இந்திய அணி சிக்ஸர் அடித்து வாகை சூடியிருக்கும் இந்நேரத்தில் இந்திய கிரிகெட் வீரர்களுக்கு ஈஷாவை அறிமுகப்படுத்திய தன்னார்வத் தொண்டரின் அனுபவங்கள் உங்களுக்காக...

தான் கொடுத்த அன்பளிப்பு மகத்தான இன்பத்தை அளித்துள்ளது திரு. அம்ரித்திற்கு. தன் கனவு நட்சத்திரங்களை பார்த்தது ஒரு பக்கம், ஈஷா கிரியா தியானத்தை அனைவருடனும் பகிர்ந்துக் கொண்ட உற்சாகம் மறுபக்கம். டிசம்பர் 11ம் தேதியன்று இந்திய கிரிகெட் அணியை ஒருசேர சந்தித்து, அவர்களுக்கு ஈஷா கிரியா டிவிடியை கொடுத்து ஈஷாவையும் சத்குருவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன் வாழ்வில் மாற்றத்தை ஏற்டுத்திய ஒரு அற்புதத் தியானம், தனது அபிமான கிரிக்கெட் நட்சத்திரங்களின் வாழ்வையும் தொடுகிறது என்ற சந்தோஷத்தில் உள்ளார், அம்ரித் என்று அழைக்கப்படும் திரு.அமிர்தான்ஷு குப்தா. இவர் டில்லியில் வசிப்பவர்; ஈஷாவின் தீவிரமான தியான அன்பர்களில் ஒருவர்; HT Media Fever 104 FM மற்றும் RED FM லும் நிகழ்ச்சி தயாரிப்பாளராய் பணிபுரிபவர்.
2

சில வருடங்களுக்கு முன்னர் ஈஷாவிற்கு அறிமுகமான அம்ரித்தை ஆழமாய் தொட்டது ஈஷா கிரியா. அதனால் தன் பணி நிமித்தமாக தான் செல்லும் இடங்களிலெல்லாம் ஈஷா கிரியா டிவிடிகளை தாராளமாய் வழங்கி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியை பேட்டி எடுக்க சென்றவர், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு ஈஷா, சத்குரு மற்றும் ஈஷாவின் திட்டங்களை அறிமுகம் செய்துவிட்டு ஈஷா கிரியா டிவிடிகளை வழங்கியுள்ளார். ஆனால் அவர் ஆச்சரியப்படும் படியாக ஒரு வருடத்திற்கு முன் ஐபிஎல் மேட்சின் மூலம் தாங்கள் ஏற்கனவே சத்குருவுடன் அறிமுகம் ஆகியிருந்த செய்தியை சொல்லி கிரிக்கெட் வீரர்கள் அவரை வீழ்த்தினர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆட்டக்காரருமான சேவாகிடம் உரையாடியபோது, தான் ஈஷா பற்றி ஏற்கனவே அறிந்துள்ளதாகவும் ஈஷாவின் சமூக நலத்திட்டங்கள் தன்னை ஈர்த்துள்ளதாகவும் சேவாக் கூறியுள்ளார். மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் தன் விருப்பத்தையும் வெளியிட்டுள்ளார். தனக்கு இந்த தியானம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறிய சேவாக் தன் குடும்பத்துடனும் அதனை பகிர்ந்துக் கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
5

தான் ஏற்கனவே யோகாசனங்கள் செய்து வருவதால், அம்ரித் வழங்கிய டிவிடியும் அது போன்றது தானா என்று கேட்ட சேவாகிற்கு, "உடலை அசைக்கவே தேவையில்லை" என்னும் பதில் கிடைத்தவுடன் அப்படியும் யோகா செய்ய முடியுமா என்கிற வியப்பே எஞ்சியிருந்தது. இதனாலேயே தனக்கு ஈஷா கிரியா செய்வதற்கு ஆர்வமாய் உள்ளது என்றும் சேவாக் கூறியுள்ளார்.

அடுத்து இர்ஃபான் பதானிடம் அம்ரித் சென்ற போதுதான் அதிகப்படியான சிக்ஸர்கள் அடித்தமைக்கான விருதை தென் ஆப்பிரிக்காவில் சத்குருவிடமிருந்து பெற்றதாக உடனுக்குடன் நினைவுக் கூர்ந்தார் பதான். சில நாட்களுக்கு பிறகு பதானிடம் தொலைபேசியில் அம்ரித் பேசிய போது, தான் ஈஷா கிரியா செய்து மகிழ்ந்ததோடு "இந்தியர்கள் பூஜ்யத்தை கண்டறிந்ததால், அதனுடன் சற்று தாரளமாக இருக்கிறோம்," என்று சத்குரு அந்த டிவிடியில் பேசியது தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார். தன் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் ஈஷா கிரியாவை திரையிடுவதற்கான அழைப்பையும் விடுத்து கலக்கியுள்ளார் இந்த இளம் ஆட்டக்காரர்.
3

இந்திய அணியின் பிற ஆட்டக்காரர்களான அஷ்வின், விராட் கோஹிலி, கௌதம் கம்பீர், ரோஹித் ஷர்மா, பார்திவ் படேல் போன்றவர்களுக்கும் ஈஷா கிரியா டிவிடி வழங்கப்பட்டது. அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு இதனை பெற்றுக்கொண்டதாக சொல்லும் அம்ரித், சாமான்ய மக்களைப் போல் சமூகத்துடன் ஒன்றாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாததால், யோகா போன்ற ஒரு விஷயத்திற்கு இவர்கள் காட்டும் ஆர்வம் மிக அதிகமாக உள்ளது என்றார்.

தான் சந்திக்கும் அத்தனை பிரபலங்களுக்கும் இந்த தியானத்தை வழங்கும் அம்ரித், இந்திய திரைஉலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஷாரூக் கானுக்கு சத்குருவின் புத்தகங்களை வழங்கியுள்ளார். "ஞானத்தின் பிரம்மாண்டம்" புத்தகத்தை படித்த ஷாரூக், இப்புத்தகம் மிக ஆழமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது என்று பகிர்ந்துகொண்டுள்ளார்.
4

நம்மில் பலரைத் தொட்டது போலவே, ஈஷா கிரியா இந்தியக் கிரிக்கெட் வீரர்களையும் ஆழமாகத் தொட்டுள்ளது. ஈஷாகிரியாவை இவர்களுக்கு அறிமுகம் செய்தது தனக்கு மிகமிக அற்புதமான அனுபவமாக அமைந்ததாக பெருமிதம் கொள்கிறார் அம்ரித்.

நாம் இதே வேகத்தில் இந்தப் பாதையில் பயணித்தால் அனைவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது வழங்க வேண்டும் என்கிற சத்குரு அவர்களின் கனவை வெகு சீக்கிரத்திலேயே நிஜமாக்க முடியும்.