையின் நண்பர், தன் வேலை ஒன்றை செய்து முடிக்க சங்கரன்பிள்ளையின் கழுதையை இரவல் பெற வந்தார். சங்கரன்பிள்ளையோ, ‘ஏற்கெனவே என் கழுதையை வேறொருவர் இரவல் பெற்றுச் சென்றுவிட்டார். என் கழுதை இங்கு இல்லை’ என்றார். வேறுவழியின்றி நண்பர் விடைபெற்றுக் கிளம்பும் நேரத்தில், பின்புறக் கொல்லையில் இருந்து கழுதை கத்தும் சப்தம் கேட்டது. உடனே நண்பர், ‘எனக்கு கழுதை கத்தும் சப்தம் கேட்கிறது. கழுதை இங்குதான் இருக்கிறதா?’ என்றார். அதற்கு சங்கரன்பிள்ளை, ‘நீ யாரை நம்புவாய்? என்னையா, என் கழுதையையா?’ என்று கேட்டார்!

அதனால் யார், என்ன என்பதெல்லாம் முக்கியமில்லை. நீங்கள் காதுகொடுத்து உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். அப்போதுதான் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளமுடியும், இல்லையெனில் முடியாது.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert